Wednesday, July 3, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180

(குறள்நெறி) 

  1. பொறாமையால் அல்லவை செய்யாதே!
  2. (துன்பம் தரும்)  அழுக்காறு வேண்டா உனக்கு!
  3. சுற்றம் கெட வேண்டுமாயின்  பிறருக்குக் கொடுப்பதைத் தடு!
  4. செல்வம் சேர வேண்டாமெனில், பிறர் செல்வம் கண்டு பொறாமை  கொள்!
  5. நடுவுநிலை தவற விரும்பாவிடில், பிறர் பொருள் விரும்பாதே!
  6. பொறாமையாளனின் செல்வமும் பொறாமையற்றவனின் கேடும் மாறும்.
  7. அழிவினுள் தள்ளும் அழுக்காறு கொள்ளாதே!
  8. (உயர வேண்டுமெனில்,) பொறாமை கொள்ளாதே!
  9. உன் குடி அழிய வேண்டுமாயின், பிறர் பொருள் விரும்பு!
  10. பிறர் பொருள் பயன் விரும்பிப் பழிச்செயல் புரியாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புறவாழ்த்துகிறோம்!

இன்று(ஆடி 19 / சூலை 4) முதல் நான்கு நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடும் தமிழர் விழா நடைபெறுகிறது. தமிழறிஞர்களைப் புறக்கணித்துள்ளதாக உள்நாட்டுத் தமிழறிஞர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொடர் படைப்பாளர்கள் வரை வருத்தம் உள்ளது. என்றாலும்,
சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்!
குழுக்கள் பொறுப்புகளில் ஈழத்தமிழர்களைப் புறக்கணித்ததாகஅவர்களிடையே பெரும் ஆதங்கம் உள்ளது. என்றாலும் உலக மாநாட்டை நடத்துவது அரிதான செயல் என்ற அளவில் மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்!
கவியரங்கம், தமிழிசை, மரபிசை, (அப்படி என்றால் மரபிசை தமிழிசை இல்லையா?), சேர்ந்திசை, மெல்லிசை, பட்டிமன்றம், சொற்பொழிவு எனப் பலநிலைகளில் தமிழை வருகையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிக்குப் பாராட்டுகள்! எனவே, சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்!
இது தமிழாராய்ச்சி மாநாடு அல்ல. சிறுபான்மைதமிழாராய்ச்சியாளர்களுக்கும் வாய்ப்பளித்துள்ள தமிழர் மாநாடு. தமிழர்கள் ஒன்று கூடுவது மகிழ்ச்சிக்குரியதுதானே! அந்த அளவில் ஒன்று கூடலை நடத்தும் மாநாட்டினரைப் பாராட்டிச் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.
ஏறத்தாழ 50 தமிழ்க்கட்டுரைகள்தாம் மாநாட்டில் இடம் பெறுகின்றன. என்றாலும் பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, ஓவியப்போட்டி, குறள் தூதர்,குறள் தேனீ, தமிழ்த்தேனீ, குறும்படப் போட்டி, இலக்கிய வினாடி வினா மூலம் இளந்தலைமுறையினரை ஊக்கப்படுத்துகின்றனர்.  எனவேசிகாகோமாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.
கருத்தரங்க அமர்வு நிகழ்ச்சி நிரல் தமிழில் இல்லை. என்ன செய்வது உலகத் தமிழ் மாநாடு என்றாலே தமிழைப்புறக்கணித்து ஆங்கிலத்திற்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற பொய்யான மரபுதானே எங்கும் பின்பற்றப்படுகிறது. தவறான மரபினைப் பின்பற்றினாலும் தமிழ் உணர்வளார்களுக்கு வடிகாலாக அமையும் எனக் கருதிச் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்!
