>>அன்றே சொன்னார்கள் 41
சிந்துவெளி, மொகஞ்சதாரோ மூலம் அறியக்கிடக்கும் தமிழர் நாகரிகச் சிறப்பு நம் முன்னைத் தமிழர்களின் கட்டுமான அறிவியலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். அவற்றின் தொடர்ச்சியாக இன்றைக்கும் காட்சியளிக்கும் கோபுரங்கள், சிதலமாகிப்போன சுரங்கப் பாதைகள் முதலியனவும் முந்தைச் சிறப்பை நமக்கு விளக்குவனவாக இருக்கின்றன. மலையே இல்லாத தஞ்சாவூர் மாநகரில் பெரிய கோயில் மட்டுமல்ல எண்ணற்ற கோயில்கள் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. கரிகால(ன்) மன்னரால் கட்டப்பெற்ற கல்லணை போன்றுதான் எகிப்து நைல் ஆற்று அணைக்கட்டும் உள்ளமையால் அணைக்கட்டுமானத்தின் முன்னோடியான தமிழர்களிடம் இருந்து அறிந்தே அவர்கள் அணையைக் கட்டியிருக்க வேண்டும் என்பதில் எவ்வகை ஐயமும் இல்லை. அழகாகவும் ஒழுங்காகவும் அமைக்கப்பட்ட வீதிகளைப் பற்றியும் நகரங்களைப் பற்றியும் பல்வகைக் கட்டடங்கள் பற்றியும் கோட்டைகளைப் பற்றியும் அரண்களைப் பற்றியும் இலக்கியங்களில் மிகுதியாகக் குறிப்புகள் உள்ளன. இவை மூலம், அகன்ற தெருக்களும் உயர்ந்த மாடமனைகளும் மிக்கு உயர்ந்த கோபுரவாயில்களும் எங்கெங்கும் அமைக்கும் அளவிற்குக் கட்டட அறிவியலில் பழந்தமிழர்கள் மிகச் சிறந்து இருந்தனர் என்பது நன்கு தெளிவாகிறது. இவற்றுள், சிலவற்றையேனும் அறிவதன் மூலம் கட்டுமான அறிவியலிலும் கட்டுமானம் தொடர்பான இயந்திரவியல், பொறியியலிலும் பெற்றிருந்த தமிழகச் சிறப்பை நாம் உணரலாம். நாம் இதற்குமுன்பு வானுயர் கட்டடங்களால் புகழ் பெற்ற தமிழக நகரங்களின் சிறப்பை அறிந்தோம். இப்பொழுது இயல்பான வீடுகளிலும் பல்வகை எழுப்பிப் பாங்குடன் வாழ்ந்தமையைக் காணலாம்.நிலையான உறைவிடம் வீடு; வீட்டு நிலம் மனை; (மனையில் எழுப்பப்படும் வீடும் பின்னர் மனை எனப்பட்டது;) தாழ்ந்த சிறு கூரை வீடு குடிசை; பெரு குடில் குடிலம்; நெற்கூட்டைப் போன்று வட்டமாக அமைந்து வீடு கூடு; சுவர் இல்லாத நீண்ட கூரை வீடு கொட்டகை; தொழுவமும் ஆயுதச் சாலையும் கொட்டில்; பெரிய கூடங்கள் அமைந்தது சாலை; (பள்ளிச்சாலை, கல்விச்சாலை என்பன போல்) ஒருவருக்குச் சொந்தமான பல வீடுகள் சேர்ந்த இடம் வளவு; வீடும் வீட்டைச் சுற்றிப் பெரும்பரப்பும் அமைந்த பகுதி வளைசல்; மடவளாகம் என்பதுபோல் ஆதீனம் அமைந்த இடம் வளாகம்; சிறப்பான பெரிய வீடு மாளிகை; மேல்நிலை வீடு மாடி; மாடி வீடு மெத்தை வீடு எனவும் மச்சு வீடு எனவும் அழைக்கப்பெறும்.
வீட்டில் மேல்நிலை திறந்த முகப்பு மாடம்; அரண் சூழ்ந்த மனை அரண்மனை; துறவியர் தங்குவதற்குரிய கட்டடம் மடம்; படுக்கும் இடம் பள்ளி; பின்னர் சமணர் தங்குமிடம் பள்ளி என்றும் அடுத்துக் கற்பிக்கும் இடம் பள்ளி என்றும் மாறியுள்ளன; தங்குமிடம் உறையுள்; உள்வீடு அகம்; வளம் வாய்ந்த வீடு இல்லம்; சிறிய மண்சுவர் கட்டைமண்; மண்ணாலோ கல்லாலோ கட்டப்படும் மதில் சுவர்; உயர்வாயும் அகலமாயும் உறுதியாயும் அரண்மனை, கோயில், நகர் முதலியவற்றைச் சுற்றி எழுப்பப்படுவது மதில்; பகைவர்களை வெல்லும் வகையில் படைக்கருவிகளை மறைவாகப் பயன்படுத்த வாய்ப்பாகக் கட்டப்படும் மதில் எயில்; செம்பை உருக்கி வார்த்துக் கல்லால் கட்டிய பாதுகாப்பான மதில் இஞ்சி; வீட்டின் சிறு வாயில் குறும்புழை எனப்படும். இடைவெளியை மறைத்துக் கட்டப்படும் வீடு கூடு உயர்வான வாயில் மாடம் கோபுரம்.
இத்தகைய வகைப்பாடே கட்டடவியலில் பழந்தமிழர்கள் சிறந்திருந்தனர் என்பதற்குச் சான்றாகும். இவை பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.
நெடிய சுவர் அருகில் மங்கிய புகை சூழ்ந்த கொட்டிலைப்பற்றிப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் (பெரும்பாணாற்றுப்படை : 189)
(பறைந்த - தேய்ந்த, மங்கிய)
என்கிறார். அவரே புதிய வைக்கோலாலே வேய்ந்த கவிந்த குடில் என்பதை
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் (பெரும்பாணாற்றுப்படை : 225)
என்கிறார். (வை-வைக்கோல்; கவி - வளைவாகக் கவிந்த தோற்றம்)
மேலும், தொடர்ச்சியாக அடுத்துக் காணலாம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment