1
பாட்டுக்கு ஒரு புலவராம் மாபெரும் கவிஞர்
சுப்பிரமணிய பாரதியாரின் சமய நல்லிணக்கம், இறையொருமை, சாதி மறுப்பு,
விடுதலை வேட்கை, நாட்டுப்பற்று, வீர உணர்வு, கல்விப்பற்று, தொழில் நாட்டம்,
பெண்ணுயர்மை, அறிவியல் உணர்வு, பொதுமை வேட்கை, வினைத்திறம் முதலிய
பண்புகள் இணைந்த ஓர் ்அறிவுப் பெட்டகமே ‘புதிய ஆத்திசூடி’.
சப்பானிய மொழியின் குறுவரிப்பாடல்களைப்
புதுமையாகக் கருதும் நாம், தமிழில் நாலடி வெண்பா, முவ்வரிச் சிந்து,
ஈரடிக்குறள், ஒற்றையடி வரிப்பா(ஆத்திசூசடி, பொன்றை வேந்தன், வெற்றி வேற்கை
முதலியன) ஆகியவற்றின் மரபார்ந்த சிறப்புகளை உணர்ந்து கொள்ள வில்லை. ஆனால்
பாரதியார் எளிமையும் செறிவும் மிக்க ஆத்திசூடியையும் ஆயுதமாகக் கொண்டு
ஞாலத்திற்கு வேண்டிய காலத்திற்கேற்ற புதிய கருத்துகளையுப்
படைத்தளித்துள்ளார். ஔவையாரின் ஆத்திசூடிக்குப் பிறகு எத்தனைபேர்
இவ்வரிப்பா மரபினைப் பின்பற்றினர் என நமக்குத் தெரியவில்லை.
ஆனால், பாரதியின் புதிய ஆத்திசூடிக்குப்
பின்பு பாவேந்தர் பாரதிதாசன் முதலான பல்வேறு புலவர்கள் புதுமை உணர்வின்
வெளிப்பாட்டு ஆயுதமாக ஆத்தி சூடியைப் படைத்தளித்துள்ளனர். எனவே, புதிய ஆத்திசூடி மூலம் புது மரபு விளைவித்த புதுநெறிப் பாவலராகப் பாரதியார் உயர்ந்துள்ளார் எனலாம்.
‘அச்சம் தவிர்’ முதல் ‘வௌவுதல் நீக்கு’
ஈறாக 110 வரிப்பாக்களை நமக்கு மாபெரும் புலவர் பாரதியார் அளித்துள்ளார்.
தம் பாடல்களில் உயர்நெறி காட்டி வாழ்வியல் கடமைகளை உணர்த்தியவர் பாரதியார்.
அவற்றின் கருத்துப் பொழிவுகளாக 110 கட்டளைகளைப் புதிய ஆத்திசூடி வாயிலாக நமக்கு வழங்கியுள்ளார். இவை பிற பாடல்களின் மூலம் உணர்த்தும் கட்டளைகளின் சுருக்கம் என்பதைப் பின்வருமாறு காணலாம்.
பரம்பொருள் ஒன்றே!
சக்தி, முருகன், விநாயகர், சிவன் எனப் பல
வழிபாட்டுப் பாடல்களை நமக்கு அளித்துள்ளார் பாரதியார். எனினும் இறைப்
பொறுமையையும் இயற்கை வழிபாட்டையும் உணர்த்தும் தெய்வப்புலவர் திருவள்ளுவர்
முதலான முன்னைப் புலவர்கள் மரபில்தான் சென்றுள்ளார். எனவே, “ஒன்றே குலம்
ஒருவனே தேவன்” என்னும் திருமூலர் வழியில் சமய நல்லிணக்கத்தையும் இறை
ஒருமையையும் வலியுறுத்துவதையும் உயிர் மூச்சாகக் கொண்டு பாடல்களைப்
படைத்துள்ளார்.
தம்வரலாற்றில் (சுயசரிதையில்/
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே
(பாரதியார் கவிதைகள், பூம்புகார் வெளியீடு, பதிப்பு 1961, பக்கம் 272)
என அனைத்துச் சமயங்களின் உட்கருத்தும் ஒன்றே என வலியுறுத்தியுள்ளார்.
விநாயகர் நான்மணி மாலையில் “யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே” (பாரதியார் கவிதைகள், பக்கம் 97) என்கிறார். மேலும், நமக்குரிய கடமைகளில் ஒன்றாக, உலகெல்லாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல் (பா.க., பக்கம் 94) என்கிறார். மேலும்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டா
(பா.க., பக்,205/முரசு) எனத் தெய்வங்களின் பெயரால் சண்டையிட வேண்டா என்று கூறுகிறார்.
இறைவனை வேண்டுதல்(பா.க./பக்.104) போற்றி
அகவல் (பா.க./ப.109), அன்னையை வேண்டுதல்(பா.க./ப.114) சூரிய
தரிசனம்(பா.க./ப.168), ஞாயிறு வணக்கம் (பா.க./பக்கங்கள் 168-169), ஞானபாநு
(பா.க./பக்கங்கள் 169), வெண்ணிலாவே (பா.க./பக்கங்கள் 170 -172), தீ
வளர்த்திடுவோம் (பா.க./பக்கங்கள் 172-173) முதலிய பாடல்களில் பொதுவான
இறைவனை அல்லது இயற்கையை வணங்குவதாகவே தம் கருத்தினை உணர்த்தியுள்ளார்.
இயேசு கிறித்து, அல்லா, புத்தரைப் பற்றிய பாடல்கள் இவரின் சமய நல்லிணக்க
வெளிப்பாடாகும். அறிவே தெய்வம் எனப் பாடுவது இறை மறுப்போரும் ஏற்கக்கூடிய கருத்தாகும். பாரதா மாதா தலைப்பில், “ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்”
((பா.க./ப.25) என உலக மக்கள் அனைவருமே ஒரு பரம்பொருளின் கீழ் வருவதாகக்
குறிப்பிடுகிறார். பல சமயத்தினர் உருவகத்தாலே உணர்ந்துணராத பல வகையாகப்
பவிடும் பரம்பொருள் ஒன்றே எனத் தம் கருத்தைப் பாரதியார்
வெளிப்படுத்துகிறார். அதற்கேற்பப் பாரதியார் புதியஆத்திசூடியின் காப்புப்
பாடலைப் பினவருமாறு சமய நல்லியக்கப் பாடலாகவே அமைத்துள்ளார்.
ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்
கருநிறங் கொண்டு பாற்கடல்மிசைக் கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவாம்
( பா.க./ப.200/புதியஆத்திசூடி)
“பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்” (அப்பர்)
“ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே” (சுந்தரமூர்த்திகள்)
“ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” (மாணிக்க வாசகர், திருவாசகம்)
என ஓரிறைக்குப் பல பெயர்கள் உள்ளதை முன்னோர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் பல பெயர்களால் தெய்வங்களை வணங்கிப் பாடுகிறார்.
ஆனால், இவற்றின் பிழிவாக ஆத்திசூடியில்
“ஞாயிறு போற்று” என்று இயற்கை வணக்கத்தையும்
“தெய்வம் நீ என் றுணர்“.
எனத் தெய்வங்களை வணங்கியும் பாகுபடுத்தியும் நேரத்தை வீணாக்க வேண்டா என்றும் கூறத் தவறவில்லை.
எனவே, பல்வேறு பாடல்கள் மூலம் பரம்பொருள் ஒன்றே என்பதே நமக்குப் பாரதியார் அறிவுரையாய் வழங்கும் கட்டளையாகும்
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment