Tuesday, December 31, 2024

எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

 


     

ஃஃஃ01சனவரி 2025  அகரமுதல



எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன?

இலக்குவனார் திருவள்ளுவன்

எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? எள்ளத்தனைத் துயரமும் முடியவில்லை. ஆண்டுகள் முடிந்தாலும் துயரங்களுக்கு முடிவில்லையே! பல நாடுகளில் போர்கள். அதனால் வேறுபல நாடுகளிலும் போர்களால் பாதிப்புகள். உலகெங்கும் போர் அச்சுறுத்தல்கள். “கெட்டபோரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்” என்னும் பாவேந்தர் பாரதிதாசன் குரல்போல் பலரும் குரல் எழுப்பத்தான் செய்கின்றனர். ஆனால் போர்களுக்கு முடிவில்லையே!

அணுக்குண்டுகளின் அழிவுகளைப் பார்த்த பின்னும் அணுக்குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றனவே! போர்களில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என எல்லாத் தரப்பு மக்களும் கொல்லப்படுகின்றனரே! பிற உயிரினங்களும் அழிக்கப்படுகின்றனவே! நாடுகளின் வளங்களும் சிதைக்கப்படுகின்றனவே! போர்கள் புத்தாண்டிலும் தொடரும் பொழுது அதனை வரவேற்றுப் பயன் என்ன?

உலகின் ஒரு பகுதியில் மக்கள் வறுமையால் நாளும் மடிகின்ற பொழுது மற்றொரு பகுதி மக்கள் ஆடம்பரத்தில் திளைக்கும் சமநிலையற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்காத சூழலில் புத்தாண்டை வரவேற்கலாமா? எல்லார்க்கும் எல்லாம் என்னும் நிலை வராத பொழுது புத்தாண்டு வந்தால்தான் என்ன பயன்?

பல நாடுகளில் புலம்பெயர் மக்கள் விரட்டியடுக்கப் படுகின்றனர். புலம்பெயர் மக்களை வரவேற்று வாழ்வளித்த கனடாவிலேயே இந்த நிலை என்னும் பொழுது, இதனால் பெரிதும் பாதிப்புறுவோர் தமிழர்களாக இருக்கும் பொழுது வாட்டுகின்ற வருத்தத்தைப் போக்குகின்ற நிலை வராமல் புத்தாண்டு வந்து என்ன பயன்? ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலை வேறு வடிவுகளில் தொடரும் பொழுது அவற்றை முறியடிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் ஊக்கப்படுத்துகின்றனர். நாமோ வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம். இந்நிலைக்கு இறுதி வராத பொழுது ஆண்டு இறுதி வந்து புதிய ஆண்டு தொடங்குவதில் என்ன மகிழ்ச்சி உள்ளது?

உலக மக்கள் தொகையில் தமிழ் மக்கள் தொகை குறைவாகவே காட்டப்படுகிறது. உண்மைக் கணக்கை யறிந்து நாம் விழிப்புணர்வு பெறாத பொழுது புத்தாண்டு கண்டு மகிழ என்ன உள்ளது?

தமிழ்நாட்டிலும் பிற நாடுகளிலும் உள்ள தமிழர்கள் தமிழறியாத் தமிழர்களாகப் பெருகிக் கொண்டே இருக்கும் பொழுது புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில் என்ன பயன்?

 நாடுகளுக்கிடையேதான் போர் என்றால் நாடுகளுக்குள்ளேயும் போர். இன, மத, சாதி, ஊர், பிரிவினை முதலிய சண்டைகள்,  -கலவரங்கள்.  

தமிழ்நாட்டில் இக்கலவரங்களுடன் மொழிக் கொலைஞர்களும் உலாவந்து அரசோச்சுகின்றனரே! பேச்சிலும் தமிழ்க் கொலை! எழுத்திலும் தமிழ்க்கொலை! படிப்பிலும் தமிழ்க்கொலை! படைப்பிலும் தமிழ்க்கொலை! முத்தமிழால் புகழ் பெற்ற தமிழில் இயலிலும் தமிழ் இல்லை! இசையிலும் தமிழைத் தொலைத்து விட்டனர்! நாடகத்திலும் தமிழைச் சிதைத்து விட்டனர்! வழிபாடுகளில் கேட்டால்தான் தமிழ் என்ற பொய்க்கோலம். தமிழ்நாட்டில் இசை என்றால் தமிழிசைதான் என்றில்லாமல் தமிழிசையும் பாடப்படலாம் என்ற சூழலே மேலோங்கியுள்ளதில் மாற்றமில்லை. மாற்றமில்லாச் சூழல் மாறாத பொழுது மாறிவரும் ஆண்டிற்கு வாழ்த்துப் பா இசைத்து என்ன பயன்?

“எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!” என்பது தமிழ் வளர்ச்சித்துறையின் முழக்கமாக உள்ளது. ஆனால், “எண்ணுவோம் ஆங்கிலத்தில்! எழுதுவோம் ஆங்கிலத்தில்!” என்பது பிற துறைகளின் செயற்பாடாக உள்ளது. இவர்களைத் தட்டி வீழ்த்த வேண்டிய தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டிக் கொண்டே இவர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது.

ஆண்டுகள் மாறினாலும் இந்த நிலையில் மாற்றமில்லை என்னும் பொழுது வருகின்ற ஆண்டை வரவேற்றுப் பயன் என்ன?

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.   (திருவள்ளுவர், திருக்குற௨௱௨ – 202)

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

நடைமுறைப் புத்தாண்டுச் சிந்தனைகள்

இதழுரை, அகரமுதல

மார்கழி 17, 2055 / 01.01.2025




சட்டச் சொற்கள் விளக்கம் 896 – 900

 




(Explanation of Legal Terms 891-895 continued)

896. Assistanceஉதவி;
உதவுதல்‌;
துணை

  உதவி என்பது ஒரு செயலுக்கு உதவும் நிலையைக் குறிப்பது. துணை என்பது அதிகாரத்திற்கு அடுத்த நிலையில் இருந்து அல்லது அதிகாரத்தலைமைக்குப் பகரமாகத் துணை நிற்பதைக் குறிப்பது.

aid என்பது இலவச உதவியைக் குறிப்பது. எ.கா. legal aid இதனை நாம் உதவுமை எனலாம்.

  உதவி பலவகைப்படும். அவற்றை அடுத்துப் பார்க்கலாம்.
897. assistance, consular /consular assistance  தூதரக உதவி  

 அரசாண்மை வினைஞர்கள் அல்லது முகவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் தம் நாட்டவர்களுக்கு வழங்கும் அறிவுரை.  
898. assistance . Direct /  Direct Direct assistance     நேருதவி  

படிப்பிற்காக அல்லது தொழில் தொடங்குவதற்கு அல்லது ஒரு செயற்பாட்டிற்குப் பிறர் அல்லது பிற அமைப்பு மூலம் அல்லாமல் நேரடியாக உதவுவது.

எனினும் ஓர் இடத்தை அல்லது இலக்கை நோக்கி நேரடியாக அல்லது தங்கு தடையின்றிப் பயணம் மேற்கொள்வதைச் சிறப்பாகக் குறிக்கிறது.,
899. Assistance. Disaster / Disaster assistanceபேரிடர் உதவி                   

நில நடுக்கம், நிலச்சரிவு, புயல், பெருவெள்ளம், கடற்கோள், பஞ்சம், வானூர்தி நேர்ச்சி(விபத்து), பெருமளவு மக்கள் கொல்லப்படும் துயர நிகழ்வு போன்ற பெருந்துயர் நிகழ்வுக்காலங்களில் செய்யப்படும் உதவி;

இடி மேல் இடி விழுதல் போன்ற அவக்கேடான சூழல்களில் ஊறு நேர்ந்தோருக்கு உதவுதல். 
 
900. Assistance, economic / Economic assistanceபொருளாதார உதவி

பொருளாதார உதவி என்பது தனிநிலை உதவி என்றும் பொது நிலை உதவி என்றும் இருவகைப்படுத்தலாம். பொருளாதாரச் சிக்கல்களால் இடருறும் தனியருக்கு உதவுவதே தனிநிலை உதவி.  
பொருளாதாரம் தமிழ்ச்சொல்லே. பலரைப் போல் நானும் தமிழ்ச்சொல்லல்ல  எனக் கருதிப் பொருளியல் என்றே பயன்படுத்தி வந்துள்ளேன். ஆனால் பொருளியல் என்பது அறிவியல் துறை ஒன்றின் பெயர். பொருளாதாரம் குறித்த இயலைப் பொருளியல் என்பதே சரி. பிற இடங்களில் பொருளாதாரம் என்பதே சரி.  
ஆதாரம் என்பது அடிப்படை, பற்றுக்கோடு, மூலம் எனப் பல பொருள்கள் உடையது.

பொருளை அடிப்படையாக அல்லது மூலமாக உடைய நிலைப்பாட்டைப் பொருளாதாரம் என்பதே சரி. 
   

(தொடரும்)


Wednesday, December 25, 2024

சட்டச் சொற்கள் 891- 895

 

சட்டச் சொற்கள் விளக்கம் 891-895


(சட்டச் சொற்கள் விளக்கம் 886 – 890)

891. Assign     உரிமை அளி;
உரிமை மாற்று அளி;
ஒப்புவி;
குறித்‌தளி
கையடை
கொற்றம்  வை

வணிகத்திலும்
ஒப்பந்தங்களிலும் உரிமையளித்தல் முதன்மை இடத்தைப் பெறுகிறது.

  உரிமைகளை அல்லது நலன்களை ஒரு தரப்பாரிடமிருந்து மற்றறொரு தரப்பாருக்கு மாற்றுவதைக் குறிக்கிறது.

உட்குத்தகைக்கும் உரிமை மாற்றியளித்தலுக்கும் வேறுபாடு உள்ளது.

உட்குத்தகை என்பது குத்தகையாளர் உரிமைகளில் ஒரு பகுதியை மட்டும் மாற்றியளித்தலைக் குறிக்கிறது. உரிமையளி என்பது குத்தகையாளர் ஒப்பந்தப் பின்னணியில் மற்றொருவருக்கு அல்லது மற்றொரு நிறுவனத்திற்குக் குத்தகைச் சொத்தின் உரிமைகள் நலன்கள் முழுமையையும் மாற்றி யளித்தலைக் குறிக்கிறது.  

கொற்றம் வைத்தல் என்பது ஆட்சியை மற்றொருவரிடம் ஒப்புவித்தலைக் குறிக்கிறது.
892. Assignability      மீளா மாற்றுரிமை செய்தல்

  காண்க :  Assign
893. Assigned  குறித்தளிக்கப்படும்

குறித்தளிக்கப்படுதல்

மீகாமர் வைப்புநிதிச் சட்டம் பிரிவு 1(1) [ (S. 12(1) SPFA, 1966) ]
குறித்தளிக்கப்பட்ட:  இருப்பூர்தி உடைமை (சட்டப் புறம்பாக வைத்திருத்தல்) சட்டம் 1966 பிரிவு 2(ஊ) [ S. 2(f), The Railway Property (Unlawful Possession) Act 1966 (S. 2(f) RP(UP)A, 1966)

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையச் சட்டம்-1993 பிரிவு (3)(1)[National Commission for Backward Classes Act-1993, S. 3(1)], (S. 8B(2)(d) DPA, 1961);

 மணக் கொடைத் தடுப்புச்சட்டம் 1961, பிரிவு 8ஆ(2) [sec. 8B(2) The Dowry Prohibition Act, 1961]
காண்க:  Assign
894. Assignability        
மீளா மாற்றுரிமை செய்தல்
 
காண்க :  Assign
Assigned    
குறித்தளிக்கப்படும்
குறித்தளிக்கப்படுதல்
மீகாமர் வைப்புநிதிச் சட்டம் பிரிவு 1(1) [ (S. 12(1) SPFA, 1966) ]

குறித்தளிக்கப்பட்ட:
 இருப்பூர்தி உடைமை (சட்டப் புறம்பாக வைத்திருத்தல்) சட்டம் 1966 பிரிவு 2(ஊ) [ S. 2(f), The Railway Property (Unlawful Possession) Act 1966 (S. 2(f) RP(UP)A, 1966)

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையச் சட்டம்-1993 பிரிவு (3)(1)[National Commission for Backward Classes Act-1993, S. 3(1)], (S. 8B(2)(d) DPA, 1961);  

மணக் கொடைத் தடுப்புச்சட்டம் 1961, பிரிவு 8ஆ(2) [sec. 8B(2) The Dowry Prohibition Act, 1961]kz

காண்க:  Assign

895. Assignee  உரிமை(மாற்றம்)‌ பெறுபவர்‌;

உரிமையளிக்கப்படுபவர்.

ஓப்பந்த விதிமுறைகளின்படி,சொத்து, உடைமை, தலைப்பு, உரிமை என்பவற்றை மாற்றல் முறையில் பெறும் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஓர் அமைப்பு ‌

Alienee என்னும் சொல்லும் இதே பொருளில் இடம் பெற்றுள்ளது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்


Monday, December 9, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 886 – 890: இலக்குவனார் திருவள்ளுவன்

 

அகரமுதல



ட்டச் சொற்கள் விளக்கம் 881-885-தொடர்ச்சி)

886.Assessment மதிப்பீடு

தீர்வை விதிப்பு

ஏதாவதொன்றின் விகிதத்தினை அல்லது தொகையினைத் தீர்மானித்தல். எடுத்துக் காட்டாக இழப்பீடு அல்லது விதிக்கப்பட்ட ஒறுப்புத் தொகை. குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டவரின் உள நிலைமை குறித்துத் தகுதி வாய்ந்த வல்லுநர் ஒருவர் தீர்மானித்தல்.

குடும்பநல வழக்குகளில் தகுதியான வல்லுநர் ஒருவர் சிறாரின் தேவையையும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான தரப்பினரின் ஆற்றலையும் ஆராய்ந்து மதிப்பிட்டு அறிவிக்கும் பகுப்பாய்வு அறிக்கை.

குடியியல் வழக்குகளில் சொத்தினைப் பேணவும் தனிப்பட்ட நலன் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ளவும் வழக்குரைஞரின் அறிவுரைகளை முறையாக கைக்கொள்ளவும்
அறிவுறுத்துவதற்குமான ஒருவரின் ஆற்றலைத் தீர்மானித்தல்.
மதிப்பீடு(S. 6 W(PCOPA), 1977) மதிப்பீடு(Sch.  PI(CI)A, 1963)
வரிவிதிப்பு(S. 2(2) ITA,1974)
887. assessment orderமதிப்பீட்டுக் கட்டளை

  இங்கே மதிப்பீடு என்பது உளநிலை மதிப்பீடாகும். குற்றவழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்டவரின் உளநிலையைக் கண்டறியக் கேட்கும் நீதிமன்றம் இடும் உத்தரவு.

  குடியியல் சட்டத்தின்படி ஒருவரின் உடல் அல்லது உளநிலை தொடர்பான ஐயங்கள் எழும் போது அத்தகையவர் உடல்நல, உளநல ஆய்விற்கு உட்பட வேண்டும் என நீதிமன்றம் இடும் கட்டளை.
  குடும்ப நல வழக்குகளில் தொழில்முறை வல்லுநர் ஒருவரிடம் வழக்கிற்குரிய குழந்தையின் தேவைகள்,  அவற்றை நிறைவேற்றுவதற்குரிய தரப்பாரின் ஆற்றல்கள், வாய்ப்பு நலன்கள் முதலியவற்றை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் இடும் கட்டளை.
888. Assessment year             வரிவிதிப்பு ஆண்டு

ஒரு நிதியாண்டில் வரிவிதிப்பைக் கணக்கிடுவதற்கான காலம்(ஏப்பிரல் 1 முதல் மார்ச்சு  31 முடிய),  

நிதியறிக்கை, வரவு செலவுத் திட்ட நோக்கங்களுக்காக அரசாங்கங்கள், வணி.க நிறுவனங்கள், தனியார் அமைப்புகளால் பயன்படுத்தப்படும் கால அளவு நிதியாண்டு.

நிதியாண்டிற்கு அடுத்த ஆண்டு மதிப்பீட்டு ஆணடு.

மதிப்பிடுவது வரிவிதிப்பைக் கணக்கிடுவதறக்காகத்தானே. எனவே வரி விதிப்பாண்டு. அஃதாவது இவ்வாண்டு 2023-24 நிதியாண்டு எனில் 2024-25 வரிவிதிப்பாண்டு,
889. Assessor      கணிப்பாளர், கணிப்பீட்டாளர்

வரி விதிப்பு நோக்கங்களுக்காகச் சொத்துகளை மதிப்பிடும் அதிகாரி.  

பல நேர்வுகளில் சட்ட அறிவுரைக்காகவும் சட்ட உதவிக்காகவும் ஒருவருக்குச் சட்டப்படியாகப் பெயராளாகச் செயற்படுபவர்.
890. Assets      சொத்துகள்   

சொத்திருப்புகள்

ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்குச் சொந்தமான மதிப்பார்ந்த உடைமை. (இதனைப் பன்மையிலும் குறிப்பிடலாம்.)

சொத்து(கள்) பொருள் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்றில்லை. முதலீடுகள், காப்புரிமைகள், பண மதிப்புடைய பிற பணச் செயற்பாடுகள் முதலியனவும் சொத்துகளாகும்.  

சொத்துகள் பொதுவாகப் பணமாக மாற்றக்கூடிய உடைமைகளாகப் பார்க்கப்படுகின்றன.
இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டம், 1959, பிரிவு 9,(1)(ஆ) [(S. 9(1)(b) ISIA, 1959)]

Sunday, December 1, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 881-885- இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 876-880 தொடர்ச்சி)

881. animus manendiதங்குகை நோக்கம்

நிலை இருப்பிட நோக்கம்

ஓரிடத்தில் காலரையறையின்றித் தங்கி அவ்விடத்தைத் தன் நிலையான இருப்பிடமாக ஆக்க எண்ணும் அகநிலை நோக்கமாகும்.

  animus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள், உணர்வு, மனம், துணிவு,  சினம் முதலியன. இச்சொல் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் குறிக்க மற்ற சொற்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.

 manendus என்னும் சொல்லில் இருந்து உருவான வடிவமே manendi என்பது. இதன் பொருள் இருத்தல், இருப்பிடம், வசிப்பிடம் என்பன. எனவே இத்தொடரின் பொருள் நிலையான இருப்பிடத்தை நிறுவும் நோக்கம். அஃதாவது, குறுங்காலமாக இடப்பெயர்வு மேற்கொண்டாலும் மீண்டும் திரும்பி வந்து நிலையான தங்குமிடமாகக் கொள்ளுதல்,

பெரும்பாலும் தனியார் பன்னாட்டுச் சட்டத்தில் (private international law) நிலையான வசிப்பிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
882. animus nocendiதீங்கு நோக்கம்

சட்டத்திற்கு எதிரான அறிவுடன் செயல்படும் குற்றம் புரியும் ஒருவரின்  அகமனநிலையைக் குறிக்கிறது.

இலத்தீன் தொடர்.

காண்க  : animus manendi
883. animus possidendiஉடைமையாக்கும் எண்ணம்

சொத்துடைமை வழக்கில் பொருளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவரின் உடைமையாக்கும் எண்ணத்தைக் குறிக்கிறது.

இலத்தீன் தொடர்.

காண்க  : animus manendi
884. Animus testandiவிருப்பாவண நோக்கம்

animus என்னும் இலத்தீன் சொல்லிற்கு விருப்பம், நோக்கம் முதலான பல்வேறு பொருள்கள் உள்ளன.

testandi என்னும் இலத்தீன் சொல் விருப்பாவணத்தைக் குறிக்கிறது.

விருப்பாவணத்தை எழுதும் போது அஃது இறுதி முறியாகவும் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த இலத்தீன் தொடர் உணர்த்துகிறது.  

காண்க  : animus manendi
885. animus revertendiதிரும்புதல் நோக்கம்

இடப்பெயர்ச்சி நோக்கம்

இல்வளம்படாத

காட்டில் வாழ்கிற

மாற்றமை

Animus revertendi என்பது இலத்தீன் சொற்றொடராகும், இதன் பொருள் “இடமாற்றம் செய்யும் நோக்கத்துடன்” அல்லது “திரும்புவதற்கான நோக்கத்துடன்”.

உரிமை வழக்கு, பொதுச் சட்டம் இரண்டிலும் பயன்படுத்தப்படும் சட்டம் சார் சொல்,

சொந்தமான விலங்குகள், சொந்தமாக இருக்க முடியாத காட்டு விலங்குகளை வேறுபடுத்துகிறது. இது மற்றொருவரின் பேணுகையில் உள்ள காட்டு விலங்கு அல்லாத விலங்கைக் குறிக்கிறது.  

இது சொத்துச் சட்டத்தால் (property law ) ஏற்கப்பெற்ற ஒரு வகை உடைமை உரிமையாகும்.

வேலை அல்லது படிப்பு நாடுநரின் aaaகாரணமாக  வேட்பாளரின் வசிப்பிடத்தை கைவிடக்கூடாது என்ற நோக்கத்தையும் இந்த சட்டக் கருத்து ஆதரிக்கிறது.

காண்க  : animus manendi  

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive