Showing posts with label இலக்குவனார் திருள்ளுவன். Show all posts
Showing posts with label இலக்குவனார் திருள்ளுவன். Show all posts

Tuesday, June 18, 2019

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்


ஒரே நாடுஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை   அழிக்கும்ஒரே மதத்திற்கான பாதை
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஆனி 04 / சூன் 19) நடை பெறுகிறது. இது பா.ச.க.வின் புதிய திட்டம் அல்ல. அதன் முந்தைய ஆட்சியிலேயே 2021 வரை நடக்க வேண்டிய மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை இவ்வாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து  நடத்த முயன்றது. இப்பொழுது தன் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் தொடக்கததிலேயே இதற்கான முயற்சியில் இறங்கி யுள்ளது.
ஒரே தேர்தல் என்பதற்காகச் பல சட்டமன்றங்களையும் ஆட்சிகளையும்  கலைக்க வேண்டி இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தங்களின்காலம் முடியும் முன்னரே அழிக்கப்படுவது மக்களாட்சிக்கு எதிரானதல்லவா?
வாதத்திற்காக நாடாளுமன்றம், அனைத்துச் சட்டமன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுதுதான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததால் அனைத்துச் சட்டமன்றங்களுக்கும் ஒருசேரத் தேர்தல் நடத்துவதாகக் கொள்வோம். அப்படியானால் ஆட்சியில் இருக்கும் அரசுகளையும் பொறுப்பில் இருக்கும் சட்டமன்றங்களையும் தேர்தலுக்காகக் கலைப்பது என்பது மக்களாட்சியைப் படுகொலைசெய்வதாகத்தானே பொருளாகும்?  இப்படுகொலை தேவைதானா?
இப்படுகாலை குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தேர்தல் நடந்து முடித்துவிட்டதாகக் கொள்வோம். சில மாநிலங்களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் வரலாம். தனக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி அமைக்கும் வல்லமை கொண்டது சூது நிறை பா.ச.க. இது போன்ற சூழலில் மாநில அரசு கலையும் நிலை வரலாம்பல்வேறுமாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் வரும் பொழுது வெவ்வேறுநாள்களில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம வரத்தானே செய்யும். அப்பொழுது நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகும் அல்லவா?
இதனை மறுதலையாகவும் சிந்தித்துப் பார்க்கலாம். நாடாளுமன்றச் சூழல் மாறி மத்திய ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டு எக்கட்சியும் ஆட்சி அமைக்கமுடியாவிட்டால் மத்தியில் தேர்தல் நடத்தித்தானே தீர வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருப்பது என்றால் மத்திய மக்களாட்சி என்பது அடிபட்டுத்தானே போகும்.
அப்படி எல்லாம் இல்லை. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டால் 5 ஆண்டு முழுமையும் பொறுப்பில் இருக்கும் வரை சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்கின்றனர் சிலர்.  என்ன தவறு செய்தாலும் எவ்வளவு ஊழலில் திளைத்தாலும் ஆட்சி நிலைத்துத்தான் இருக்கும் என்றால் ஆட்சியாளர்களுக்குத் தவறு செய்வதில் எந்த அச்சமும் இருக்காதே இதனால் மக்கள் நலன்கள்தானே பாதிக்கப்படும்.
சில செலவுகளைச் செய்துதான் ஆகவேண்டும். அவற்றில் ஒன்றுதான் தேர்தல் செலவு. எனவே, சிக்கனம் என்ற பெயரில் மக்களாட்சிக்கு ஊறு நேரும் வகையில் செயல்படக்கூடாது என நாளைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.
பா...வும் பேராயக்(காங்.) கட்சிக்கும் தேசிய இன அழிப்பில் ஒன்றுக்குஒன்று சளைத்ததாகக் கூற இயலாது. பேராயக்கட்சிக்கும் ஒரே நாடு  ஒரே கோட்பாடு என்ற கொள்கைதான். எதிர்க்கட்சியாக இருப்பதால், பா.ச.க.வை எதிர்ப்பதற்காகச் சில கருத்துகளைக் கூறினாலும் அடிப்படையில் அதற்கு இணையான செயல்பாடு கொண்டதுதான். 1967இற்கு முந்தைய அதன் நிலைப்பாடு குறித்துத் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் முன்பு குறிப்பிட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.
 பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சிஒரே மொழிஒரே மதம்ஒரே இனம் எனக்கொள்ளவைத்துப் பலமொழிகளையும்இனங்களையும்இந்து ஆட்சி எனப்பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுறவேண்டியுள்ளது.
 இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில்உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில் கொள்ளவேண்டியன.”
குறள்நெறி (மலர்2 : இதழ்22): கார்த்திகை 16,1997 : 1.12.65
என்றார் அவர்.
இவற்றின் அடிப்படையில்தான் பா.ச.க. ஒரே தேர்தல் எனப் பிதற்றி வருகிறது.
ஒரே மொழி எனச் சமற்கிருதத் திணிப்பில்  அசையா உறுதியுடன் நிற்கிறது பா.ச.க. ஒரே கல்வி என்று சொல்லித்தான் பொதுநுழைவுத் தேர்வுகளைப் (நீட்டு)புகுத்திப் பல உயிர்களைக் காவு கொண்டும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டும் வருகிறது பா.ச.க.
அடுத்து ஒரே வழிபாடுஒரே உடை என்பன போன்ற ஆயுதங்களைக் கைகளில்எடுக்கலாம்.
இதன் தொடர்ச்சியாகத் தன் உள்ளக்கிடக்கையான ஒரே மதம் என்பதைக்கைகளில் எடுக்கும் பா...
நாட்டு மக்களின் நலன்களில் கருத்து செலுத்த  வேண்டும் என்ற பா.ச.க.வின் எண்ணத்தைப் பாராட்டலாம். ஆனால் அதற்காக ஒத்த தன்மை என்றபோர்வையில் பாகுபாட்டை உருவாக்கும் முயற்சிகளை அதுகைவிடவேண்டும். ஒரே தேர்தல் என்பது வாதுரைக்குரிய பொருளே அல்ல என்பதை உணர வேண்டும். அத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.(திருவள்ளுவர், திருக்குறள் 463)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Saturday, June 1, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்  131-140

(குறள்நெறி) 

  1. (செல்வர்க்கே செல்வமான) பணிவைக் கடைப்பிடி!
  2. (ஆமைபோல்) ஐம்பொறி அடக்கு!
  3. நாவைக் காக்காது துன்பத்தைச் சேர்த்துக் கொள்ளாதே!
  4. (நன்றெல்லாம் நீக்கும்) தீச்சொல் ஒன்றும் சொல்லாதே!
  5. நாவினால் பிறரைச் சுடாதே!
  6. (அறவாழ்வு தேடி வர,) அடக்கமுடன் வாழ்!
  7. நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதி!
  8. ஒழுக்கத்தை எல்லா இடத்திலும் துணை வரச் செய்!
  9. ஒழுக்கமுடைமையை உயர் குடிமையாகக் கருது!
  10. ஒழுக்கம் தவறாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150]

Wednesday, May 29, 2019

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


அ.ம.மு.க.வினர் தளர வேண்டா!


பதவி பறிக்கப்பட்டவர்களில் சிலராவது வெற்றி காண்பர். கணிசமான வாக்குகளைப் பெற்று  கருதத்தக்க இடத்தைப் பெறலாம் என எண்ணியதினகரனின் அ.ம.மு.க. பாதாளத்தில் விழுந்துள்ளது. ஒரு தொகுதியில்கூடப் பிணைத்தொகையைத் திரும்பப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறவில்லை. சில இடங்களில் நான்காவது இடமும் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது.
இந்தத் தோல்வி அடுத்தடுத்த சூழ்ச்சி வலைகளால் உருவானது. என்றாலும் சூழ்ச்சியையும் வெல்வதுதானே திறமை. இனி, சூழ்ச்சிகளை வெல்லும் வகையில் திறமாகச் செயல்பட்டால் கட்சி வளரும். “வீழ்வது இயற்கை. எழுவதே வாழ்க்கை” என்று தன்னம்பிக்கை கொண்டால் வெற்றி மாலை தானாகத் தேடி வரும்.
அதிமுகவை அசைக்கும் அளவில் அ.ம.மு.க.வின் பிம்பம் காட்டப்பட்டாலும், தேர்தல் கணிப்புகளில் ஒரு தொகுதியில் வெற்றிக்கும் 4 அல்லது 5 தொகுதிகளில் வெற்றியை நெருங்கும் வகையிலும்தான் அதன் நிலை கணிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடத்தினால் தினகரன் கட்சி வெற்றி பெறும் என்று சொல்லப்பட்ட சூழலில் பொதுத்தேர்தலும் இணைந்த பொழுது மாறியதன் காரணங்கள் என்னென்ன?
அடிமேல் அடி விழுந்தால் இமயமலையும் நொறுங்கும்அவ்வாறுதான் தேர்தல் ஆணையத்தின் மூலம் தொடர்ந்து சம்மட்டி அடி விழுந்ததில் அ.ம.மு.க. நொறுங்கிப் போயுள்ளது.
கட்சி பிரியும் பொழுது பிரிகின்றவர் பக்கம் பரிவு இருந்தாலும் அமைப்பு சிதறக் கூடாது என அதன்மீது பற்று வைப்போரே மிகுதி. அ.ம.மு.க.வின் பக்கம் பரிவாக இருந்தவர்கள் தேர்தல் என வந்ததும் வாக்குகள் சிதறி அதன் மூலம் பா.ச.க.வின் பிடி இறுகக்கூடாது என்று வாக்களித்துள்ளனர்.
அஃதாவது, பா.ச.க.விற்கு இடம் தரக்கூடாது என மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். எனவே, அ.ம.மு.க மூலம் வாக்குகள் பிரியக்கூடாது என்ற எண்ணமும் மக்களிடம் இருந்தது.
வேறுவகையில் சொல்வதானால், பா.ச.க.வின் எதிர்ப்புணர்வால் அ.ம.மு.க.வை ஆதரித்தவர்கள்  வாக்குகள் சிதறிப் பா.ச.க வந்துவிடக் கூடாது எனத் தெளிவாக இருந்தனர். எனவே, அவர்கள் தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர்.
தி.மு.க. அல்லது அ.ம.மு.க. வெற்றிகளால் அ.தி.மு.க. கவிழும் சூழல் வந்தால் அடுத்து தினகரன் மூலமாகவோ தி.மு.க.வோ ஆட்சி அமைத்தால் வரவேற்கலாம். ஆனால், பா.ச.க. அதற்குஇடம் தராமல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் மக்களிடம் இருந்தது. மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு அல்லது அதன் செயல்பாட்டை நிறுத்தி விட்டுப் பா.ச.க.தன் மறைமுக ஆட்சியை அரங்கேற்றினால் தமிழ்நாடு என்னாவது என்ற பேரச்சம் பலருக்கு இருந்தது. அதற்கு இடம் தரக்கூடாது என்பதனால்தான் அ.தி.மு.க.வின் பெரும்பான்மைக்குக் குந்தகம் வராத அளவில் அதற்கு வெற்றி அளித்தனர்.   
சார்பு வாக்குகளைவிட எதிர்ப்பு வாக்குகளாலேயே வெற்றியை வரையறுப்பது தமிழக வாக்காளர்களின் வழக்கம். அதை உணர்த்துவதுதான் மேற்குறித்த மக்களின் கண்ணோட்டம். இது தவறு என்றால் தோல்விக்குக் காரணங்கள் வேறு யாவை?
இவை மட்டும் காரணமல்ல என்றால், தேர்தல் ஆணையத்தின் குளறுபடி குறிதது அ.ம.மு.க. கூறுவதும் ஆராய்விற்குரியது.
பொதுச்சின்னத்தை முதலிலேயே தேர்தல் ஆணையம் அளித்திருந்தால் வாக்குப்பொறிகளில் தொடக்கத்திலேயே வேட்பாளர்கள் பெயர் வந்திருக்கும். பல வாக்கு மையங்களில் வேட்பாளர் பெயர்கள் உள்ள சுவரொட்டி ஒட்டப்படவில்லை. அதனால் முன்னதாக அறியவும் வாய்ப்பில்லை. தற்சார்பர்(சுயேச்சை) என்ற முறையில் போட்டியிட்டதால் தற்சார்பர்கள் பலருள் பெயரைத் தேடுவதும் அரிதாக இருந்தது. கட்சி முறையில் போட்டியிடும் வாய்ப்பைப் பறித்தவர்கள் தாங்கள் எண்ணியதை அடைந்துவிட்டனர்.
 ஒரு  நாடாளுமன்றத் தொகுதியின் கிளைக்கழகம் முதல் மாவட்டக் கழகம் முடிய உள்ள மொத்த அமமுகப் பொறுப்பாளர்கள் 1,24,476இவர்கள் “பணத்தை அங்கே வாங்குவோம். வேலை இங்கே பார்ப்போம். வாக்கை அங்கே அளிப்போம்”  என வாக்களிதது விட்டார்களா? ஒரு சில இடங்களில் அவ்வாறு நடக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாக இவ்வாறு நடக்காது. எனவே, வாக்குப்பதிவுப் பொறி மூலம் அ.ம.மு.க.சின்னத்தில் வாக்குகள் பதிவாவது தடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியினர் கருதுகின்றனர்.
ஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவுப் பொறியில் அ.ம.மு.க. வின் வேட்பாளர் பெயரும் கட்சிச்சின்னமும் இடம் பெறாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி இதைப்போன்ற பல முறைகேடுகளால் தோல்வி உருவாக்கப்பட்டுள்ளதுஎன்கின்றனர். 300 மையங்களில் ஒரு வாக்குகூடப் பதிவாகாததுபோல் காட்டப்பட்டுள்ளது. கட்சியின் பக்கம் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தவர்களால் வாக்களிக்காமல் இருக்க முடியாது. அவர்களின் குடும்பத்தினர் மாறி வாக்களித்திருந்தாலும் இவர்கள்  மாறி வாக்களித்திருக்க முடியாது என்கின்றனர்.
கூட்டணிக்கட்சிகள் பலவற்றின் வாக்குகளைப் பெற்றுப் பா.ம.க. 5.42% வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒரு கட்சிக் கூட்டணியுடன் அ.ம.மு.க. 5.38% வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே, மொத்தத் தேர்தல் களத்தில் கட்சி வரிசையில் பார்த்தால்  அ.ம.மு.க. 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளால் பேராயக்(காங்.)கட்சியின் வாக்குகள் 12.76% பெற்றதைப் புறக்கணித்தால் 3ஆவது இடமாக உள்ளது. ஒரு வேளை நா.த.க., ம.நீ.மை,ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் 13.31% வாக்குகள் பெற்று இருக்கும். என்றாலும் தனித்து நின்று உண்மையான வலிமையை உணர்ந்ததுதான் நன்று.
இவை குறித்து ஆராய்வது ஒரு புறம் இருந்தாலும். மறுபுறம் “தோல்வி நிலையானது அல்ல” என்ற உணர்வுடன் அ.ம.மு.க.வினர் செயல்படத் தொடங்கி விட்டனர். தோல்வித் தடைக்கற்களை வெற்றியின்படிக்கட்டுகளாக மாற்றும் வகையில் செயல்பட்டால் இனி வெற்றி காணலாம். 
தோல்விக்கான காரணங்களை ஆராயும் அதே நேரம், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். தங்களுக்குச் சார்பாக மக்கள் நிற்கும் வகையில் இனிச் செயல்பட வேண்டும். இவர்களின் செயல்பாடு அ.தி.மு.க.வைப் பா.ச.க. வலையில் இருந்து மீட்பதாக வும் அமைய வேண்டும்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் தங்கள வலிமையைக் காட்டும் அளவில் அ.ம.மு.க. இப்பொழுதிருந்தே பாடுபட வேண்டும். சூழ்ச்சியால் வெற்றிமாலை பறிக்கப்பட்டதால் விழிப்புடன் உடன் செயல்பட வேண்டும்!
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்(திருவள்ளுவர், திருக்குறள் 620)
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Followers

Blog Archive