Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

Thursday, January 29, 2015

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன்

kannadasan

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு)

(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி)
நிறைவு
மணிமேகலையின் தாக்கத்தால் பொன்னரசி புத்தத்தைத் தழுவியதாகக் கூறிக் காப்பியத்தை முடிக்கிறார். தொடக்கத்தில் தமிழ்வாழ்த்து பாடியவர், மொழியையும் நாட்டையும் மக்கள் பண்பையும் வாழ்த்தி, புத்த முழக்கத்துடன்,
தென்மொழியும் தென்னாடும் தென்னர் பண்பும்
செழித்துலகம் புகழ்பாட வாழி! வாழி!
புத்தம் சரணம் கச்சாமி
தருமம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
(மாங்கனி : 40. புத்தர் வழியில் பொன்னரசி)
என நிறைவு செய்கிறார்.
ஒப்புமை நினைவுகள்
  ‘மாங்கனி’யைப் படிக்கும் பொழுது முந்தைய இலக்கியக் காதல் காட்சிகள் நமக்கு நினைவிற்கு வருகின்றன. ஆட்டனத்தி -ஆதிமந்தி ; ஆட்டனத்தி- மருதி காதல் போல் இங்கே அடலேறு-மாங்கனி; அடலேறு- தென்னரசி காதல். காவிரிஆற்றுப் பெருக்கில் ஆட்டனத்தி மறைவதுபோல் இங்கே ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்படுபவன் அடலேறு. பரத்தையர் குடும்பத்தைச் சேர்ந்த மணிமேகலை மீது காதல் கொள்கிறான் இளவரசன். இங்கே பரத்தையர் குடும்பத்தைச் சேர்ந்த மாங்கனிமீது காதல் கொள்கிறான் அமைச்சர் மகன். மணிமேகலை புத்தச் சமயத்தைத் தழுவுவதுபோல், தென்னரசியின் உடன்பிறந்தாள் பொன்னரசி புத்தச் சமயத்தைத் தழுவுகிறாள். இவ்வாறு முந்தைய இலக்கியங்களின் தாக்குறவால் மாங்கனியின் அடிப்படைக் கதைப்போக்கைக் கண்ணதாசன் அமைத்துள்ளார். கண்ணதாசன். ‘ஆட்டனத்தி – ஆதிமந்தி’ எனத் தனியே குறுங்காவியம் எழுதியுள்ளமையால் அவர் உள்ளத்தில் இவர்கள் காதல் நன்கு பதிந்துள்ளது என்பதை மாங்கனியும் உணர்த்துகிறது.
கொள்ளத்தக்கனவும் தள்ளத்தக்கனவும்
  “இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். தன்கவிதைகள் மூலமாகப் படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்” என்கிறார் முனைவர் சி.சேதுராமன. (http://puthu.thinnai.com/?p=16234 ) . ஆனால், “கண்ணதாசனைச்சிறந்த கவிஞர் என்பது மூடநம்பிக்கைகளுள் ஒன்று” என ஒருவர் கூறுகின்றார்.( http://mathimaran.wordpress.com/2011/05/26/article-400/). இவை தனி யிருவரின் கருத்துகள் அல்ல. வெவ்வேறு வகையான மதிப்பீட்டிற்கு உள்ளாகுபவரே கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் திரைப்பாடல்களைக் கொண்டு மட்டும் அவரை எடை போடக்கூடாது. அவை கதைப் பாத்திரத்தின் தன்மைக்கேற்பபுவும் கதைச் சூழலுக்கு ஏற்பவும் எழுதப்படுபவை. பல நேரங்களில் இயக்குநரும் கதையாசிரியரும்தான் பாடல்கள் உருவாகக் காரணமாகின்றார்கள். இசை யமைப்பாளர் பணிகளுக்கேற்ப விட்டு விட்டு இசை அமைத்து வரிகளைத் தொடுக்கும் பொழுது முதல் அடிக்கும் அடுத்த அடிக்கும் பொருத்தமில்லாப் பாடல்களும் உள்ளன. திரைப்பாடல்களையும் செம்மையாக எழுதலாம். என்றாலும் எழுதுபவரை மட்டும் பொருத்து இவை அமைவன அல்ல. எனவே, பிற படைப்புகளைக் கொண்டு எடை போட வேண்டும்.
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (திருக்குறள் 504)
என்னும் தெய்வப்புலவர் தரும் வரையறைக்கேற்ப குறை நிறை காணவேண்டும். இவரின் அரசியல் சூழலுக்கேற்ப இவரது நடையும் பொருண்மையும் வெளிப்பாடும் மாறி மாறி உள்ளன. அவை தனி ஆய்விற்குட்படுபவை. எனினும் திராவிட இயக்கப் படைப்பாளராக இவர் படைத்தவையும் இதழில் வடித்தவையும் பாராட்டிற்குரியனவாகவே அமைந்துள்ளன.
மனங்கவர் கவிஞர்
இவரது படைப்புகளுள் கொள்ளத்தக்கனவும் தள்ளத்தக்கனவும் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டு ஆராய்ந்தால், இவரது முதல் காப்பியமான ‘மாங்கனி’ இவரைச் சிறந்த உவமைப்புலவராக வெளிப்படுத்துகின்றது என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. உவமைப்புலவர் சுரதாவைப்போல் அதற்கடுத்த நிலையில் சிறப்பாக உவமைகளைக் கையாண்டு, பாவேந்தர் பாரதிதாசன்போல் எளிய நடைகளில் வெளிப்படுத்தி, நல்லதொரு கற்பனைக் காப்பியத்தை நமக்கு அளித்துள்ளார். எளிமை. இனிமை, புலமை மிகுந்த மனங்கவர்ந்த ‘மாங்கனி’ தந்த கண்ணதாசனும் மனங்கவர் கவிஞராவார்.
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்
என்னும் அவரது வரிகளையே அடிப்படையாகக் கொண்டு தூற்றுதற்குரியனவற்றை விலக்கி வைப்போம்! போற்றுதற்குரியனவற்றைப் போற்றுவோம்!
( நிறைவு)
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/12/maangani_attai01.png

– இலக்குவனார் திருவள்ளுவன்



Tuesday, January 6, 2015

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 5 – இலக்குவனார் திருவள்ளுவன்


மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 5 

– இலக்குவனார் திருவள்ளுவன்


(மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி)
 kannadasan04
ஆரியக் கசப்பு
உருவ வழிபாட்டிற்கு எதிராகவும் தேவர்கள் என ஆரியர்கள் தம்மைக்கூறி இடைத்தரகராய் இறை வழிபாட்டில் நடந்து கொண்டு தமிழர்களை ஏமாற்றுவதற்கு எதிராகவும் ஓர்இறைக் கொள்கையுடன் தன்மான எண்ணம் கொண்டவர் அக்காலக் கவிஞர் கண்ணதாசன். எனவே,
தேரில்லை சிலையில்லை தேங்கா யில்லை
தெய்வத்தைச் செவிடாக்கும் தேவரில்லை
(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 7 :1-2)
 என அருமையாக ஆரியக் குறுக்கீடற்ற வழிபாட்டை விளக்குகிறார்.
‘மாங்கனி’யில் இடம் பெறும் தொடர்கள், பின்னர், கவிஞர் கண்ணதாசனால் திரைப்பாடலுக்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அந்த அளவிற்கு அவரையே கவர்ந்த அவரது தொடர்கள் அமைந்துள்ளன. இதனைத் தனிக் கட்டுரையாகவே எழுதலாம்.அதற்குச் சான்றாக இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘தேரில்லை சிலையில்லை’ என்னும் தொடரைக் குறிப்பிடலாம். இவற்றை அவ்வாறே கையாளாமல் ‘தேரேது சிலை யேது’ என மாற்றிப் பாடல் எழுதி யுள்ளார்.
   தரணி போற்றும்தமிழிசையில் மயங்குபவரல்லவா கவிஞர் கண்ணதாசன். எனவே, வடநாட்டு இசையை ஆந்தையின்   அலறலாக எண்ணுகிறார். ஆதலால்,
ஆந்தையதும் வடநாட்டு இசைபா டிற்று
இக்காவின் இசைராணி நானே என்ன
எள்மூக்குச் சில்வண்டு குரலோட் டிற்று
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 3: 4-6)
எனப் படை முகாமிருக்கும் வெளியின் இரவு நேரத்தைக் கூறுகிறார்.
தமிழர்களின் வீரத்தையும் சிறப்பையும் அறியாமல் கனகவிசயர் புத்தியின்றிப் பேசியதால்தானே கல்சுமக்க நேரிட்டது என்கிறார் கவிஞர். சொன்னவர்கள் வீரத்தை வெளிப்படுத்தும் விற்பயிற்சி உரியவர்கள் என்றால் போர்க்களத்தில் வாகை சூட வாய்ப்பு நேர்ந்திருக்காவிட்டாலும் மோசமான தோல்வியையாவது தவிர்த்திருக்கலாம்.. ஆனால தருப்பப்புல் லன்றி வேறறியாப்புல்லர் கூட்டமன்றோ? எனவே, வீரமும் அறிவுமற்றவர்கள் கல்சுமக்க நேரிட்டது என்பதைக் கவிஞர் கண்ணதாசன்
புல்லன்றி வில்லறியாப் புல்லர் கூட்டம்
புத்தியின்றிச் சொல்லுகின்ற சொல்லால் என்றும்
கல்சுமக்க வரும்
(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 4:1-3 )
என விளக்குகிறார்.
பழந்தமிழ் நாட்டில் ஆரியச்சடங்கு கோயிலில் புகுந்து தொல்லை தரவில்லை என்பதை விளக்க,
தெய்வத்தைச் செவிடாக்கும் தேவரில்லை
(மாங்கனி : 1.வஞ்சியில் விழா7:2)
என்கிறார்.
ஆரியர்கள் தன்மையை அழகாகப் படம் பிடித்து,
ஆரியம்தம் மனம்போலும் காடு; தீப்பாய்
அவர்கள்குண நலம்போலும் கோடு
(மாங்கனி : 29.விலைக்குச் சிலை 1:1-2)
என்கிறார்.
சூழ்ச்சியிலே ஆரியர்க்கு முன்பி றந்தோன்
சூதுநிறை மனங்கொண்டோன் தளிவேல்!
(மாங்கனி : 33. கொடுத்ததை எடுத்துப் போனான் 1 :1-2)

என்றும் ஆரியர் பண்பினை எடுத்துக்காட்டுகிறார்.

மேன்மை மிகு மோகூர்
காப்பியங்குளுக்குரிய சிறப்புகளில் ஒன்று நகர் விளக்கம்(வண்ணனை). மோகூர் நகரம் வெயில் வாட்டாமல், மழைமுகில் மூடி, அதனால் மயில்கள் ஆட, இணைபிரியாமல் காதலர்கள் இன்பமாய் இருக்கும் வண்ணம் கதகப்பாய் இருக்கிறது என்கிறார். இதனை,

அழகுநகர்; இருபுறத்து ஏரி கொண்டு
அணிமணியாய்த் தென்னைமரம் சிலிர்த்து நிற்க
மழைமுகில்கள் வான்மூட, வெய்யி லின்றி
மந்தாரம் போட்டது போல், சிலுசி லுப்பில்
சூழைமயில்கள் சுவரேறிக் கோட்டை சுற்றிக்
கூத்தாடக் காதலர்கள் நெருங்கிச் சேர்ந்து
இழையளவும் விலகாமல் கதப்புக் காண
இன்பமயமா யிருக்கும் பழையன் மோகூர்!
(மாங்கனி : 16. எங்கே பகைவர் 1:1-8)
என விளக்குகிறார்.
குறுநிலந்தான்! ஆனாலும் வேண்டு மட்டும்
கொடைகொடுக்கும் கையார்கள் மலிந்த பூமி
சிறுஇடந்தான் என்றாலும் ஏழை யென்னும்
திண்டாட்டக் கூட்டமில்லாச் செல்வ பூமி
(மாங்கனி : 16. எங்கே பகைவர்? 2:1-4)

எனக் கூறிக், கொடையுள்ளம் கொண்டோர் வாழும், ஏழமையில்லாச் செல்வபூமி மோகூர் என்கிறார் கவிஞர்.
(மாங்கனி : 18. வென்றிகொள் சேரர்தானை)
mangani-attai02
(சுவைக்கும்)


Saturday, December 27, 2014

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்



மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 3

 – இலக்குவனார் திருவள்ளுவன்


mangani-attai02

அரிமா அடலேறு
சேர வேந்தனின் அமைச்சன் அழும்பில்வேள். அவனது மகன் அடலேறு, மாங்கனியைப் பார்த்தது முதல் பித்தனாகிவிட்டான். அவன் விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு வெளியிருக்கும் நினைவின்றி, வாய்வடித்து மொழிபிறக்கும் தொடர்பின்றிக்காதல் ஒன்றே மூண்டிருக்கும் உருவானான் எனக்காதலர் நிலையை விளக்குபவர், காதற்சுமையை இறக்கி வைக்க வழியில்லையே என எண்ணுகிறார். சுமைதாங்கி, சுமைக்கல், சுமைதாங்கிக் கல் என்ற பெயர்களில் தலைச்சுமையை இறக்கி வைக்க   வழி உள்ளது அல்லவா? அதுபோல் காதலால் ஏற்படும் நெஞ்சத்தின் பாரத்தை இறக்கி வைக்க வழியில்லையே என்கின்றார்.
தலையிருக்கும் பாரத்தை இறக்கி வைக்க
வழியிருக்கும் சாலைதனில் ஆனாற் காதல்
குலையிருக்கும் நெஞ்சத்தின் பார மென்றும்
குறையாது
(மாங்கனி : 4. போதை நெஞ்சம் 2:1-4)
அந்த நேரத்தில் அமைச்சர் அருகே வந்து மகன் அடலேறுவை அழைக்கிறார். இவனோ, பிறந்த குழந்தை யார், எவர் என்ற உணர்வு ஏதுமின்றி விழிப்பதுபோல் விழித்தான் எனப் புது உவமையை,
அப்பொழுதே பிறந்தவன்போல் விழித்தான்
(மாங்கனி : 4. போதை நெஞ்சம் 5:2)
எனக் கூறுகிறார்.
மாங்கனியைப் பிரிந்து வந்த வலிமைமிக்க அடலேறு படுக்கையில் துவண்டுபோய் விழுவதற்கு அடுக்கடுக்காய் உவமைகளைக் குறிப்பிடுகிறார். சூறைக்காற்றில் பஞ்சு படும்பாடு அவன் நெஞ்சு படுகிறதாம். பாறை பள்ளத்தில் விழுந்தது என்றால் விழும் இட நிலம் அதிர்ச்சிக்குள்ளாகிப் பள்ளமாகும். அதுபோல் இவன்படுக்கயைில் விழுந்தது இருந்ததாம். கவிஞர் கண்ணதாசன் மதுவிரும்பியாயிற்றே! அதற்கேற்பப் புதிய உவமை ஒன்றைப்படைக்கிறார். குடம்நிறைய இருக்கும் மதுவைச் சிறு கிண்ணத்தில் ஊற்றி – ஊற்றி அல்ல – கொட்டிக்குடிப்பதுபோல், சிதறி வீழ்வதுபோல் வீழ்ந்தானாம். இவற்றை,
குடமதுவைக் கிண்ணத்தில்
கொட்டிக் குடிப்பதுபோல்
பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற் போலப்
படுக்கையிலே அடலேறு வந்து வீழ்ந்தான்!
சூறைக்குட் பஞ்சாகித் துவண்டு பட்டுத்
துடிதுடிக்கும் தன்நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான்!
(மாங்கனி : 6. பிஞ்சுமனம் 2:1-4)
என அழகாகக் கூறுகிறார் கவிஞர்.

மோகூரை மீட்கும்போர்ப்படைக்குத் தலைமை தாங்கிஅடலேறு செல்கின்றான். போர்முரசு கேட்டு வழியனுப்பும் உற்சாகத்தில் மக்கள் வாயில்களுக்கு வந்து நிற்கின்றனர். அடலேறுவையே எண்ணிக் கொண்டிருந்தமாங்கனியும் வெளியே வருகிறாள். தன்னைத் தவறாக மாங்கனி எண்ணிவிட்டாள் என வருந்தி அவளைக்காணத்துடித்த அடலேறும் அவளைக்கண்டுவிட்டான். பாவையர் பலருள் அவளைத் தேடித்தேடி கண்டுவிட்டதை, ஏதேனும் மலரில் அமர்வோம் என்றில்லாமல் மனத்திற்குப் பிடித்த மலரைத் தேடித்தேடி அமரும் வண்டுபோல் அவளைத் தேடித்தேடிக் கண்டானாம்.
வண்டுவந்து மெல்லமெல்லத் தேடித் தேடி
மனம்பிடித்த மலர்தன்னில் அமர்தல் போலக்
(மாங்கனி : 9.கண்டறியாதன கண்டாள்! 2:1-2)
என விளக்குகிறார் கவிஞர் கண்ணதாசன்.
அப்படிப்பார்க்கும் பொழுது இவனைக்கண்டு அவள் புன்னகைக்கிறாள்.அவள்தன்னை வெறுக்கவில்லை என உணர்த்த அது போதுமே அவனுக்கு! ஆனால், அவளைப் பார்த்தபின்னர், உயிரை விட்டுவிட்டு நடைப்பிணமானான். எனவே, அணிவகுப்பில் வெறும் உடல்கூடுதான் போகிறதாம். இதனை அழகாக,
ஒண்டொடியின் புன்னகைக்கு உயிரை விட்டு
உடற்கூடு கால்தூக்கிப் போட்டுப் போகும்!
(மாங்கனி : 9.கண்டறியாதன கண்டாள்! 2:7-8)
என்று கூறுகிறார் கவிஞர் கண்ணதாசன்.
கவிஞர் கண்ணதாசன் உவமைகளைப் பின்னணிச் சூழலுக்கேற்ப சிறப்பாகக் கையாளுகிறார். படைமுகாமில் இருக்கும் அடலேறு, அங்கு வேறொரு பகுதியில் நாட்டியக்குழுவுடன் உள்ள மாங்கனியைக் காண, இது பிறருக்குத் தெரியக்கூடாது என்ற அச்சத்துடனும் தயக்கத்துடனும் ஆர்வத்துடனும் செல்கிறான்.அங்கே உள்ள மாங்கனியின் கூடாரத்துக்குள் உட்புகுகின்றான். மாங்கனியைக் காணும் ஆவலிலும், வெளியார் யாரும் பார்க்கக் கூடாது என்ற எண்ணத்திலும் விரைவாக நுழைகின்றான்.மனம்போல் விரைவானது எதுவும் இல்லையல்லவா? எனவே,
இளஞ்சேய் தன் மனம்போல் உட்புகுந்தான்
மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 5 :2
என்கின்றார் கவிஞர்.
படைக்களச்சூழலில்,
நில்லாமல் வெகுதூரம் ஓடி வந்து
நெஞ்சடிக்க நிற்கின்ற குதிரை யன்ன
பொல்லாத இதயத்தில்
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 5 3-5 )
என அழகாக வெகுதூரம் ஓடிவந்து நிற்கும் குதிரையின் இதயத்துடிப்புடன் அடலேறுவின் நெஞ்சு படபடப்பை விளக்குகிறார்.
தனியிடத்திற்கு மாங்கனியுடன் அடலேறு செல்கிறான். பாவும் இசையும் இணைந்து இருக்கவேண்டும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு,
பாமணம் இசையைச் சேர்த்துப்
பறந்தது போலே காட்டில்
ஆவொடுங் காளை போனான்
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 8: 3-4)
என்கிறார். இளைஞர்களைக் ‘காளை’ என்பது உலக வழக்கு. எனவே, இவர் கன்னியை ‘ஆ’வென்று இங்கே கூறுகின்றார். ஆவும் காளையும் என்று சொல்வதுதானே பொருத்தமாக உள்ளது.
0 R
(தொடரும்)
 

Followers

Blog Archive