தமிழ்த் திங்கள், தமிழ் நாளை எல்லா இடங்களிலும் குறிப்பிட்டிருக்கலாம். என்றாலும் ஓரிடத்திலாவது குறிப்பிட்டுள்ளமையால் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.
ஆராய்ச்சி மாநாடுகளில் ஆராய்ச்சியாளர்களுக்குத்தான் முதன்மை கொடுக்க வேண்டும். ஆண்டுவிழா போல் புகழ்வாணர்களுக்கு முதன்மை கொடுக்கும் விழாவாக உள்ளது.  என்றாலும், அவர்கள் வாயிலாகவும் தமிழ் ஆராய்ச்சி கருத்துகள் தூவப்படும் என்ற நம்பிக்கையில், சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.
எழுத வாய்ப்புள்ளவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்பதை இணையம் கொண்டுவந்து விட்டது. அந்த நிலையை மாற்றித் தரமான படைப்புகள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் பாராட்டிற்குரியது. ஆனால், தெரிவுக்குழுவினருக்கே தெரியாமல் கட்டுரைகள் இடம் பெற்றதாக ஆராய்ச்சிக் கட்டுரையாளர்களிடம் வருத்தம் உள்ளது. என்றாலும், வாசிக்கப் போகும் கட்டுரைகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கருத்தில் நிறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில்,  சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.
தமிழர் வாழும் நாடுகளில் இருந்து மேலும் பல ஆராய்ச்சியாளர்கள் இடம் பெறும் வகையில் மாநாட்டினை நடத்தியிருக்க முடியும்.  என்றாலும், நிதி ஆதாரத்தைத் திரட்டும் நோக்கில் நன்கொடையாளர்களையும் புரவலர்களையும் திரட்டும் இலக்கில் வெற்றி பெற்றுள்ளமையால், கிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.
எளிமையாக இருந்தாலும் ஆராய்ச்சிகளைப் பெருக்கும் கருத்தரங்கங்களுக்குஇனி மாநாடு நடத்துவோர் முதன்மை தர வேண்டும். என்றாலும் கலைநிகழ்ச்சி முதலானவற்றின் மூலம் உள்நாட்டுத் தமிழர்களுக்கு உற்சாகமூட்டுவதால் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.
மாநாட்டில் புறக்கணிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலருக்கு வருத்தம்தான். என்றாலும் மாநாட்டுப் பொறுப்பாளர் நீங்கலான சிலருக்காவது வாய்ப்பளித்துள்ளனரே! எனவே, சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம். வருத்தங்களை மறந்து உலகத் தமிழர்களும் வாழ்த்துங்கள்!
துறைதோறும் தமிழுக்குத் தொண்டாற்றும் வாய்ப்பினை அனைவரும் பெறுவதற்கு மாநாடு வழிகாட்டட்டும்!
தமிழ் அறியாத் தமிழர் இல்லை என்னும் நிலையைக் கொணர மாநாடு வழி காணட்டும்!
தமிழ்மொழிக்கல்வியுடன் தமிழ்வழிக்கல்வியும் உலகெங்கும் உருவாகிப் பரவ மாநாடு வழி அமைக்கட்டும்!
மாட்டின் பேராளர்கள், பார்வையாளர்கள், வருகையாளர்கள், நிகழ்ச்சியாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறோம்!
உங்கள் தொண்டு சிறக்கட்டும்! தமிழ் பரவட்டும்!
 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
(திருவள்ளுவர்திருக்குறள் 394)
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைஅகரமுதல

Saturday, June 29, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170
(குறள்நெறி) 
  1. நற்குணம் நீங்காமல் காத்திடப் பொறுமையைக் காத்திடு!.
  2. பொறுத்தவரைப் பொன்போல் போற்று!
  3. ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்து என்றும் புகழ் பெறு!
  4. பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே!
  5. செருக்கினை வெல்ல பொறு!
  6. துறவியினும் தூயராகத் தீச்சொல் தாங்கு!
  7. தீச்சொல் பொறு!
  8. அழுக்காறு இன்மையை ஒழுக்காறு ஆகக் கொள்!
  9. இணையற்று வாழ அழுக்காறு இன்றி இரு!
  10. அறன் ஆக்கம்  வேண்டுமெனின், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாதே!  
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, June 18, 2019

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்


ஒரே நாடுஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை   அழிக்கும்ஒரே மதத்திற்கான பாதை
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஆனி 04 / சூன் 19) நடை பெறுகிறது. இது பா.ச.க.வின் புதிய திட்டம் அல்ல. அதன் முந்தைய ஆட்சியிலேயே 2021 வரை நடக்க வேண்டிய மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை இவ்வாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து  நடத்த முயன்றது. இப்பொழுது தன் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் தொடக்கததிலேயே இதற்கான முயற்சியில் இறங்கி யுள்ளது.
ஒரே தேர்தல் என்பதற்காகச் பல சட்டமன்றங்களையும் ஆட்சிகளையும்  கலைக்க வேண்டி இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தங்களின்காலம் முடியும் முன்னரே அழிக்கப்படுவது மக்களாட்சிக்கு எதிரானதல்லவா?
வாதத்திற்காக நாடாளுமன்றம், அனைத்துச் சட்டமன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுதுதான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததால் அனைத்துச் சட்டமன்றங்களுக்கும் ஒருசேரத் தேர்தல் நடத்துவதாகக் கொள்வோம். அப்படியானால் ஆட்சியில் இருக்கும் அரசுகளையும் பொறுப்பில் இருக்கும் சட்டமன்றங்களையும் தேர்தலுக்காகக் கலைப்பது என்பது மக்களாட்சியைப் படுகொலைசெய்வதாகத்தானே பொருளாகும்?  இப்படுகொலை தேவைதானா?
இப்படுகாலை குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தேர்தல் நடந்து முடித்துவிட்டதாகக் கொள்வோம். சில மாநிலங்களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் வரலாம். தனக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி அமைக்கும் வல்லமை கொண்டது சூது நிறை பா.ச.க. இது போன்ற சூழலில் மாநில அரசு கலையும் நிலை வரலாம்பல்வேறுமாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் வரும் பொழுது வெவ்வேறுநாள்களில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம வரத்தானே செய்யும். அப்பொழுது நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகும் அல்லவா?
இதனை மறுதலையாகவும் சிந்தித்துப் பார்க்கலாம். நாடாளுமன்றச் சூழல் மாறி மத்திய ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டு எக்கட்சியும் ஆட்சி அமைக்கமுடியாவிட்டால் மத்தியில் தேர்தல் நடத்தித்தானே தீர வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருப்பது என்றால் மத்திய மக்களாட்சி என்பது அடிபட்டுத்தானே போகும்.
அப்படி எல்லாம் இல்லை. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டால் 5 ஆண்டு முழுமையும் பொறுப்பில் இருக்கும் வரை சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்கின்றனர் சிலர்.  என்ன தவறு செய்தாலும் எவ்வளவு ஊழலில் திளைத்தாலும் ஆட்சி நிலைத்துத்தான் இருக்கும் என்றால் ஆட்சியாளர்களுக்குத் தவறு செய்வதில் எந்த அச்சமும் இருக்காதே இதனால் மக்கள் நலன்கள்தானே பாதிக்கப்படும்.
சில செலவுகளைச் செய்துதான் ஆகவேண்டும். அவற்றில் ஒன்றுதான் தேர்தல் செலவு. எனவே, சிக்கனம் என்ற பெயரில் மக்களாட்சிக்கு ஊறு நேரும் வகையில் செயல்படக்கூடாது என நாளைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.
பா...வும் பேராயக்(காங்.) கட்சிக்கும் தேசிய இன அழிப்பில் ஒன்றுக்குஒன்று சளைத்ததாகக் கூற இயலாது. பேராயக்கட்சிக்கும் ஒரே நாடு  ஒரே கோட்பாடு என்ற கொள்கைதான். எதிர்க்கட்சியாக இருப்பதால், பா.ச.க.வை எதிர்ப்பதற்காகச் சில கருத்துகளைக் கூறினாலும் அடிப்படையில் அதற்கு இணையான செயல்பாடு கொண்டதுதான். 1967இற்கு முந்தைய அதன் நிலைப்பாடு குறித்துத் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் முன்பு குறிப்பிட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.
 பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சிஒரே மொழிஒரே மதம்ஒரே இனம் எனக்கொள்ளவைத்துப் பலமொழிகளையும்இனங்களையும்இந்து ஆட்சி எனப்பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுறவேண்டியுள்ளது.
 இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில்உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில் கொள்ளவேண்டியன.”
குறள்நெறி (மலர்2 : இதழ்22): கார்த்திகை 16,1997 : 1.12.65
என்றார் அவர்.
இவற்றின் அடிப்படையில்தான் பா.ச.க. ஒரே தேர்தல் எனப் பிதற்றி வருகிறது.
ஒரே மொழி எனச் சமற்கிருதத் திணிப்பில்  அசையா உறுதியுடன் நிற்கிறது பா.ச.க. ஒரே கல்வி என்று சொல்லித்தான் பொதுநுழைவுத் தேர்வுகளைப் (நீட்டு)புகுத்திப் பல உயிர்களைக் காவு கொண்டும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டும் வருகிறது பா.ச.க.
அடுத்து ஒரே வழிபாடுஒரே உடை என்பன போன்ற ஆயுதங்களைக் கைகளில்எடுக்கலாம்.
இதன் தொடர்ச்சியாகத் தன் உள்ளக்கிடக்கையான ஒரே மதம் என்பதைக்கைகளில் எடுக்கும் பா...
நாட்டு மக்களின் நலன்களில் கருத்து செலுத்த  வேண்டும் என்ற பா.ச.க.வின் எண்ணத்தைப் பாராட்டலாம். ஆனால் அதற்காக ஒத்த தன்மை என்றபோர்வையில் பாகுபாட்டை உருவாக்கும் முயற்சிகளை அதுகைவிடவேண்டும். ஒரே தேர்தல் என்பது வாதுரைக்குரிய பொருளே அல்ல என்பதை உணர வேண்டும். அத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.(திருவள்ளுவர், திருக்குறள் 463)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive