Showing posts with label தமிழர் பெருமை. Show all posts
Showing posts with label தமிழர் பெருமை. Show all posts

Sunday, December 27, 2015

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 9 இலக்குவனார் திருவள்ளுவன்


(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 தொடர்ச்சி)
தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

09

  தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனக் குறிப்பிட இயலவில்லை.   பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள் பிற நாட்டின் பெயர்கள் மாறின எனில் அவ்வாறே புதிய பெயரில் அழைப்பர். பம்பாய் மும்பை என மாறியதும் மும்பை என்று அழைக்ககும் நம்மவர்களே சென்னையைச் சென்னை என்று அழைப்பதில்லை. மெட்ராசு என்று திரைப்படமும் வருகிறது. தமிழ்ப்பெயர் சூட்டிய படங்கள் இப்பொழுது வருகின்றன. பெரும்பாலும் அவை நல்ல படங்களாகவே இருக்கின்றன. தமிழ்ப் பெயர் சூட்டிய படங்கள், தமிழ்ப் பண்பாட்டை எதிரொலிக்கும் படங்கள் நன்றாக இல்லாவிட்டாலும்கூட நாம் பார்த்து ஊக்கப்படுத்த வேண்டும். அதே நேரம் தமிழில் இல்லாப் பெயர் தாங்கி வரும் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பார்க்காமல் புயறக்கணிக்க வேண்டும். எனவே, மெட்ராசு படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் எனத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வேண்டுகின்றேன். பிற அமைப்புகளிடமும் இதனைத் தெரிவிக்க வேண்டுகின்றேன். அரசாணையையும் மீறி நம் தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் இருக்கும் துணிவு உள்ளவர்கள் இருக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கையில் தமிழர் எனப் பெருமைபட என்ன இருக்கிறது?
  மத்திய அரசில் தமிழ்நாடும் உள்ளது எனில் தமிழ்மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நீதிமன்றங்களும் மண்ணின் மக்களான தமிழர்களின் உணர்வை மதித்துத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், நடப்பதென்ன? உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க மத்திய அரசு தடை. தமிழர்கள் தமிழர்களுக்காகக் கட்டிய தமிழ்க்கடவுள்களின் கோயில்களில் தமிழ்வழிபாட்டிற்கு உள்ள தடையை நீக்க மத்திய அரசு முயல்வது இல்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையில் அல்லல் பட்டு வரும் அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சொன்னாலும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை.
  தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள்அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் கொலைகாரனைத்தான் வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, மத்திய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம்போட்டு மீட்டு வரும் மத்திய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன் கைகோத்துக் கொண்டு தொடர்ந்து தமிழர்நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தியராக எண்ணினால் இணையுரிமை கொடு! இல்லையேல் தனியுரிமை கொடு! எனக் கேட்டு மத்திய அரசை வழிக்குக் கொணரும் திறமைகூட நம்மிடம் இல்லை.
  தொலைபேசி முதலான மத்திய அரசு தொலைபேசிகளில் வணக்கம் ஒலிக்காது; நமசுகாரம்தான் நச்சரிக்கும்.
  பண எடுப்பு மையங்களில் ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆனால் பலவற்றில் தமிழைக் காணோம்!
  வங்கியின் படிவங்கள் தமிழைப் புறக்கணிக்கின்றன. நாம் அவ்வங்கிகளைப் புறக்கணிப்பதில்லை!
  அங்கன்வாடி முதலான பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழை நாமே வெளியேற்றிக் கொண்டுள்ளோம்.
  தமிழகக்காவல்துறை ஆங்கிலேயர்க்குச் செயல்படுவதுபோல் அறிவிப்புகள், வழிகாட்டும் குறிப்புகள் யாவற்றிலும் தமிழ் இல்லை. தமிழன்னைக்குக் காவல் தேவையில்லை என விட்டுவிட்டார்கள் போலும்!
  தொடர்வண்டி அறிவிப்புகளில் தமிழ் இல்லை. எச்சரிக்கை, அபாய அறிவிப்பு என்றெல்லாம் தமிழ்நாட்டில் இந்தியிலும் மலையாளத்திலும் காண முடியும். ஆனால், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு எதற்கு எச்சரிக்கை என்று தமிழில் தருவதில்லை!
  மின்னேணி முதலான அனைத்து அவசர உதவி அறிவிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் தமிழைக் காணமுடியாது. தமிழர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று விட்டுவிட்டார்ளா? இப்படியாவது தமிழர் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என எண்ணுகிறார்களா? எனத் தெரியவில்லை.
  உணவகங்களில் உணவுப் பெயர்கள் தமிழில் இல்லை! உணவு நிரலும் தமிழில் இல்லை! தமிழையா   சாப்பிடப்போகிறார்கள்! தருவதை வயிற்றில் திணித்துக் கொண்டு ஓடட்டும் என எண்ணுகிறார்களோ!
  தங்கும் விடுதிகளான உறைவகங்களில் அறைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. கட்டண விவரங்கள், வசதி வாய்ப்புகள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழர்களி்ன் மொழியான தமிழைப் புறக்கணிக்க இவர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது? தமிழர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள். முரண்டுபிடிக்கும் பொழுது மெதுவாகத்தட்டினாலே வீழ்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை போலும்! நமக்குள்ள உரிமைகளைக்கூடக் கேட்க முடியாமல் வாய் மூடி இருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
 உறைவகங்களில் தங்குவதற்கான பதிவில் தமிழ் இல்லை. உணவகங்களில் நாம்தான் பணம் கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முதலான விழா அல்லது நிகழ்வுக் குறிப்புகளை அவர்கள் தமிழில் எழுத மாட்டார்களாம்! என்ன கொடுமை இது!
  கடைகளில் தரும் விலைச்சீட்டுகளில் தமிழ் இல்லை.
 அரசாணைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் மதிக்காத பொழுது மக்கள் எங்ஙனம் மதிப்பார்கள்? சான்றுக்கு ஒன்று! ஊர்திகளில் தமிழில் பதிவு எழுத்துகளைக் குறிக்கும் அரசாணையை அமைச்சர்களோ தலைமைச் செயலக அதிகாரிகளோ துறைத்தலைவர்களோ மதிக்காத பொழுது வேறு யார்தான் மதிப்பார்கள்! கணக்குக் காட்ட ஓர் அரசாணை அவ்வளவுதான்! இப்படித்தான் தமிழ்நாட்டில் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாக இல்லை.
  தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் படிக்கவும் பணியாற்றவும் வாய்ப்பு உள்ளபோது யாருக்கும் உதவாத தமிழ் என்று அனைவரும் புறக்கணிக்கத்தானே செய்வார்கள்! இப்படி எல்லாம் இயன்ற வரை தமிழை எல்லா இடங்களில் இருந்தும் துரத்தி விட்டு யாரோ சிலர் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என முழங்கினால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+10




Tuesday, December 22, 2015

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

08

  “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே நம்நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும்” எனப்பயிற்றுமொழிப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்.(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284:285) இன்றைக்கு ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. தமிழ்வழிப்பள்ளிகள் உள்ள அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழி புகுந்துவிட்டது. அது தானாகப் புகவில்லை. அரசால் புகுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழே கல்வி மொழி என்பதைச் செயல்படுத்தாத நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்கு, “தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்”. என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284). ஆனால், இன்றைய நிலை என்ன? “தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை” என எத்தனைப் பாவேந்தர்கள் அவலக்குரல் எழுப்பினாலும் மாற்றிக் கொள்ளாத மாந்தர்களாக நாம் இருக்கின்றோம். வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கி
  ஆற்றுக்குக்கரை போல் இலக்கியத்திற்கு இலக்கணம் தேவை. ஆனால், இன்றைக்கு இலக்கணத்தை அழித்து இலக்கியத்தையும் அழித்து வருகின்றனர்.
  “இன்று தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் புலவர்களும் பெருகி வருகின்றனர். மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்டு சிலர் கட்டுரைகள் எழுதுகின்றனர்; பாடல்கள் இயற்றுகின்றனர். அவர்கள் தமிழிலக்கண மரபை அறியாமலும தமிழிலக்கிய மரபைப் புறக்கணித்தும் கருத்துச் செறிவின்றி நடையழகு இன்றி எழுதிக் குவிக்க முற்படுகின்றனர்.   முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது.”(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282) என்கின்றார் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். காலந்தோறும் இயல்பாக இலக்கண மரபில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால், இலக்கணமே தேவையில்லை எனத் தப்பும் தவறுமாக எழுதிக் கொண்டு அதனையே புது இலக்கியமாகக் கூறிவருவோர் பெருகி வருகின்றனர்.
  இலக்கணங்கள் ஒலி வடிவ எழுத்துகளில் உரு வடிவங்கள் குறித்தும் கூறியுள்ளன. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்கிறது நன்னூல். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் இவ்வாறே கூறுகின்றது. ஆனால், தமிழ் வரிவத்தைச் சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டு சிலர் வாழ்ந்து வருகின்றனர். உரோமன் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேவாரம் படிப்பதற்கேற்ப வரிவடிவம் அமைய வேண்டும் என்று புதுப்புது வரிவடிவங்களைக் கற்பித்தும் கிரந்த எழுத்துகளுக்கு வாழ்வு தந்து கொண்டும் உள்ளனர். தமிழின் வாழ்விற்குத் தடையாக உள்ளவர்கள் தளர்ச்சியின்றி வாழ்கையில் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+10
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 9)



அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015 

Saturday, December 19, 2015

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 

இலக்குவனார் திருவள்ளுவன்


(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 தொடர்ச்சி)
தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

07

  ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது.

தமிழென் கிளவியும் அதனோ ரற்றே.
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )
             செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 398)
             செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 400)
             தமிழ்கூறு நல்லுலகத்து
(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)
             செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)
  தமிழ் இலக்கியங்களில் ஆயிரக்கணக்கில் தமிழ் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கில் தமிழ் அடைமொழிகளுடன் குறிக்கப்படுகிறது. அவ்வாறிருக்க, தமிழ் மொழிக்குப் பெயரைப் பிற இனத்தார் அல்லது மொழியார் சூட்டினர் என்பது கேலிக்குரியதல்லோ?
  “உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ – ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.” என்கிறார் பழந்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ் பக்கம் 30).
  திராவிடம் என்று சொல்லாமல் நாம் தமிழ்க்குடும்ப மொழிகள், தமிழ்க்குடும்ப இனம் என்றே சொல்வோம். ஆனால், வேண்டுமென்றே திராவிடம் தமிழைக் குறிக்கின்றது என்பதை மறைத்துவிட்டு, தமிழில் இருந்து பிற மொழிகள் வந்தன என்பதையும் மறைத்து விட்டு, மூலத் திராவிட மொழி என்று ஒன்று இருந்ததாகவும் அதிலிருந்தே தமிழ் முதலான மொழிகள் தோன்றின என்றும் திரிப்போர் உலகில் செல்வாக்குடன் திரிகின்ற பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்னஇருக்கின்றது?
  தலைசிறந்த மொழியியல் அறிஞர் தொல்காப்பியர். அவர் தமிழ் மரபைக் காக்க அன்றைக்கே நூல் எழுதினார். இன்றைக்கோ மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையர் தமிழின் சிதைவிற்கு வழிவகுத்து வருகின்றனர். பேச்சுவழக்கே மொழியின் உயிர் எனக் கூறிக் கொண்டு, கொச்சை நடைக்கு வாழ்வளித்துச் செந்தமிழை அழித்து வருகின்றனர்.
  “ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ளது. தமிழில் ஒலியைக் குறிக்கும் வரி வடிவங்கள் முப்பத்தொன்றேயாகும். ஆங்கிலத்தில் வரி வடிவங்கள் இருபத்தாறு என்றாலும் ஒரே வரி வடிவம் வெவ்வேறு ஒலிகளைத் தருகின்ற முறையில் சில எழுத்துகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இன்று. வல்லின எழுத்துகள் மெல்லினச் சேர்க்கையாலும், சார்ந்து வரும் பிற எழுத்துகளினாலும் ஒலிப்பு முறையில் சிறிது வேறுபடக் கண்டாலும் அதனால் பொருள் வேறுபாடு ஏற்படாது. மிகுமுயற்சியின்றி ஒலிப்பதற்குரிய எழுத்து முறையையுடையது தமிழேயாகும்.” என்கிறார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ் பக்கம் 27).
  உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே என்றும் தமிழரிடமிருந்து சுமேரியர் கற்றுப் பிற இனத்தவர்க்கு அறிவித்தனர் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். தமிழர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே செப்பமுள்ள எழுத்து முறையைக் கொண்டிருந்தனர் ஆதலின், எழுத்து முறை தமிழர்களிடமிருந்தே பிற மொழியாளர்க்குச் சென்றுள்ளது என்னும் கூற்றுப் பொருத்தமும் உண்மையும் உடையதாகவே தோன்றுகிறது. என்றும் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார்(பழந்தமிழ் பக்கம் 26).
  “தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் ‘தொல்காப்பியம்’ தமிழ் எழுத்து முறையை விரிவாக ஒன்பது இயல்களில் ஆராய்கின்றது. இத்தகைய விரிவான ஆராய்ச்சி வேறு எம்மொழியினும் காண்டல் அரிது. ‘எழுத்து’ என்னும் சொல் ஒலி வடிவத்தையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஆதலின் பேச்சு மொழி தோன்றியவுடனே எழுத்து முறையையும் அமைத்துக்கொண்டனர் என்று எண்ண இடம் தருகின்றது. அன்றியும் தமிழில் வரிவடிவ எழுத்து ஒலி வடிவ எழுத்தையே சுட்டுகின்றது. கருத்தினையோ (idea) பொருளையோ (object) சுட்டுவதின்று.” என்றும் நற்றமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகின்றார் (பழந்தமிழ்: பக்கம் 26).
  இத்தகைய ஒலிவடிவச்சிறப்பு மிக்க தமிழ்எழுத்துகளை ஊடகங்கள் வழி சிதைப்பவர்களும் உலவும் பொழுது வாளாவிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைகொள்ள என்ன இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+10
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8

 

Followers

Blog Archive