Tuesday, June 18, 2019

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்


ஒரே நாடுஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை   அழிக்கும்ஒரே மதத்திற்கான பாதை
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஆனி 04 / சூன் 19) நடை பெறுகிறது. இது பா.ச.க.வின் புதிய திட்டம் அல்ல. அதன் முந்தைய ஆட்சியிலேயே 2021 வரை நடக்க வேண்டிய மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை இவ்வாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து  நடத்த முயன்றது. இப்பொழுது தன் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் தொடக்கததிலேயே இதற்கான முயற்சியில் இறங்கி யுள்ளது.
ஒரே தேர்தல் என்பதற்காகச் பல சட்டமன்றங்களையும் ஆட்சிகளையும்  கலைக்க வேண்டி இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தங்களின்காலம் முடியும் முன்னரே அழிக்கப்படுவது மக்களாட்சிக்கு எதிரானதல்லவா?
வாதத்திற்காக நாடாளுமன்றம், அனைத்துச் சட்டமன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுதுதான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததால் அனைத்துச் சட்டமன்றங்களுக்கும் ஒருசேரத் தேர்தல் நடத்துவதாகக் கொள்வோம். அப்படியானால் ஆட்சியில் இருக்கும் அரசுகளையும் பொறுப்பில் இருக்கும் சட்டமன்றங்களையும் தேர்தலுக்காகக் கலைப்பது என்பது மக்களாட்சியைப் படுகொலைசெய்வதாகத்தானே பொருளாகும்?  இப்படுகொலை தேவைதானா?
இப்படுகாலை குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தேர்தல் நடந்து முடித்துவிட்டதாகக் கொள்வோம். சில மாநிலங்களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் வரலாம். தனக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி அமைக்கும் வல்லமை கொண்டது சூது நிறை பா.ச.க. இது போன்ற சூழலில் மாநில அரசு கலையும் நிலை வரலாம்பல்வேறுமாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் வரும் பொழுது வெவ்வேறுநாள்களில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம வரத்தானே செய்யும். அப்பொழுது நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகும் அல்லவா?
இதனை மறுதலையாகவும் சிந்தித்துப் பார்க்கலாம். நாடாளுமன்றச் சூழல் மாறி மத்திய ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டு எக்கட்சியும் ஆட்சி அமைக்கமுடியாவிட்டால் மத்தியில் தேர்தல் நடத்தித்தானே தீர வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருப்பது என்றால் மத்திய மக்களாட்சி என்பது அடிபட்டுத்தானே போகும்.
அப்படி எல்லாம் இல்லை. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டால் 5 ஆண்டு முழுமையும் பொறுப்பில் இருக்கும் வரை சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்கின்றனர் சிலர்.  என்ன தவறு செய்தாலும் எவ்வளவு ஊழலில் திளைத்தாலும் ஆட்சி நிலைத்துத்தான் இருக்கும் என்றால் ஆட்சியாளர்களுக்குத் தவறு செய்வதில் எந்த அச்சமும் இருக்காதே இதனால் மக்கள் நலன்கள்தானே பாதிக்கப்படும்.
சில செலவுகளைச் செய்துதான் ஆகவேண்டும். அவற்றில் ஒன்றுதான் தேர்தல் செலவு. எனவே, சிக்கனம் என்ற பெயரில் மக்களாட்சிக்கு ஊறு நேரும் வகையில் செயல்படக்கூடாது என நாளைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.
பா...வும் பேராயக்(காங்.) கட்சிக்கும் தேசிய இன அழிப்பில் ஒன்றுக்குஒன்று சளைத்ததாகக் கூற இயலாது. பேராயக்கட்சிக்கும் ஒரே நாடு  ஒரே கோட்பாடு என்ற கொள்கைதான். எதிர்க்கட்சியாக இருப்பதால், பா.ச.க.வை எதிர்ப்பதற்காகச் சில கருத்துகளைக் கூறினாலும் அடிப்படையில் அதற்கு இணையான செயல்பாடு கொண்டதுதான். 1967இற்கு முந்தைய அதன் நிலைப்பாடு குறித்துத் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் முன்பு குறிப்பிட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.
 பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சிஒரே மொழிஒரே மதம்ஒரே இனம் எனக்கொள்ளவைத்துப் பலமொழிகளையும்இனங்களையும்இந்து ஆட்சி எனப்பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுறவேண்டியுள்ளது.
 இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில்உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில் கொள்ளவேண்டியன.”
குறள்நெறி (மலர்2 : இதழ்22): கார்த்திகை 16,1997 : 1.12.65
என்றார் அவர்.
இவற்றின் அடிப்படையில்தான் பா.ச.க. ஒரே தேர்தல் எனப் பிதற்றி வருகிறது.
ஒரே மொழி எனச் சமற்கிருதத் திணிப்பில்  அசையா உறுதியுடன் நிற்கிறது பா.ச.க. ஒரே கல்வி என்று சொல்லித்தான் பொதுநுழைவுத் தேர்வுகளைப் (நீட்டு)புகுத்திப் பல உயிர்களைக் காவு கொண்டும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டும் வருகிறது பா.ச.க.
அடுத்து ஒரே வழிபாடுஒரே உடை என்பன போன்ற ஆயுதங்களைக் கைகளில்எடுக்கலாம்.
இதன் தொடர்ச்சியாகத் தன் உள்ளக்கிடக்கையான ஒரே மதம் என்பதைக்கைகளில் எடுக்கும் பா...
நாட்டு மக்களின் நலன்களில் கருத்து செலுத்த  வேண்டும் என்ற பா.ச.க.வின் எண்ணத்தைப் பாராட்டலாம். ஆனால் அதற்காக ஒத்த தன்மை என்றபோர்வையில் பாகுபாட்டை உருவாக்கும் முயற்சிகளை அதுகைவிடவேண்டும். ஒரே தேர்தல் என்பது வாதுரைக்குரிய பொருளே அல்ல என்பதை உணர வேண்டும். அத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.(திருவள்ளுவர், திருக்குறள் 463)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Sunday, June 9, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160

