(சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

731. Adaptationதழுவமைவு

தகவமைவு  

வழியாக்கம்    

இந்தியச் சட்டத்தின் கீழ்  தழுவல் என்பது அடிப்படையில் வடிவமைப்பின் மாற்றமாகும், அஃதாவது பதிப்புரிமை பெற்ற படைப்பு ஒரு வடிவமைப்பிலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றப்படுவது.

கணிசமான அளவு புதிய உள்ளடக்கத்தைச் சேர்ப்பதன் மூலம்  தழுவல் படைப்பு உருவாக்கப்பட்டால், அத்தகைய வேலை இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் தழுவலாகக் கருதப்படாது.  

சிலர் தழுவி எழுதி முற்றிலும் தனதுபோல் காட்டிக்கொள்ளவர். பல திரைப்படக் கதைகள் இவ்வாறுதான் வருகின்றன.  

தொல்காப்பியர் மொழி பெயர்ப்பு வகைகளைத்  
தொகுத்தல் விரித்தல்
தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே 
                         (தொல்காப்பியம்,மரபியல் :98)   என நான்காகக் குறிப்பிடுகிறார். தழுவலுக்கும் இது பொருந்தும்.  

தொல்காப்பியர் நூல்களை, முதல் நூல், வழி நூல் என இருவகையாகப் பிரிக்கிறார்.    முதல் நூலின் கருத்தைச் சுருக்கியோ, விரித்தோ, சுருக்குதல் விரித்தல் இரண்டும் செய்தோ, மொழி பெயர்த்தோ எழுதப்படுவது வழி நூலாகும் என்று நால் வகை வழி நூல்கள் பற்றித்  தொல்காப்பியர் கூறுகிறார். வழி நூல் என்பது தழுவல் நூலே.  

தழுவல் என்பது நுற்படைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஓவியம், சிற்பம் முதலிய எப்படைப்பாகவும் இருக்கலாம். எனவே வழிநூல் எனக் குறிப்பிடாமல் வழியாக்கம் எனக் குறித்துள்ளேன்.
732. Addendumபிற்சேர்க்கை    

சேர்ப்பு, பின்சேர்ப்பு, பின் இணைப்பு, பட்டியல் இறுதிச் சேர்ப்பு, மேலகம்

ஒரு புத்தகம் அல்லது பிற வெளியீட்டின் முடிவில் சேர்க்கப்படும் கூடுதல் பொருள் அல்லது  விடுபாடுகள் அல்லது திருத்தங்கள்.
733. Addictபழக்க அடிமை  

வயமாதல்,

தகணேறல்   (தகண்=பழக்கம், ஏறல்= வயமாதல், பழக்க வயமாதல்)

கெட்ட பழக்கத்திற்கு அடிமை  

ஒரு முறை செய்தை மீண்டும் செய்தால் பழக்கமாகிறது. பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் அடிமைப்பட்டுக் கிடப்பது பழக்க வயமாதல் அல்லது பழக்க அடிமையாதல்.  

போதை மருந்துகள் மனச்சிதைப்புப் பொருள்கள் சட்டம், பிரிவு 2(1) 1985 (The Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985)
734. Additionகூட்டல்;  

சேர்த்தல் ‌  

கணிதத்தில் கூட்டல் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட எண்களை ஒன்றுடன் ஒன்று கூட்டி – ஒன்றாக்கி – மொத்தத்தை – ஒரு தொகையை-ப் பெறுகின்ற கணிதச் செயலாகும்.  

சட்டத்தில் ஒரு பெயரின் பின் சேர்க்கப்படும் பட்டத்தைக் குறிக்கிறது.

ஒரு சட்டத்தில் கூடுதலாகச்சேர்க்கப்படும் விதி அல்லது கருத்தையும் குறிக்கிறது.


“Addition”, “add” ஆகிய இரு சொற்களும்   addere  என்னும் இலத்தீன் வினைச்சொல்லிலிருந்து பெறப்பட்டவை
735. Addition or Omissionசேர்‌ அல்லது விடு‌  

சேர்த்தல்‌ அல்லது விடுதல்‌  

சேர்க்கப்பட வேண்டியதும் சேர்க்கப்படாததும்  

ஒன்றைச் சேர்த்தல் அல்லது ஒரு சொல்லிலிருந்து ஓர் எழுத்து அல்லது சில எழுத்துகளை விடுத்தல் / தவிர்த்தல்

கூடுதலாக இணைக்கப்படும் ஒன்று அல்லது புறக்கணிக்கப்பட்ட, விடுபட்ட, செய்யாத ஒன்று.  

சேர்த்துச் செய்தலும் அல்லது செய்யவேண்டியதைச் செய்யாதிருத்தலும்.

திருவள்ளுவர், செய்தக்க செய்யாமையானும் கெடும் எனச் செய்யாமையைத்  தீங்கு விளைவிக்கும் செயலாகக் கூறுகிறார். இன்றைய சட்டமும்  செய்யாமை என்பதைச் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறுதல் என்று குற்றமாக்குகிறது.
736. Addition to, Inமேற்சேர்க்கையாக  

கூடுதலாக  

அத்துடன்

கூடுதலாக ஒன்று அல்லது ஒருவர்  

ஏற்கெனவே பேசும் அல்லது வாதிடும் செய்தியில் கூடுதலாக ஒன்று உள்ளது அல்லது நடக்கிறது என்பது.

ஏற்கெனவே தெரிவித்ததுடன் இவருக்கு மதுரையிலும் மனை உள்ளது என்பதுபோல் கூறியவற்றுடன் புதிதாகக் கூறுவது.
737. Additional Benefitகூடுதல் நலப்பாடு  

ஒன்றுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுதல் அல்லது ஒரே நிறுவனம் அல்லது முதலாளியிடமிருந்து இரட்டிப்புப் பயன்களை எய்துதல் என்பது கூடுதல் நலப்பாடு எனப்படுகிறது.  

காடழிப்பு, வனச்சீரழிவிலிருந்து வரும் வெளிப்பாட்டுத் தீங்கினைக் குறைத்தல்  என்பது(Reducing Emissions from Deforestation and Forest Degradation) பன்னாட்டு அவையின் கல்வி, மன்பதை, பண்பாட்டுப் பிரிவின் திட்டமாகும். இதனை நிறைவேற்றுகையில் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும்/அல்லது உள்ளூர் வாழ்வதாரங்களின்  அளத்தகு, சரிபார்க்கத் தகு  மேம்பாடு என்றும் கூடுதல் நலப்பாடு சொல்லப்படுகிறது.  

இலாபம், நலம், நன்றி, உறுதி, ஆதாயம், அரிட்டம், அவணி, இதம், ஒட்பம், தக்கோர்மை, நன்று, நயப்பாடு, நலப்பு, நிணறு, நேயம், பலோதயம், பாரவிருதம், ரயாதி, ஊதியம், ஆணு, உதவி, நலன், நலன்/பயன், பெறுபயன், துப்பு, நயம், நற்பயன், பயன்படுத்துதல், பாடு, பேறு, பலம், கருத்து, நயப்பித்தல், சாதகம், நயம்பாடு எனப் பல சொற்கள் benefit என்பதற்குப் பொருள்களாக அகராதிகளில் தரப்படுகின்றன. இவற்றுள் உள்ள அயற்சொற்களை நீக்கி விடலாம். பிறவற்றில் ஆதாயம் என்பது profit என்னும் பொருளில் குறிப்பதுபோல் ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு பொருளில் பயன்பாட்டில் உள்ளது. எனவே, பெறுபயன் என்னும் பொருளில் நலப்பாடு எனலாம்.
738. Additional Chief Metropolitan Magistrateபெருநகர்‌ கூடுதல்‌ தலைமைக் குற்றவியல் நடுவர்‌  

பெருநகரத்தில் தலைமைக் குற்றவியல் நடுவர்‌ பணிச்சுமையைக் குறைப்பதற்காகக் கூடுதலாக ஒரு பதவியிடத்தை உருவாக்கி அமர்த்தப்படும் தலைமைக் குற்றவியல் நடுவர்‌.
739. Additional Chief Presidency Magistrate  மாநகரக் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர்

  மாநகரத்தில் குற்றவியல் தலைமை நடுவர்‌ பணிச்சுமையைக் குறைப்பதற்காகக் கூடுதலாக ஒரு பதவியிடத்தை உருவாக்கி அமர்த்தப்படும் தலைமைக் குற்றவியல் நடுவர்‌.
740. Additional conditionsகூடுதல் வரைக்கட்டுகள்

கூடுதல் கட்டுத்தளைகள்  

ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை ஏற்பட்ட பின், சூழலுக்கேற்பக் கூடுதலாக வரையறுக்கப்படும் வரைக்கட்டுகள் ஆகும்.  

வங்கியில் வாடிக்கையாளருக்கு அவ்வப்பொழுது வழங்கப்படும் விதிமுறைகளும் வரைக்கட்டுகளும் ஆகும்.  

பிணை வழங்கிய பின்னர், மேற்கொண்டு தெரிவிக்கப்படும் வரைக்கட்டுகள்(நிபந்தனைகள்)

முதலில் விதித்த வரைக்கட்டுகளைத் தளர்த்தவும் கூட்டவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.