தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி
படைப்புப் பணிகளில் கருத்து செலுத்துவோர்
பரப்புரைப் பணிகளில் கருத்து செலுத்துவதில்லை. அல்லது பரப்புரைகளில்
ஈடுபடுவோர் படைப்புப்பக்கம் பார்வையைச் செலுத்துவதில்லை. மிகச் சிலரே
இரண்டிலும் கருத்து செலுத்துவோராக உள்ளனர். அதுபோல் இலக்கியப் பணிகளில்
கருத்து செலுத்துவோர் மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வதில்லை. அல்லது
மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வோர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட நேரம்
ஒதுக்குவதில்லை. இரண்டிலும் கருத்து செலுத்துவோர் மிகக் குறைவே! இன்றைய
இலக்கியங்களில் மேலோட்டமாக எழுதிவிட்டுப் பெயர் பெறுவோர் உள்ளனர்.
தமிழுக்கு என்றென்றும் வளம் சேர்க்கும் சங்க இலக்கியங்களில் அவற்றில்
ஆழங்கால் பட்டவர்களால் மட்டுமே சிறப்பான ஈடுபாடு காட்ட இயலும். அத்தகைய
புலமை நலம் பெற்றவர்களும் மிகச் சிலரே உள்ளனர். அவர்களுள்ளும் பிற
மொழிகளில் தமிழ் இலக்கியச் சிறப்புகளை உணர்த்தும் மொழியாக்கப் படைப்பாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாகவே உள்ளனர். ஆனால் இத்தகைய மிக மிகச் சிலருள் குறிப்பிடத்தகுந்த சிறப்பு பெற்றவர் திருவாட்டி வைதேகி எர்பர்ட்டு(Vaidehi Herbert) ஆவார்.
பணியால் தமிழ்த்துறையர் அல்லர்!
ஞாலத்தமிழை ஞாலம் முழுதும் பரப்பும் திருவாட்டி வைதேகி அவர்கள் கல்வியாலும் பணியாலும் தமிழ்த்துறையர் அல்லர்! கலிபோர்னியா மாநிலப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பல்வேறு நிதி நிறுவனங்களில் பணியாற்றினார்.
சான் மாட்டோ கோட்டப் பொருளியல் வாய்ப்பு ஆணையத்தில் (Economic Opportunity
Commission of San Mateo County) ஊட்டச் சத்துத் திட்ட மேலாளராக
(1981-1984)இல் பணியாற்றியுள்ளார். பின் தொடர்ந்து, கலிபோர்னியா
பல்கலைக்கழகத்தின் சேர்க்கை அலுவலக மேலாளர் (University of California,
Berkeley, Admissions Office Manager, 1984 – 1986), கணிணித் துணைமையர்
நிறுவனத்தில் கணக்கீட்டுக் கணியத் துணையர் (Computer Associates –
Accounting Software support, 1986 – 1988), நிதிசார் கணியத் தகவுரைஞர்
(Accounting Software Consultant – 1988 – 1994), கலிபோர்னியாவில் உள்ள சாத்தா கோட்டத்தில் மருத்துவ, ஆய்வுக்கூட மேலாளர் (Shasta County,
California, Clinic and Lab Manager – 1994 – 1996), இலௌட்சி &
இலௌட்சி பொதுக்கணக்கு நிறுவனத்தில் இணைய-கணியத் துணைமையர் (Lautze &
Lautze, CPA firm, Network and Software Support – 1996 – 1998), சாந்தா
கிளாராவில் உள்ள வலைமெருகுக் கணியத்தில் கணியத் துணைமையர் (Web Putty
Software, Santa Clara – Software Support – 1998 – 2001), சாந்தா கிளாரா
கோட்ட ஐக்கிய ஊடிணைப்பு நிறுவனத்தில் கணக்காளர் (United Way of Santa Clara
County, Accountant – 2001 – 2002), எனக் கணிணி சார்ந்தும் நிதி
சார்ந்தும் பணியாற்றியவர் தமிழ்சார்ந்தும் கால் பதித்து இலக்கிய உலகில்
தடம் படைத்துள்ளார்.
மக்கள் பணிகளிலும் பாராட்டிற்குரிய பண்பாளர்!
கோலம் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவராக 2003 முதல் 2013 வரை செயல்பட்டு, ஏறத்தாழ இந்திய உரூபாய் 2 கோடி அளவில் திரட்டித் தம் ஊரான தூத்துக்குடியைச் சார்ந்துள்ள
ஊரகப்பகுதியில் ஏழைப் பெண்கள், சிறுவர்கள் முன்னேற்றத்திற்குப்
பாடுபட்டுள்ளார். 1980 இல் கலிபோர்னியா வளைகுடா தமிழ் மன்றத்தைத்
தோற்றுவித்து அதன் வாயிலாகத் தமிழ்ப்பணிகள் ஆற்றி வந்துள்ளார். 2004இல்
தமிழக மக்கள் ஆழிப்பேரலை என்னும் கடல்கோளால் இடர்ப்பட்ட போது அமெரிக்காவில்
5000 தாலர் பணம் திரட்டி உதவியுள்ளார். 2005-2006இல் அவாய்த்தீவில் கல்வி
வாய்பினைத் தொடர இயலா ஏழைச் சிறாருக்கு உதவினார். சாட்டா கோட்டத்தில்
ஏழைகள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குரிய திறமைப் பயிற்சியை அளித்தார். இவ்வாறு
இலக்கியப் பணிகளில் மட்டும் கருத்து செலுத்தாமல் மக்கள் பணிகளில் ஈடுபட்டு
எளியவராய் எல்லாருடனும் பழகும் பண்பில் சிறந்தவராக உள்ளார்.
இலக்கிய மொழி பெயர்ப்பில் இமயம்!
சங்கத்தமிழால் ஈர்க்கப்பட்ட வைதேகி சங்கத்தமிழ் பரப்பும் பணியில் ஈடுபட்டு வையப்புகழ் வைதேகியானார்.
“சங்கத்தமிழை வங்கக்கடலில் எறிவோம்” என அறியாதவர்கள் முழங்கியபோது அதனை
மக்கள் இலக்கியம் என மெய்ப்பித்துப் பரப்பியவர் தமிழ்ப்போராளி பேராசிரியர்
சி. இலக்குவனார். இதனை உலக அளவில் அறிஞர் ஏ.கே.இராமானுசம் போன்ற சிலர்
பரப்பினர். சங்க இலக்கியங்களில் ஏதேனும் ஒன்றை மொழிபெயர்த்துத் தமிழ்க்கடன்
ஆற்றியுள்ள அறிஞர்களும் உள்ளனர். எனினும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய 18 மேல்கணக்கு நூல்களையும் மொழிபெயர்த்த ஒரே அறிஞர் பெருந்தகை வைதேகி அம்மையார்தாம்.
இவற்றுள் கடின நடை என்று புலவர்களாலேயே சொல்லப்படுகின்ற பதிற்றுப்பத்து
நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் அறிஞரும் இவரே யாவார். இவரது மொழி
பெயர்ப்பு நூல்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடனும் தமிழ்ச்சொல் – ஆங்கிலப்
பொருள் விளக்கத்துடனும் குறிப்புகளுடனும் எளிமையாக அமைந்தவை. சிலர் மொழி
பெயர்ப்பதாகக் கூறிக்கொண்டு தங்கள் கருத்துகளைத் திணித்துக் கொண்டிருப்பர்.
அறிஞர் வைதேகியோ சங்கப்புலவர்கள் உள்ளத்தை எதிரொலிக்கும் வண்ணம் செம்மையாக
மொழிபெயர்த்துள்ளார்.
இவரின் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு
நூல்களுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர்கள் திரு. சியார்சு
அர்ட்டு(கலிபோர்னியா, அமெரிக்கா), திரு. தாககனோபு தகஃகாசி (Takanobu
Takahashi)(யப்பான்), திரு. சுவர்ணவேலு ஈசுவரன் (மிச்சிகன் மாநிலப்
பல்கலைக் கழகம், அமெரிக்கா), திருமதி. பிரண்டா பெக்கு
(தொரண்டோ பல்கலைக் கழகம், கனடா), முனைவர் வாசு அரங்கநாதன்
(பென்சில்வேனியாப் பல்கலைக் கழகம்) முதலான அறிஞர் பெருமக்கள் ஒப்பாரும்
மிக்காரும் இல்லாத வகையில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளதைப்
பாராட்டியுள்ளனர். சங்க இலக்கிய மொழி பெயர்ப்பில் மக்களுக்கு ஆர்வம் ஏற்பட
வேண்டும் என்பதற்காக ஓர் எளிய அறிமுக நூலையும் (Sangam Literature – A
Beginner’s Guide) எழுதி வெளியிட்டுள்ளார்.
படிப்போர்க்கு உதவும் சங்க இலக்கியச் சொல்லடைவு
சங்க இலக்கியச் சொல் ஒன்றை அறியும் ஒருவர் அச்சொல் வேறு இடங்களில் வரக்கூடியதை அறிய வாய்ப்பாகச் சங்க இலக்கியச் சொல்லடைவு அகராதியையும் வெளியிட்டுள்ளார்.
சங்க இலக்கியப் பரப்பினை அறிய உதவும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது என அறிஞர்கள் பாராட்டுகின்றனர்.
சங்க இலக்கியங்கள் மொழி பெயர்ப்புடன் தம்
கடமை முடிந்துவிட்டதாக இவர் எண்ணவில்லை. எனவே, சங்கஇலக்கியக் கால நூல்கள்,
செவ்வியல் கால நூல்கள் என யாவற்றையும் மொழி பெயர்க்கும் பணியில்
ஈடுபட்டுள்ளார். உலக நூலாம் திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் தம் எளிய நடை
மூலம் மொழிபெயர்ப்பு நல்கியுள்ளார்; ஆங்கிலம் ஓரளவு அறிந்தவர்கூட உணரும்
வண்ணம் மொழிபெயர்க்கும் சிறப்பு இந்நூலிலும் வெளிப்படுகின்றது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை மொழி பெயர்க்கும் முயற்சியில் இதுவரை
கார்நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணை மாலை
நூற்றைம்பது நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். முத்தொள்ளாயிரம்
நூலையும் பாண்டிக்கோவையையும் கவிநயத்துடன் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார். மடல் ஏறுதல், வெறியாட்டம், தூதுப் பாடல்கள் முதலானவை
பற்றி மலர்கள், இதழ்களில் கட்டுரைகள் எழுதிப் பிறருக்கு எளிமையாக விளக்கியுள்ளார்.
தமிழிலிருந்து ஆங்கிலத்தில்
மொழியெர்ப்பதுடன் பணி முடிந்துவிடுவதாக இவர் எண்ணவில்லை. பிறநாட்டு
நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தால்தானே முழுமையடையும் என
எண்ணினார். “தமிழிலிலாப் பிற மொழிநூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத்
தருதல் வேண்டும் (பாரதிதாசன்)” என்பதற்கிணங்க ஆங்கிலத்திலிருந்து தமிழிலும்
மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொண்டுள்ளார். இவற்றுள் குறிப்பிடத்தக்கன,
இரவீந்தர நாத்து தாகூரின் கீதாஞ்சலி தமிழ் மொழி பெயர்ப்பும் அவாய்த்தீவு
இறைவன் கோயில் சத்குரு சுப்பிரமணியசாமியின் ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழ்
மொழி பெயர்ப்பும் ஆகும்.
தமிழ் மரபு காக்க தமிழ்ப்பெயர் தொகுப்புத் தளம்
“தன் பெயரும் தமிழில் இல்லை;
தமிழ்நாட்டில் பெரும்பான்மையர் பெயர்களும் தமிழில் இல்லை; சமற்கிருதப்
பெயர்கள் அல்லது சமற்கிருத ஒட்டுடைய பெயர்களைத்தான் உயர்வு என
எண்ணுகின்றனர்; ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வளமுடைய தமிழ்ச் சொற்களை
அறியாதவர்களாகத் தமிழர்கள் உள்ளனர்; அவாய்த்தீவில் மக்கள் கடந்த ஒரு
நூற்றாண்டிற்கும்மேலாகக் கிறித்துவச்சமயத்தைப் பின்பற்றினாலும்
அவாய்ப்பெயர்கள் நீளமாக இருந்தாலும் அவாய்ப் பெயர்களையே
சூட்டிக்கொள்கின்றனர். தமிழ் மக்களோ பொருள் பதிந்த எளிமையான
தமிழ்ப்பெயர்களைப் புறக்கணிக்கின்றனரே” என வருந்தித் தமிழ்ப்பெயர்கள்
தொகுப்பிற்கான வலைத்தளமும் உருவாக்கியுள்ளார். குழந்தைகளுக்கான
தூயதமிழ்ப்பெயர்கள் (Pure Tamil Baby Names) என்னும் இத்தளத்தின் மூலம்,
தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்ற உணர்வையும் உண்டாக்கி, அதற்கான வழியும்
வகுத்துள்ளார்.
தமிழ் மரபு உணர்த்த தமிழ்மரபு உலா
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தன்
பெயரில் தமிழ்மரபு உலா(Vi (Vaidehi) Herbert’s Tamil Heritage Tour) எனச்
சுற்றுலா மூலம் தம் கணவருடன் இணைந்து தமிழ் மரபுச் சிறப்புகளைத் தமிழ்
நாட்டவர்க்கு உணர்த்தி வருகிறார்.
பயிற்சியார்வத்தைத் தூண்டும் பயிலரங்கங்கள்
எத்தனை நூல்களை மொழிபெயர்த்தாலும்
இலக்கிய ஆர்வலர்கள் அல்லது சங்கத்தமிழ் ஆர்வலர்கள்மட்டும்தானே அவற்றைப்
படிப்பர்? ஆனால், பிறரையும் படிக்கச் செய்ய வேண்டுமே! இவ்வாறு எண்ணி
சங்கத்தமிழறிஞர் வைதேகி மக்கள் சங்க இலக்கியச் சிறப்புகளை அறியும் வண்ணம்
பயிலரங்கங்கள் நடத்தி வருகிறார்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள்
மரபுவளத்தையும் சீரிமையையும் புரிந்து கொள்ளும் வகையில் இரு நாள்
பயிலரங்கங்கள் நடத்தி 40 முதல் 50 சங்கப் பாடல்களையும் முல்லைப்பாட்டு
முழுமையையும் கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து அக்டோபர் 2013 இல் இராலே(வட
கரோலினா), மார்ச்சு 2014 இல் வர்சீனியாவில் உள்ள மெக்லீன், நவம்பர் 2014
இல் தெக்சசில் உள்ள தல்லசு, 2015 இல் கனடாவில் தொரண்டோ என்ற இடங்களில்
சிறப்பாகப் பயிலரங்கங்கள் நடத்தியுள்ளார்.
விளக்கவுரை, வினா-விடை, கலந்துரையாடல்
என்ற முறையில் பயிலரங்கத்தை நடத்திச் சிறார் உள்ளத்திலும் சங்கத் தமிழ்
வளமையைப் பதியச்செய்து விடுகிறார். பயிலரங்க நிறைவில் இருபதுக்குக்
குறையாப் பாடல்களை நன்கு அறியவும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற
சொற்களின் பொருள்களைப் பரிந்து கொள்ளவும் பங்கேற்பாளர்கள் தகுதி
பெற்றுவிடுகின்றனர். சங்க இலக்கியக் காலம், புலவர்கள், மன்னர்கள்,
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பழந்தமிழ் மன்பதை, தொல்காப்பியம் கல்வெட்டுச்
சான்றுகள், சங்கத்தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு சொல் பன்மொழி, பல பொருள்
ஒரு சொல், எனப் பன்முனைப் புலங்களில் பயிற்சி பெறும் பங்கேற்பாளர்கள்
தொடர்ந்து சங்கத்தமிழ் இன்பம் பருகும் முயற்சியில் ஈடுபட்டு விடுகின்றனர்.
தமிழ்நாட்டில் சங்கஇலக்கியப் பரப்புரைப் பணி
அயல்நாட்டவரே சங்க இலக்கியங்களைக்
கற்கும் பொழுது நம் நாட்டவர் கற்க வேண்டாவா? எனவே, திசம்பர் 2014 இல், 50
புறநானூறு பாடல்களை ஒப்புவிக்கும் போட்டியைத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில்
தொடக்கி வைத்தார். இதற்கென 50 புறநானூற்றுப் பாடல்களைத் தொகுத்து தமிழிலும்
ஆங்கிலத்திலும் எளிய உரை யுடன் வெளியிட்டு வழங்கிவருகிறார். எண்ணமும்
செயலும் சங்கத்தமிழாகவே கொண்டிருத்தலால் இவையெல்லாம் இவருக்கு எளிமையாக
அமைந்து விடுகின்றன.
“பண்டைநலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும் நீ
படைப்பாய்! இந்நாள்
தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!”
என்னும் பாவேந்தர் புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன் வேண்டுகோளுக்கு இணங்க ஒல்லும் வகையெலாம் அயராது பணியாற்றுகிறார்
அறிஞர் வைதேகி அவர்கள்.
சங்க இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்ட
பொழுது இவர் முல்லைப்பாட்டு படிக்க நாடியது பேராசிரியர்
(உ)ருக்மணிஇராமச்சந்திரன் என்பாரை. அவர்,
“வைதேகியின் சங்க இலக்கிய ஆர்வத்திற்கு எல்லையே இல்லை, இவரைப்போல இந்த அளவிற்குத் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தமிழகத்திலும் இல்லை, உலகில் வேறு எங்கும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் போற்றும் மாணவமணியாக மட்டுமல்லாமல் உண்மையிலேயே உலகம் போற்றும் தமிழ்மாமணியாகத் திகழ்கிறார் அறிஞர் வைதேகி.
இலக்கியப் பணி உணர்த்தும் மேடை உரைகளும் ஊடக உரைகளும்
2013இல் வர்சீனினியா(மேரிலாந்து) நகரில்
நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூறு மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப்
பங்கேற்றுப் பாங்குடன் ஆற்றிய உரை இளந்தலைமுறையினரையும் நன்கு கவர்ந்தது.
2013இல் பிரிட்டானியா ஒலிபரப்பு
நிறுவனம்(பி.பி.சி.) தன் வானொலியின் தமிழோசையில் இவரது நேர் காணலை
வெளியிட்டது. இதன் மூலம் சங்க இலக்கியச் சிறப்பும் இவர் மொழிபெயர்ப்பில்
அடையும் இடர்ப்பாடுகளும் தமிழக அரசு இவரைப் போற்றத் தவறியுள்ளமையும் நன்கு
புரிந்தது.
2013இல் தமிழ்நாடு ஆனந்த விகடனில் (23
அக்டோபர் 2013) மூத்த எழுத்தாளர் திரு. அ.முத்துலிங்கம் இவரைக் கண்ட
நேர்முகத்தின் செவ்வி வெளிவந்து தமிழுலகு இவரின் ஒப்பற்ற பணிகளை உணர
வைத்தது.
தம்முடைய விரிவுரைகள் மூலமும் மக்களைக்
கவர்ந்து சங்க இலக்கிய ஈடுபாட்டை அவர்களிடையே விதைத்து வருகிறார். அவற்றுள்
அவாயில் (2012-2013) அமெரிக்கப் பார்வையாளர்களுக்குச் சங்கக் கவிதைகள்
விரிவுரை யாற்றியதைக் குறிப்பிடலாம்.
தமிழ் ஆசான்
1980 – 1983களில் சான் பிரான்சிசுகோ
தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து வளரும் தலைமுறையினர்
வளர்தமிழில் ஆர்வம் கொள்ளச் செய்தார். தனிப்பட்ட முறையில் தமிழ் கற்க
வருபவர்களுக்கும் தயக்கமின்றித் தமிழ் கற்பிக்கிறார். சான்றாக யேல் பலகலை
மாணவர் பிடிசா பானர்சிக்குத் தமிழ் நாட்டில் களப் பணிகளுக்கு உதவியாக
இருப்பதற்காகத் தமிழ் சொல்லிக் கொடுத்து அவரின் களப்பணியை
எளிமையாக்கினார்(2011). வலைத்தளங்கள் மூலமாகச் சங்க இலக்கியங்களைத் தமிழ் –
ஆங்கிலம் மூலம் விளக்கி இலக்கிய இணைய ஆசான் போல் விளங்குகிறார்.
தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக்கழகமும்
பிற பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆனால், இவை செய்யத் தவறும பணிகளைத் தனி
ஒருவராகத் தொடர்ந்து செய்து வருகிறார். இவரது நூல்கள் வெளியீடும்
வருவாய்க்கல்ல. எனவேதான் அனைத்து நூல்களையும் இணையத்தில் படிக்கவும்
பதிவிறக்கவும் வாய்ப்பு வழங்கியுள்ளார். இவரைத் தமிழக அரசும் இந்திய அரசும்
பாராட்டியிருக்க வேண்டும். உயர்ந்த விருதுகளை வழங்கியிருக்க வேண்டும்.
ஒப்பனை பூசிக்கொண்டு திரையில் தோன்றுபவர்களுக்குப் பட்டங்களும் விருதுகளும்
தரும் தனியார் பல்கலைக்கழகங்களும் அறிஞர்களைப் போற்ற வேண்டும் என்ற
பக்குவம் பெறவில்லையே! எனினும் உலகத்தமிழன்பர்கள் இவர் மொழிபெயர்ப்புப்
புலமையையும் இலக்கியத் தொண்டினையும் பாராட்டி வருகின்றனர். முல்லைப்பாட்டு,
நெடுநல்வாடை நூல்களின் ஆங்கில மொழி பெயர்ப்புப்பணிக்காக 2012இல் கனடாவின்
மொழி பெயர்ப்பு விருதினைத் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கியது; கனடாவின்
தொரண்டோ பல்கலைகழகமும் மொழிபெயர்ப்புப் பணிகளைப் பாராட்டி விருது
வழங்கியது. அதே ஆண்டு, பதிற்றுப்பத்து ஆங்கில மொழிபெயர்ப்புக்காக
குறிஞ்சிப்பாடி, தமிழ் நாடு – நல்லி திசையெட்டும் மொழியாக்க விருது
வழங்கிப் பெருமைப் பட்டுக் கொண்டது. 2014 இல் வடஅமெரிக்கத்
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பதினெண்மேல்கணக்கு நூல்களின்
மொழிபெயர்ப்பைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கியது.
குறள்பீட விருதும் நோபள் பரிசும்
இமயம்போன்ற உயர்பணியாற்றுபவருக்கு இவையெல்லாம் உரிய மதிப்பளிப்பு ஆகா.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் (திருக்குறள் 664)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர்
கூறுவதற்கேற்ப எளிதாகச் சொல்லிவிட்டு முடிக்க இயலாமல் முடங்கியவர்கள் பலர்
உள்ளனர். இவரோ சொல்லியவாறே சொல்லிய காலங்களில் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு
நூல்களை நமக்கு அளித்துள்ளார். சில நூல்களின் மொழிபெயரப்புகளுடன் தம்
பணிகளை முடித்துக் கொள்ளவில்லை; பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும்
ஆங்கிலத்தில் தந்ததுடன் அயர்ந்து விடவிலலை. தொடர்ந்து
மொழியாக்கப்பணியாற்றிக் கொண்டு வருகிறார்! இவரைப்போல வேறு ஓர் அறிஞரை
நம்மால் காட்ட இயலுமோ? தமிழ்ச்செவ்வியல் இலக்கியப் பணிகளில் ஒப்பாரும்
மிக்காரும் இல்லாத உயர் பேரறிஞரைப் பாராட்டுவது நமது கடமையன்றோ!
தொரண்டோ பல்கலைக்கழம் போன்று
தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ்த்துறை உள்ள பல்கலைக்கழகங்களும் இவரைப்
பாராட்டிப் போற்ற வேண்டும். இவரது சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை
ஆங்கிலத் துறையில் பாடமாக வைக்க வேண்டும். அரசியல் அடிப்பிடையில் விருதுகள்
வழங்கும் பழக்கததை மாற்றிக் கொண்டு தமிழக அரசும் இந்திய அரசும் உயரிய
விருதுகளை வழங்க வேண்டும். ஆண்டுதோறும் செம்மொழி நிறுவனம் அயல்வாழ்
இந்தியருக்குவழங்கும் குறள் பீட விருது பல ஆண்டுகள் வழங்கப்படுவதில்லை.
இப்பொழுது அறிவித்த 2012-2013 ஆம் ஆண்டிற்கான விருதும் அறிவிக்கப்படவில்லை.
எனவே, சங்கத்தமிழ் அறிஞர், சங்க இலக்கியப் பரப்புரைஞர் மதிப்பார்ந்த
வைதேகி எர்பர்ட்டு அவர்களுக்குக் குறள்பீட விருது வழங்க வேண்டும். இவரின்
இலக்கியப் பணிகளைப் பாராட்டி பாரதரத்னா விருதும் வழங்க வேண்டும். இந்தியாவை
மதிக்கவில்லை. இந்தப் பரிசு எதற்கு? என்று சொல்வார்கள். இந்த அமைப்பு
இருக்கும் வரை இந்தியாவின் உயரிய விருதைத்தமிழறிஞர்களுக்கு வழங்க வேண்டுவதே
முறையாகும். இலக்கியத்திற்கான நோபள் பரிசு இவருக்கு
வழங்குவதன் மூலம் உலக மக்கள் பா்ர்வையைச் சங்க இலக்கியம்பாலும் தமிழ்
மொழியின்பாலும் திருப்ப இயலும். இவருக்கு விருதுகள் வழங்குவதன் மூலம் உலக
அறிஞர்களைத் தமிழ்ப்பணிகளில் திருப்ப வேண்டும்.
பிறந்துளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும்
வருந்தமிழர் வையத்தை ஆள வேண்டும்
என்னும் இலக்கைக் கொண்டு,
இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
எனத் தொண்டாற்றும் அறிஞர் வைதேகியை இப்பொழுதுகூடப் பாராட்டா விட்டால் எப்பொழுதுதான் பாராட்டுவது?
அறிஞர்களைப் போற்றும் அரசே சிறக்கும் ! ந்லைக்கும்! என உணர்ந்து அரசுகள் இவரைப் போற்றட்டும்!
வண்டமிழறிஞர் வைதேகி அம்மையார் தொண்டு மேலும் சிறக்கட்டும்! வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ்த்தாயை மகிழ்விக்கட்டும்!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 73: பங்குனி 22, 2046 / ஏப்பிரல் 05,2015
No comments:
Post a Comment