(குறள்நெறி) 

  1. நம்பியவர் மனைவியை நாடாதே!
  2. பிறன்மனை புகுந்து  சிறியோன் ஆகாதே!
  3. பிறர் மனைவியை நாடாதே!
  4. பிறர் மனைவியை விரும்பாதே!
  5. அறவாழ்வு வேண்டுமெனில், பிறர்மனைவியை விரும்பாதிரு!  
  6. (அறத்தைத் தழுவப்,) பிறர் மனைவியைத் தழுவாதே!  
  7. பிறர் மனைவியை விரும்பா அறம் புரி!
  8. தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்கு!
  9. பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மற!
  10. அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறு! 
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170]

Sunday, June 2, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150

(குறள்நெறி) 

  1. (ஆக்கம் சேரவேண்டுமெனில்,) அழுக்காறு கொள்ளாதே!
  2. (உயர்வு வேண்டுமெனில்,) ஒழுக்கம் இல்லாதிராதே!
  3. (இழிவின் துன்பம் அறிந்து) ஒழுக்கம் தவறாதே!
  4. ஒழுக்கத்தால் மேன்மையுறு!
  5. ஒழுக்கந்தவறிப் பழி அடையாதே!
  6. (நன்றே தரும்) நல்லொழுக்கம் பேணு!
  7. (துன்பமே விளைவிக்கும்) தீயொழுக்கம் நீக்கு!
  8. தவறியும் இழிந்தன பேசாதே!
  9. உலகத்தாரோடு இணங்கி வாழ்!
  10. பிறர் மனைவியை விரும்பாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160]

Saturday, June 1, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்  131-140

(குறள்நெறி) 

  1. (செல்வர்க்கே செல்வமான) பணிவைக் கடைப்பிடி!
  2. (ஆமைபோல்) ஐம்பொறி அடக்கு!
  3. நாவைக் காக்காது துன்பத்தைச் சேர்த்துக் கொள்ளாதே!
  4. (நன்றெல்லாம் நீக்கும்) தீச்சொல் ஒன்றும் சொல்லாதே!
  5. நாவினால் பிறரைச் சுடாதே!
  6. (அறவாழ்வு தேடி வர,) அடக்கமுடன் வாழ்!
  7. நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதி!
  8. ஒழுக்கத்தை எல்லா இடத்திலும் துணை வரச் செய்!
  9. ஒழுக்கமுடைமையை உயர் குடிமையாகக் கருது!
  10. ஒழுக்கம் தவறாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150]

தேசியக் கல்வித் திட்டம் 2019 – புதிய கல்லறையில் பழைய பெட்டி : இலக்குவனார் திருவள்ளுவன்


தேசியக் கல்வித் திட்டம் 2019 – 

புதிய கல்லறையில் பழைய பெட்டி

மனிதனை மனிதனாக வாழச் செய்வது கல்வி. கல்வி அவரவர் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப அமைந்தால்தான் கல்வியில் சிறந்து சிறந்த மனிதனாக வாழ முடியும்.
இந்தியா பல தேசிய இன வழி மாநிலங்கள் இணைந்த ஆட்சிப் பரப்பாக உள்ளது. எனவே, கல்வியும் தேசிய இனங்களுக்கேற்ப மாறி அமையும். ஆனால், ஒரே நாடு, ஒரே மொழி என்ற சட்டத்திற்குள் கல்வியை மாற்ற முயலும் பொழுது கல்வி முறை சீரழிகிறது. மனிதக் குலமும் நலங்குன்றுகிறது.
மத்திய அரசு தன் நோக்கத்தை நிறைவேற்ற இந்தியா முழுமைக்குமான புதிய கல்வித்திட்டத்தை வகுக்க 2015 இல் முடிவெடுத்தது. இதன்படி, மேனாள் அமைச்சரவைச்செயலர் திரு தி.சீ.இர.சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. மே 2016 இல் இக்குழு அறிக்கை அளித்தது. இதில் சில உள்ளீடுளைமத்திய அரசு சேர்த்தது. உள்ளீடுகள், முன்வைப்புரைகள் அடிப்படையில் அறிக்கை அளிக்க முனைவர் கத்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இதில் தலைவருடன் 7 உறுப்பினர்களும் ஒரு செயலரும் உள்ளனர். இக்குழு திசம்பர் 15, 2018 இல் மத்திய அரசிற்கு அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையிலான கருத்துகளையே மத்திய அரசு இப்பொழுது கேட்டுள்ளது.
புதிய கல்வித்திட்டம் 2019இன் வரைவு மனித வள மேம்பாட்டுத் துறை இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“பண்டைய இந்தியாவில் முதன்முதலில் முகிழ்த்த கல்விமுறை வேதம் சார்ந்த கல்வி முறை என்று அறியப்படுகிறது” என 2016 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை கூறுகிறது. இத்தவறான எடுகோளின் அடிப்படையிலான இப்போதைய அறிக்கை எங்ஙனம் கண்ணோட்டமின்றி நடுவுநிலைமையுடன் ஆராய்ந்து இருக்க முடியும்? மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தி, சமற்கிருதத் திணிப்புக் கொள்கையில் மாற்றம் இருக்காது என்பது தெரிந்ததுதான். எனவே,இத்திட்ட வரைவில் உள்ள இந்தி, சமற்கிருத மொழித்திணிப்புகளைத் தனியே பார்க்கலாம். இப்பொழுது இத்திட்டம் சமச்சார்பில் இலலை என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
திட்டவரைவை வெளியிட்டுக் கருத்து கேட்கும் மத்திய அரசு முதலில் என்ன செய்து இருக்க வேண்டும்? திட்ட வரைவு முடிவாகும் முன்னரே மக்களிடம் வினா நிரல் அளித்துப் புதியக் கல்வித்திட்டம் குறித்த கருத்துருக்களைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை.
திட்ட வரைவு உருவாக்குவதற்காக மத்திய அமைச்சுத் துறைகள், அமைப்புகள், நிறுவனங்கள் என 74 அமைப்புகளிடம் கலந்து பேசியுள்ளது. இவற்றில் ஒன்றுகூடத் தமிழ் நாட்டில் இல்லை.
217 வல்லுநர்களிடம் கலந்து பேசியுள்ளது. அவர்களுள் எண்மர் தமிழ்நாட்டவர். எண்மரில் நால்வர் வேலூரில் உள்ளவர்கள். சென்னையிலுள்ள இந்தியத் தொழில் நுட்பக்கழகத்தில் இருந்து இருவரும் திருச்சிராப்பள்ளியில் உள்ள இ.தொ.க.(ஐ.ஐ.டி.)-இல் இருந்து ஒருவரும் மதுரை காமரசார் பல்கலைலக்கழகத்தில் உள்ள மனிதவளமேம்பாட்டு மையத்தில் இருந்து ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்க்கல்வியாளர் ஒருவரும் கலந்து பேசப்படவில்லை. இந்தியாவில் உள்ள உலக மூத்த செம்மொழியான தமிழ்க்கல்வி பற்றி ஆராயாத திட்ட அறிக்கை எப்படி நடுவுநிலைமையுடன் இருக்கும்?
கல்வியில் மொழி, கலை, பண்பாடு முதன்மைப் பங்கு பெற வேண்டும். எனவேதான், திட்ட அறிக்கை சமற்கிருதத்தில் உள்ள அறிவுப்புலங்களைப் போற்றுகிறது.  
பிற மொழிக்கல்வி என்னுமிடத்தில் எடுத்துக்காட்டிற்காகத் தமிழைக் குறிப்பிடும் கல்வித் திட்டக்குழுவினர் தமிழை அறியாதவர்கள் எனக் கூற இயலாது. ஆனால், என் செய்வது? இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. அதற்கேற்ப இந்தி,  சமற்கிருத முதன்மையில் புதிய கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுதானே இலக்காக இருக்க முடியும்?  அதனைச் செவ்வனே செய்துள்ளனர்.
புதிய கல்வித் திட்டக் குழுவினருக்குத் தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக்கழகம் இருப்பது தெரியாதா? வேறு பல்கலைக்கழகங்கள் இருப்பதுதான் தெரியாதா? இருந்தால் அவர்களுக்கு என்ன என்கிறீர்களா? ஆமாம், இப்பல்கலைக்கழகம் சார்ந்தவர்களைக் கலந்து பேசவேண்டும் என்பது அவர்கள் தலையெழுத்தா என்ன?
புதிய கல்வித்திட்டம் மாநிலக் கல்விக்கு – மண்ணின் மக்களுக்கு உரிமை கொடுக்கும் வகையில் அமையவில்லை. அவ்வாறிருக்க எதற்கு இவர்களைக் கேட்டு நேரத்தை வீணாக்குவத? எனவேதான் புதிய  கல்வித் திட்டக்குழுவினர் தமிழறிஞர்களையோ தமிழ்க்கல்வியாளர்களையோ கலந்து பேசவில்லை. எனவே, புதிய கல்வியில் தமிழுக்குப் பாதுகாப்பு இல்லை.
தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல், தேசியக் கல்வித்திட்டம் எந்தெந்த வகைகளில் இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கிறது?  அயல்மொழித் திணிப்புகளுக்காகத் தாய்மொழியைச் சிதைத்து மாணவர் கல்விக்கு எவ்வாறு கேடு விளைவிக்கிறது? மாணாக்கர்கள் மேல் எவ்வாறு மொழிச் சுமையை ஏற்றுகிறது? பைந்தமிழ் கொண்டு பாராண்ட தமிழினத்தை எங்ஙனம் பாழ்படுத்துகிறது? என்பனபற்றித் தனியே பார்ப்போம். வாய்ப்பிருப்பின் உரையரங்கம் நடத்துவோம்.
நாம் அறிய வேண்டியதெல்லாம் தேசியக் கல்வித் திட்ட உருவாக்கத்தில் தமிழாய்ந்த தமிழறிஞர்களின் கருத்துகளைக் கேட்கவில்லை. எனவே, நாம் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
சமநிலையில் கருத்தறிந்து திட்டமிடப்படாத தேசியக் கல்வித் திட்டத்தால்  தேசிய மொழியினர் எதிர்த்துத் திரள்வது ஆட்சிக்கு முடிவு கட்டுவதாக அமையும். எனவே, ஆட்சியைத் தற்காத்துக் கொள்ளவாவது கல்வித்திட்டத்தை மாநிலப்பட்டியலில் சேர்த்து மாநிலத் தன்மைக்கேற்ப கல்வித் திட்த்தை வகுக்க ஆவன செய்ய  மத்திய அரசை வேண்டுகிறோம். மத்திய அரசின் இணக்கத்தில் உள்ள தமிழக அரசும் இதற்கான முன் முயற்சி எடுக்க வேண்டுகிறோம். 
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.( திருவள்ளுவர், திருக்குறள் 435)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive