Saturday, March 5, 2011

thamizh views about sun - andre' sonnaargal 35 :அன்றே சொன்னார்கள்- கதிரவன்

>>அன்றே சொன்னார்கள்35


கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர்

                                                                                                                

natpu 
சூரியன் அல்லது ஞாயிறு ஒரு விண்மீனே! சூரியனின் கிரேக்கப் பெயர் அப்பல்லோ என்பதாகும். கிரேக்கத் தொன்மக் கதையின்படி லெட்டோ (Leto)வின் உறவால் சீயசு (Zeus) தாய் ஆகிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள இடம் தேடி அலைந்து இறுதியில் கிரேக்கத்தில் உள்ள தீவில் (தெலோசு : Delos) அப்பல்லோவைப் பெற்றெடுக்கிறாள். சப்பான், சிரியன் முதலான  சில நாடுகளில் சூரியன் பெண் கடவுளாகக் கருதப்படுகிறது. சூரியக் கடவுளின் பெயர் சப்பானில் அமத்தெரசு (Amaterasu) ;  சிரியாவில்  அரிண்ணா (Arinna) எனப்படும்.

ஞாயிறு என்பது, கதிரவன், பகலவன், செங்கதிரோன், பரிதி, வெங்கதிரோன் முதலிய பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. பூமியை விட இது பன்மடங்கு பெரியது. பூமியிலிருந்து ஏறத்தாழ 15 கோடி புதுக்கல் தொலைவு உள்ளது. இதைச் சுற்றி 9 கோள்கள் உள்ளன. ஞாயிற்றிற்குத் தமிழறிஞர்கள் சூட்டிய பெயர்கள் அதன் அறிவியல் தன்மைகளில் அமைந்தவையே!

‘சுரீர்’ என வெயில் அடிப்பதாகக் கூறுவோம். கடும்வெயில் அடிக்கும் பாதை, ‘சுரம்’ எனப்படும். இவை போல் ‘சுர்’ என்னும் வேர்ச்சொல்லின் அடிப்படையில், அனலாய்த் திகழும் விண்மீன் ‘சூரியன்’ எனத் தமிழில் கூறப்படுகிறது.
கதிரை உடையது கதிரவன்; வெம்மையான கதிரை உடையது வெங்கதிரோன்; செந்நிறக் கதிரை உடையது செங்கதிரோன்; வட்டமாக அமைந்து சுழல்வதால் பரிதி; பகற்பொழுதை உண்டாக்குவது பகலவன்; கனலாய்த் திகழ்வதால் ‘கனலி’ என்று பலவகைகளில் சூரியன் அழைக்கப் பெறும்.

‘எல்’ என்றால் ஒளி எனப்பொருள். ஒளிமிக்க இவ்விண்மீன் எல், எல்லி, எல்லவன், எல்லை என்று கூறுப்படும்.‘என்றூழ்’ என்பது சூரியனின் மறுபெயராகும். சூரியன் ஏற்படுத்தும் கடும் வெயில் ‘எறிப்பு’ எனப்படும்.  புவிப்பிழம்பு பிரிவதற்கு முன் ஆதியாய் இருந்தது என்னும் பொருளில் ஆதவன் எனச் சூரியனை அழைப்பது நம் தமிழ் முன்னோர்களின் அறிவியல் அறிவை நன்கு உணர்த்துகிறது.

     நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம் (அகநானூறு 31: 1)
என்னும் வரிகளில் நெருப்பு என்று சொல்லுமாறு செந்நிறமாகக் காணப்படும் வெப்பம் விளங்கும் ஞாயிற்று மண்டிலம் புலவர் மாமூலனாரால் விளக்கப்பட்டுள்ளது.

பின்வருவன ஞாயிற்று மண்டிலத்தையும் ஞாயிற்றின் தன்மையையும் குறிப்பிடுன்றன.

      விரிந்த பரப்பு உடையது ஞாயிற்று மண்டிலம்:
           மலர் வாய் மண்டிலம் (புறநானூறு:175:9)
     மிகுதியான இயக்கப் பரப்பு உடையது ஞாயிற்று மண்டிலம்:
         வீங்கு செலல் மண்டிலம் (நெடுநல்வாடை:161:45)
    ஞாயிற்று மண்டிலம் தேய்தல் இல்லாதது:
         தேயா மண்டிலம் (பரிபாடல்:17:32)
   சுடர் உடையது ஞாயிற்று மண்டிலம்
        சுடர் மண்டிலம் (அகநானூறு: 367:1)
   சுடர் ஒளி உடையது ஞாயிற்று மண்டிலம்:
natpu  
           சுடர் கெழு மண்டிலம் (அகநானூறு: 378:14)
   அழகிய வட்டமான வடிவம் கொண்டது ஞாயிறு:
            பருதிஅம் செல்வன் (கலித்தொகை: 26:2; அகநானூறு: 360:2)
  மாசில்லாதது ஞாயிற்று மண்டிலம்
            மைஅறு மண்டிலம் (கலித்தொகை:141:12)
  ஞாயிறு தன்னுடைய பலவாகிய கதிர்களைப் பரப்பிப் பல்வேறு மாண்புகளுடைய பகற்பொழுதைத் தரும்:
        பல்மான் எல்லை தருநன் பல்கதிர்பரப்பி
                                     (பொருநராற்றுப்படை: 232-233)
  ஞாயிறு விரிந்து செல்லும் கதிர்களை உடையது:
      விரிகதிர் ஞாயிறு (புறநாநூறு:228:8)
  ஞாயிறு சுடுகின்ற கதிர்களை உடையது:
     காய்சினத்த கதிர்ச் செல்வன் (பட்டினப்பாலை:122)
    தெறுகதிர்க் கனலி (புறநானூறு: 43:2; 397:24)
வெம்மை தருகின்ற   கதிர்களை உடையது ஞாயிறு:
    வெங்கதிர்க்கனலி (புறநானூறு:41.6)
ஒளிவீசும் கதிர்களை உடையது:   
    அலங்குகதிர்க் கனலி (புறநானூறு: 35.6)
பசுமை நீங்கிக்  காயும் வகையில் நிலத்தைப் பிளக்கச் செய்யும் தீயைப் போன்ற கதிர்களை உடையது ஞாயிறு:
     நிலம் பக
    அழல்போல் வெங்கதிர் பைதுஅறத் தெறுதலின்          
                                                                      (அகநானூறு:1:9-10)
அச்சம் தரும் ஞாயிற்றின் ஒளிமிகுந்த கதிர் (கடல் நீரை மொண்டு சென்று) மழை பெய்விக்கும்:
     உருகெழு ஞாயிற்று ஒண்கதிர்
     . . . . . .  . . . .    .....  ....
     . . . .  . . . .  துளிசொரிந்தாங்கு                                  
                                      (புறநானூறு:160:1-3)
   எல்லாராலும் விரும்பப்படும் வெப்பத்தைத் தரும் ஞாயிறு
            வெவ்வெள் செல்வன் (பொருநராற்றுப்படை:136)
natpu
      வெப்பத்தால் அச்சுறுத்தும் கனலையுடையது ஞாயிறு
ஞாயிறு இருளை நீக்கும்:
         இருள் நீக்கும் சுடர்                                          (கலி:100:11)
   இருளை நீக்கிப் பகலை உண்டாக்குவதற்காக எழுவது ஞாயிறு:
       பாய்இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரு
      ஞாயிறு ..........                              .( மலைபடுகடாம் 84-85)
 ஞாயிற்று மண்டிலம் நகரும் அறிவியல் உண்மையையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண்மழை
  அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும்
என்பது சிலப்பதிகாரம். (14:104-105)
ஞாயிறு தென்திசை நோக்கி நகரும் காலங்கள்:
      கார்காலம், கூதிர் காலம், முன்பனிக்காலம் ஆகியவை.
ஞாயிறு வடதிசைச் செல்லும் காலங்கள்:        
           பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் எனக்  கண்டறிந்திருந்தனர்.
நாள்மீன்களும் கோள்மீன்களும் சூழ இருப்பது ஞாயிறு:
    ’வானிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
     விளங்குகதிர் ஞாயிறு’ 
                     சிறுபாணாற்றுப்படை (242-247)
விண்பொருள்களாகக் கருதப்படுகின்ற வேறு இரு தெய்வங்களுக்குப் பிறந்தது ஞாயிறு என மூடத்தனமாக நம்பாமல் அறிவியல் தன்மையின் அடிப்படையில் கதிரவன் குறித்த கருத்துகளைத் தொடக்கக் காலத்திலேயே  தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதற்கு இவை போல் பலச் சான்றுகள் உள்ளன.
தமிழர்களின் அறிவியல் வளத்தில் ஆரியக் கலப்பால் மாசு புகுந்துள்ளதைத் துடைக்க வேண்டிய கடமை இன்றைய தமிழர்களுக்கு உள்ளதல்லவா?



No comments:

Post a Comment

Followers

Blog Archive