Showing posts with label திபேத்தியர். Show all posts
Showing posts with label திபேத்தியர். Show all posts

Wednesday, October 14, 2015

முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா?


jayawithtears

tibetansettlements_karnatakaதிபேத்தியர் குடியேற்ற இடங்கள்

eezhathamizharnilai

முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத்

தாயன்பு தேவையல்லவா?

  தமிழ் அறநெறிகளுள் ஒன்று, அடைக்கலம் என வந்தோர்க்கு ஆதரவு காட்டி, அரவணைத்து வாழ்வித்தலாகும். அடைக்கலப் பொருளைப் பொன்போல் காப்பவருக்கும் அடைக்கலமாக வந்தவரைத் தம் உயிரினும் மேலாகக் காப்பவர்க்கும் நற்பேறு கிட்டும் என்பது தமிழர் நம்பிக்கை. ‘விருந்தினர் இருக்கையில் சாவா மருந்தெனினும் தனியே உண்ணக்கூடாது’ என்பது தமிழ் நெறியல்லவா? அதைத்தானே தெய்வப்புலவர் திருவள்ளுவர்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
( திருக்குறள், எண்:82)
என்கிறார்.
  நம் நாட்டைப் புகலிடமாகக் கொண்டு வந்துள்ளோரும் விருந்தினர்தாமே! ஆனால், அவர்களை நாம் நடத்தும்முறை சரிதானா? அறம்தானா? நற்பேற்றிற்கு உரியதுதானா? அடைக்கலம் தருவோருக்குக் கிடைக்கும், ‘முட்டா இன்பத்து முடிவுலகு’ நமக்குக் கிட்டுமா? புகலிடம் நாடி வந்தவர்களைப் பஞ்சுபடும்பாடாக்கித் தவிக்க விடலாமா? “நான் படும்பாடு தாளம் படுமோ தறிபடுமோ” என ஒவ்வொருவரும் துன்பத்துடன் உரைக்க வைக்கலாமா?
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. (திருக்குறள் 1049)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நெருப்பினுள் தூங்கினாலும் பொருள் வறிதான சூழலில் ஒருவனால் தூங்க இயலாது என்கிறார். அடைக்கலம் என வந்த ஈழத்தமிழர்களைத் தன்மானம் வறிதான சூழலில் வாழ வேண்டும் எனத் தள்ளுவது அதனினும் கொடுமையல்லவா?
  புகலிடம் வருவோர் குறித்த கொள்கை எதுவும் இந்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்திய அரசு திபேத்திலிருந்து அடைக்கலம் வருநருக்கு வாக்குரிமையும் இந்திய அரசில் பணிபுரியும் உரிமை நீங்கலான இந்தியக் குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளையும் அளிக்கிறது(“the right to enjoy all the privileges enjoyed by any Indian citizen except the right to vote and work in Indian government offices”). அதுபோன்ற உரிமைகளை ஈழத்தமிழர்களுக்கும் தருவதுதானே நடுவுநிலைமையும் மனிதநேயமும் ஆகும். வாக்குரிமையும்கூட, சனவரி 26, 1950 இலிருந்து சூலை 1, 1987 இற்குள் பிறந்த அனைத்துத் திபேத்தியருக்கும் நீதிமன்றத்தீர்ப்பின்படி வழங்கப்பட்டு விட்டது. கருநாடக அரசின் (2013 ஆம் ஆண்டு) தீர்ப்பு ஒன்றின்படி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தியாவில் பிறந்த திபதே்தியர் அனைவருக்கும் இந்தியக் குடிமையுரிமை உண்டு என்ற அடிப்படையில் வாக்குரிமையும் வழங்கியுள்ளது. திபேத்தியர் மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதற்காக, இந்தியாவில் தனிப்பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெறுகின்றன. மழலைநிலைப் பள்ளி நீங்கலாக இத்தகைய பள்ளிகள் எண்ணிக்கை 73ஆகும். இந்தியாவில் திபேத்தியர்களுக்கான குடியேற்றங்கள் இருபதுக்கும் மேலே உள்ளன. கருநாடக அரசு (அப்போதைய மைசூர் மாநில அரசு) 1960 இல் பைலக்குப்பே(Bylakuppe) என்னும் இடத்தில் 3000 காணி(ஏக்கர்) நிலத்தைத் திபேத்தியக் குடியேற்றத்திற்காக வழங்கியுள்ளது. (விக்கிபீடியா)
  கருநாடக அரசு 1966இல் மண்டுகாடு (Mundgod) என்னுமிடத்தில் 4000 காணி (ஏக்கர்) நிலப்பரப்பில் குட்டித்திபேத்து போன்ற குடியேற்றத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. குட்டித் திபேத்து என்று சொல்வதன் காரணம் திபேத்தியர் அல்லாதவர் இங்கே செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் உள்துறையில் இசைவு பெற வேண்டும். இவை தவிர, வேறுசில குடியேற்றங்களையும் அமைத்துத் தந்துள்ளது.( http://www.tibethomestay.com/ )
  இதேபோல், இமாச்சலப்பிரதேச அரசு, காசுமீர் அரசு, உத்தரகண்ட அரசு எனப் பலவும் மத்திய அரசின் கொள்கையால் திபேத்தியர்களை நம் நாட்டுக் குடிமக்களுக்கு இணையாக நடத்திக் குடியேற்றங்களுக்கு நிலங்கள் வழங்கி, கோயில்கள், பள்ளிகளுக்கும் நிலங்களும் பொருளுதவியும் வழங்கி வருகின்றன.
  எந்தக் குடியேற்றப் பகுதியில் திபேத்தியர்கள் இருந்தாலும் அங்கே கூட்டுறவு அமைப்பு, முதியோர் மனைகள், வேளாண் பிரிவு, இளைஞர் பணிவழங்கல் பிரிவு, மகளிர் பிரிவு, வீடமைப்பு, பண்ணையமைப்பு போன்றவற்றின் மூலம்   மத்தியத் திபேத்தியப் பணியகம் உதவிகள்ஆற்றி வருகின்றது. (http://www.centraltibetanreliefcommittee.org )
  பதிவுச் சான்றிதழுடன்[Registration Certificate (RC)] கூடிய தங்கல் இசைமத்துடன்(stay permit) திபேத்தியர்கள் இந்தியாவில் வாழும் உரிமையுடையவர்கள். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளிலும் திபேத்தியருக்கு இட ஒதுக்கீடு உண்டு. திபேத்தியர்களுக்கு என்னதான் வாய்ப்பு நலன்கள் ஏற்படுத்தித் தந்தாலும் உரிமையுள்ள தங்கள் நாட்டில் வாழ்வதற்கு ஈடாகாதுதான். இங்கும் அவர்களுக்கும் தீர்க்க வேண்டியை சிக்கல்கள் இருக்கின்றன உண்மைதான். என்றபோதும் சீனாவின் பகைத்தலைவரான தலாய்லாமாவிற்கும்   பகை மக்களான அவரது ஆதரவு திபேத்திய மக்களுக்கும் சீனாவின் எதிர்ப்பையும் மீறிப் பல்வேறு உரிமைகளையும் வாய்ப்புகளையும் இந்திய அரசு வழங்குகிறது. ஆனால், சீனாவைப் பொய்யாகக் காரணம் காட்டிச் சிங்கள அரசுடன் இந்திய அரசு உறவு கொள்கிறது. உறவாக விளங்கும் தமிழர்களைப் பகையாகவே கருதி அழித்து வருகிறது. சொல்லொணாத் துயரத்திலிருந்து மீண்டு வந்தவர்களை – நம் இனத்தவரை – ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ எனப் பெருமை பேசிக் கொண்டு நாம் அடிமைகளிலும் கீழாக நடத்தலாமா? குற்றமற்றவர்கள் என நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்களையும் இந்த முகாம்களில் அடைப்பதும் போதிய கல்வி வசதி, உணவு வசதி, மருத்துவ வசதி, உழைப்பு வசதி, குடியிருப்பு வசதி முதலானவற்றைத் தராமல் துன்புறுத்துவதும் எந்த வகையில் முறைமையாகும்? ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்புமாக மத்திய அரசுதான் ஈழத்தமிழர்களை ஒடுக்குகின்றது என்றால் தமிழக அரசு அதே முறையைப் பின்பற்றலாமா?
  தமிழர் வாழும் நாடுகளில் தூதரகங்களில் தமிழதிகாரிகளை அமர்த்தாத மத்திய அரசு, தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியத்தை இந்தித்தேசியமாக மாற்றி வரும் மத்திய அரசு,   உலகத் தமிழர்களை இந்தியர்களாக மாற்றி வரும் மத்திய அரசு, ஈழத் தமிழர்களின் தாயகத்தை அழித்து வரும் மத்திய அரசு, கொத்துக்குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு உடந்தையாக இருந்த மத்திய அரசு, அதானேலேயே அவர்கள் புகலிடம் நாடி நம் நாட்டிற்குள் வருவதற்குத் தடையாய் இருந்த மத்திய அரசு புலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழர்கள்பால் பரிவுடன் நடந்து கொள்ளும் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், தமிழ் மொழிக்காகவும் தமிழர்நலனுக்காகவும் செயல்பட வேண்டிய தமிழக அரசு பாராமுகமாக இருப்பதும் அதனினும் மோசமாகக் கொடுமுகத்தைக் காட்டுவதும் எந்த வகையிலும் முறையல்லவே!
  தம்முடைய இயற்பெயரும் மறந்து திரைப்பெயரும் மறைந்து அம்மா என்றும் தாய் என்றும் அழைக்கப்படுகின்ற முதல்வர், தாயுள்ளத்துடன் அனைவரிடமும் நடந்துகொள்வதுதானே முறையாகும். உலகத்தமிழர்கள் முதல்வர் பக்கம் நிற்கின்றார்கள் என்றால் மத்திய ஆளும் கட்சியுடன் உறவு இருந்தாலும் மத்திய அரசிற்கு எதிராகத் துணிந்து ஈழத்தமிழர்பாலான பரிவினை வெளிப்படுத்தியதுதானே! ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என உண்மையைக் கூறிச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியதுதானே! இனப் படுகொலை புரிந்தவர்கள் அனைவரும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என உலகத்தமிழர்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியதுதானே! உலகத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு எடுத்துத் தனித்தமிழீழத்தை அமைக்க வலியுறுத்தியதுதானே! இதனால் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டுள்ள உலகத்தமிழர்கள் தங்கள் உறவினர் தமிழ்நாட்டில் வாழும் உரிமையின்றி அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் எனக் கேட்கும் பொழுது நெஞ்சம் பதறாதா? நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டவர்களும் முகாம்களில் அடைக்கப்படுவதும் காவல் துறையினரால் அல்லலுக்கு ஆளாக்கப்படுவதும், உரிமை வேண்டி உண்ணா நோன்பு இருந்தால் அது குறித்துக் கவலைப்படாததும் வேதனை தராதா? குழந்தைகள் அம்மாவிடம் முறையிடுவதுபோல் முறையிட்டாலும் தாயுள்ளத்துடன் நோக்காமல் ஈழத்தமிழர்களைக் கொட்டடியில் அடைத்து வைக்கலாமா?
  தமிழக அரசு மக்கள் உதவிகளுடனும் ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் புரியலாம். முன்னர் நடிகர் விசயகாந்து(தே.தி.மு.க.தலைவராகும் முன்னர்) பெருமளவில் தொடர்ந்து ஈழத்தமிழர் முகாம்களில் உதவியும் அவரைப்போல் பிறர் உதவியும் அரசின் தடைகளால் உதவ இயலவில்லை. திபேத்தியர்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்படுவதில்லை.   இமாசலப் பிரதேச அரசு உள்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மத்தியத் திபேத்தியன் பணியகம்(நிருவாகம்)பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அதே நேரம், ஒவ்வொருவர் படிப்புப் பொறுப்பைப் பிறர் ஏற்கும் வண்ணம் திட்டம் வகுத்துப் படிப்பிக்கச் செய்கின்றனர். தனி மருத்துவமனைகளும் உள்ளன. பிற மாநிலங்களிலும் முதலில் குறிப்பிட்டாற்போல் உதவிகள் அளிக்கப்படுகின்றன. இதேபோல் தமிழக அரசு ஈழத்தமிழர்களின் கல்வி, வேலைவாய்புகளுக்கு உதவ மக்களின் உதவியை நாடினால், உதவுவதற்கு எண்ணற்றோர் உள்ளனர். அயலகத் தமிழர்களும் உதவ முன்வருவர்.
  எனவே, தமிழக அரசு, ஈழத்தமிழர்களை முகாம் எனப்படும் கொட்டடிகளில் அடைத்து வைக்காமல் உரிமையுடன் வாழ வழிவகைசெய்ய வேண்டும்.
அனைவருக்கும் மருத்துவ முகாம்கள் நடத்தி உயரிய மருத்துவ வசதி அளிக்க வேண்டும்.
சிறப்பான கல்வி அளிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு, தொழில் வசதிகளை அளிக்க வேண்டும்.
புலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழர் நலனகம் ஒன்றைத் தமிழக அரசு அமைத்து அதன் மூலம் வேண்டிய உதவிகளை ஆற்ற வேண்டும்.
  இவ்வாறெல்லாம் செய்ய வேண்டிய அம்மா தாயன்பு காட்ட வேண்டிய அம்மா நிலைத்த பழிச்சொல்லிற்கு ஆளாகும் வண்ணம் ஈழத்தமிழர்களை ஒடுக்கி வைக்கலாமா? அடக்கி வைக்கலாமா? தடுத்து வைக்கலாமா? ஈழத்தமிழர்களிடையே நம் நாட்டில் ஒன்றும் வெளிநாடுகளில் ஒன்றுமாக இரு முகம் காட்டலாமா?
நன்றே செய்க!
நன்றும் இன்றே செய்க!
இன்றும் இன்னே செய்க!
என்றும் நிலை புகழ் பெறுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அகரமுதல 100புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 : இதழுரை
AkaramuthalaHeader

Wednesday, June 25, 2014

ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்!

ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்!

Nanthini01
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள ஈழத்தமிழர்க்கான சிறப்பு முகாமில் உள்ள நந்தினி என்பவர் 12 ஆம்வகுப்பில் 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கல்விக்கான தகைவுமதிப்பெண் (cut off mark) 197.50 பெற்றுள்ளார். கலந்தாய்விற்கு விண்ணப்பித்தும் இவருக்கு அழைப்பு வரவில்லை. மருத்துவக்கல்விஇயக்கக அதிகாரிகள் ”இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ‘இலங்கை அகதிகள் முகாமில்’ வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழர்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவர்கள். அடைக்கலமாக வந்தவர்களை நம் உயிரினும் மேலாகக் காக்க வேண்டும். இதற்கு நாம் சிலப்பதிகாரக் காப்பியத்தில் சான்று காணலாம். கௌந்தியடிகள் இடைச்சியர் தலைவி மாதரி என்பாரிடம் கோவலன், கண்ணகியை அடைக்கலமாக ஒப்படைக்கிறார். கோவலன் உயிர் பறிக்கப்பட்டான் என்று கேள்விப்பட்டவுடன் மாதரி, ”அடைக்கலப் பொருளை இழந்து கெட்டேன்” என அலறி, தீயுள் புகுந்து உயிரை விட்டாள். தமிழ்நெறிக்கு மாறாக நாம், காத்தோம்ப வேண்டிய ஈழத்தமிழர்களைப் படாதபாடு படுத்துகின்றோம்.
1990இல் இலங்கையிலிருந்து வந்து இம்முகாமில் சேர்க்கப்பெற்ற இராசா, அல்லி மலர் ஆகியோர் 1995 இல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் மூன்று மக்களில் ஒருவர்தான் நந்தினி. எனவே, அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்ற முறையில் அனைத்து உரிமைகளும் பெறுவதற்கு உரியவர்.
1959 முதல் கடந்த 55 ஆண்டுகளாக இந்தியாவிற்குள் 150,000 திபேத்தியர்கள் அடைக்கலமாகக் குடிபுகுந்துள்ளனர். அவர்கள் முறையாகத் திரும்பும் வரை இந்தியாவில் எல்லா உதவிகளும் அளிப்பதாக நேரு உறுதியளித்ததற்கிணங்க அவர்களுக்கு எல்லா உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவர்களின் தலைவர் தலாய்லாமா, நிலப்புற அரசு  ( government in exile) அமைக்க இமாச்சலப் பிரதேசத்தில் இடமும் இயங்க உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.அவர் இங்கிருந்தபடியே Tibetan Parliament in Exile tibet-central-administration03 Tibetan-Government-In-Exile-2 Tibetan-Government-In-Exile-1-நிலப்புறத் திபேத்திய அரசை நடத்துவதற்கு இந்தியா எல்லாவகையிலும் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. தருமசாலாவில் நிலப்புறத் திபேத் அரசு இயங்கி அரசியல் நடவடிக்கைகளிலும் திபேத் மக்கள் முன்னேற்றத்திற்கான செயல்களிலும் ஈடுபட்டுவருகிறது.
1960இல் கருநாடக அரசாங்கம், 3000காணி (ஏக்கர்) நிலம் அவர்களின் முன்னேற்றத்திற்கு அளித்துள்ளது. இவ்வரசாங்கம் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் மாநிலத்தின் அன்சூர் அருகே உள்ள குருபுரா (Gurupura), கொள்ளேகல் அருகே உள்ள ஒடெரபால்ய (Oderapalya) வடக்குக் கன்னட மாவட்டத்தில் உள்ள முண்டகாடு (Mundgod) பிறபகுதிகளிலும் திபேத்தியர்கள் குடிபுகுந்து வாழ வழிவகைகள் செய்துள்ளன.
பிற மாநிலங்களும் திபேத்தியர் இயல்பான வாழ்வு வாழ உதவி வருகின்றன. இதில் குறிப்பிடத்தகந்தது, திபேத்தியருக்கான நிலப்புற அரசு அமைய உதவி வரும் இமாச்சலப்பிரதேசமாகும். இங்குள்ள பிர்(Bir) என்னும் பகுதியில் திபேத்தியர் குடியிருப்பு அமைத்துத் தந்துள்ளது. அது மட்டுமல்ல திபேத்தியர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியும் வருகிறது.
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும் (IGMC, Shimla) இராசேந்திரபிரசாத்து மருத்துவக் கல்லூரியிலும் (Dr.RPGMC, Tanda) ஆண்டுதோறும் திபேத்திய மாணவர் ஒவ்வொருவருக்கு இமாச்சல அரசு இடம் அளிக்கிறது. ஆண்டுதோறும் மாணாக்கர்க்குக் கல்வி உதவியும் குறிப்பாக, 10 மாணாக்கர்க்குத் தொழிற்கல்வியில் படிக்க உதவியும் செய்து வரும் திபேத்தியர் மத்தியப் பணியாட்சி(Central Tibetan Administration) இவ்விருவரின் கல்விக்கும் உதவி வருகிறது.
திசம்பர் 22, 2010 இல் தில்லி உயர்நீதி மன்றம் நம்கயல் தோல்கர் என்பாருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சுக்கும் (Namgyal Dolkar v. Ministry of External Affairs) ஏற்பட்ட வழக்கில் வழங்கிய தீர்ப்பு ஒன்றின்படி, 26.01.1950 இற்குப் பின் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் – அவரது பெற்றோர் எந்நாட்டவராயினும் – பிறப்பால் இந்தியக் குடிமகனே. எனவே, அதற்கேற்ப முழு உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டாக வேண்டும். 1956 இற்கும் 1987இற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த 35,000 திபேத்தியர்கள் இதனால் பயனுற்றனர்.
 இமாச்சல அரசு திபேத்தியருக்கு உதவி வருகையில் தமிழக அரசு ஈழத்தமிழர்க்கு எல்லா வகையிலும் உதவ வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகள் 20, அரசுசார் நிறுவனக் கல்லூரி 1, பல் மருத்துவம், சித்த மருத்துவம் முதலான பிற மருத்துவக் கல்லூரிகள் 7 ஆக 28 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இமாச்சலப்பிரதேச அரசைப் பின்பற்றித் தமிழக அரசு 28 கல்லூரிகளிலும் ஒவ்வோர் இடம் ஈழத்தமிழர்க்கு என ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசைப் பின்பற்றித் தனியாரும் ஒவ்வோர் ஈழத்தமிழ் மாணாக்கருக்கு இடம் அளிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
jayalalitha06
எதிலும் முன்மாதிரியாக இருக்க விரும்பும் தமிழக முதல்வர் இமாச்சலப்பிரதேச அரசைப் பின்பற்றியாவது இவ்வாறு நெறிப்படுத்தலாம் அல்லவா? மேலும், இவ்வாறு ஈழத்தமிழர்க்கு இடம் ஒதுக்குவது தமிழ்நாட்டரசிற்குப் புதியதன்று. தமிழ்நாட்டிலும் 2000 ஆம்ஆண்டுவரை மருத்துவப்படிப்பில் ஈழத்தமிழர்கள் இருபதின்மருக்கு இடம் வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டு விட்டது. மத்திய அரசுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
திபேத் தவிர, வங்காளத் தேசம், ஆப்கானித்தானம், பருமா எனப் பலநாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்துவந்தோர், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், இந்திய அரசு இவர்களுக்கு ஓர் அளவுகோல், ஈழத்தமிழர்களுக்கு ஓர் அளவுகோல் எனப்பாகுபாடு காட்டுகிறது.
திபேத்தியர்களுக்கு இலவசக் கல்விக்கான தனிப்பள்ளிகள், இலவச மருத்துவ வசதி, தனிப்பள்ளிகளில் பயில்வோருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கல் எனப் பல வகையிலும் உதவி வருகிறது. மத்தியத் திபேத்தியப் பள்ளிகள் 28, திபேத்தியச்சிறார் சிற்றூர்ப்பள்ளிகள் 18, திபேத்தியன் காப்பக நிறுவனப்(Tibetan Homes Foundation) பள்ளிகள் 3, சம்போத்தா திபேத்தியன்பள்ளிக் கழகத்தின் பள்ளிகள் 12, பனிஅரிமா நிறுவனப் (Snow Lion Foundation) பள்ளிகள் 12 எனக் கல்வித்துறை 73 திபேத்தியப் பள்ளிகளை நடத்துகிறது. (மழலைப்பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் இக்கணக்கில் அடங்கா.) 2,200 பேர் பணியாற்றும் இப்பள்ளிகளில் ஏறத்தாழ 24,000 மாணாக்கர் பயிலுகின்றனர். திபேத்தியர்கள் மருத்துவம், பொறியியல் படிக்கவும் உதவிவருகிறது.
ஆனால் தமிழ்நாட்டிலோ, அரசும் முறையாக உதவுவதில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தமிழ், தமிழர் நல அமைப்புகள், தனிப்பட்டோர், கலைத்துறையினர் என யாரும் ஈழத்தமிழர்களுக்கான சிறப்பு முகாம்களில் உதவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் பெறக்கூடிய உதவிகள் கிடைக்காமல் போவதும் இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
 eezham-camps04 eezham-camps03 eezham-camps01 eezham-agitation02
வறுமை போன்ற எக்காரணங்களாலும் பிறநாடு புகாத, பதி எழு அறியாப் பண்பின் பழங்குடிச் சிறப்புடைய மக்கள் தமிழ் மக்கள். அதே நேரம், பிற நாட்டார் வருவதால், அரசிற்கு ஏற்படும் சுமையில் பங்கேற்பவர்கள் தமிழ் மக்கள்.
   பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
   இறையொருங்கு நேர்வது நாடு.(குறள் 733.) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
வந்தாரை வரவேற்கும் தமிழ் மக்கள், தங்கள் சொந்த இனத்தவரை வரவேற்காச் சூழலை அரசு உருவாக்கலாமா?
மத்திய அரசு புலம் பெயர் மக்களிடையே தமிழர்க்கென ஓர் அளவு கோல் கொண்டு இரட்டை அளவுகோலைப்பயன்படுத்துகிறது. அதே நேரம், தமிழக அரசும் ஈழத்தமிழர்களிடையே இரட்டை அளவுகோலைப் பயன்படுத்தலாமா?.
தமிழ்ஈழ ஏற்பிற்கும் தமிழினப்படுகொலையாளிகள் தண்டிக்கப் படுவதற்கும் தமிழ் ஈழம் மலர்வதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் ஐ.நா.வை வலியுறுத்துவதற்கும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள்,   முதலான பல்வேறு முறைகளில் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா முனைப்பாக வலியுறுத்தி வருகிறார். இதனால் உலகத் தமிழர் உள்ளங்களிலும் மனித நேயர் மனங்களிலும் இடம் பெற்றுள்ளார்.
ஆனால், அவ்வாறு அமையும் தமிழ் ஈழத்தில் புலம் பெயர்ந்து இங்கு வந்த ஈழத்தமிழர்கள் நலமாக, வளமாக, நன்கு பயில்பவர்களாக, முறையாகக் கற்றவர்களாக, தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களாக மகிழ்ச்சியுடன் திரும்ப வேண்டுமல்லவா?
ஈழத் தமிழர்களை முகாம் என்ற   பெயரிலான கொட்டடியில் அடைத்துவிட்டு, அவர்களின் நலன்நாடித் தீர்மானங்கள் இயற்றுவதில் என்ன பயன்? புலம் பெயர்ந்து குடிபுகுநர் எங்கும் செல்வதற்கும் படிப்பதற்கும் உள்ள உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சியைக் குன்றச் செய்யலாமா?
கொலைகாரர்கள், கொலைகாரர்களை நடத்துவதுபோல், கெடுபிடி நடத்தி அவர்களைத் துன்புறுத்தலாமா?
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மனம் கலங்கி அவர்களை அல்லல்பட வைக்கலாமா?
இருகரம் நீட்டி வரவேற்கும் என நம்பிக்கையுடன் வந்த அவர்களை இன்னலுக்கு ஆளாக்கலாமா?
வாணாள் சிறைத்தண்டனைவாசிகள்போல் அவர்களை நடத்தி வாட வைக்கலாமா?
வாழ்விழந்து வந்தவர்களின் வாழ்க்கையைப் பறிக்கலாமா?

எனவே, தமிழக அரசு இரட்டை அளவுகோலைக் கை விட வேண்டும்.
புலம்பெயர்ந்து குடி புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியான அமைதியான வாழ்வு வாழ்வதற்குரிய எல்லா உதவிகளையும் ஆற்ற வேண்டும்.
ஈழத்தமிழர் கல்வி முன்னேற்ற வாரியம் அமைத்து அதன் மூலம் அனைத்து ஈழத்தமிழர்களும் எச்சிக்கலின்றியும் அனைத்துநிலைக் கல்வியிலும் சேரவும் தடங்கலின்றிப் படிக்கவும் உதவ வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ்ஈழ நிலப்புற அரசு அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வரசு ஈழத்தமிழர்களுக்கு ஆற்றும் உதவிகளைத் தடுக்கக் கூடாது.
தொண்டார்வ நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தனிப்பட்டோர் ஒல்லும் வகை உதவிட முன்வருவதை ஏற்க வேண்டும்.
ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்பும் பொழுது நம்மை மதித்து மகிழ்ந்து செல்லும் வகையில் ஈழத்தமிழர்களை நம் குடிமக்களுக்கு இணையாக நடத்த வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் முதற்படியாக செல்வி நந்தினிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தந்து படிப்பதற்கு எல்லா உதவிகளும் செய்ய வேண்டும்.
மத்திய அரசைத் துணிந்து தட்டிக்கேட்கும் உங்களை விட்டால் வேறு யார் இவர்களைக்காக்கப் போகிறார்கள் என்பதை நினைந்து
ஈழத்தமிழர்களுக்கு நன்றே செய்க! இன்றே செய்க! இன்னே செய்க!

நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/05/eezham-with-prapakaran011-395x560.jpg
இதழுரை
ஆனி 8, 2045 / சூன் 22, 2014
http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png


Followers

Blog Archive