Monday, February 18, 2019

உடல் கொடை: விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

உடல் கொடை – விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு!
எந்த நலத்திட்டமாக இருந்தாலும் அது முழுமையாக நிறைவேற மக்களிடையே விழிப்புணர்வு தேவை. ஆனால், அத்தகைய விழிப்புணர்வு முதலில் அது தொடர்பான அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தேவை. எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வு அரசிற்கு இல்லாத வரையில் எந்தத் திட்டத்தாலும் முழுப்பயன் கிட்டாது என்பதே உண்மை.
உடல்கொடை குறித்து ஓரளவு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் கருதுவது போல் இவ்விழிப்புணர்வு அரசால் ஏற்பட்டதல்ல. செய்தியிதழ்கள் உடற்கொடை பற்றிய  செய்திகளைப் பதிவிடுவதால் ஏற்பட்டதே.
உடலுறுப்புத் தானம் என்றால் பணப்பயன் கருதி மிகுதியான ஆர்வம் காட்டுகின்றனர்; உடனுக்குடன் செயலாற்றுகின்றனர். ஆனால் உடலுறுப்பு என்பது மருத்துவ ஆராய்ச்சி-கல்விக்கானதுதானே!  என்ன ஆதாயம் தொடர்புடைய அதிகாரி அல்லது பணியாளர்களுக்குக் கிடைக்கப் போகிறது? ஆதலின் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த இடத்தில் கண்தானம் பற்றியும் குறிப்பிட வேண்டும். கண் தானத்திற்கு விருப்பம் தெரிவித்தவ இறந்த 6 மணி நேரத்திற்குள்ளாகக் கண்களைப் பெறும் வகையில் கண்வங்கிக்கு விவரம் தெரிவிக்க வேண்டும். கண்வங்கியினர் அதற்கிணங்கப் பகல் வேளைகளில் விரைந்து செயலாற்றுகிறார்கள்.  தனியார் வங்கிகளும் உள்ளன.
06.02.2019 அன்று வைகறை 2.15 மணிக்குக் கண்தான விருப்பம் தெரிவித்த  மாமனார் திரு. இராசமுத்துராமலிங்கம் மறைந்தார். அன்று வைகறை 2.30 மணி முதல் பல நேரம் சென்னை எழும்பூரிலுள்ள அரசு கண்வங்கிக்குப் பல முறை தொடர்பு கொண்டும் தொலைபேசியின் மணியின் ஒலிப்பைத்தான் கேட்க முடிந்ததே தவிர அங்குள்ள பணியாளர் யாருடைய குரலும் கேட்க வில்லை. காலை 8.00 மணிக்குப் பேசும்பொழுது  தொடர்பு கொள்ள முடிந்தாலும் அதனால் பயனில்லாமல் போய்விட்டது. எடுத்தவர் 24 மணிநேரமும்தான் இயங்குகிறோம். தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை என்பது தவறுதான் என்றாரே தவிர, அது குறித்து வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. வாழும்பொழுதே ஒரு கண்ணைத் தானம் செய்ய முன்வந்தவரின் விருப்பம் நிறைவேறவில்லை. இதனால் கண்பார்வை பெறும் வாய்ப்பை இருவர் இழந்து விட்டனர். ஒருவேளை தனியார் வங்கிக்குத் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் வந்திருக்கலாம்போலத் தெரிகிறது.
உடற்கொடைச் செய்திக்கு மீண்டும் வருவோம்.
உடற்கொடை குறித்து இப்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் அதன் தளத்தில் உள்ள அறிவிப்பின் முதன்மைச் செய்திகள் வருமாறு:
கொடையாளரின் உடல் இறந்த 24 மணி நேரத்திற்குள்ளாகச் சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயலகத்திற்கு(Institute of Anatomy) வேலை நாள்களில் காலை 8.00 மணியிலிருந்து 3.00 மணிக்குள்ளாகக் கொண்டு வரப்பட வேண்டும்.
  விடுமுறை அல்லது வேலை பார்க்கா நாளாக இருந்தால் மனையக மருத்துவரிடம் (RMO) தெரிவித்து இசைவு பெற்ற பின்னர் அரசு மருத்துவமனையின் (RGGGH) அமரர் அறையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
உடல் உடற்கூறு இயலகத்தால் எல்லா வேலை நாள்களிலும் 8.30 மணியிலிருந்து 3.30 மணி வரை பெறப்படும்.
சனி, ஞாயிறு ஆகிய வேலையில்லா நாள்களில் அல்லது அரசு விடுமுறை நாள்களில் உடலைக் கொண்டுவருவது குறித்துத் தெரிவித்துள்ள விதிமுறை  வேலை நாள்களில் வேலை நேரம் முடிந்த பின்னர் அல்லது வேலை நேரத்திற்கு முன்னதாகவே உடலைக் கொண்டுவருவது குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.
[சுருக்கமாகப் படிக்க விரும்புபவர்கள் பின் வரும் சாய்வெழுத்தில் உள்ளவற்றைப் படிக்காமல் விட்டு விடலாம்.]
அமரர் திரு இரா.இராச முத்துராமலிங்கம் 8.11.2012 இல் சென்னை மருத்துவக்கல்லூரியில் உடல் கொடை விருப்ப விண்ணப்பத்தை அளித்து அஃது ஏற்கப்பெற்றுள்ளது. எனினும் கடந்த அட்டோபர் 2018 இல் மதுரையில் வேலம்மாள் மருத்துவமனையில் சேர்ந்து பண்டுவம் பார்த்தார். அங்கே குறிப்பிட்ட ஒரு பகுதி முழுவதும் மருந்து, உணவு, பிற கட்டணம் யாவும் இலவசமாக ஏழைகளுக்கு அளிக்கப்படுவதைப் பார்த்தார். அவருக்கும் அங்கே சிறப்பான மருத்துவம் பார்க்கப்பட்டது. எனவே, தன் உடலை அம் மருத்துவமனைக்கு / வேலம்மாள் மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பதாக எழுதிக் கொடுத்தார். முன்னரே அரசு மருத்துவமனைக்கு உடற்கொடை விண்ணப்பம் கொடுத்ததை நினைவூட்டியதற்கு அதற்கான காலக்கெடு முடிந்து விட்டது என்றும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாகக் கூறினார்.  (யாரோ அவருக்குத் தவறாகத் தெரிவித்துள்ளனர்.)
எனவே அவர் திருவுடலை மதுரைக்குக் கொண்டுபோக எண்ணி ஆயத்தம் ஆனோம். ஆனால் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு உடற்கொடை கொடுப்பதாக இருப்பின் அரசிடம் எதற்காகத் தனியார் மருத்துவக்கல்லூரிக்குக் கொடுக்க உள்ளோம் என்பது குறித்து விளக்கம் அளித்து இசைவு பெற வேண்டும். வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் நாங்கள் உடலை உடனே பெற்றுக் கொள்வோம்  அரசின் இசைவு பின்னரே கிடைக்கும். இங்கே அளித்தற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றனர். உடற்கொடைக்குப் பின்னர் எச்சிக்கலும்  வேண்டா என்பதாலும் மதுரைக்குப் புறப்பட மருத்துவ ஊர்தி ஏற்பாடு செய்துவிட்டுப் பிறரிடம் தெரிவித்து விட்டதாலும் அவ்வப்பொழுது மாமனார் தம் தந்தை இராமச்சந்திரன் பெயரில் உள்ள சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி இணைந்த அரசு மருத்துவமனைக்கே தானமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்ததாலும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்க முடிவு செய்தோம்.
அவ்வாறு முன்கூட்டியே அம்மருத்துவமனைக்கு விருப்பம் தெரிவிக்கப்படாத காரணத்தால், உடல் கொடையை ஏற்குமாறு விண்ணப்பத்தை அனுப்பிச் சேர்க்கச் செய்தோம். படிவத்தில் உள்ளவாறுதான் விண்ணப்பம் இருக்க வேண்டும் என்றனர். படிவம் உடல் கொடை அளிக்க விவரும்புபவர் தரும் வகையில் உள்ளது; ‘உடல் கொடையாளர் கையொப்பம்’ என உள்ளது. இவை பொருந்தா. எனவே மரபுரிமையர் என்ற முறையில் அவர் மகள் அன்புச்செல்வி திருவள்ளுவன் அளித்த வேண்டுகோள் மடலை ஏற்க வேண்டும் என்றோம். அரசு வரையறுத்த படிவத்தில் இருந்தால்தான் ஏற்க முடியும் என்றனர். எனவே, அதே படிவத்தில் நிறைவு செய்து, இறுதியில் மரபுரிமையர் வேண்டுவதாகச் சேர்த்து, உடல் கொடையாளர் சார்பில் மரபுரிமையர் கையொப்பம் எனக் குறிப்பிட்டு அனுப்பிய பின் ஏற்றனர்.
அதன் பின்னர் மாலை 4.00 மணிக்குள் வர வேண்டும் என்றனர். அதற்கான வாய்ப்பே இல்லை என்றோம். 4.00 மணிக்குள்தான் வரவேண்டும்  உடலைச் சென்னையில் சேமக்காப்பில் (Embalming) கொணர வேண்டும் என்றனர். சென்னை மருத்துவமனையில் சேமக்காப்பிட்டுக் கொண்டு வருகிறோம். இரவு 8.00 மணி ஆகிவிடும். அமரர் அறையில் வைத்து விட்டு மறுநாள் முறைப்படி மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கின்றோம் என்றோம். கலந்துபேசிய பின்னர் சரி என்றனர். சிவகங்கை அரசுமருத்துவக் கல்லூரியிலும் மருத்துவமனையிலும்  நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்கினர். இவற்றைக் குறிப்பிடுவதன் காரணம் விதி முறை சரியாக இல்லாமையால்  அவர்களும் இடர்ப்படுவதைக் குறிக்கத்தான்!
சிவகங்கை மருத்துவமனையில் தெரிவித்தவாறு சேமக்காப்பிற்காக நல்லுடலைச் சென்னை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்றோம். அந்த அறை பூட்டப்பட்டு இருந்தது. வேறு பகுதியில் பொறுப்பானவர் இருந்ததை அறிந்து, மருத்துவ ஊர்தியை அங்கேயே நிறுத்திவிட்டு, அங்கே சென்று தகவலைத் தெரிவித்ததும் அந்த அறையைத் திறந்து வெளியில் வந்தனர்.
இங்கேயே நன்கொடையாகக் கொடுங்கள்; கட்டணம் ஏதுமில்லை. வெளியூருக்குகக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் சேமக்காப்பிற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றனர். கட்டணத்தைச் செலுத்துகிறோம். கட்டணம் எவ்வளவு? எவ்வளவு மணி நேரம் ஆகும் என்றோம். இதற்கான விடையைக் கூறாமல் பேச்சில் நேரத்தை இழுத்தடித்தனர். ஒருவர் நீங்கள் மிகு குளிரூட்டப்படும் பேழையில்தான் கொண்டு செல்கிறீர்கள். சேமக்காப்பு தேவையில்லை என்றார். சிவகங்கையில் அவ்வாறு கொண்டுவந்தால்தான் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார்கள் என்றோம்.
பின் அரசிற்குக் கட்டணம் ஆயிரம் உரூபாயும் இங்கே ஓய்வு பெற்றவர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும் என்றனர். எத்தனை பேர் என்றதற்கு இனிதான் கணக்கு பார்க்க வேண்டும் என்றனர். நேரத்தைக் கடத்தினார்களே தவிர முடிவாக ஒன்றும் சொல்லவில்லை.  இடைக்காலமாக ஓர் ஊசி மருந்து செலுத்தினால் போதும் என்கிறார்களே என்று கேட்டதற்கு, அதற்கான வாய்ப்பு இல்லை. பல மருந்துகளை உடலுக்குள் செலுத்த வேண்டும். இருமணி நேரம்  ஆகும் என்றனர். மேலும் சிவகங்கையில் தங்கள் பணியைத் தட்டிக் கழிப்பதற்காக இங்கேயே சேமக்காப்பிடவேண்டும் எனக் கூறியுள்ளனர். இறந்த அன்றே கொண்டு செல்வதால் தேவையில்லை என்றனர்.  ஊர்தி ஓட்டுநர், “இதற்குமுன் வந்திருக்கிறேன்.4 மணி நேரம் ஆக்குவார்கள். நாம் ஊர்போய்ச் சேர நள்ளிரவு ஆகும்” என்றார். இறுதியில் அவ்வாறே கொண்டு சென்று சிவகங்கையை இரவு 8.30 மணிக்கு அடைந்தோம். உறவினர்கள், ஊர்க்காரர்கள்  அஞ்சலிக்குப் பின்னர் 10.00 மணியளவில் மருத்துவமனை சென்றோம்.
முன்னேற்பாடுகளை முன்பே முடித்துவைத்திருந்தமையால் குருதிக்கொடை பொறுப்பாளர் பாண்டியனும்  இரவுப்பணி மருத்துவரும் உடலை அமரர் அறையில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர். வழக்குரைஞர் ச.இன்பலாதன் உடனிருந்து உதவினார்.
மறுநாள் உடற்கூறு துறையில் உடலை ஒப்படைக்கும் பொழுது அவர்கள் கூறியபடி ஏன் சேமக்காப்பிடாமல் கொண்டுவந்தோம் என வினவினார்கள். சென்னையில் தெரிவித்ததைக் கூறி, எப்படியோ உடலைக் கொண்டுவந்துவிட்டோம் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றதும் ஏற்றுக் கொண்டனர்.
இவ்விவரங்களைத் தெரிவிப்பதன் காரணம் வெளியூரிலுள்ள அரசு மருத்துவமனையில் உடல் கொடை அளிப்பதாக இருப்பின் ஏற்படும் இடர்ப்பாடுகளை உணர்த்தத்தான்.
இருப்பினும் முன்னரே நான் ஓரளவு அறிந்திருந்தேன். 19.02,2012 அன்று மகள் ஈழமலர் திருமணத்தின் பொழுது வந்திருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடற்கொடை விண்ணப்பங்களை அளித்தேன்.
எனினும் இது குறித்து மருத்துவமனையில் தொடர்பு கொண்ட பொழுது உடற்கொடை அளிப்பவர் இறந்த பின்னர் உடற்கூறு துறைக்கு நேரில் வந்து அத்துறையினர் சொல்வதன்படி உடலை உங்கள் சொந்தச் செலவில் கொண்டு வரவேண்டும் என்றனர். அதை இப்பொழுது சொல்லக்கூடாதா என்றதற்கு, “அவ்வப்பொழுது நடைமுறைகள் மாறலாம். எனவே, அப்பொழுதுதான் சொல்ல முடியும்” என்றனர். இதனால் நான் முன்னரே விண்ணப்பப்படிவம் தருவதாகக் கூறியவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் கொடுக்க வில்லை. கடந்த ஆண்டும் விவரம் கேட்ட பொழுது “இறந்தபின் நேரில் வந்து விவரம் அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்களே தவிர நல்ல முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை.
உடலைக் கொடையாக அளிக்க முன்வருபவர்களின் எண்ணங்கள் நிறைவேறவும் இறந்த பின் உடலை ஒப்படைப்பதில் சிக்கல் இருக்கக் கூடாது என்பதற்காகவும் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அரசை வேண்டுகிறோம்.

  1. ஒருவர் எந்த அரசு மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரியில் வேண்டுமென்றாலும் தன் விருப்பதைத் தெரிவிக்கலாம்.
  2. உடற்கொடை அளிக்க முன்வந்தவர் இறந்த பின்னர் அவர் இருக்கும் ஊருக்கு அருகிலுள்ள அரசுமருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி அனுப்பி வைக்க வேண்டும்.
  3. இறந்தவருக்கான குளிர்ப்பேழையை அளித்து விட்டு நல்லுடலை எடுத்துச் செல்ல வேண்டிய நேரத்தை அறிந்து அல்லது தெரிவித்து அந்த நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
  4. அவ்வாறு உடலை எடுத்துச் செல்லும் பொழுதே உடலை ஏற்றுக்கொண்டைமக்கான சான்றிதழையும் அளிக்க வேண்டும்.
  5. அதுவரை உடலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்த அறிவுரைகளையும் அப்பொழுது தெரிவிக்க வேண்டும்.
  6. அருகிலுள்ள மருத்துவமனையினர் இறந்தவர் எந்த மருத்துவக் கல்லூரிக்கு உடலை அளிக்க விரும்பினாரோ அங்கே அரசு செலவில் கொண்டு சேர்க்க வேண்டும்.
  7. தனியார் மருத்துவமனைக்கு ஒப்படைக்க விருப்பம் தெரிவித்து இருந்தாலும் அங்கே ஒப்படைக்கும் பொறுப்பையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  8. ஒருவர் முன்கூட்டியே விருப்பத்தைப் பதிவு செய்யாது இருந்தாலும் குடும்பத்தினரிடம் தன் விருப்பத்தை எழுதிக் கொடுத்திருந்தார் என்றாலும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.
  9. எந்த விருப்பத்தையும் எழுத்து மூலமாகத் தெரிவிக்காமல் இருந்தாலும் இறந்தவரின் மரபு உரிமையர் வேண்டினால் உடல் கொடையை ஏற்று இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
  10. இதற்காக எந்த வகைக் கட்டணத்தையும் உடற்கொடையாளரின் குடும்பத்தினரிடம் பெறக்கூடாது. விலையில்லாமல் உடலைத் தருபவரின் குடும்பத்திற்கு விலையில்லாப்பணியை அளிக்க வேண்டியது அரசின் கடமை.
  11. உடற் கொடை குறித்த இன்றியமையாமை குறித்தும் நடைமுறைகள் குறித்தும் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஊட்டவேண்டும்.
  12. உடற்கொடை விண்ணப்பம், விதிமுறைகள், நடைமுறைகள், தொடர்பு விவரங்கள் தமிழில் இருக்க வேண்டும்.
  13. உடற் கொடையாளர் குடும்பத்தில் இறப்புச் சூழலில் வேறு சிக்கல் இல்லாமல் இருப்பதற்காகவும் அவருக்குச் செலுத்தப்படும் இறுதி அஞ்சலிக்குத் தடையின்றி இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு தெளிவான கட்டணமில்லா நடைமுறையையே பயன்படுத்த வேண்டும்.
  14. வேலை நேரம் வரையறுக்கப்பட்டிருந்தாலும் உடற்கொடை அளிக்க நேரும் நாளில் உடற்காெடையை ஏற்கும் வரை வேலை பார்க்குமாறு வேலை நேரம் அமைக்க வேண்டும். வேண்டுமென்றால் மிகை நேர ஊதியம் வழங்கலாம்.
எனவே உடற்கொடையை எளிமைப்படுத்தி மருத்துவ மாணவர்கள பயனுற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல

Wednesday, February 13, 2019

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4 :: இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4 
தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி (பிள்ளை)
தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) குறித்த பேரா.சே.சி. கண்ணப்பனார்கட்டுரை  8 ஆவதாக இடம் பெற்றுள்ளது.
150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் 20 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியிருந்தாலும் வாணாள் முழுவதும் தமிழ் ஆர்வலராகத் திகழ்ந்தார்; தமிழறிஞரான இவர் அறிஞர் போப்பு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்; சமய இலக்கியங்களையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மாக்சு முல்லர் முதலான பன்னாட்டு அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் என இவரின் சிறப்புகளைக் கட்டுரையாளர் தெரிவிக்கிறார்.
இவரின் திருக்குறள் பணிகளை நிறைவாகப் பட்டியலிட்டுக் கட்டுரையாளர் அளித்துள்ளார். அதில் 1918 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் இரண்டாம் மாநாட்டில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி வேண்டித் தீர்மானம் நிறைவேற்றி அதுபோது அறிவியல் சார் திருக்குறளை எடுத்தியம்பினார் எனவும் தெரிவித்துள்ளார்.
இரு பக்கங்களிலேயே முடிந்து விட்ட அறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) பணிகள் மேலும் கூடுதலாகத் தெரிவிக்ப்பட்டிருப்பின் நன்று.

..நவநீதகிருட்டிணன்
அடுத்து ‘அ.க.நவநீதகிருட்டிணனாரின் தமிழ்த்தொண்டு’ என்னும் நல்லாசிரியர் வை.இராமசாமியின் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
தொடக்கத்தில் இவரின் கல்விப்பருவத்தையும் இளமைப் பருவத்தையும்பற்றிக் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
நவநீதனாரின் திருக்குறள் காதலை வெளிப்படுத்துவது ‘வள்ளுவர் சொல்லமுதம்’ என்னும் தலைப்பிலான நான்கு தொகுதிகளாகும். முதல் தொகுதியின் முதல் கட்டுரையின் பெயர் வள்ளுவர் தெள்ளமுதம். ஆனால், இதனையே புத்தகத் தலைப்பாகப் பக்கம் 97 இல் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. படிப்போர் இரு வேறு நூல்களாக எண்ணுவர். திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
இந்நூலில் இருந்து பல் வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் நவநீதனாரின் திருக்குறள் புலமையையும் ஈடுபாட்டையும் கட்டுரையாளர் திறம்பட விளக்கியுள்ளார்.
நெல்லைத் திருவள்ளுவர் கழகத்தில் 12 ஆண்டுகள் தலைவராக இருந்தும் நெல்லை அருணகிரி இசைக்கழகம் மூலமும் பிற அமைப்புகள் மூலமும் திருக்குறள்பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளதையும் கட்டுரையாளர் எடுத்தியம்பியுள்ளார். இவ்விரு அமைப்புகளும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரால் வளர்ச்சியும் புகழும் பெற்றவை என்பது குறிக்கத்தக்கது.
அமைப்புசார் பணிகளாலும் கல்விப்பணிகளாலும் திருக்குறள் சான்றோராகத் திகழ்ந்து வரலாறு படைத்த அ.க.நவநீத கிருட்டிணனாரை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ள கட்டுரையாளர் நல்லாசிரியர் வை.இராமசாமிக்குப் பாராட்டுகள்.

முனைவர் நவராசு செல்லையா
நல்லாசிரியர் க.பன்னீர்செல்வம், முனைவர் நவராசு செல்லையா குறித்து எழுதியுள்ள கட்டுரை பத்தாவதாக இடம் பெற்றுள்ளது.
விளையாட்டுத் துறையில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதிய முனைவர் நவராசு செல்லையாவின் தோற்றம், கல்வி, தொழில், பதிப்புப்பணி, 25 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்த ‘விளையாட்டுக் களஞ்சியம்’ என்னும் திங்கள் இதழ்ப்பணி, விளையாட்டு இசைப்பாடல்கள் வெளியீடு, திரைப்பட உருவாக்கப்பணி, தொலைக்காட்சிப்பணி, வானொலிப்பணி,  உடற்கல்வி மாமன்றப் பணி, அவர் படைத்த 126 நூல்கள் விவரம், எனப் பலவற்றையும் கட்டுரையாளர் அளித்துள்ளார்.

குறளுக்குப் புதிய பொருள்
வள்ளுவரின் விளையாட்டுச்சிந்தனைகள்
வள்ளுவர் வணங்கிய கடவுள்
திருக்குறள் புதிய உரை(அறத்துப்பால் மட்டும்)

என்னும் தம் நூல்களில் திருக்குறள் பார்வையில் விளையாட்டியலைத் திறம்பட விளக்கியுள்ளார் என்பதைக் கட்டுரையாளர் நமக்கு விளக்கியுள்ளார். இவற்றின் மூலம் திருக்குறள் ‘உடலியலைப் போற்றும்  வாழ்வியல் நூல்’ என்னும் நிலைப்பாட்டை மெய்ப்பித்துளார் என்றும் கட்டுரையாளர் எடுத்துரைக்கிறார்.
விளையாட்டுத்துறையில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற நவராசு செல்லையா, கதை இலக்கியுங்களிலும் பிற படைப்பிலக்கியங்களிலும் சிறந்திருந்ததுடன் திருக்குறள் நெறியைப் பரப்புவதிலும் சிறந்துள்ளார் என நல்லாசிரியர் க.பன்னீர்செல்வம் நமக்கு நன்கு விளக்கியுள்ளார்.

சாமி பழனியப்பன்
நிறைவாக நூல், கோட்டை சு.முத்துவின சாமி பழனியப்பன் கட்டுரையுடன் முடிகிறது.
எழுத்தாளர், இலக்கிய ஆய்வாளர், நூலாசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர், பாவேந்தர் பாரதிதாசனின் மாணவர் கவிஞர் சாமி.பழனியப்பன் குறித்த வரலாற்றுப் பதிவுகள் கிடைக் கவில்லை எனக் கட்டுரையாளர் தெரிவிக்கின்றார். எனவே கவிஞர் பழனி பாரதி அவரைப்பற்றி வரலாற்று நூலை எழுதி வெளியிட வேண்டும் என வேண்டுகிறேன்.
15 நூல்களின் ஆசிரியரான கவிஞர் சாமி.பழனியப்பன் 6 நூல்களைத் திருக்குறள் பற்றிய நூல்களாக உருவாக்கியுள்ளார் என்கிறார் கட்டுரையாளர். இந்நூல்களில் உள்ள சிறப்பான வரிகளைக் கவிஞரின் படைப்புகளிலிருந்தே நமக்கு மேற்கோளாகக் கட்டுரையாளர் தந்துள்ளார். மேற்கோள் குறிப்புகள் இருப்பினும் இவரது வரிகள்போல் கட்டுரை அமைந்துள்ளமையால் அடுத்த பதிப்பில் அதனைச் செம்மை செய்ய வேண்டும்.

வாழ்வே குறளுக் குரையானால்
 வையகம் தன்னில் துன்பமில்லை
தாழ்வும் இல்லை இறப்புமில்லை
 தரணியில் இன்பம் பெறுவோமே!
என்பதே கவிஞர் சாமி.பழனியப்பனின் முழக்கம்.
எழுமை, எழுபிறப்பு, பெய்யெனப் பெய்யும் மழை, தாளை வணங்காத் தலை, முதலான திருக்குறள் அடிகளுக்கும் இடம் பெறும் சொற்களுக்கும் கவிஞர் சாமி பழனியப்பன் தரும் சிறப்பான விளக்கங்களைக் கட்டுரையாளர் நமக்குத் தருகிறார்.
திருக்குறளைப் பழத்தோட்டமாகவும் கலங்கரை விளக்கமாகவும் மலர்ச்சோலையாகவும் கவிஞர் திறம்பட விளக்குவதை நாம் அறியச் செய்கிறார் கட்டுரையாளர்.
காந்தியடிகளின் சத்தியசோதனையில் திருக்குறள் நெறிகள் வலியுறுத்தப்படுவதைக் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.
இடையிடையே குறிப்பிடப்பட்டுள்ள கவிஞரின் பாடல் வரிகள் மூலம் கவிஞரைப்பற்றிப்புரிந்து கொள்ளச் செய்கிறார் கட்டுரையாளர்.
இவரின் உரை ஒன்றே உலகம்  என்னும் உயரிய இலட்சியத்தின்பால் ஈர்த்து, சாதி மத இன மொழி வேறுபாடற்று உலகுதழுவி வாழ வழிகாட்டுவதாக அமைந்துள்ளது எனக் கட்டுரையாளர் கோட்டை சு.முத்து நிறைவாக முடிக்கின்றார்.
இவ்வாறு பதினொருவர்பற்றிய பதின்மர் கட்டுரைகள் அமைகின்றன.
மொழியும் இனமும் வளர வரலாறு தேவை. மொழிப்பற்றும் இனப்பற்றும் நம்மிடம் நிலைத்திருக்க வரலாறு படிக்க வேண்டும். அந்த வகையில்  நமக்கு தமிழ்ப்பற்றை ஊட்டும் வகையில்  திருக்குறள் படைத்த சான்றோர்கள் வரலாறுகள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன; அளிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே,  இந்த நூலை மட்டும் அல்ல இந்நூல் தொகுதிகள் அனைத்தையுமே நாம் வாங்கிப்படிக்க வேண்டும். பிறந்த நாள், திருமண நாள் முதலான சிறப்பு நிகழ்வுகளின் பொழுதும் போட்டிகளுக்குப் பரிசளிக்கும் பொழுதும் திருக்குறள் சான்றோர்கள் பற்றிய நூல்களை அளித்துப் பிறரையும் வரலாறு படைக்கத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.
முன்னுரையில் பேரா.கு.மோகனராசு குறிப்பிட்டாற்போன்று திருக்குறள் தூயர்களின் வரலாற்று நூல், தூய நூலாக வரலாற்றில் போற்றப்படும். வரலாற்றில் போற்றப்படும் நூல்களை நாம் வாங்குவதும் படிப்பதும் பிறருக்கு வழங்குவதும் நமக்குக் கிடைத்தற்கரிய பேறு அல்லவா? எனவே, அவ்வாய்ப்பினைத் தவறவிட வேண்டா என அவையோரைக் கேட்டுக் கொள்கிறேன். கட்டுரையாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவிததுக் கொள்கிறேன்.
வரலாற்றில் நிற்பவர்களைப்பற்றிப் படித்து
நாமும் வரலாறாக வாழ்வோம்!
குறள்நெறி போற்றிக் குவலயம் சிறக்கச் செய்வோம்!
  • இலக்குவனார் திருவள்ளுவன்
முந்தைய பகுதிகள் காண:

Tuesday, February 12, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இலக்குவனார் திருவள்ளுவன்


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 (குறள்நெறி)
  1. எழுத்துக்கு அகரமும் புவிக்குப் பகலவனும் முதல் என அறி!
  2. கற்றதன் பயனாக அறிவர்வழி நட!
  3. நெடுங்காலம் வாழ மாண்புடையோர் வழி நட!
  4. துன்பம் இல்லாதுபோக விருப்பு வெறுப்பிலார் வழிநில்!
  5. இருவினை சேராதிருக்கப் புகழுடையார் வழி நில்!
  6. நீடு வாழ மெய்யொழுக்கர் வழி நில்!
  7. மனக்கவலையை மாற்ற உவமையில்லார் வழிநில்!
  8. துன்பக்கடல் நீந்த அறவர்வழி நில்!
  9. தலையால் நற்குணத்தானை வணங்கு!
  10. அறியாமைக் கடலை நீந்த, ஆளுமையுடையவர் வழி 
    நில்!
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, February 2, 2019

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4
அருட்செல்வர் கிருபானந்த வாரியார்
நான்காவதாக வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
வாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ச. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார்.
பன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார் கட்டுரையாளர்.
நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று சைவப்பரப்புரை மேற்கொண்டவர் வாரியார். அவ்வாறு தாம் சென்ற எல்லா இடங்களிலும் திருக்குறள் பரப்புரையும் மேற்கொண்டு திருக்குறள் தொண்டராக வாழ்ந்துள்ளார் என்பதை நமக்குக் காட்டுகிறார் கட்டுரையாளர்.
வாரியார், திருக்குறள் சைவநூலா?, திருக்குறள் கதைகள் முதலான திருக்குறள் தொடர்பான நூல்களையும் திருக்குறள் கதைகள், வாரியாரின் வள்ளுவர் ஆகிய திருக்குறள் தொடர்பான ஒலிப்பேழைகளையும் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு வாரியாரின் திருக்குறள் பரப்புரையை விளக்குகிறார்.
வாரியாரின் 40இற்கு மேற்பட்ட நூல் பட்டியலையும் 25 பணிகளையும் குறிப்பிடும் கட்டுரையாளர் வாரியார் குறள்நெறிப்படி வாழ்ந்தவர் எனப் பாராட்டுகிறார்.
திருவள்ளுவர் கூறியவாறு வினையால் வினையாக்கிக்கோடும் சிறப்புடன் சைவப்பரப்புரைப் பொழிவால் திருக்குறள் பரப்புரைப் பொழிவை மேற்கொண்ட திருக்குறள் பரப்பாளர் வாரியார் என வா.வேங்கடராமன் கட்டுரையை நன்கு முடித்துள்ளார்.
பாரதியார்
ஐந்தாவதாகப் பாரதியார் குறித்த பேரா.கருவை பழனிசாமி கட்டுரை இடம் பெற்றுள்ளது.
பாரதியார் தம் கட்டுரைகளில் திருக்குறள்களை எங்கெங்கே கையாண்டுள்ளார் எனக் குறிப்பிட்டு அவரின் திருக்குறள் ஈடுபாட்டை நமக்குக் கட்டுரையாளர் விளக்குகிறார்.
திருக்குறள் கருத்துகளை உள்வாங்கியும் பாரதியார் கட்டுரைகள் படைத்துள்ளார் என்கிறார். எடுத்துக்காட்டாக
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபைகயும்
சேரா தியல்வது நாடு
என்னும் திருக்குறள் கருத்தைப் பின்வருமாறு பயன்படுத்தியுள்ளார் என்கிறார்.
“அந்நியர் ஆளும் இந்திய நாட்டில் செறுபகை தவிர ஏனைய உறுபசியும் ஓவாப்பிணியும் ஆகிய இரண்டும் உண்டு …”
எனப் பாரதியார் எழுதியுள்ளதை விளக்குகிறார்.
கான்பூர் பொதுக்கூட்டத்தில் திலகர் ஆற்றியஉரையை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் பாரதியார். மூல உரையில் திருக்குறள் பயன்படுத்தப்படாவிட்டாலும் மொழிபெயர்ப்பில் பாரதியார் பொருத்தமான திருக்குறளைப் பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் பாரதியாரின் திருக்குறள் ஈடுபாட்டைக் கட்டுரையாளர் விளக்குகிறார்.
நிறைவாகப் பாரதியாரின் திருக்குறள் மேற்கோள் திரட்டு என அவர் குறிப்பிட்ட 14 திருக்குறள் பாக்களை நமக்கு அளித்துள்ளார் கட்டுரையாளர்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
என்று போற்றியவரல்லவா பாரதியார். எனவே, அவரின் திருக்குறள் ஈடுபாட்டில் வியப்பெதுவுமில்லை. ஆனால் அதனை நமக்கு உணர்த்தும் முகமாகப் பேரா.கருவை பழனிசாமி இக்கட்டுரையை நலலபடியாக அளித்துள்ளார் எனலாம்.
பண்டித  மா.சி.சுப்பிரமணியனார்
ஆறாவதாகப் பேரா.பண்டித மா.சி.சுப்பிரமணியனாரின் திருக்குறள் பணிகளை வே.ச.விசுவநாதம் நமக்கு உணர்த்தியுள்ளார்.
பேராசிரியரின் பொதுவாழ்க்கை, திருக்குறள் ஈடுபாட்டின் பின்புலம் ஆகியவற்றை முதலில் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
12 ஆம் அகவையிலேயே மும்மணிமாலை என்னும் நூலை எழுதி வெளியிட்ட பேராசிரியர் தொடர்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் திருக்குறள் பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். அவற்றிலும் தினகர வெண்பா, சோமேசர் முதுமொழி ஆகிய நூல்களில் முதலிரு வரிகளில் தொன்மைக் கதைகளைக் கூறி மூன்றாவது நான்காவது வரிகளில் திருக்குறளை எடுத்தியம்பியுள்ளார்.
அகரமே முதலாய் எழுத்தெல்லாம் நிற்கும்
அதுநிகர் உலகெலாம் ஆதி
பகவனே முதலாய் நிற்கும்
என்பதைச் சான்றாகக் கூறலாம். இவ்வாறு பல பாடல்களை நமக்குக் கட்டுரையாளர் படைப்புகளில் திருக்குறள் தாக்கம் என்னும் தலைப்பில் எடுத்து அளித்துள்ளார்.
பேராசிரியரின் பிற நூல்களையும் பட்டியலிட்டுள்ள கட்டுரையாளர் அவரின் திருக்குறள் அமைப்பு சார் பணிகளையும் தருகிறார்.
திருக்குறள் கருத்துகளை உள்வாங்கித் தம் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ள பேரா.பண்டித மா.சி.சுப்பிரமணியனாரை  நமக்கு அவரதுபாடல்கள் மூலமே வே.ச.விசுவநாதம் நன்கு விளக்கியுள்ளமை பாராட்டிற்குரியது.
பேரா.கா.சு.பிள்ளை
பேரா.கா.சு.பிள்ளை குறித்த பேரா.கருவை பழனிசாமியின் கட்டுரை 7 ஆவதாக இடம் பெற்றுள்ளது.
இருமொழி அறிஞரான கா.சு.(பிள்ளை) 1928 இல் எழுதிய திருக்குறள் பொழிப்புரையின் சிறப்பைக் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
“தன்மதிப்புக்கப்பல் தேசிய அரசியல் சூறாவளிக்குப் பலியாகாமல்கரைசேர வழிகாட்டிய மாலுமி
என இவரை அறிஞர் அண்ணா பாராட்டியுள்ளதைக் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிக்கும் அண்ணாவுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழுக்கு முறையான முழுமையான இலக்கிய வரலாறு கண்டவர் என்கிறார் கட்டுரையாளர்.
இவரின் தமிழியக்கப் பணிகளையும் பெண்ணுரிமை, தன்மதிப்பு இயக்கப் பணிகளையும் கட்டுரையாளர் நமக்கு உணர்த்தியுள்ளார்.
சாதீயத்தைச் சுட்டுப் பொசுக்கிய புரட்சிப் பொறி திருக்குறள் எனப் பரப்பிய  கா.சு.(பிள்ளை) திருக்குறள் வரலாற்றுத் திருத் தொண்டராகத் திகழ்ந்தார்  என்பதைப் பேரா.கருவை பழனிசாமி நமக்குத் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
(தொடரும்)

Followers

Blog Archive