Thursday, December 21, 2023

அதிகார வெறி இருப்பின், பாசக ஆளும் மாநில முதல்வராகலாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




அதிகார வெறி இருப்பின், பாசக ஆளும் மாநில முதல்வராகலாமே!

பாசக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் ஆட்டம் அனைவரும் அறிந்ததே! அவர்களை ஆட்டுவிப்பவர்கள் ஒன்றிய அரசின் முதன்மைப் பொறுப்புகளில் இருப்பதை நாமறிவோம். எனவே, தமிழக ஆளுநர் தனியரசு நடத்துவதற்கு அவர்களை மட்டும் குறை கூறிப் பயனிலை. எனினும் பின்னணியில் இருப்பவர்கள் மறைமுகமாகச் செயற்படுவதால் ஆளுநரின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலே அது பின்னணியினரையும் குறிக்கும். எனவே, தமிழ்நாட்டு ஆளுநரை மையப்படுத்தியே இக்கட்டுரை அமைகிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய  தென் மாவட்டங்கள் பெருமழையால், ஊர்களை மூழ்கடிக்கும் வெள்ளப்பெருக்கால் பெரும்பாதிப்பிற்கு உள்ளாயுள்ளன. முதல்வர் மு.க.தாலின் தலைமையிலும் நெறியுரைகளுக்கிணங்கவும் அமைச்சர் பெருமக்களும் பல்துறை அதிகாரிகளும் மீட்புப் பணிகளிலும் துயர் தணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் ஆளுநரின் கடமைகள் யாவை? ஒன்றிய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிற்கு வேண்டிய நிதியுதவியைப் பெற்றுத்தரலாம்; ஒன்றிய அரசின் உதவிகள் கிடைப்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படும் சூழலில், ஆளுநர் கையாளும் வகையில் ஒன்றிய நிதியம் ஒன்றை ஏற்படுத்தவும் அதன் மூலம் உடனடி நிதியுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யலாம்; கொடையுள்ளம் கொண்டவர்களிடம் இருந்து நிதி பெற்றுத் தரலாம்; அதைவிட்டுவிட்டுத் தானே அதிகாரிகள் கூட்டம் நடத்துவது அதிகாரிகளுடன் கலந்து பேசுவது போன்ற செயல்களில்  ஈடுபடுவது அவரது அதிகார வெறியையே காட்டுகிறது.

பல்கலைக்கழகங்களில் தலையிடுவது, அரசின் கல்விக் கொள்கையில் தலையிடுவது, பேரவைத் தீர்மானங்களையும் அரசின் மடல்களையும் கிடப்பில் போடுவது, ஆட்சி அதிகாரத்தில் தலையிடும் வண்ணம்  அதிகார உலா வருவது, மாநில அரசின் தலைமையாக எண்ணிக்கொண்டு கூட்டங்கள் போடுவது, மாநிலத் தன்னாட்சியைச் சிதைப்பது எனப் பல வகைகளில் தன் அதிகாரப் பசியையும் அதிகார வெறியையும் ஆளுநர் வெளிப்படுத்தி வருகிறார். அரசினர், ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், அரசியலார், இதழாளர் எனப் பல தரப்பாரும் அவ்வப்பொழுது இடித்துரைத்து வந்தாலும் செவி மடுப்பதில்லை. அதன் தொடர்ச்சியான உச்சக்கட்ட நிலைப்பாடுதான் போட்டி அரசாங்கம் நடத்துவதுபோல் தானே தனியாகக் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது.

ஆளுநர் இரா.ந.இரவி, 19.12.2023 அன்று மத்திய அரசுத்துறைகள்,  பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு துயர் தணிப்புப்  பணிகள் தொடர்பில் சென்னை, ஆளுநர் மாளிகையில்  ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

“இந்தியப் படைத்துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப்படை, தேசியப் பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), தொடரித் துறை,  இந்திய தொடர்பாடல் கழக நிறுவனம்(பிஎசுஎன்எல்), இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமானப் போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ), இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் சார்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு சார்பாளரும் வரவில்லை.” என ஆளுநர் மாளிகைச் செயலகம் அறிவித்துள்ளது. ஒன்றிய அதிகாரிகள் அச்சத்தில் பங்கேற்றிருப்பர்.

ஒன்றிய அரசு அதிகாரிகளாயினும் மாநிலம் தொடர்பான சிக்கல்களில் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் செயற்படவேண்டும் என்பதை ஆளுநர் மறந்தாலும் இவர்கள் மறக்கக் கூடாது.

ஆளுநரின் கெடுமதி செயல்கள் குறித்து முன்னரே, “இந்தியக் கூட்டரசில் ஆளுநர் என்பது பொம்மைப்பதவியே. எனினும் நெருக்கடி நேரத்தில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படும் அதிகாரம் படைத்தவராக மாறி விடுகிறார் .ஆனால், அதற்காக இயல்பான நேரங்களில் அவர் தான்தான் தலைவர் என்று அரசின் அன்றாடப் பணிகளில் குறுக்கிடுவதோ அத்து மீறி அதிகாரம் செலுத்த முற்படுவதோ மக்களாட்சிக்குத் தீமைகளையே விளைவிக்கும். ஆனால், பா.ச.க.ஆட்சியில், பா.ச.க ஆட்சி செய்யா மாநிலங்களில் ஆளுநர்கள் அரசின் பணிகளில் குறுக்கிட்டு முதல்வருடன் முரண்பட நடந்து கொண்டு, ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படுவதைச் சிதைக்கிறார்கள்.  ஆனால், ஆளுநர்கள் தன் விருப்பில் செய்வன அல்ல இவை. ஒன்றிய அரசின் உந்துதலில் பா.ச.க ஆட்சியை மாநிலங்களில் மலரச்செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே செய்கின்றனர். உண்மையில், மாநில அரசுகளை அடிமைப்படுத்த நினைக்கும் இத்தகைய ஆளுநர்கள் ஒன்றிய அரசின் அடிமையரே!” எனக் குறிப்பிட்டிருந்தோம். (செய்தக்க செய்யா ஆளுநர், அகரமுதல நாள் 05.05.2022)

அரசியல் யாப்பு விதி 158இன்படி, ஆளுநர் நாடாளுமன்ற எந்த அவையிலும் அல்லது சட்ட மன்றங்களின் எந்த அவையிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. இவ்வாறு சொல்வதன் காரணம், மக்கள் சார்பாளர்களின் பணிகளில் ஆளுநர் குறுக்கிடக் கூடாது என்பதற்காகத்தான். அவ்வாறிருக்க, ஆளுநர், சட்டமன்றத் தீர்மானங்களைப் புறக்கணிப்பது, மக்கள் சார்பாளர்களால் உருவான அமைச்சரவையை ஒதுக்கித் தள்ளும் வகையில் செயற்படுவது போன்று செயற்படுவது சிறிதும் முறையல்லவே.

உச்சநீதி மன்றமும் ஆளுநர்களைக் கொட்டியுள்ளது. இருப்பினும் “நான் சொல்வதே விதி, நான்  செய்வதே சட்டம்” எனத் தான்தோன்றித் தனம் எனக் கூறும் வகையில் நடந்து கொள்வது தொடர்கிறது.

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் (திருக்குறள் 346)

என்னும் திருவள்ளுவரின் திரு மொழியை அவருக்கு அணுக்கமாக இருப்போர் அவருக்குச் சொன்னால் நன்று.

ஆளுநர்கள் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே தூதர்களாக இருக்க வேண்டும்; தோழர்களாக நடந்து கொள்ள வேண்டும்; மக்கள் நலனில் கருத்து செலுத்துபவர்காளகத் திகழ வேண்டும்; மாநில அரசை மதிப்பவராகச் செயற்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஒன்றிய அரசின் எடுபிடிகளாகப் பணியாற்றக் கூடாது; ஒன்றிய அரசின் ஏவலர்களாக நடந்து கொள்ளக் கூடாது; மாநில அரசை ஆட்டிப் படைப்பவர்களாக அகங்காரம் கொள்ளக் கூடாது.

ஆளுநர்கள் , மாநில அரசுகள் கேட்கும்போதோ இன்றியமையா நேர்வுகளிலோ அறிவுரைஞர்களாகக் கருத்துகள் தெரிவிக்க வேண்டும் நெறியுரைஞர்களாக ஆற்றுப்படுத்த வேண்டும் உற்றுழி உதவும் நண்பர்களாக விளங்க வேண்டும்.

இரா.சே.ச. ஈடுபாட்டாளர்களை அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்க பாசக விரும்பினால், பாசக ஆளும் மாநிலங்களில் அவர்களை முதல்வர்களாக ஆக்கலாம். மாறாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பிப் போட்டி முதல்வர்போல் செயற்படச் செய்யக் கூடாது.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்.   (திருக்குறள் – 977)

 சிறப்பான தன்மை அதற்குப் பொருந்தாச் சிறியோரிடம் சேர்ந்தால் அவர்களைச் செருக்கு கொள்ளச் செய்யும் என்கிறார் திருவள்ளுவர்.

நமக்கு இது புரிகிறது. ஆனால், சிறப்பான தன்மையை அடைந்தவர்களுக்கு இது புரியவில்லையே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல 6.12.2054 +++ 22.12.2023

Wednesday, December 20, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 71-80

71. Abbreviateசுருக்கு  

நூல் முதலிய எதையும் சுருக்குதல், எனினும் குறிப்பாக ஒரு தொடரைச் சுருக்கித் தலைப்பெழுத்துச் சொற்களால் குறிப்பிடல்.திருவள்ளுவர் ஆண்டு என்பதைத் தி.ஆ. எனக் குறிப்பிடல்போல்.  

காண்க: Abbreviation
72. Abbreviation          குறுக்கம்  
குறியீடு
சுருக்கக் குறியீடு
குறுங்குறி
குறிப்பெழுத்து
சொல்குறுக்கம்
சுருக்கீடு  
ஒரு சொல் அல்லது தொடரின் சுருக்கம்.
திருவள்ளுவருக்குப் பின் என்பதைத் தி.பி.என்பதுபோல் இந்தியத் தண்டிப்புச் சட்டம் என்பதை இ.த.ச. என்பதுபோல் பெரும்பாலும் எழுத்துகளின் சேர்க்கையாக இருக்கலாம்.   சொல்லின் முதல் எழுத்தாகவும் அல்லது பகுதி எழுத்துகளாகவும் இருக்கலாம். சான்றாக மருத்துவர் என்பதை மரு. என்றும் பொறியாளர் என்பதைப் பொறி. என்றும் சுருக்கிக் கூறுவது. ஆங்கில எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமென்றால் abbreviation என்னும் சொல்லே,abbr., abbrv.,  abbrev. என்று குறுக்கப்படுவதைக் கூறலாம்.  

சுருக்கம் என்னும் பொருள் கொண்ட brevis என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே abbreviation.   பிரிவு 98 , இந்தியச்சான்று சட்டம்
73. Abdicateகைவிடு

துற, நீக்கு (வி.)  

காண்க: Abdication
74. Abdication  துறத்தல் (வி.)    

உரிமைத் துறப்பு           பதவி துறத்தல்      ஆட்சித்துறப்பு
கைவிடு, துற, நீக்கு

பதவி அல்லது பொறுப்பைத் துறத்தலைக் குறிக்கிறது.   இறையாண்மை மிக்க ஆட்சித்தலைமையை – அரியாசனத்தை வேண்டாம் என உதறித் தள்ளுவதைக் குறிக்கிறது.  

ஒருவர் அல்லது அரசின் கிளை அலுவலகம், சட்டப்படிக் கொண்டுள்ள தமக்குரிய உரிமைகள், நம்பிக்கை, இறையாண்மை, கடமைகள், நயப்புரிமைகள், முன்னுரிமைகள் முதலியவற்றை விட்டுவிடல் அல்லது கைவிடல்.  

ஓர் அதிகாரி, தன் அலுவலகத்தின் சலுகைகள், முன்னுரிமைகள், வாய்ப்பு வசதிகளைக் கைவிடுவதையும் குறிக்கிறது.

அரசோ அதிகாரியோ பொறுப்புகள் அல்லது கடமைகளை நிறைவேற்றத் தவறுவதைக் குறிக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.   

உரிமைத் துறப்பு என்பது. தமிழ்த்தேசியப் பெரும்புலவர் இளங்கோ அடிகள், ஆட்சித் துறப்பிற்காக இல்வாழ்க்கையையே துறந்து துறவியானது போன்றது.

பதவித் துறப்பு என்பது பெருந்தலைவர் காமராசர் மூத்த தலைவர்கள் கட்சியில் கருத்து செலுத்துவதற்காக ஆட்சிப்பொறுப்புகளைத் துறக்க வேண்டும் எனக் கூறி முன் எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டு  முதல்வர் பதவியைத் துறந்தது போன்றது.  

abdicātiō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் துறவு.
75. Abdomenஅடி வயிறு  

அகடு,   நடுவிடம், உள்ளிடம் எனவும் பொருள்கள்.  

வாயின் இறுதிப்பகுதி வயிறு எனப்படுகிறது.  

வயிறு என்பது பாலூட்டிகளின் உடலில் நெஞ்சிற்கும், இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதியாகவும், கணுக்காலிகள் போன்ற முதுகெலும்பிலிகளில் உடலின் முடிவுப் பகுதியில் நெஞ்சுப் பகுதிக்கு (thorax) அல்லது தலைநெஞ்சுப் பகுதிக்குப் (cephalothorax) பின்னாகக் காணப்படும் துண்டங்களாலான பகுதியையும் குறிக்கும்(விக்கிபீடியா).
76. Abductஆட்கடத்து  

காண்க: Abduction  
77. Abducting and kidnapping  வன்னகற்றலும் கடத்திச் செல்லலும்  

காண்க: Abduction  

இளவரை அல்லது மனநலமற்றவரைச் சட்டபூர்வப்  பாதுகாவலரிடமிருந்து பறிப்பது அல்லது இந்திய எல்லைக்கு அப்பால் அழைத்துச் செல்வது கடத்தல்(kidnapping) எனப்படுகிறது.   இந்திய எல்லைக்கு அப்பால் அழைத்துச் செல்வது எனச் சட்ட விளக்கங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிற்குள் கடத்திச் சென்றால் கடத்தல் ஆகாதா? பாதுகாவலர் பாதுகாப்பிலிருந்து உரிய இசைவின்றியும் நெறிமுறையின்றியும் வேற்றிடம் அழைத்துச் செல்வது கடத்தல் என்பதே சரியாக உள்ளது.   ஆதலின் கடத்தல் என்பதை , இ.த.ச. பிரிவு 359இன்படி , இந்திய எல்லைக்கு வெளியே கடத்திச் செல்லுதல், இந்தியாவிற்குள் பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கடததிச் செல்லுதல் என இருவகையாகக் கூறுவதே சரியாகும்.  

வலிமையைப் பயன்படுத்தி, அல்லது வஞ்சக வழியில் கட்டாயப்படுத்தி கொண்டு செல்லலே வன்னகற்றல் (Abduction)எனப்படுகிறது.  

Abduction, Kidnapping என இரண்டையுமே கடத்தல் என்பதால் வேறுபடுத்த வேண்டியுள்ளது. Abduction என்பதை ஆட்கடத்தல் என்றால் Kidnapping  என்பதைப் பொருள்கடத்தல் என்று மட்டுமே பொருள் கொள்ள நேரிடும்.  எனவே, Abduction என்பதை வன்னகற்றல் எனலாம்.
78. Abduction  வன்னகற்றல்  

வன்முறையில் கடத்துதல் கடத்திச் செல்லுதல் ; வலக்காரமாக/பலவந்தமாக/(பலாத்துகாரமாக) எடுத்துச் செல்லுதல்;  பிரித்தெடுத்தல்                    

     ஆண்/பெண்/சிறுவன்/சிறுமி  என ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரை அவர் அல்லது அவர்கள் இருக்கும் அல்லது விரும்பும் இடத்திலிருந்து வேறிடத்திற்குக் கட்டாயமாக அழைத்துச் செல்வது, வன்முறை, அச்சுறுத்தல், ஏமாற்றுதல் மூலம் இடம் பெயர வைப்பது கடத்தலாகும்.

ஒருவர் தப்பியோடுவதையோ அவரைப் பிறர் மீட்பதையோ தடுப்பதற்காக அவரைக் கட்டுப்படுத்துவது, மறைப்பது முதலியனவும் கடத்தலின் ஒரு பகுதியே.   ஒருவரை அல்லது பலரை அல்லது கூட்டத்தினரை அவர்கள் இருக்கும் இடத்திலேயே அடைத்து வைத்து அவர்கள் தொடர்பானவர்கள் அல்லது அரசிடம் மிரட்டி பணம் அல்லது ஆதாயத்தைக் கேட்பதும் கடத்தலே.  

abduco  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அப்பால் கொண்டு செல்லல்.( ab =அப்பால், duco = கொண்டு செல்லல்)
இருக்கும் இடத்திலிருந்து கடத்துவதன் மூலம் அப்பால் கொண்டு செல்வதால் இவ்வாறு குறிப்பிட்டனர்.

அகற்றல் என்றால் ஒருவரை நீங்கச்செய்தல். வன்னகற்றல் என்றால் வன்முறையைப் பயன்படுத்தி மேலே கூறியவாறு உரிய இடத்திலிருந்து வேறிடத்திற்குக் கொண்டு செல்லுதல் எனப்பொருளாகிறது.  

காண்க: Abducting and kidnapping
79. abet          தூண்டுதல்

தூண்டுநர், உடந்தையர், உடந்தையாயிரு; தூண்டிவிடு; ஒத்தாசைபுரி; தீயசெயலுக்குத் துணை புரிதல் /ஆதரவளித்தல்,

தெரிந்தே, உதவி, ஊக்கம், வேண்டுமென்றே,  

உடந்தை(குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 பிரிவு 10  குழந்தைத்திருமண உடந்தையாளருக்கான தண்டனையைக் கூறுகிறது)
ஆதரவு, தீவிரமாக  
குற்றச் செயலுக்கு அல்லது குற்றம் புரிவோர்க்குத்  துணைபுரிதலை அல்லது ஊக்கப்படுத்தலை அல்லது தூண்டுதலைக் குறிக்கிறது. எனவே குற்றஞ்செய்யத் தூண்டி விடுபவர் அல்லது குற்றத் தூண்டிவிடுநர் எனலாம்.  

பழம் பிரெஞ்சு, தொல் செருமன் முதலான வெவ்வேறு மொழிகளில் இடம் பெற்று இடைக்கால ஆங்கிலத்தில் இடம் பெற்ற சொல்.
80.Abetment      உடந்தையாயிருத்தல்  

தூண்டுகை; உடந்தை; ஒத்தாசை ;  தீச் செயலுக்கு உதவுதல் ஆதரவளித்தல்
குற்ற உடந்தை   ஒன்றைச் செய்யுமாறு மற்றொருவரைத் தூண்டுதல். செயல் அல்லது சட்டமுரண் செய்யாமை நேரும் வகையில் மற்றொருவருடன் அல்லது பலருடன் சதி செய்தல். செயலால் அல்லது சட்ட முரணான செய்யாமையால் குற்றச் செயலுக்கு உள்நோக்குடன்  உதவுதல்   தூண்டுதல்
[ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இல் பிரிவு 3(1).(ஆ)]

குற்ற உடந்தை
[கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம் 1976 பிரிவு 20 ](S. 20 BLS(A)A, 1976) [1985 ஆம் ஆண்டின் போதை மருந்துகள் – மனநோய்ப் பொருள்கள் சட்டப் பிரிவு 29]

உடந்தையாயிருத்தல்
(போதை மருந்துகள் – மனநோய்ப் பொருள்கள் சட்டம் 1987 பிரிவு 4/ S.4 M.N. the Commission of Sati (Prevention) Act, 1987)

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, December 17, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 51-60 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 61-70

61. abate in equal proportionசம விகிதத்தில் குறைப்பு  

பங்குகளை முழுமையாகச் செலுத்த இறந்தவர் சொத்துகள் போதுமானவையாக இல்லாவிட்டால் அச்சொத்தின் பயனாளர்களிடம் சரிவிகிதமாகப் பகிர்ந்து குறைத்தல் என்பது போன்று இழப்புகளைச் சரி விகிதத்தில் குறைத்தல்  

மாகாண மாநகர நொடிப்புச் சட்டம் பிரிவு 49.2.
62. Abatement      தணிவு  

அறவு   தள்ளுபடி, விலக்கிவை   நூப்பு, அற்றுப்போதல், குறைப்பு செயலுறுத்தாணையை (ரிட்) அல்லது வழக்கு நடவடிக்கையை நீக்குதல் , தொல்லையை நிறுத்துதல்.

  திரும்பச்செலுத்தப் போதுமான பணம் இல்லாத பொழுது கடனாளிகளுக்கான கொடுப்பனவுகளை விகிதமுறையில் குறைத்தல்

போதுமான பணம் இல்லாதபொழுது விருப்பாவணத்தில் குறிப்பிட்ட தொகையை விகித முறையில் குறைத்தல்.  

“நீரற வறியாக் கரகத்து” (பாரதம் பாடிய பெருந்தேவனார், புறநானூறு 1:12) என்ற அடியில் அறவு என்னும் சொல் நீங்குதல் என்னும் பொருளில் வந்துள்ளது.  

காண்க: Abate
63. Abatement By reason of deathமரணத்தால் தள்ளுபடி  

  குற்றவியல் வழக்கில் குற்றஞ்சாடடப்பட்டவர் இறந்தபின், வழக்கைத் தொடருவது பயனற்றதாகவும் பொருளற்றதாகவும் ஆவதால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.   ஆனால், உரிமை வழக்கில் ஒரு தரப்பினர் இறந்து விட்டால், வழக்கு தொடர்வதற்குரிய உரிமை நீடிப்பின், இறந்தவரின் மரபுரிமையர் அல்லது சட்டச் சார்பாளர் வழக்கினைத் தொடர்ந்து நடத்தலாம்.
64. Abatement of appealமேல்முறையீடு முற்றாதல்  

மேல்முறையீடு அற்றுப்போதல்‌  

மேல்முறையீட்டை வழக்கு உசாவல் முதலான தொடர் நடவடிக்கை யின்றி முடித்து வைத்தல்.  

குற்ற நடைமுறைச்சட்டப் பிரிவு 394 இல் பிரிவு 377 அல்லது பிரிவு 378 இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு மேல் முறையீடும் குற்றம் சாட்டப்பட்டவரின் மரணத்தில் முற்றாக்கப்படும் என்கிறது.
65. Abatement of chargesகட்டணக் குறைப்பு;

கட்டணத் தள்ளுபடி; செலவுக் குறைப்பு  

2. குற்றச் சாட்டுகள் அற்றுப்போதல்; குற்றச் சாட்டுகள் முற்றாதல்; குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தல்.

அறிமுகம்,தொடக்க நாள்,ஆண்டு விழா, காலமுறை ஆண்டு விழா முதலிய சிறப்பு நேர்வின் பொருட்டும் தேங்கிய பொருள்களை விற்பதற்கு அல்லது கூடுதல் விற்பனைக்கு என விளம்பரத்திற்காகவும் கட்டணக் குறைப்பு தரப்படுகின்றது.  

குற்றஞ்சாட்டப்பட்டவர் இறந்த பின் அல்லது முற்றிலும் பொய்வழக்கு என அறிந்த பின் வழக்கில் குற்றச்சாட்டு(கள்) அற்றுப்போனதாக அறிவிக்கப் பெறும்.
66. abatement of nuisance  தொல்லை அகற்றல்  

தொல்லை குறைப்பு   தொல்லையாகக் கண்டறியப்பட்ட ஒன்றை, நீக்குதல் அல்லது அகற்றுதல் அல்லது அழித்தல் அல்லது களைதல்.   இத்தகைய செயல் அமைதியான முறையிலும் வீண் கேடிழைக்காதவகையிலும் இருக்க வேண்டும்.
67. abatement of suitவழக்கறவு; வழக்கறுதல்‌   வழக்கில்லாமை  

குற்றச்சாட்டு(கள்) அற்றுப்போன நேர்வில் வழக்கு அற்றுப்போகிறது.  

வழக்கில் முதன்மைத் தரப்பார் இறந்துபோவதால் அவ்வழக்கு  அற்றுப் போகும்.
68. abatement of taxesவரிக் குறைப்பு  

வரி செலுத்துபவர் செலுத்த வேண்டிய வரித்தொகையில் மேற்கொள்ளப்படும் குறைப்பு.
69. Abator / Abater  களையுநர்  

தொல்லையைக் குறைக்கும் ஒன்று, குறைக்கும் ஓராள் அல்லது பொருள்; ஒரு குடியிருப்பில் குறையும் ஒன்று
70. Abbotமடத் தலைவர்  

மடத்தின் தலைவர்   திருமடத்தந்தை, திருமட முதல்வர், குருமடத்து முதல்வர் என்றும் குறிக்கப் பெறுகிறார்.

மடத்தலைவர் என்றால் அறியாமை மிக்கத் தலைவர் என்று வேடிக்கையாகக் கூறினாலும் அது பொருளன்று. நகைச்சுவையாக ஒன்றைக் கூறுவார்கள். ஒரு சமயத் தலைவர் மற்றொரு சமயத்தலைவரைச் சந்திக்கச் சென்றாராம். அறிவில் ஆதவன்(சூரியன்) எனச்சொல்வதுபோல் வாருங்கள் அறிவில்லாதவனே என்றாராம். தன்னை அறிவில்லாதவன் எனக் கூறுவதால், அவரும் உடன் வணக்கம் மடத்தலைவரே என்றாராம். மடையர்களின் தலைவர் என்று கூறினாலும் மடத்தின் தலைவர் என்பதாகச் சொன்னதாகச் சமாளிக்கலாம் அல்லவா?

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, December 13, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 51 – 60 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 41-50 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 51 – 60

51. Abandonment of a childகுழந்தையைக் கைவிட்டுவிடுகை  

பன்னிரண்டு அகவைக்குக் கீழுள்ள குழந்தையை அதன் பெற்றோர் அல்லது காப்பாளர் அந்தக் குழந்தையை விட்டு முற்றிலுமாக விலகிச்செல்லவேண்டும் என்னும் கருத்துடன் ஓரிடத்தில் விட்டுச்செல்லுகை அல்லது பாதுகாப்பின்றி விடுதல்.

குழந்தையைக் கைவிட்டுவிடுகை (பி.317, இ.த.தொ.ச.)
52. abandonment of copyrightபதிப்புரிமையைக் கைவிடல்    

Copyright என்பது பதிப்புரிமை, தனிப்பயனீட்டுரிமை.   புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடுதவற்கான உரிமை மட்டுமல்ல, ஓவியம்,பாடல், நாடகம், கதை, திரைப்படம் முதலியவற்றை ஆக்கிய மூலவருக்கு அல்லது அவரால் குறிக்கப்பெறும் உரிமைச் சார்பருக்கு அவற்றை அச்சிட்டு வெளியிட்டு விற்பனை செய்யவோ, பாடவோ, ஒலிப்பதிவு செய்யவோ, நடிக்கவோ, திரைப்படமாக்கவோ, இசைத்தட்டு அல்லது ஒலியிழை அல்லது ஒளியியிழை அல்லது வேறு வடிவில் உருவாக்கவோ குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குச் சட்டம் அளிக்கும் தனி யுரிமை.  

அறிஞர்களின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்குகின்றது. இதற்கான பரிவுத்தொகையை பதிப்புரிமையாளருக்குத் தந்துடுகிறது. இதனால் அவர்கள் பதிப்புரிமையத் துறந்தவர்கள் ஆகின்றனர். அத்தகையவர்களின் படைப்புகளை யார் வேண்டுமென்றாலும் எந்த வடிவிலும் பயன்படுத்தலாம், விற்கலாம்.
53. abandonment of pleaவாதுரிமையைக் கைவிடல்  

வாதத்தைக் கைவிடல் என்று குறிப்பதை விட வாதுரிமையைக் கைவிடல் என்பது சரியாக இருக்கும்.  

வழக்காடியின் விளம்புரைக்கு எதிராளி அளிக்கும் மறுமொழி, எதிருரை, எதிர்வாதம், முறையீடு, வேண்டுகை,முதலியவற்றைத் தெரிவிப்பதற்குரிய உரிமையைக் கைவிட்டு விடல்.

குறிப்பிட்ட கால வரம்பிற்குள் எதிருரை அளிக்க வேண்டும் என்ற காலவரம்பிற்குள் எதிருரையை அளிக்காவிட்டால், அது வாதுரிமையைக் கைவிட்டதாகக் கருதப்படும்.
54. abandonment of pollutionமாசுக்கேட்டை அகற்றல்  

ஊர்திப் புகை, மின் குளிரி முதலிய கருவிகள் மூலம் வெளியேறும் மாசுக்கேடு எனப் பலவகையிலும் இயற்கைக்குக் கேடு தரும் கேடுகளால் ஏற்படும் மாசுக்கேடுகளை அகற்றுதல்.
55. abandonment of revenueவருவாயைக் கைவிடல்

  நிலம் அல்லது சொத்து அல்லது வருவாய் தரக்கூடிய ஒன்றின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயின் பயன்பாட்டுரிமையை விட்டு விடல்.
56.abandonment of rightஉரிமை துறத்தல்  

உரிமையைக் கைவிடுதல் பற்றினை அல்லது உரிமை கோரலை அல்லது உரிமை வழக்கு நடவடிக்கைகளை அல்லது மேல்முறையீட்டினை அல்லது தனியுரிமையை அல்லது உடைமையை அல்லது உரிமையைக் கைவிடுதல் அல்லது துறத்தல்.  
வேண்டுமென்றேயும் நிலையாகவும்  சொத்து, பொதுப்பாதை உரிமை, வளாகங்கள், ஒப்பந்த உரிமைகள், வாழ்க்கைத் துணையை அல்லது/உடன் குழந்தைகளை  விட்டு விடுதல், ஒப்படைத்தல் அல்லது கை விடல்.    
57.Abandonment, materialகைவிடப்பட்ட பொருள்

  அகற்றப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட அல்லது தீக்கிரையாக்கப்பட்ட அல்லது இல்லாது ஆக்கப்படுகின்ற அல்லது இவற்றுக்கு முன் இந்நோக்கத்திற்காகத் திரட்டப்பட்ட, சேமிக்கப்பட்ட பொருள்கள் கைவிடப்பட்ட பொருள்கள் ஆகும்.
58. Abandonment, moralகடப்பாட்டு உரிமையைக் கைவிடல்  

moral – நல்லொழுக்கம் என நேர் பொருளாக நோக்கக் கூடாது. பேச்சு வழக்கில் தார்மீக உரிமை என்று குறிக்கின்றோம் அல்லவா அத்தகைய கடப்பாட்டு உரிமை எனல் வேண்டும்.

நன்னெறி சார் செயல் என்றும் குறிப்பிடலாம்.
59. abatable nuisanceகுறைக்கக்கூடிய ஒரு தொல்லை  

அடக்கப்பட்ட அல்லது தணிக்கப்பட்ட அல்லது தீங்கற்ற வகையில் குறைகளைந்து தொல்லைகளைக் குறைத்தல்.
60. Abate                  தணி    

அருகியற்றுப்போ; அற்றுப்போ; அற்றுப்போதல்; ஆறப்போடுதல்; தாழ்த்து ; குறை ; தள்ளுபடிசெய் ; விலக்கிவை . குறைக்க, ஒரு வழக்கை முடிக்க, மறுக்க அல்லது  இடைநிறுத்த. தவிர்க்கக்கூடிய. இறுதி ஆவணத்தில் குறைத்தல் அல்லது மறு திட்டமிடல்  

abate என்னும் இத்தாலியச் சொல்லில் இருந்து கடன் வாங்கிய சொல்.

பிரிவு 6(1), நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நல நிதி (நீக்கறவு) சட்டம், 1986  

காண்க: Abatement

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, December 11, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 41-50 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 31 –40 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

41. Abandonedகைவிடப்பட்ட  

கைவிடப்பட்ட குடும்ப உறுப்பினர், கைவிடப்பட்ட சொத்து, கைவிடப்பட்ட ஏரி, கைவிடப்பட்ட சுரங்கம், கைவிடப்பட்ட பணிகள் என்பன போன்று பாெறுப்பைத் துறக்கும் நிலை.
42. Abandoned childகைவிடப்பட்ட குழந்தை  

பெற்றோர்/உறவினர்/பாதுகாவலர்/பேணுநர் இன்றி விடப்படும் குழந்தை.  

அனாதை/உறவிலி/ஏதிலி எனக் குழந்தை மீது அவமுத்திரை குத்தக்கூடாது. எனவே, கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை அல்லது கேட்பாரற்ற குழந்தை எனக் குறிப்பிடுகின்றனர்.  

இந்தியத் தண்டிப்புச்சட்டம், இந்து மகவேற்பு பேணுகைச் சட்டம் 1956 ஆகியன கைவிடப்பட்ட குழந்தை தொடர்பாகக் கூறுகின்றன.  

குழந்தையைக் கைவிடுவது இந்தியத் தண்டிப்புச் சட்டத்தின் 317ஆவது பிரிவின் கீழ்த் தண்டனைக்குரியது.  

காண்க : Abandonment of a child
43. abandoned goodsகைவிடப்பட்ட பண்டங்கள்  

கைவிடப்பட்ட பொருள்கள் என்பன பெறப்படாத பொருள்களாகும்.  

சரக்கு பெறவேண்டியவரைக் கண்டறிய முடியாச் சூழலில் அல்லது சரக்கு பெறுவதற்குரியவர் அதனை ஏற்காத அல்லது மறுத்த சூழலில் அல்லது சரக்ககத்தில் சட்ட பூர்வமாக வைத்திருக்கக்கூடிய கால வரம்பு கடந்த பின்பும் யாரும் பொருள்களை எடுத்துச்செல்ல முன் வராமையால் இருக்கக்கூடிய பொருள்கள். சுருக்கமாக, உரியவரால் எவ்வகைத் தகவலுமின்றி ஏற்கப்படாதவை கைவிடப்பட்ட பண்டங்களாகும் எனலாம்.  

ஊர்திக் காப்பு நிறுத்திடத்தில் குறிப்பிட்ட கால அளவு கடந்த பின்னும் எடுத்துச் செல்லப்படாத வற்றிற்கும் இது பொருந்தும்.

சுங்கத்துறையில் பிரிவு 48(1) / 61இன்படிக் கோரப்படாத அல்லது எடுக்கப்பட்ட பொருள்களாகும்.

கெட்டுவிடக்கூடிய உணவுப்பொருள் அல்லது விரைந்து அழியக்கூடிய பொருள்கள் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் இருந்தாலும், அழிநிலை வரும் பொழுது கைவிடப்பட்ட பண்டமாகக் கருதி நடவடிக்கை எடுக்கலாம்.   சில நேரங்களில் கவனக் குறைவின் காரணமாகவோ குறித்த அளவிற்குமேல் பொருள்களை எடுத்துச் செல்ல இயலாமையாலோ சில பண்டங்கள் விடப்பட்டிருக்கலாம். இவற்றைக் கைவிடப்பட்ட பண்டங்கள் எனக் கருதக்கூடாது.
44. abandoned groundsகைவிடப்பட்ட நிலங்கள்  

கைவிடப்பட்ட நிலங்கள் என்பன கைவிடப்பட்ட மனையிடங்கள், திடல்கள் ஆகியவற்றையும் குறிக்கும்.

பயன்படுத்தப்படாமல் அல்லது செப்பனிடாமல் உரியவர் கவனிப்பின்றிப் பாழடைந்த நிலைக்கு ஆளாகும் சுற்றுப்புறத்திற்கும் பொதுமக்களுக்கும் கேடு அல்லது இடர் விளைவிக்கும் நிலங்கள் கைவிடப்பட்ட நிலங்களாகும்
45. abandoned propertyகைவிடப்பட்ட சொத்து;  

நிலையாக ஒரு சொத்தை அல்லது உடைமையை விட்டுவிட்டுச்செல்லுதல்.  

வாடகைதாரர் அல்லது குத்தகைதாரர் குடியிருந்த வீட்டை அல்லது பயன்படுத்திய நிலத்தை விட்டுச் செல்லும் பொழுது தனக்குரியவற்றைக் கைவிட்டுவிட்டுச் செல்லுதல்.

தன் கட்டுப்பாட்டில் உள்ள உரிமைப் பொருளைக் குறிப்பிட்ட இடத்தைவிட்டுப் பெயரும் பொழுது தொடர்பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்லாமல் அல்லது எடுத்துச் செல்ல இயலாமல் உரிமையைக் கைவிடுதல்.

போர், கலவரம், அல்லது புயல், வெள்ளம், நில நடுக்கம், கடல்கோள் முதலான இயற்கை இடர் போன்ற சூழலில் ஒரு நகரம் அல்லது இடம் அல்லது ஒரு நாட்டைவிட்டுப் புலம் பெயர்வோர் தமக்குரிய உடைமைகளைக் கொண்டு செல்ல இயலாமல் கைவிடப்பட்ட சொத்து.  

ஆதனம் என அகராதி ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளது. நீளுதல் என்னும் பொருளில் வரும் பொழுது இது தமிழ்ச்சொல்லே. ஆனால், கைவிடப்பட்ட சொத்து என்னும் பொருளில் தமிழ்ச்சொல்லன்று.
46. Abandoneeகைவிடப்பட்டவர்   வாழ்க்கைத் துணைவரால் கைவிடப்பட்டவர், பெற்றோரால் கைவிடப்பட்டவர், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர் எனப் பொறுப்புகளைக் கைவிடுபவர்களால் ஆதரவற்றவர்களாக ஆகிறவர்கள்.
47. Abandoningகைவிடல்   தன் பொறுப்பிலுள்ள ஒன்றின் மீதான பொறுப்பைத் துறத்தல்.
48. Abandoning childகுழந்தையைக் கைவிடல்   தன் பொறுப்பிலுள்ள குழந்தை மீதான பொறுப்பைத் துறத்தல்.   காண்க: Abandonment of a child
49. Abandoning without reasonable causeதக்கக் காரணமின்றிக் கைவிடுதல்   பிரிந்து செல்வது என்பது மற்ற துணையின் அனுமதியின்றியும் சரியான காரணமின்றியும் கைவிடுவது பிரிந்து செல்வதாகும். இது திருமணக் கடமைகளில் இருந்து விலகுவதாகும். முன்பு, பிரிந்து செல்வது நீதித்துறை பிரிவிற்கான ஒரு காரணமாக மட்டுமே இருந்தது. ஆனால் 1976 இல் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இதனைத் திருமண விலக்கிற்கான காரணமாகவும் மாற்றியது.   2014இல் மும்பை நீதிமன்றம், சீமா பட்டீல் வழக்கில், தக்கக் காரணமின்றித் துணையைப் பிரிவது கொடுமை என்றும் மணவிலக்கிற்குத் தக்கக் காரணம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
50. Abandonment  கைவிடுகை  

கைவிடுதல்,   விடுகை,  விட்டு விடுகை, துறப்பு   திட்டத்தை அல்லது செயலைத் தொடராமல் விட்டு விடுதலைக் குறிக்கும்.   உரிமை கோரல், உரிமை வழக்கு நடவடிக்கைகள், மேல் முறையீடு, உடைமை, வட்டி,  வருவாய் ஆகியவற்றின் மீதுள்ள உரிமையைக் கைவிடல்  அல்லது மீள் கோரல் இல்லை என்ற நிலைப்பாட்டில் முற்றிலுமாக உரிமையைக் கைவிடல்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive