(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்
சென்னை வளர்ச்சிக் கழகம்
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்
முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 3/7
Instrument – ஆவணம் / பத்திரம்
instrument – கருவி என்பதே பொதுவழக்கில் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
துணைப்பொருள், கருவியாக உதவும் சாதனம், கருவியாகப் பயன்படுபவர், கையாள், இசையொலி எழுப்பும் சாதனம், ஒப்பந்தப்பத்திரம், பதிவேடு, இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை, துணைக்கலம்; கருவியாகப் பயன்படுதல், உபகரணம்; கருவி, பத்திரம், துணைக்கலம், கருவியாகப் பயன்படுதல், முறை ஆவணம், இயற்றனம், முட்டு, வித்து, கதி, இரும்பு, துப்பு, ஆயுதம், கரணம், படை, இயற்கை, எத்தனம், உடல், கருவிக்கருத்தன், ஆய்தம், எலிவாலரம் எனப் பல பொருள்களை அகராதிகளில் காணலாம்.
சட்டப்படி செயற்படுத்துவதற்குரிய சட்டங்கள், உடன்படிக்கைகள் முதலியவற்றைப் பதிவு செய்யும் சட்டப்படியான ஆவணமே இது. இது தொடர்புடைய சட்ட உரிமைகள், கடமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறது. எனவே, நேர் பொருளாகத் தெரிய வரும் கருவி என்பதற்கு மாற்றாக பயன்பாட்டிற்கேற்ப ஆவணம் அல்லது பத்திரம் எனலாம்.
Indian penal code – இந்தியத் தண்டிப்புத் தொகையம்
Indian penal code என்பதை இந்தியக் குற்றவியல் தொகுப்புச் சட்டம், இந்தியக் குற்றத் தண்டனை விதித்தொகுப்பு, இந்தியத் தண்டனைத் தொகுப்புச்சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், இந்திய ஒறுப்புமுறைச் சட்டத்தொகுப்பு என்கின்றனர்.
criminal procedure code என்பதைக் குற்றவியல் நடைமுறை விதித்தொகுப்பு, குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு என்கின்றனர். Indian penal code என்பதையும் இந்தியக் குற்றவியல் சட்டம் என்னும் பொழுது குழப்பம் நேர்கிறது.
code என்றால், விதித்தொகுப்பு, குறிமுறை, ஒழுங்குமுறை, குழூஉக்குறி, நெறிமுறைத் தொகுப்பு, குறியம், குறி முறை நெறித் தொகுப்பு, குறியீடு என்கின்றனர். சட்டநெறி, முறைநெறி, குறியீட்டெண், குறிப்பீடு, ஒழுங்குமுறை என இப்பொழுது குறிக்கின்றனர். மரத்தின் அடிப்பகுதி அல்லது தண்டையும் குறிக்கும். மரத்தின் அடிப்பகுதியில் மெழுகு தடவி எழுதப் பயன்படுத்தினர். எனவே, code என்பது எழுத்தையும் குறிக்கலாயிற்று. பின் எழுத்துகளின் தொகுப்பையும் குறித்தது.
ஒரு சொல்லிற்கு ஒரு பொருள்தான் வழங்க வேண்டும். ஆனால், பயன்பாட்டு அடிப்படையில் வெவ்வேறிடங்களி்ல் வெவ்வேறு பொருள் வருவதால் பல சொற்கள் அமைகின்றன. எனினும் குறிப்பிட்ட நேர்வில் குறிப்பிட்ட சொல்லிற்கு ஒரே ஒரு பொருளையே வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
editing என்பதைத் தொகுப்பு என்பதால் இங்கே அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தொகுக்கப்பட்ட நூல்களை நாம் தொகை என்கிறோம். எனவே, தொகுக்கப்படும் விதிகளை அல்லது சட்டங்களை நாம் தொகை என்றே கூறலாம். இந்த இடத்தில் தொகை என்றால் பணத்தொகை (amount) எனக் கருதக்கூடாது. ஆனால் தொகை என்பதை amount எனக் கருதலாம். எனவே, தொகையம் எனலாம்.
penal என்றாலும் punishment என்றாலும் நாம் தண்டனை என்றே குறிக்கிறோம். எனவேதான் Indian penal code என்றால் இந்தியத் தண்டனைச் சட்டம் என்கிறோம். அகராதிகளில் penal -தண்டனைக்குரிய என்னும் பொருள் தரப்படுகிறது. punishment என்பது தண்டனையைக் குறிக்கிறது. எதற்கு எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை வரையறுப்பது penal ஆகும். எனவே, இதனைத் தண்டிப்பு முறை > தண்டிப்பு எனலாம்.
எனவே, Indian penal code – இந்தியத் தண்டிப்புத் தொகையம் எனலாம்.
Act – செயன்மை
அடுத்து act என்னும் சொல் குறித்தும் இதனடிப்பிறந்த Action சொல் குறித்தும் பார்ப்போம்.
act என்றால் பொதுவாக நடி, என்று பார்க்கிறாம். அகராதிகளில் act என்பதற்குக்,
காரியம், செயல்படுதல், செயல், சட்டமன்றச் சட்டம், கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம், நடந்துகொள், செயலாற்று, பாசாங்கு செய், நாடகத்தில் நடி, வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி, நிகழ்ச்சி, பாராளுமன்றச் சட்டம், நாடகக் காட்சி, நாடகத்தில் நடித்தல், செய்தல், பாசாங்கு செய்தல், அவிநயம், அவினயம், நடிப்பு, நாடகக் களம், மாற்றாள் வேலை பார்த்தல், தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல், செயல் தூண்டும் செயற்குறிப்பு, வழக்கு நடவடிக்கை, இயக்கம், செயலாற்றத் தூண்டு, செயற்படுத்தல், சுறுசுறுப்பான, செயலாற்றும் திறமையுள்ள, விரைவாகச் செல்லும் திறமையுள்ள, விழிப்பான, சுறுசுறுப்பாக, செய்வினை, கொள்கைகளைச் செயற்படுத்து, இணங்க நடந்துகொள், தாக்குதல், சட்டகை, செயலுறல், பணியாற்று, வினையாற்று, செய்கை; செயல், சட்டம் செய்சட்டம், தொழில், அமல், செய், செய்காரியம், கள்ளத்தொழில், அங்கம், செய்கை, வினை, கிரியை, கம், கிருத்தியம், செயல், சட்டம், நாடகக் களம் (வி), செய், நடி, எனப் பல பொருள்கள் கூறப்படுகின்றன.
இவற்றுள் சட்டம் என்பதே சட்டத்துறையில் பயன்படுத்தப்படுவது.
law என்றாலும் சட்டம் என்கிறோம். இதனால் act- செய்சட்டம் என இப்போது கூறுகின்றனர்.
Act என்பது செயலைக் குறிப்பது. செய்யவேண்டியது அதன் முறைமை முதலானவை பற்றி இயற்றப்படுவதே சட்டப்படிச் செய்ய வேண்டியதைக் குறிப்பதாகும். எழுத்துவடிவிலான சட்டம் யாவும் செய்சட்டம்தான். எனவே பொதுவான அச்சொல்லால் குறிப்பதைத் தவிர்க்கலாம். சட்டப்படிச் செய்யவேண்டிய செயலைக் குறிப்பதால் செயன்மை எனலாம்.
Tamilnadu Children Act – தமிழ்நாடு சிறார் செயன்மை
Probationers of offenders Act – குற்றவாளிகள் நன்னடத்தைச் செயன்மை
என்பனபோல் பயன்படுத்தினால் செயன்மை என்பது எளிய சொல்லாக மாறிவிடும். இரட்டைச் சொல்லைத்தவிர்கக் வேண்டும் என்பதற்காகவே இவ்வொற்றைச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)
No comments:
Post a Comment