Thursday, May 5, 2016

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-தேர்தல்சீர்திருத்தம்,திரு : thalaippu_therthalcheerthirutham_ilakkuvanarthiruvalluvan

1/2

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2


   உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய  ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள்  நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற  வேண்டும் என்று எண்ணுவது தவறாகும்.
    சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர் வலியுறுத்துவனவற்றுள் பின்வரும் நான்குதான் முதன்மையாக உள்ளன.
 கல்வித்தகுதி வரையறை
  1. தொகுதிச் சார்பாளர் இறந்தால் இடைத்தேர்தல் தேவையில்லை. அவர் சார்ந்த கட்சியே உரியவரைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.
  2. தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை
  3. வாக்குகள் அடிப்படையிலான சார்பாண்மை( விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்)
 இவை நமக்கு எவ்வவாறு ஏற்றன அல்ல என இனிப் பார்ப்போம்.
 1.கல்வித்தகுதி வரையறை
  சில நாடுகளில் உள்ளது போல் இல்லாமல், ஆண், பெண், அலி என்ற பால் பாகுபாடின்மை, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்மை, படித்தவன் படிக்காதவன் என்ற வகைப்பாடின்மைதான் இந்தியத் தேர்தல் முறையின் மிகப்பெரிய சிறப்பாகும். அவ்வாறிருக்க கல்வித்தகுதி  வரையறுக்க வேண்டும் என்பது அடிபபடையையே ஆட்டம் காணச் செய்யும். கல்வித்தகுதி என்றால் எந்த அளவு கல்வித்தகுதி, ஆணிற்கும் பெண்ணிற்கும்  ஒரே வகைக் கல்வித்தகுதியா என்றெல்லாம் சிக்கல் வரும்.
   2011 ஆண்டுமக்கள்தொகைக்கணக்கெடுப்பின்படி இந்தியாவில் படித்தவர்கள்  எண்ணிக்கை 74 விழுக்காடு (ஆண்கள் 82.14 விழுக்காடு;பெண்கள் 65.46  விழுக்காடு)
தமிழ்நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 80.33% (ஆண்கள் 86. 81%; பெண்கள் 73. 86%) (விக்கிபீடியா)
இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் படித்தவர்களே தேர்தலுக்கு நிற்கின்றனர். அதே நேரம் படிப்பிற்கும் பண்பிற்கும் பணியாற்றுவதற்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது.
 படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்.
என்றார் பாரதியார். (இப்பாடல்வரிகள்  பாவம் செய்தால்என்றும் சூதும் வாதும் செய்தால்என்றும் தவறாகக் குறிக்கப்படுகின்றன.)
 ஆனால் படித்தவர்கள்தாம் எவ்வாறு சூதும் பாவமும் செய்வது எனவும் படித்தவர்களாக இருக்கின்றனர். அதன்விளைவே நம் நாடு ஊழலின் உறைவிடமாக மாறியுள்ளது.
   பழங்குடியினர் வகுப்பிலோ வேறு சில வகுப்பிலோ படித்தவர்கள் இல்லாமல் இருக்கலாம். படிப்பின்மையைக் காரணம் காட்டி அவர்கள் தேர்தலில் நிற்கத் தடை விதிப்பது முறையற்றது அல்லவாஎனவே, தேர்தல் போட்டிக்குரிய தகுதியாகப் படிப்பைச் சேர்க்காத சிறப்புடைய நம் தேர்தல் முறையை மாற்றிப்படிப்பை அளவுகோலாகக்கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரும் தவறாகும்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் — நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா — அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
 என நாம் பாரதியின்  கட்டளைகளைப் பின்பற்றுவதில்லையே! மாறாக,
  நாம் பாதகம் செய்பரை அடிபணிதலும், முகமன் கூறி வாழ்த்துதலும் நம் இலக்கு என்று இருக்கும் பொழுது எங்ஙனம் நம் சார்பளார்கள் நல்லன ஆற்றுவார்கள்!  அவர்கள் குற்றங்கள் செய்தாலும் புகழப்படும்பொழுது குற்றங்களை நிறுத்தாமல் தொடரத்தானே செய்வார்கள்.
கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்
(பாரதியார்) என மக்கள் சார்பாளர்கள் இருக்க வேண்டும்.
ஆனால்,
கடமையாவன செல்வத்தைப் பெருக்குதல்
குடும்பத்தைஉயர்த்துதல்
பிறர் துயர்களைப் பொருட்படுத்தாமை
பிறர்நலம் மறத்தல்
 என்பனவே இன்றைய அரசியலர்களின் இலக்காக மாறிப்போனபின்பு நாம் தேர்தல் முறையைக்  குறைகூறிப் பயன் என்ன? எனவே, கல்வியை வேட்பாளருக்கோ வாக்காளருக்கோ தகுதியாக வரையறுக்காமல் அனைவருக்குமான கல்வியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
  1. இடைத்தேர்தல் தேவையில்லை என்பது:
  ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளாட்சி உறுப்பினர் போன்ற மக்கள் சார்பாளர்  இயற்கை எய்தினால் அல்லது  பதவி விலகினால் அத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இடைத்தேர்தல் என்பது ஆட்சியில் உள்ளவர்களின் செயல்பாடுகளை மதிப்பிடவும் பிற கட்சியின் முன்னேற்றங்களை அறியவும் உதவுகின்றது. வெறும் செலவு அடிப்படையில் இதனை வேண்டா என்பது தவறாகும். மக்களாட்சியின் மாண்பினை அறிய  உதவும் இடைத்தேர்தலைச் செலவு காட்டி இல்லாமல் ஆக்குவது முறையற்றதாகும்.  சீர்திருத்தம் என்ற பெயரில் அச்சார்பாளர் சார்ந்த கட்சியே மாற்று உறுப்பினரைத்  தெரிவு செய்து அனுப்பலாம் என்பது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். கட்சித்தலைமை தான் விரும்பியவர் தேர்தலைச் சந்திக்கத் தகுதியற்றவராக இருப்பின்மக்களிடம் செல்வாக்கு பெற்ற  ஒருவரைத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெறச் செய்யும். அடுத்து அவரை மிரட்டியோ வேறு பேர  அடிப்படையிலோ விலகச் செய்யும் தான் விரும்புபவரை எளிதில் மக்கள்சார்பாளராக ஆக்கி விடும்.
   நடைப்பயிற்சி செல்லும் பொழுது அரசியல் கொலைகள் நிகழும் நம் நாட்டில் மக்கள்சார்பாளரின் உயிர் பறிக்கப்பட்டு, அதற்குக் காரணமானவரே கட்சிச் செல்வாக்கு அல்லது தலைமையின் குடும்பத்தைச் சேர்ந்தவர் போன்ற முறையில் மக்கள் சார்பாளராக ஆக்கப்படுவார். இதனைக் கற்பனை என எண்ணக்கூடாது.  ஒரு கட்சியைச்சேர்ந்தவருக்குப் பிற கட்சியைவிட அவரது கட்சியிலேயே மிகுந்த எதிர்ப்பு இருக்கும் பாழ்செய்யும் உட்பகையே இன்றைய கட்சிகளின் போக்கு. இதுவரை நிகழ்ந்த பல கொலைகளும் அந்தந்தக் கட்சிக்காரர்களாலேயே நிகழ்ந்தன என்னும் உண்மையை நாம் மறக்கக்கூடாது. எனவே, யாரோ ஒருவர் கொல்லைப்புற வழியில் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள்சார்பாளராக ஆவதற்காக அப்பாவி ஒருவர் உயிரிழக்க வேண்டுமா? இதை ஏற்றுக்கொண்டால் அரசியல் கொலைகள் பெருகும் என்பதில் ஐயமில்லை.
  இதில் மற்றொரு குறைபாடும் உள்ளது. கட்சி  சார்பில் அல்லாம் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மறைவு போன்றவற்றால் அத்தொகுதி ஒழிவிடமானால் என்ன செய்வது?
   வெற்றி பெற்றவர்  வேறு கட்சியில் சேர்ந்தபின்னர் இயற்கை எய்தியிருந்தால் எக்கட்சிக்கு மாற்று உறுப்பினரை அனுப்பும் உரிமை உண்டு? மன்ற உறுப்பினர்களையும் வேட்பாளர்களையும் விலைக்குவாங்கும் நம் நாட்டில் இந்த நடைமுறை   எப்படி ஏற்றதாகும்?
   எனவே, இடைத்தேர்தலைச் செலவின் அடிப்படையிலோதேர்தல் ஊழல்களை ஒழிக்காமல் அவற்றின் அடிப்படையிலோ ஆளுங்கட்சி அதிகாரத்தைப்பயன்படுத்துகின்றது என்று சொல்லியோ வேண்டா என்பது மக்களாட்சிக்கு ஏற்றதல்ல.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
 ஊக்கார் அறிவுடை யார்.
(திருவள்ளுவர், திருக்குறள் 463)
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  முற்பகுதி

அகரமுதல 131, சித்திரை 18, 2047 மே 01, 2016
Akaramuthala-Logo

Monday, May 2, 2016

முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-முன்னேற்றப்பாதையில் ம.ந.கூ. - திரு : thalaippu_munnetra paathaiyil ma.na.kuuttani_thiru

முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி


  வழக்கமாக இரு கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி பெறுவார்களா  என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது.
  எல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது எதிர்ப்பது எப்படி நம்பகத்தன்மையானது என்றும் சிலர் வினவுகின்றனர். மாறி மாறி இத்தகைய கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட பெரிய கட்சிகளிடம் கேட்க வேண்டிய வினா இது. மேலும், தன்வலிமை யறியாமல் தேர்தலில் முத்திரை பதிக்க வேண்டிய நேரத்தில் வேறு முடிவுகளும் பிற கட்சிகளால் எடுக்க முடியாமல் இருந்தது.  இப்பொழுது மக்களுக்கு ஆளும், ஆண்ட கட்சிகள் மீது சலிப்பும் வெறுப்பும பெருகியுள்ளதை உணர்ந்து மக்கள் நலக்கூட்டணி அமைந்துள்ளது. இதுவரை தேர்தலைப்புறக்கணித்தவர்களும் முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களும் மாற்று அணிகளின் பக்கம் கருத்து செலுத்துவதால், இந்நலக்கூட்டணி நன்கு களப்பணியாற்றி பரப்புரை மேற்கொண்டால் வெற்றியை எட்டலாம்.
 அதே நேரம் இக்கூட்டணிபற்றிய எதிருரை இனிமேலும் உருவாவதைத் தடுக்கும் முயற்சியிலும் இக்கூட்டணியினர் ஈடுபடவேண்டும்.  நல்லவேளை வைகோ, தாம் மட்டும் போட்டியிடவில்லை என்று அறிவித்தாரே தவிர, தம் கட்சியே தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கவில்லை. கூட்டணியை உருவாக்குவதில் அவர் கொண்டிருந்த பொறுமையும் அமைதியும் கூட்டணி அமைந்ததும் மாறிவிட்டதோ என்ற ஐயம் பரப்பப்பட்டு வருவதை அவர் அறியாமல் இருக்க முடியாது. கோவில்பட்டியில் வேண்டுமென்றே சிலர் தலைவர் முத்துராமலிங்கருக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்த பொழுது கூட்டணி அமைவில் காட்டிய பொறுமையைக் கையாண்டிருக்கலாம்.
   அந்நிகழ்விற்குப் பின்பு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டவற்றையே மாலை அணிவிக்கத் தடைவிதித்தவர்களிடம்  தெரிவித்து, “உங்களில் யாரும் இவ்வாறு தலைவர் முத்துராமலிங்கருக்காகப் பணியாற்றினால் சொல்லுங்கள், நான் திரும்பச் செல்கிறேன்” என்றோ, “தேசியத்தலைவரை ஏன் சமூகத் தலைவராகச் சுருக்குகிறீர்கள்? மாற்றாரும் மாலையணிவிப்பதுதானே அவருக்குப் பெருமை” என்ற முறையிலோ கேட்டிருக்கலாம். இதனால் எதிர்ப்பு காட்ட வந்தவர்கள் விலகியிருக்கலாம். அல்லது திட்டமிட்டுத் தாக்கத்தான் வந்து விலகாமல் இருந்தாலும்  மக்களிடம் வைகோவின் புகழுரு இன்னும் வளர்ந்திருக்கும். உலகத்தலைவர்களை எல்லாம் சந்தித்தவர், அனைத்துக் கட்சித்தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர், இனியேனும்  ஆதங்கத்திலோ ஆற்றாமையிலோ பேசாமலிருத்தல் நன்று. வைகோவின் சாதி, சமயம்,மொழி, இனம் என்றெல்லாம் பாராமல் அவர் ஆற்றிவரும் அரும்பணிகளால் அவர்மீது மதிப்பு வைத்திருந்து ஆனால் வாக்களிக்காமல் இதுவரை இருந்தவர்களும்  அவரது  அணிக்கு வாக்களிக்க முன்வருவதை நன்கு பயன்படுத்திக்  கொள்ள வேண்டும்.
   பேரங்களுக்கு அடிபணியாமல் எளியவர் உள்ள கூட்டணியில் இணைந்ததன் மூலம் விசயகாந்தும் பணம் குவிப்பது நோக்கமல்ல என்பதை மெய்ப்பித்து விட்டார்.  அவரைப்பற்றிய திறனாய்வுகளை அவரும் படித்துவருவார். எனவே, தலைமைப்பண்புகளைக் காக்கும் வகையில் செயலாற்றுவது வாக்குகளைப் பெருக்கும்.
   தொல்.திருமா காங்.உடன் கைகோத்ததால் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டவர்.  மூலக் குற்றவாளிகளும் உடந்தைக் குற்றவாளிகளும் செல்வாக்குடன் இருக்கும் பொழுது அங்கிருந்து விலகியதால் மன்னித்து ஏற்கலாம். திராவிட இயக்கங்களால் ஏற்பட்ட தமிழ்ப்பெயர் சூட்டல் என்பது  இவரால் திரளாக நடத்தப்பெற்றது குறிப்பிடத்தக்க சிறந்த பணியாகும். தொல் தமிழர்கள் ஆட்சிப்பொறுப்பில் இணைவது நாட்டு நலனுக்கு நல்லது. அந்தவகையில் தன்வகுப்பு தாண்டி நல்லெண்ணங்களை வளர்த்து வரும் இவர் தன்  சிறுத்தைகளின் போலி ஆரவாரக் கூச்சல்களைக் கட்டுப்படுத்துவது நல்லது.  இவற்றால் மக்கள் செல்வாக்கினை எடைபோட முடியாது.
  இந்தியப்பொதுவுடைமைக்கட்சியில் தா.பா.அணி எனத் தனிஅணி இருப்பதுபோல் வரும் உரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இக்கட்சியின் வேட்பாளர்கள் சிலர் தகுதிகளைப்பார்க்கும் பொழுது, இவர்களும் அரசியல் சீர்கேடுகளுக்குத் தேவைக்கேற்ப இடம் கொடுப்பவர்கள் என்ற எண்ணமே ஏற்படுகின்றது. எனவே, இத்தகைய எண்ணங்களுக்கு இடம் தராமல் செயல்படவேண்டும்.
 மார்க்சியப்பொதுவுடைமைக்கட்சியில் சிவப்பு முகமூடி போட்ட காவிமுகங்களும் இருக்கின்றன. அவர்களின் செல்வாக்கால்தான் தமிழ்ஈழ விடுதலைபற்றிய அறிவிப்பு கூட்டணியின் பொதுக்கொள்கையில் இடம் பெறவில்லை என்பதே உண்மை. இவ்வாறு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டால், அவர்களின் பிற தொண்டுகளால் எப்பயனும் இல்லை. எனவே, எங்கோ இயங்கும் கட்சியின்  ஊதுகுரலாக இயங்காமல் இங்குள்ள மக்களின்  உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயலாற்றும் கட்சியாக இயங்க வேண்டும். அயல்வாழ்தமிழர்களுக்கெனத் தனி அமைச்சகம் அமைப்பதாகத் தெரிவித்து இருப்பதால் அதன் பணிகளைச்சிதைக்கக்கூடாது.
   வாசன் அமைச்சராக இருந்த பொழுது என்ன செய்தார் என்று தெரியவில்லை. அதிகம் வம்புதும்புகளில் மாட்டாதவர் என்ற நற்பெயர் உள்ளது. என்றாலும்  தா.மா.க.விற்கு உயிரூட்டியபின்பு மரு.இராமதாசு வழியில் நாளும் அறிக்கை விடுகிறாரே! இவை குறித்து அவர் ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்தார்? ஒரு துரும்பாவது கிள்ளிப்போட்டிருபாரா? இப்பொழுது தெரியும் தமிழக மீனவர்கள் துயரமும் ஈழத்தமிழர் துயரமும் அப்பொழுது கண்களில் படவில்லையா? இன்னும் தன்னைப் பேராயக்கட்சியாகிய காங்கிரசின் வழித்தோன்றலாகக் கருதாமல் தமிழ்மண்ணிற்கான  தலைவராக  எண்ணிச்செயல்பட வேண்டும்.
   எல்லாவற்றிலும் முதன்மையான ஒன்று உள்ளது. தேர்தல் நடைபெறும்பொழுதே வெற்றி பெறும் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கலாம் என்ற எண்ணம் இரு தரப்பாகப் பிரிந்து  மக்கள் நலக்கூட்டணித்தலைவர்களிடம் இருந்தால்இப்பொழுதே கூட்டணியை விட்டு வெளியேறித் தாங்கள் விரும்பும் பெரியகட்சிக்கு வாக்களிக்கத் தெரிவித்து விடலாம்.
  பொதுவாக யாரும் 100 தொகுதிகளைக்கூட எட்டமுடியாத வகையில் தேர்தல் முடிவுகள் அமையலாம். அப்பொழுது 100  வெற்றியிடங்களை ம.ந.கூட்டணி பெற்றால், பா.ம.க.வினை இணைத்துக்கொள்ளலாமே தவிர, பெரிய கட்சிகளை இணைக்கக்கூடாது. அதுபோல் எதிர்பார்க்கும் இடங்களில் வெற்றி காணாமல்பெரிய கட்சிகளும் பெரும்பான்மையின்றி இக்கூட்டணியின் ஆதரவு கேட்டால் கண்டிப்பாகத் தராமல் மறு தேர்தலுக்கு வழிவிட வேண்டும். அதுவே இவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது.
 இப்பொழுது மக்கள்நலக்கூட்டணியின்பால் மக்களின் ஆதரவு பெருகிவருகிறது. அதற்குக்காரணம் இவர்கள்  குறைகள் அல்லாதவர்கள் என்ற எண்ணம் இல்லை.  குறைகள் குறைவாக உடையவர்கள் என்பதுதான். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி புரிந்தவர்களிடம் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைப்பததைவிட ஒரு மாற்றிற்காக இவர்களிடம் ஒப்படைத்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் துளிர்விட்டிருப்பதுதான். அதே நேரம் ‘50 ஆண்டுக்காலத்திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்று பேசாமல், “தமிழ்நாட்டிற்குத்தலைகுனிவு ஏற்படுத்திய செயலலிதா ஆட்சிக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கும் மாற்றாக நல்லாட்சி தர வாக்களியுங்கள்” என்றுதான் முழங்க வேண்டும்.
  மாற்றத்தை விரும்பும்  வாக்காளர்களையும் புதிய வாக்காளர்களையும் ஒன்று திரட்டினால், மக்கள்நலக்கூட்டணி வாகை சூடுவது உறுதி!
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, May 1, 2016

மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பா.ம.க. – இலக்குவனார் திருவள்ளுவன்


தலைப்பு-பா.ம.க.,திரு : thalaippu_paamaka,mathilmelpunai,thiru

மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பாமக

  “வன்னியர் வாக்கு அன்னியர்க்கில்லை” என்பதையே உரமாகக் கொண்டு உருவானதுதான் பாமக. சாதிவெறிப் பேச்சுகளை உரமாக இட்டுவளர்ந்ததுதான் பாமக. என்றாலும் அரசியலில் நிலைப்பதற்கு இவை உதவா என்பதை உணர்ந்தபொழுது சாதிக்கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதும் பாமகதான். தொல்தமிழர்கள், அருந்ததியினர், பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகள், அமைச்சர் பொறுப்புகள் வழங்கியதும் பிற இனத்தலைவர்களின் திருவுருவங்கள், மணிமண்டபம் போன்றவற்றை அமைத்ததும் திறந்து  வைத்ததும் பாமகதான். மாறியது பாமக, மாற்றியது மரு.இராமதாசு!
  புகைபிடித்தலைக் கட்டுக்குக் கொண்டுவர முயற்சிகள் எடுத்து  வெற்றி கண்டமை,  மது ஒழிப்புப் போராட்டம், சமச்சீர்க்கல்விகான போராட்டம், தன் சாதியினருக்குமட்டும் என்றில்லாமல், பட்டியல் இனத்தவர், பிற வகுப்பார்க்கான இட ஒதுக்கீட்டுப்போராட்டம் எனப் பொதுநிலையில் செயல்பட்டு வருகிறது. இவற்றுள் மது ஒழிப்புப் போராட்டம் என்பதில் முழுமூச்சாகச் செயல்படும் சிறப்பான பணிகளுக்கு உரியது பாமக மட்டுமே!
  ஊடகங்களைப் பணம்காய்க்கும் துறைகளாக நடத்திக் கொண்டு, பண்பாட்டுச்சீரழிவுகளுக்கு   திமுக, அதிமுக, ஊக்கமளிக்கும் பொழுது ஊடகங்களில் தமிழ், தமிழர் நலன்களையே எதிரொலிக்கும் கட்சியும் பாமகதான். பாமகவின் துணையமைப்பான  பசுமைத்தாயகம் மூலம் தாய்மண் நலனுக்காக உழைப்பதும் மற்றுமொரு சிறப்பாகும். ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலுள்ள பாமக, இப்பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் ஐ.நா.வில் மரு.அன்புமணி  ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைலையே என வாதுரை மூலம் பதிந்ததும் பாராட்டிற்குரியதாகும்.
  மக்களுக்கான மனைப்பொருள்களை  இலவசமாக வழங்கமாட்டோம் என அறிவித்துத் தேர்தலில் நிற்பதும்  பாராட்டிற்குரியதுதான். மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவ வசதிகளைக் கட்டணமின்றி அளிக்கவும் மனைப்பொருள்களை அவ்வாறு வழங்கமாட்டோம் எனவும் முடிவெடுத்துப் பரப்புரை மேற்கொள்வது மக்களின் ஆசைகளைத் தூண்டி வாக்குகள் கேட்கமாட்டோம் என்னும் நலன் சார்ந்த துணிவாகும்.
  எனவே,  பாமக நிறுவனர் மரு.இராமதாசு பெரிதும் பாராட்டிற்குரியவராக இருக்கிறார்.
  முதல்வர் வேட்பாளராக இக்கட்சியில் அறிவிக்கப்பட்ட மரு.அன்புமணி மேற்கொள்ளும் பரப்புரை, நடுநிலையாளர்களால் மட்டுமல்லாமல் எதிர் நிலையில் உள்ளவர்களையும் கவர்ந்துள்ளது.
   அரசிற்கு இணையாக வரவுசெலவுத்திட்டம் தொடர்பான நிதிநிலையறிக்கை முன்முறை வரைவினை ஆண்டுதோறும் அளிப்பது ஆட்சிக்கு  வரும் முன்னரே ஆட்சிபுரிவதற்கான பாதையில் பயணம செய்யும் பட்டறிவை அளித்துள்ளது.
  மரு.இராமதாசு பெயரில் நாள்தோறும் வரும் அறிக்கைகள், இக்கட்சியின் திறப்பாட்டிற்கு அழகு சேர்ப்பதாகும்.
  இத்தகைய நற்பெயர்களுக்கு மாறான களங்கமும் கொண்டதே பாமக என்பதுதான் உண்மை. பாமகவின் பொறுப்பாளர்கள் வரம்பு மீறிய ஆணவப் பேச்சுகளும்  ‘காதல் என்னும் பெயரில் நடைபெறும் நாடகங்களை’ எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு தமிழர் பண்பாடான காதல்திருமணங்களுக்கு எதிராக எடுக்கும் அடக்குமுறைகளும் சாதி ஆணவப் படுகொலைகளுக்குக் காரணமே பாமகதான் என்பது பசுமரத்தாணியாய் மக்கள் மனத்தில் பதிந்து விட்டது. காதலால் உயிர்  துறந்த குடும்பத்தினர் நலன்களுக்காகவும் காதலர்களின் நல்வாழ்விற்காகவும் அமைப்பு நிறுவித் தொண்டாற்றினால் பாமகவின் தீய  முத்திரையைப் போக்கலாம்.
  1992இல் ஈழத்தமிழர் மாநாடு நடத்தியவர்தான் மரு.இராமதாசு. ஆனால்  ஈழத்தில்  காங்.உடன் இணைந்து சிங்கள அரசு, கொலைவெறி கொண்டு தமிழினங்களை அழித்துக்கொண்டிருந்தபோது, அடுத்தவர் முதல் அம்பை வீசட்டும் என்பதுபோல் காத்திருந்து தடுக்கத் தவறியவர்தான்.  தன் மகன் மரு.அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால்  அதே கொலைவெறிக் கூட்டாளி காங்.உடன் சேரத்துணிந்தவர்தான். ஆரியவெறியும் சமய வெறியும் கொண்ட பாசகவும் இதுபோல் தன்மகன்  மரு.அன்புமணியை முதல்வர்  வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் அதனுடன் இணைய ஆயத்தமாக இருந்தவர்தான். தனித்து  நிற்போம் என்ற துணிவுடன் இருப்பவர்,  அறமற்ற கூட்டணிக்கும் ஆயத்தமாக இருந்தது பெருந்தவறு. தனித்து நிற்கிறோம் எனக் களத்தில் உள்ள நாம்தமிழர்கட்சி, இவ்வாறான ஆசைகளில் மூழ்கவில்லை. நாம்தமிழர் கட்சியைப் பொருத்தவரை எத்தனை வாக்குகள் பெற்றாலும்  தன்மதிப்பீட்டில் வெற்றிதான். ஆனால்,  பாமக முந்தைய எண்ணிக்கையில் குறைந்தாலே தோல்விதான். எனவே, வெற்றியை எதிர்நோக்கியுள்ள கட்சிதான். என்றாலும்  பதவி ஆசையில் தடம் புரள எண்ணியதும் தவறுதான்.
  “நல்லாதான் இருக்கிறது. ஆனால், வேண்டா எனச் சில நேர்வுகளில் பொதுமக்கள் சொல்வதுபோல், ‘பாமக’பற்றிய எண்ணமும் அவ்வாறுதான் மக்களிடம் உள்ளது.
  கெட்ட பெயர் வாங்க ஒரு நொடி போதும். அதனை நீக்கச் சில நேரம் வாணாள் முழுவதும் செலவிட வேண்டி வரும். எனவே, பாமக சாதி வெறிப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் பூட்டு போட வேண்டும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவத்தைப் பரப்புவதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட வேண்டும். பாமகமீதான மக்களின் அச்சங்களைப் போக்காமல் வெற்றி காண்பது என்பது கானல்நீரே என்பதைப் பாமக உணர வேண்டும்.
  பா.ம.க.தலைவர்களே! தேர்தலுக்குப் பிறகு எக்கட்சியும்  ஆட்சி அமைக்க முடியாத சூழல் வரலாம். அப்பொழுது தி.மு.க. , அ.தி.மு.க.வின் பக்கம் சாய வேண்டா. மக்கள் நலக்கூட்டணியுடன் இணையுங்கள். அல்லது மறு தேர்தலுக்கு வழிவிடுங்கள்.  எக்காரணம் கொண்டும் பேராயக்கட்சியான காங்., பா.ச.க. ஆகியவை பக்கம் சாயாதீர்கள். அரசியலுக்காக மக்கள் நலன் என்றில்லாமல் மக்கள் நலனுக்கான அரசியலை  முன்னெடுங்கள்.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 501)

இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive