Tuesday, December 22, 2015

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

08

  “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே நம்நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும்” எனப்பயிற்றுமொழிப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்.(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284:285) இன்றைக்கு ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. தமிழ்வழிப்பள்ளிகள் உள்ள அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழி புகுந்துவிட்டது. அது தானாகப் புகவில்லை. அரசால் புகுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழே கல்வி மொழி என்பதைச் செயல்படுத்தாத நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்கு, “தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்”. என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284). ஆனால், இன்றைய நிலை என்ன? “தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை” என எத்தனைப் பாவேந்தர்கள் அவலக்குரல் எழுப்பினாலும் மாற்றிக் கொள்ளாத மாந்தர்களாக நாம் இருக்கின்றோம். வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கி
  ஆற்றுக்குக்கரை போல் இலக்கியத்திற்கு இலக்கணம் தேவை. ஆனால், இன்றைக்கு இலக்கணத்தை அழித்து இலக்கியத்தையும் அழித்து வருகின்றனர்.
  “இன்று தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் புலவர்களும் பெருகி வருகின்றனர். மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்டு சிலர் கட்டுரைகள் எழுதுகின்றனர்; பாடல்கள் இயற்றுகின்றனர். அவர்கள் தமிழிலக்கண மரபை அறியாமலும தமிழிலக்கிய மரபைப் புறக்கணித்தும் கருத்துச் செறிவின்றி நடையழகு இன்றி எழுதிக் குவிக்க முற்படுகின்றனர்.   முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது.”(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282) என்கின்றார் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். காலந்தோறும் இயல்பாக இலக்கண மரபில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால், இலக்கணமே தேவையில்லை எனத் தப்பும் தவறுமாக எழுதிக் கொண்டு அதனையே புது இலக்கியமாகக் கூறிவருவோர் பெருகி வருகின்றனர்.
  இலக்கணங்கள் ஒலி வடிவ எழுத்துகளில் உரு வடிவங்கள் குறித்தும் கூறியுள்ளன. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்கிறது நன்னூல். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் இவ்வாறே கூறுகின்றது. ஆனால், தமிழ் வரிவத்தைச் சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டு சிலர் வாழ்ந்து வருகின்றனர். உரோமன் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேவாரம் படிப்பதற்கேற்ப வரிவடிவம் அமைய வேண்டும் என்று புதுப்புது வரிவடிவங்களைக் கற்பித்தும் கிரந்த எழுத்துகளுக்கு வாழ்வு தந்து கொண்டும் உள்ளனர். தமிழின் வாழ்விற்குத் தடையாக உள்ளவர்கள் தளர்ச்சியின்றி வாழ்கையில் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+10
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 9)



அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015 

Saturday, December 19, 2015

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 02 – இலக்குவனார் திருவள்ளுவன்


பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 02 

 – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

 02

யார்க்கும் அஞ்சாதே! எதற்கும் அஞ்சாதே!
  இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த பாரதியார், மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அச்சமே என்பதை உணர்ந்தார். எனவே, அச்சப்பேயை விரட்டுமாறு பல இடங்களில் வலியுறுத்துகிறார்.
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
(பாரதியார் கவிதைகள் பக்கம் 98/ விநாயகர் நான்மணிமாலை)
என்கிறார்.
எதற்கும் அஞ்ச வேண்டா என்பதற்காக,
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!
(பக்கம் 180/ பண்டாரப்பாட்டு)
என்கிறார். கூற்றுவனைக் கண்டும் அச்சமில்லை என்பதற்காக அவர்,
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்
(பக்கம் 183/காலனுக்கு உரைத்தல்)
என அறைகூவல் விடுக்கிறார். மேலும்,
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்
 மாரவெம் பேயினை அஞ்சேன்
   (பக்கம் 133/ மகாசக்தி பஞ்சகம்)
என்று கூறுகிறார். இவ்வாறு அஞ்சாமையை வலியுறுத்தும் பாரதியார் ஆத்திசூடியிலும் அதற்கான கட்டளைகளைப் பின்வருமாறு விடுக்கத் தவறவில்லை.
அச்சம் தவிர் (ஆ.சூ.1)
கீழேர்க்கஞ்சேல் (ஆ.சூ.16)
சாவதற்கு அஞ்சேல் ((ஆ.சூ. 26)
கொடுமையை எதிர்த்து நில் (ஆ.சூ. 22)
தீயோர்க்கு அஞ்சேல் (ஆ.சூ. 45)
பேய்களுக்கஞ்சேல் (ஆ.சூ. 72)
தொன்மைக்கஞ்சேல் (ஆ.சூ. 51)
ரௌத்திரம் பழகு (ஆ.சூ. 96)
வெடிப்புறப்பேசு (ஆ.சூ.107)
அச்சம் ஒழி எனக் கூறாமல், அச்சம் தவிர் எனப்பாரதியார்   கூறியது ஏன் என எண்ணலாம்.
   அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
   அஞ்சல் அறிவார் தொழில் என்பது தெய்வப்புலவரி்ன் திருக்குறள் அல்லவா?
அதனால்தான்!
   கீழோர்க்கு அஞ்சுவதாலும் தீயோர்க்கு அஞ்சுவதாலும், பிறருக்கு அஞ்சித் தாழ்ந்து நடந்து பிறரின் தவறுகளுக்கு நாம் உடந்தையாகி விடுகிறோம். எனவேதான் சீறவேண்டிய இடத்தில் சீறவேண்டும் என்பதற்காகச் சீறுவோர்க்குச் சீறு (ஆ.சூ.28) என்கிறார். தீயரைக் கண்டால், எதிர்க்கும் துணிவு வேண்டுமே அன்றி அஞ்சிப் பணிதல் கூடாது என்பதற்காகவே குழந்தைப் பருவத்திலேயே இவ்வுணர்வைப் பின்வருமாறு விதைத்தவர் அல்லவா பாரதியார்.
பாதகம் செய்பவரைக் கண்டால் நாம்
பயங் கொள்ளல் ஆகாது பாப்பா –
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா (பக்கம் 203 / பாப்பா பாட்டு)
மேலும் மக்களின் அச்சம் கண்டு
அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
(பக்கம் 36 / பாரதச் சங்கத்தின் தற்கால நிலை)
என உள்ளம் நைந்தவர் அல்லவா பாரதியார். எனவே, ஆத்திசூடியில் மேற் குறித்தவாறு பல வகை அச்சங்களை ஒழிக்கக் கூறியதில் வியப்பில்லை.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 

இலக்குவனார் திருவள்ளுவன்


(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 தொடர்ச்சி)
தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

07

  ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது.

தமிழென் கிளவியும் அதனோ ரற்றே.
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )
             செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 398)
             செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 400)
             தமிழ்கூறு நல்லுலகத்து
(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)
             செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)
  தமிழ் இலக்கியங்களில் ஆயிரக்கணக்கில் தமிழ் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கில் தமிழ் அடைமொழிகளுடன் குறிக்கப்படுகிறது. அவ்வாறிருக்க, தமிழ் மொழிக்குப் பெயரைப் பிற இனத்தார் அல்லது மொழியார் சூட்டினர் என்பது கேலிக்குரியதல்லோ?
  “உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ – ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.” என்கிறார் பழந்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ் பக்கம் 30).
  திராவிடம் என்று சொல்லாமல் நாம் தமிழ்க்குடும்ப மொழிகள், தமிழ்க்குடும்ப இனம் என்றே சொல்வோம். ஆனால், வேண்டுமென்றே திராவிடம் தமிழைக் குறிக்கின்றது என்பதை மறைத்துவிட்டு, தமிழில் இருந்து பிற மொழிகள் வந்தன என்பதையும் மறைத்து விட்டு, மூலத் திராவிட மொழி என்று ஒன்று இருந்ததாகவும் அதிலிருந்தே தமிழ் முதலான மொழிகள் தோன்றின என்றும் திரிப்போர் உலகில் செல்வாக்குடன் திரிகின்ற பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்னஇருக்கின்றது?
  தலைசிறந்த மொழியியல் அறிஞர் தொல்காப்பியர். அவர் தமிழ் மரபைக் காக்க அன்றைக்கே நூல் எழுதினார். இன்றைக்கோ மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையர் தமிழின் சிதைவிற்கு வழிவகுத்து வருகின்றனர். பேச்சுவழக்கே மொழியின் உயிர் எனக் கூறிக் கொண்டு, கொச்சை நடைக்கு வாழ்வளித்துச் செந்தமிழை அழித்து வருகின்றனர்.
  “ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ளது. தமிழில் ஒலியைக் குறிக்கும் வரி வடிவங்கள் முப்பத்தொன்றேயாகும். ஆங்கிலத்தில் வரி வடிவங்கள் இருபத்தாறு என்றாலும் ஒரே வரி வடிவம் வெவ்வேறு ஒலிகளைத் தருகின்ற முறையில் சில எழுத்துகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இன்று. வல்லின எழுத்துகள் மெல்லினச் சேர்க்கையாலும், சார்ந்து வரும் பிற எழுத்துகளினாலும் ஒலிப்பு முறையில் சிறிது வேறுபடக் கண்டாலும் அதனால் பொருள் வேறுபாடு ஏற்படாது. மிகுமுயற்சியின்றி ஒலிப்பதற்குரிய எழுத்து முறையையுடையது தமிழேயாகும்.” என்கிறார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ் பக்கம் 27).
  உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே என்றும் தமிழரிடமிருந்து சுமேரியர் கற்றுப் பிற இனத்தவர்க்கு அறிவித்தனர் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். தமிழர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே செப்பமுள்ள எழுத்து முறையைக் கொண்டிருந்தனர் ஆதலின், எழுத்து முறை தமிழர்களிடமிருந்தே பிற மொழியாளர்க்குச் சென்றுள்ளது என்னும் கூற்றுப் பொருத்தமும் உண்மையும் உடையதாகவே தோன்றுகிறது. என்றும் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார்(பழந்தமிழ் பக்கம் 26).
  “தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் ‘தொல்காப்பியம்’ தமிழ் எழுத்து முறையை விரிவாக ஒன்பது இயல்களில் ஆராய்கின்றது. இத்தகைய விரிவான ஆராய்ச்சி வேறு எம்மொழியினும் காண்டல் அரிது. ‘எழுத்து’ என்னும் சொல் ஒலி வடிவத்தையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஆதலின் பேச்சு மொழி தோன்றியவுடனே எழுத்து முறையையும் அமைத்துக்கொண்டனர் என்று எண்ண இடம் தருகின்றது. அன்றியும் தமிழில் வரிவடிவ எழுத்து ஒலி வடிவ எழுத்தையே சுட்டுகின்றது. கருத்தினையோ (idea) பொருளையோ (object) சுட்டுவதின்று.” என்றும் நற்றமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகின்றார் (பழந்தமிழ்: பக்கம் 26).
  இத்தகைய ஒலிவடிவச்சிறப்பு மிக்க தமிழ்எழுத்துகளை ஊடகங்கள் வழி சிதைப்பவர்களும் உலவும் பொழுது வாளாவிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைகொள்ள என்ன இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+10
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8

 

Followers

Blog Archive