Tuesday, August 16, 2016

தமிழகச்சட்டமன்றத்தை ஆங்கிலமன்றமாக்குவோர் மீது நடவடிக்கை தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்




ஆங்கிலப்பேச்சு,நடவடிக்கை, இலக்குவனார்திருவள்ளுவன் ; thalaippu_sattamandram_aangilam_nadavadikkai_ilakkuvanar thiruvalluvan

தமிழகச்சட்டமன்றத்தை ஆங்கிலமன்றமாக்குவோர் மீது

நடவடிக்கை தேவை!

  தமிழ்மக்களுக்கான தமிழ்நாட்டின்சட்டமன்றத்தை ஆங்கில மன்றமாக ஆக்கும் முயற்சியில் தி.மு.க. உறுப்பினர்கள் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது. இது குறித்து அமைதிகாத்து ஆங்கிலக்காவலர்களாக விளங்கும் தி.மு.க. முன்னணியினரும் கண்டிக்கத்தக்கவர்களே! எனவே, விரைவில் தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இவர்களை அழைத்துக் கண்டித்தும் அறிவுறுத்தியும் பொதுவிலும் அறிக்கை விட வேண்டும்.
  முதலில் மேனாள் அமைச்சர் பழனிவேல்இராசனின்(P.T.R.) மகன் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்து மேனாள்அமைச்சர் த.இரா.பாலு (T.R.Balu)வின் மகன் இராசா ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.
  இவர்கள் கூறும் சப்பைக்கட்டு, முதல்வருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதுதான். முதல்வர் வேறு பிற மொழிகளையும் அறிவார். அப்படியானால் அந்த மொழிகளிலும்  இனிப் பேசுவார்களோ?  அல்லது முதல்வருக்குத்  தமிழ் தெரியாது என்கின்றனரா?
  மேலும் சட்டமன்றத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாம் என விதி உள்ளதால் ஆங்கிலத்தில்பேசுவதாகவும் கூறுகின்றனர்.
  தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுது பிற மொழி பேசும் பகுதியும் இணைந்திருந்தது. எனவே, தமிழ்நாடு மொழிவழித் தனிமாநிலமாகப் பிரிக்கப்பட்ட பொழுது இங்கேயே தங்கியுள்ள பிற மொழியினர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரவர் மொழியில் பேசக்கூடாது என்பதற்காகப் பொதுமொழியான ஆங்கிலத்திலும் பேசலாம் என்று விதி வகுத்தனர். தமிழ்அறியாமலிருந்தால் நியமன உறுப்பினரான ஆங்கிலோ இந்திய வகுப்பைச் சேர்ந்தவர் ஆங்கிலத்தில் பேசினால் பொருளுண்டு. தமிழ் உறுப்பினர்கள் தமிழில் பேசாமல் பிற மொழிகளில் பேசுவதென்பது ஏற்கக்கூடியதல்லவே! சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற அவையில் உள்ள அனைவருக்கும்  தத்தம் தொகுதியினருக்கும் புரியும் வகையில் தமிழில் பேசுவதே முறையாகும் என்பது அனைவரும்  அறிந்ததே!
  தமிழால் வளர்ந்த தி.மு.க. தமிழ்க்காவலாக விளங்காமல் ஆங்கிலக் காவலாக விளங்குகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் தி.முக. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசி  அதற்கு முதல்வரும்  ஆங்கிலத்தில் விடையிறுக்க வைத்துத் தமிழகச்சட்ட  மன்றத்தை ஆங்கிலமயமாக்க முயல்கின்றனர்.
  இவ்வாறு இனி யாரேனும் ஆங்கிலத்தில் பேசினால், முதல்வர்,  அவர்களிடம் தமிழில் பேசுமாறு அறிவுறுத்தித் தமிழிலேயே விடையிறுக்க வேண்டும். தமிழக மக்களும் இத்தகைய உறுப்பினர்கள்  மீண்டும் வெற்றி பெறாவண்ணம் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசியதாகப் பெருமை கொள்ளும் இவர்கள் நாணிக்குனியும் வண்ணம் இவர்களைக் கண்டிக்க வேண்டும்.
  தமிழகச் சட்டமன்றம் ஆங்கில அறிவைக் காட்டுவதற்கான மன்றமன்று.  ஆங்கிலப் பேச்சுத்திறன் வேறு, ஆங்கிலப் புலமை வேறு!   ச.ம.உறுப்பினர்களுக்கு  உண்மையிலேயே ஆங்கிலப் புலமை இருப்பின், தமிழ் ஆங்கில ஒப்பிலக்கியப் பணிகளிலும் மொழி பெயர்ப்புப்பணிகளிலும் தொண்டாற்றி விருதுகள் பெறட்டும்.  நாமும் வாழ்த்துவோம்!
  கலைஞர் மு.கருணாநிதிக்கு இருக்கும் தமிழுணர்வும் படைப்புத்திறனும் அவர் குடும்பத்தில் யாருக்குமில்லை என்பது உண்மைதான். என்றாலும் தி.முக.வின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மு.க.தாலின், மக்கள் மன்றம் மக்கள் மொழியிலேயே நடைபெறவேண்டும் என்பதைப் பேணிக்காப்பதில் கருத்து செலுத்தவேண்டுமல்லவா? ஆதலின் விலக்காகப் பின்பற்ற வேண்டிய விதியை வழக்கமாகக் கொள்ளும் தன் கட்சி உறுப்பினர்கள்  மீது நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
  இதே நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறோம். தி-மு.க. உறுப்பினர் தியாகராசன் பாண்டித்துரை(த்தேவர்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச்சங்கத்தைத் தன் தாத்தா தொடங்கி நிதியுதவி வழங்கியதாகப் பேசியது குறித்து முன்னர்க் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அவர், அவ்வாறு பேசவில்லை என்பதுபோல் சொல்லி வருவதாகக் கேள்விப்பட்டோம்.
  தி.மு.க. (சார்பு) இதழான தினகரன் நாளிதழில்தான்
எனது தாத்தாதான் மதுரை தமிழ் சங்கத்தையும், திருவள்ளுவர் கழகத்தையும் தொடங்கி நிதி கொடுத்து, பல வகையிலும் தமிழை வளர்த்துவந்தார்.”(http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=234475)
 என இவர் பேசியதாக வந்துள்ளது. இது தவறு எனில் தினகரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதன்பின்னர் நாமும் வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால்,  அவ்வாறில்லாமல் பேசியது உண்மை எனில், பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுக்கும் முன்னர்ச் சட்டமன்றத்தில் உறுப்பினர் தியாகராசனே இது குறித்து வருத்தம் தெரிவித்து, இப்பேச்சைச் சட்டமன்றக் குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
   தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி  இதுகுறித்து அமைதிகாக்காமல்,  இவரைக் கண்டித்து இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மேலும்,  சட்டமன்றத்தில் இனித் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் அவ்வாறு பேசுபவர்களைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து தமிழைத் துரத்துவதற்குச் சட்டமன்றத்தையும் கருவியாகக் கொள்ள இடந்தரக்கூடாது.
தமிழ்நாடு, தமிழ் பேசும் தமிழர்நாடே!
பிறமொழி வாணர்கள் வெளியேறுவது
அவர்களுக்கும் நாட்டிற்கும் நல்லதே!
எண்ணுவோம் தமிழில்! பேசுவோம் தமிழில்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 147, ஆடி 30 , 2047 / ஆக.14, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Sunday, August 7, 2016

ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!




தலைப்பு-ச.ம.உ.தியாகரசான் மீது நடவடிக்கை, திரு : thaliappu_thiyakarasan_nadavadikka_thiru02

மதுரைத்தமிழ்ச்சங்கம்குறித்துத்

தவறான தகவலைச் சட்டமன்றத்தில் தெரிவித்த

ச.ம.உ.தியாகராசன் மீது

நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  தமிழகச் சட்டமன்றத்தில்(ஆடி12, 2047/சூலை27, 2016) மதுரை மத்தியத்தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அதற்குத் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவர், கருணாசு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கான விளக்கம் தருவதாகச் சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் பழனிவேல் தியாகராசன் தமிழால் முடியாது என்பதுபோல் தெரிவித்துள்ளது தமிழன்பர்களிடையே கோபக்கனலை எழுப்பியுள்ளது. தனக்கு எதிர்ப்பு மிகுந்ததும் தான் தெரிவித்ததைத் தானே மறுத்து மழுப்பியுள்ளார். ஊடகங்களில் தன் செல்வாக்கைப்பயன்படுத்தித் தனக்கு எதிரான செய்தி வராமலும் பார்த்துக்கொள்கிறார் என்றும் கேள்விப்பட்டோம்.
  சட்ட மன்ற உறுப்பினரான ப.தி.இரா.ப.(பி.டி.ஆர்.பி.) தியாகராசன் தமிழகச் சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுவதைவிட அதற்குக் காரணமாகத் தமிழை இழிவாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது. பி.டி.ஆர். எனப்படும் பொன்னம்பலத் தியாகராசனின் பெயரன் என்றும் பழனிவேல் தியாகராசனின் மகன் என்றும் பெருமை பேசினால் போதாது. தாத்தாவின் பெயரைத் தனக்குச் சூட்டியுள்ளதால் அவருக்குக் களங்கம் வரும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
  சட்ட மன்ற உறுப்பினரான கருணா தெரிவித்ததுபோல் தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழில் பேசத்  தெரியாமையைக்  குறையாக எண்ண வேண்டும். மாறாக, ஆங்கிலத்தில் பேசுவதால் அறிவாளி என்ற நினைப்பு வரக்கூடாது. தன் குடும்பப் பெருமையைப் பேசும் அவர், தமிழில் பேசாமைக்கு வருத்தம் தெரிவித்து இனித் தமிழில் பேசுவதாகக் கூறியிருந்தால் பாராட்டி யிருக்கலாம். மாறாக,  அவர், “தமிழில் பொருளாதாரம் சொல்ல முடியுமா” என்கின்றார்.
  அவருக்குத் தமிழில் உரிய சொற்கள் தெரியவில்லை என்றால், தொடக்கத்தில் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்திவிட்டுப் பிறர்  வழி அறிந்து தமிழ்ச்சொற்களைக்  கூறலாமே! முதல்வரே இதற்கு முன்னர்ப், பிறர்  சரியான தமிழ்ச்சொற்களைக் கூறாத பொழுது அவற்றுக்கான தமிழ்ச்சொற்களைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். எனவே, முதல்வரே,  அவருக்கு வழிகாட்டியிருப்பார்.
  பொருளியல் மேதையாகவும்  திகழும் தெய்வப்புலவர் திருவள்ளுவர், திருக்குறளில் பல பொருளியல் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சங்க இலக்கியங்களிலும் பொருளியல் கருத்துகள் உள்ளன. தமிழில் உள்ள பொருளியல் கருத்துகளை அறியாமல் பொருளாதாரத்தைத் தமிழில் விளக்க முடியுமா என்கின்றார்.
 இந்திய அரசாங்கத்தின் முதல் பொருளாதார அறிவுரையாளராக இருந்தவர் முனைவர் பா.நடராசன். ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின்  முதலாவதும் கடைசியுமான பொருளாதார அறிவுரையாளராகவும் இருந்தவர். அருதையாகத் தமிழில் பொருளாதார கருத்துகளை விளக்குவார்.
  இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகம்(செட்டியார்) அழகுபடத் தமிழில் பொருளாதார கருத்துகளை விளக்கியவர். இந்தியாவின் நிதியமைச்சராக ஐவர் தமிழர்களே இருந்துள்ளனர். ஒவ்வொருவரும் பொருளாதாரக் கருத்துகளைத் தமிழிலும் விளக்கும் வல்லமை படைத்தவர்கள். அவர்களுள் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் தமிழால் முடியும் என்றே நூல் எழுதியவர்.
  தமிழ்நாடு அரசாங்கம்,  கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுமொழியாக அறிமுகப்படுத்திய பொழுது முதலில்  வரலாற்றுடன் பொருளாதாரப் படிப்பையும் அறிமுகப்படுத்தினர். பொருளாதார நூல்களைத் தமிழில் பலர் எழுதியுள்ளனர்.
  ஆனால் கற்றுக்குட்டிபோல் இருந்து கொண்டு “தமிழில் பொருளாதாரக் கருத்துகளை விளக்க முடியுமா” என்கிறார். “மொழி தெரிந்தவர்களுக்கு எல்லாம் பொருளாதாரம் தெரியுமா? மொழிவேறு. பொருளாதாரம் வேறு. தமிழ்மொழி  தெரிந்தவர்கள் அறிவியலாளர்  ஆக முடியுமா” என்கிறார்.
  ஆனால், அவரே பி்ன்னர்,  “ச.ம.உ. கருணாசுக்குப் புரியும்படி பேசுவதென்றால், எனக்கு ஒன்றும் சிக்கலில்லை. நிதி நிலை அறிக்கையை அவரது அரசியல் அறிவுக்கு எட்டும் அளவுக்கு என்னால் தமிழில் பேசமுடியும்” என்றும் சொல்லியுள்ளார். இவ்வாறு பேசியுள்ளது அச்சட்டமன்ற உறுப்பினரை அவமதித்ததாகும். தன்னால் தமிழில் பேச முடியும் என்றால் தமிழில் பேசவிடாமல் அவரை எந்த உணர்வு தடுத்துள்ளது?
  தமிழ்வழி பயின்று இந்திய முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல்காலம்,  இன்றைய இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை முதலான பலரும் தமிழ்வழி பயின்றவர்கள் மட்டுமல்லர். தமிழ்வழியிலான கல்வியே அறிவியலுக்கு ஏற்றது என்பவர்கள். தனக்கு ஒன்று தெரியவில்லை என்பதற்காக யாருக்குமே தெரியாது என எண்ணுவது என்ன அறிவாளித்தனம் என்று புரியவில்லை.
  சட்டமன்றத்தில் (தமிழிலும்) ஆங்கிலத்திலும் பேசலாம் என விதி உள்ளதால்  ஆங்கிலத்தில் பேசுவது தவறல்ல என எண்ணக்கூடாது. நியமன உறுப்பினரான ஆங்கிலோ இந்தியன் முதலான  தமிழ் தெரியாதவர்க்கான விதி அது. இதனையே அனைவரும் விதியாகப்பயன்படுத்தினால் தமிழ்நாட்டின் சட்டமன்றம் இங்கிலாந்து மன்றம்போல் மாறிவிடும்.
  தமிழ் தெரியாமல் ஆங்கிலத்தில் பேசுவதை மறைப்பதற்காக முதல்வருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதுபோல் பேசியுள்ளார். முதல்வருக்குத் தமிழ் தெரியாது என்கிறாரா? தான்பேசுவது முதல்வருக்கு மட்டும்தான்,  சட்ட மன்ற உறுப்பினர்களுக்காக அல்ல என்கிறாரா? தன் தொகுதி மக்களுக்குப் புரியும் வண்ணம் தமிழில்  பேசுவது தன் கடமையல்ல என்கிறாரா? தேர்தல் பரப்புரையின்பொழுது ஆங்கிலத்தில் வாக்கு கேட்டிருக்க வேண்டியதுதானே! வேறு யாராவது தமிழ் தெரிந்தவர் வெற்றி பெற்றிருப்பாரே!
  “இவரை எல்லாம் சட்ட மன்ற உறுப்பினராக ஆக்கியிருக்க வேண்டுமா?” எனத் தி.மு.க.அன்பர்களே பேசும் அளவிற்குச் ச.ம.உ. தியாகராசன் பேசியுள்ளார். என்ன செய்வது? செல்வமும் செல்வாக்கும் தானே வேட்பாளர்களை முடிவு செய்கிறது!
  மேலும், “எனது தாத்தாதான் மதுரை தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி நிதி கொடுத்துப், பல வகையிலும் தமிழை வளர்த்துவந்தார்.” என்று தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.
  சட்டமன்றத்தில் தவறான கருத்து  தெரிவித்துள்ளதற்காகச் சட்டப்பேரவைத்தலைவர் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  “முந்தைய தமிழ்ச்சங்கங்கள்போல ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவுவேன்“ என 1901 இல் வள்ளல் பாண்டித்துரை(த் தேவர்) அவர்களால் நிறுவப்பெற்றதே மதுரைத் தமிழ்ச்சங்கம். தமிழ்ச்சங்கம் அமைக்க வேண்டும் எனக் கனவுகொண்டிருந்த இவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பான மன்னர் பாசகரசேதுபதியவர்கள் தொடக்கநாளில் 10,000 வெண்பொன் அளித்துள்ளார். http://maduraitamilsangam.com/founder.html இணையத்தளத்தில் இவ் விவரம் காணலாம். இதில் 1954 இல்தான் பொன்னம்பலம் தியாகராசனாகிய பி.டி.இராசன் துணைத்தலைவராகவும் பின்னர் இதன் தலைவராகவும் இருந்துள்ளார். ஆனால், இவரே நிதி கொடுத்து மதுரைத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கினார் எனத் தவறாகப் பேசியுள்ளார். எனவே, இத்தலைமுறையினரும் வரும் தலைமுறையினரும் பி,டி.ஆர். எனப்படும் பொன்னம்பலத்தியாகராசன்தான் மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் என்று தவறாகக்கருதும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
  எனவே, ஆங்கிலத்தில் பேசியதற்குக் காரணமாகத் தமிழை இழிவுபடுத்தும் வகையில் கூறிய சட்ட மன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராசனைத் தமிழ்  அமைப்புகள், தமிழன்பர்கள் சார்பில் கண்டிக்கின்றோம். வள்ளல் பாண்டித்துரை(த் தேவர்) நிறுவிய நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தன் தாத்தா நிதி கொடுத்து நிறுவியதாக இவர் பேசிய பேச்சைச் சட்டமன்றக் குறிப்பிலிருந்து நீக்குமாறும் தவறான தகவல் தந்த இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மாண்புமிகு பேரவைத்தலைவரை வேண்டுகின்றோம்.
அ்ன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 146, ஆடி 23 , 2047 / ஆக.07, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!

தலைப்பு-திருவள்ளுவர், திருக்குறள், போற்றுங்கள்,திரு ; thalaippu_thiruvalluvar_thirukkural_poatrungal_thiru

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும்

திருக்குறளையும் போற்றுங்கள்!

  உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக  மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார்.
 இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே! (பாரதிதாசன்) என்பது  முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல! முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும்.  அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும்   திருக்குறளைக் கற்க வேண்டும் என்றார். ஆனால், நாம் குன்றிலேற்ற வேண்டிய நூலான திருக்குறள் நூலைக் குடத்தினுள் இட்டு வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையருக்குத் திருக்குறள்பற்றியோ திருவள்ளுவர்பற்றியோ தெரியவில்லை.
   திருக்குறள்பற்றி அறியாதவராக நம்நாட்டவர் உள்ளனர் என்பதற்கு ஒரு சான்று வருமாறு: என்னுடைய பெயர்   திருவள்ளுவன் எனத் தெரிவிக்கும் பொழுது சிலர் என்னிடம் கேட்டுள்ள கேள்விகள் வருமாறு
  1. உங்கள் பெயர் புதியதாக உள்ளதே!
  2. .நீங்கள் இசுலாமியரா? அதான் இந்தப்பெயர் வைத்துள்ளார்களா?
  3. உங்கள் பெயரைப்பார்த்தால் கிறித்துவர் போல் தெரிகிறதே!
  4. நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தானா? பெயரைப்பார்த்தால் தமிழ்மாதிரி தெரியவில்லை. ஆனால், நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே!
  5. யாருக்கும் வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்று இந்தப் பெயரை வைத்தார்களா?
  பொதுவாக, நான் சிறுவர் சிறுமியரைச் சந்திக்கும்பொழுது தவறாமல் திருக்குறள் தெரியுமா எனக்கேட்பேன். பெரும்பான்மையருக்குப் புரியாது. “எப்படி இருக்கும் என்று தெரியுமா” எனக் கேட்பேன். “இனிக்கும், காரமாக இருக்கும், வட்டமாக இருக்கும்” என உணவுப்பொருள்போல் எண்ணி எதையாவது  கூறுவார்கள்.
 இதுதான் தமிழ்நாட்டின் நிலை.
  தமிழ்நாட்டிலேயே திருவள்ளுவரையும் திருக்குறளையும் அறியாத தலைமுறைகள் உருவாகி வருவதைத் தடுக்க, அனைத்துவகுப்பு நிலைகளிலும் திருக்குறள் பாடமாக வைக்கப்பெறவேண்டும். திருக்குறளைக் கல்வித்திட்டத்தில் இருந்து அகற்ற அவ்வப்பொழுது  சிலர் முயன்று வருகிறார்கள. சில ஆண்டுகளுக்கு முன்னர் 10 திருக்குறளும் கொண்ட முழுமையான அதிகார முறையில் பாடமாக வைப்பதை நீக்கினார்கள். 5 திருக்குறள் மட்டும் பாடமாக வைத்தனர். பின்னர்த் தமிழ்க்காப்புக்கழகம் இதனை எதிர்த்து முழு அதிகாரங்களாகத் திருக்குறள் பாடமாக வைக்கப்பெற வேண்டும் என்று வேண்டியதும் அரசு ஏற்றது. (நேரில் முறையிட்டதும் விரைந்து நடவடிக்கை எடுத்த அப்போதைய அமைச்சர் வைகைச்செல்வனும் பள்ளிக்கல்வித்துறைச் செயலரும் பாராட்டிற்குரியவர்கள்.)
 “பட்ட வகுப்புகளில் ஆங்கில இலக்கியத்தில் சேக்சுபியர் படைப்பு முழுமையாகப் பாடமாக வைக்கப்படுவதுபோல், திருக்குறள் முழுமையாகப் பாடமாக வைக்கப்பெற வேண்டும் என்று தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வலியுறுத்தி  வந்தார். அதற்கு வழி வகுக்கும் வகையில் நீதிபதி மகாதேவன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.  மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இராசரத்தினம் என்பார் தொடுத்த வழக்கில்,  வரும் கல்வியாண்டு முதல்எல்லா வகுப்புகளிலும் திருக்குறள் கற்றுத்தரப்படவேண்டும் என்று சொல்லியுள்ளளார். இந்த ஆண்டில் அரசு இவ்வாறு நடைமுறைப்படுத்த வில்லை. இனியும் நடைமுறைப்படுத்துமா எனத் தெரியவில்லை.
  இப்பொழுது பத்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்திற்கு 10 திருக்குறள் என 3 அதிகாரங்கள் பாடமாக உள்ளன. அவற்றுள் ஐயைந்து மனப்பாடப்பகுதி. எனவே, பெரும்பான்மையான பள்ளிகளில் மனப்பாடப் பகுதிக்குமட்டும் ஆசரியர்கள் முதன்மை அளிக்கின்றனர். பிறவற்றிற்கான வினா-விடையை மட்டும் சொல்லித் தருகின்றனர். மேனிலை வகுப்புகளில் 4 அதிகாரங்கள் பாடமாக உள்ளன. இவ்வாறில்லாமல் திருக்குறள் பாடப்பகுதி முழுமையும் கற்றுத்தரவும் கற்றுத்தராத ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்கவும் அரசு ஆவன செய்ய  வேண்டும்.
  தமிழ்மொழியைப் பாடமாக எடுக்காதவர்களுக்குத் திருக்குறள் என்றால் என்ன என்றே தெரியாது.
  இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில், தமிழே பாடமாக உள்ள வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளிலும்,  தமிழ்நாட்டில் பாடமாக உள்ள பிற மொழிகளிலும் திருக்குறள், திருவள்ளுவர்பற்றிய முழுமையான துணைப்பாட நூல்கள் வைக்கப் பெற வேண்டும்.  நூலைப் பார்த்து ஆனால், சிந்தித்து எழுதும் வகையில் தேர்வுத்தாள்கள் இருக்க வேண்டும்.
  மத்திய அரசும் தன்  பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ள கல்விக்கூடங்கள் அனைத்திலும் அனைத்து மொழிகளிலும் திருக்குறள்பற்றிய துணைப்பாட நிலையில் தேர்வுகள் நடத்த வேண்டும்.
  நம் நாட்டில் திருக்குறள்பற்றியோ தெய்வப்புலவர் திருவள்ளுவர்பற்றியோ அறியாதவர் யாருமில்லார் என்னும்  நிலையை உருவாக்க வேண்டும்.
  இந்திய அரசு, புத்தர் பிறந்தநாள், மகாவீரர் பிறந்தநாள், இயேசு பிறந்த நாள், குருநானக்கு பிறந்தநாள், முகமது நபி பிறந்த நாள், காந்தி பிறந்த நாள் என்பனவற்றைக்  கொண்டாடுவதுடன் அரசு விடுமுறையும் விட்டுள்ளது. அதுபோல் இந்தியா முழுமையும், இந்தியத் தூதரகங்கள் உள்ள எல்லா நகர்களிலும் திருவள்ளுவர் நாளைக் கொண்டாட வேண்டும். நாம் தை முதல் நாளைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகவும் அன்று தமிழர்திருநாளாம் பொங்கல் வருவதால் மறுநாளான தை இரண்டைத் திருவள்ளுவர் நாளாகவும் கொணடாடி வருகிறோம். தை முதல் நாளை நாம் திருவள்ளுவர் நாளாகக்  கொண்டாடினால்  தமிழர் நாளின் சிறப்பு  மறைந்து விடும்.
  வைகாசித் திங்கள் பனைமீன்(அனுச நட்சத்திர) நாளில் திருவள்ளுவர் இயற்கை எய்தியதாக நம்பிக்கை உள்ளது. பேராயக்கட்சி(காங்கிரசு) ஆட்சியில் அந்தநாள் சிறப்பிக்கப்பட்ட முன் நிகழ்வும் உண்டு.
  எனவே, வைகாசிப் பனை நாளில் நாடு முழுமையும் திருவள்ளுவர் நாள்  கொண்டாட ஆவன செய்ய வேண்டும். இந்நாளில் திருக்குறள் பற்றிய இயலரங்குகள், இசையரங்குகள், நாட்டிய நாடக  அரங்குகள் நிகழ்த்த பொருளுதவி செய்ய வேண்டும். மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் சமயத்தலைவர் நாள்களைக் கொண்டாட உதவி வரும் மத்திய அரசு சமயம் சாராத உலகப்பெரும் புலவராம் திருவள்ளுவரைச் சிறப்பிக்க உதவுவதன் மூலம், பெருமை பெற வேண்டும். இதற்குத் தமிழக அரசும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் கொண்டாட வழிவகை  காண வேண்டும்.
  இந்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் நாட்டிலுள்ள அனைத்துக் கல்விக்கூடங்களிலும் திருவள்ளுவர்  படங்கள் இடம் பெறச்செய்ய வேண்டும். முதன்முறை திருவள்ளுவர் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட  வேண்டும்.
  திருவள்ளுவர்-திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கட்டுக்கதைகள், திரிபுஉரைகள் இடம் பெறாவண்ணம் உண்மையான பெருமை மட்டும் இடம் பெறச்செய்ய வேண்டும்.
    உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்(திருவள்ளுவர், திருக்குறள் 442).
என்பதுபோல்,நமக்குவந்துள்ள  துன்பத்தைப்போக்கவும் இனித் துன்பம் வராமல் காக்கவும் நமக்கு உதவுவது திருக்குறளே ஆகும். ஊழல் ஒழியவும் அறவழியிலான ஆட்சிகள் நடைபெறவும் மக்கள் மக்களாக நடத்தப்பெற்று உண்மையான மக்களாட்சி மலரவும் திருக்குறளைப் பரப்பவும் திருவள்ளுவரைப் போற்றவும் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளுவரைப் போற்றி நாம் பெருமையுறுவோம்!
திருக்குறளைக் கற்று நாம் சிறப்புறுவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 145, ஆடி 16 , 2047 / சூலை 31, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Monday, August 1, 2016

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 16 வழி நடத்தித் தலைமை தாங்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்



தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 16

வழி நடத்தித் தலைமை தாங்கு!

  வாழ்வியல் கடமைகளாகப் பலவற்றைக் கூறும் மாபெரும் கவிஞர் பாரதியார் தலைமைப் பண்பையும் வலியுறுத்துகிறார்.
        “உன்னைக் கோடிமுறை தொழுதேன் – இனி
                வையத் தலைமையெனக்கு அருள்வாய்” (பக்கம் 133 | யோக சித்தி)
என்பதன் மூலம் கல்வி, தொழில், பண்பு முதலானவற்றில் சிறந்திருக்க வேண்டிய நம் இலக்கு ‘வையத் தலைமையே’ என்பதை அடையாளம் காட்டுகிறார். எனவே, பொறுப்பு கண்டு அஞ்சக்கூடாது என்பதற்காகச் ‘சுமையினுக்கு இளைத்திடேல்’ (ஆ.சூ 29) என்கிறார். ஒருமையுள் ஆமை போல் ஐம்புலன் அடக்கி ஆளுமைத் திறன் பெற ‘ஐம்பொறி ஆட்சி கொள்’ (ஆ.சூ 9) என்கிறார். பின், ‘வையத்தலைமை கொள்’ (ஆ.சூ 109) எனக் கட்டளையிடுகிறார். ஆனால் உலகெங்கும், வையத் தலைமை கொள்வோர் பொருளாசையில் நெறி பிறழும் நிகழ்வுகள் நடந்து வருவதால் ‘புதிய ஆத்திசூடி’யின் முத்தாய்ப்பாக ‘வௌவுதல் நீக்கு’ (ஆ.சூ 110) என்கிறார். எனவே, பிறர் பொருள் விழையா நல்லுள்ளத்துடன் வையத்தில் தலைமை ஏற்பதையே வாழ்வின் நோக்கமாக ஒவ்வொருவரும் கொள்ள வேண்டும்.
பாரதியார் உணர்த்தும் வாழ்வியல் கடமைகளை விரிப்பின் பெருகும். எனவே, அவற்றின் சுருக்கக் கட்டளைகளாக அவர் அளித்துள்ள புதிய ஆத்திசூடியின் அடிப்படையில் மட்டுமே அவை தொகுக்கப்பட்டன. இவற்றை மட்டுமே பின்பற்றும் ஒவ்வொருவருமே உயர்நிலை பெறலாம்.
பாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்!
(நிறைவு)
thiruvalluvan
இலக்குவனார் திருவள்ளுவன்
பின் குறிப்பு :  பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை. இக்கட்டுரையைப் படித்த பாரதியார் குடும்பத்தைச்சேர்ந்த முதியவர் ஒருவர் தொலைபேசி வழி ஏறத்தாழ  ஒரு மணி நேரம் பாராட்டிப் பேசினார். “ஆத்திசூடி மிக எளிமையானது; அக்கருத்து பாரதியார் கவிதைகளில் பரவி உள்ளது என அளித்திருப்பது பாரதியாரின் உள்ளத்தைப் படம்பிடிப்பதாகவும் அவரது கவிதைகளின் சாறாகவும் அமைந்துள்ளது; பாரதியாரின் கவிதைகளையும் கருத்துகளையும் அவரது கவிதைகளுடனும் கருத்துகளுடனும் ஒப்பிட்டு இதுவரை யாரும் ஆராய்ந்ததில்லை” என்பனவே அவரது பேச்சின் மையப்பொருள். இருப்பினும் பாரதியாரின் பேத்திவழி உறவுப் பெண்  என எண்ணுகிறேன். அவர் இதனை ஏற்கவில்லை. ஆத்திசூடிக்கு எதற்கு விளக்கம் என்றும் வெவ்வேறு படைப்புகளை ஏன் இணைக்க வேண்டும் என்றும் கருதினார். நம் கருத்தை அனைவரும்  ஏற்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறல்லவா?  என்றாலும் பாரதியின் ஆழ்மன அறவுணர்வுகளை எதிரொலிப்பதாக ஆத்திசூடி அமைந்துள்ளதாகக் கருதியதால், தொடராக ‘அகரமுதல’ இதழில் வெளியிட்டுள்ளேன். சில இடங்களில் இன்னும் விளக்கமாக எழுதியிருக்கலாமோ என இப்பொழுது தோன்றினாலும் குறையாகத் தெரியவில்லை. அவ்வப்பொழுது இக்கட்டுரைபற்றிய  நல்லுரை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /  தமிழே விழி! தமிழா விழி!/

Followers

Blog Archive