மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு)
(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி)
நிறைவுமணிமேகலையின் தாக்கத்தால் பொன்னரசி புத்தத்தைத் தழுவியதாகக் கூறிக் காப்பியத்தை முடிக்கிறார். தொடக்கத்தில் தமிழ்வாழ்த்து பாடியவர், மொழியையும் நாட்டையும் மக்கள் பண்பையும் வாழ்த்தி, புத்த முழக்கத்துடன்,
தென்மொழியும் தென்னாடும் தென்னர் பண்பும்
செழித்துலகம் புகழ்பாட வாழி! வாழி!
புத்தம் சரணம் கச்சாமி
தருமம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
(மாங்கனி : 40. புத்தர் வழியில் பொன்னரசி)என நிறைவு செய்கிறார்.
ஒப்புமை நினைவுகள்
‘மாங்கனி’யைப் படிக்கும் பொழுது முந்தைய
இலக்கியக் காதல் காட்சிகள் நமக்கு நினைவிற்கு வருகின்றன. ஆட்டனத்தி
-ஆதிமந்தி ; ஆட்டனத்தி- மருதி காதல் போல் இங்கே அடலேறு-மாங்கனி; அடலேறு-
தென்னரசி காதல். காவிரிஆற்றுப் பெருக்கில் ஆட்டனத்தி மறைவதுபோல் இங்கே
ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்படுபவன் அடலேறு. பரத்தையர்
குடும்பத்தைச் சேர்ந்த மணிமேகலை மீது காதல் கொள்கிறான் இளவரசன். இங்கே
பரத்தையர் குடும்பத்தைச் சேர்ந்த மாங்கனிமீது காதல் கொள்கிறான் அமைச்சர்
மகன். மணிமேகலை புத்தச் சமயத்தைத் தழுவுவதுபோல், தென்னரசியின்
உடன்பிறந்தாள் பொன்னரசி புத்தச் சமயத்தைத் தழுவுகிறாள். இவ்வாறு முந்தைய
இலக்கியங்களின் தாக்குறவால் மாங்கனியின் அடிப்படைக் கதைப்போக்கைக்
கண்ணதாசன் அமைத்துள்ளார். கண்ணதாசன். ‘ஆட்டனத்தி – ஆதிமந்தி’ எனத் தனியே
குறுங்காவியம் எழுதியுள்ளமையால் அவர் உள்ளத்தில் இவர்கள் காதல் நன்கு
பதிந்துள்ளது என்பதை மாங்கனியும் உணர்த்துகிறது.
கொள்ளத்தக்கனவும் தள்ளத்தக்கனவும்
“இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க்
கவிஞர்களில் கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த
புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். தன்கவிதைகள் மூலமாகப் படிக்காத
பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்” என்கிறார் முனைவர் சி.சேதுராமன. (http://puthu.thinnai.com/?p=16234 ) . ஆனால், “கண்ணதாசனைச்சிறந்த கவிஞர் என்பது மூடநம்பிக்கைகளுள் ஒன்று” என ஒருவர் கூறுகின்றார்.( http://mathimaran.wordpress.com/2011/05/26/article-400/).
இவை தனி யிருவரின் கருத்துகள் அல்ல. வெவ்வேறு வகையான மதிப்பீட்டிற்கு
உள்ளாகுபவரே கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் திரைப்பாடல்களைக் கொண்டு மட்டும்
அவரை எடை போடக்கூடாது. அவை கதைப் பாத்திரத்தின் தன்மைக்கேற்பபுவும் கதைச்
சூழலுக்கு ஏற்பவும் எழுதப்படுபவை. பல நேரங்களில் இயக்குநரும்
கதையாசிரியரும்தான் பாடல்கள் உருவாகக் காரணமாகின்றார்கள். இசை யமைப்பாளர்
பணிகளுக்கேற்ப விட்டு விட்டு இசை அமைத்து வரிகளைத் தொடுக்கும் பொழுது முதல்
அடிக்கும் அடுத்த அடிக்கும் பொருத்தமில்லாப் பாடல்களும் உள்ளன.
திரைப்பாடல்களையும் செம்மையாக எழுதலாம். என்றாலும் எழுதுபவரை மட்டும்
பொருத்து இவை அமைவன அல்ல. எனவே, பிற படைப்புகளைக் கொண்டு எடை போட வேண்டும்.
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (திருக்குறள் 504)
என்னும் தெய்வப்புலவர் தரும் வரையறைக்கேற்ப குறை நிறை காணவேண்டும்.
இவரின் அரசியல் சூழலுக்கேற்ப இவரது நடையும் பொருண்மையும் வெளிப்பாடும் மாறி
மாறி உள்ளன. அவை தனி ஆய்விற்குட்படுபவை. எனினும் திராவிட இயக்கப்
படைப்பாளராக இவர் படைத்தவையும் இதழில் வடித்தவையும் பாராட்டிற்குரியனவாகவே
அமைந்துள்ளன.மனங்கவர் கவிஞர்
இவரது படைப்புகளுள் கொள்ளத்தக்கனவும்
தள்ளத்தக்கனவும் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டு ஆராய்ந்தால், இவரது முதல்
காப்பியமான ‘மாங்கனி’ இவரைச் சிறந்த உவமைப்புலவராக வெளிப்படுத்துகின்றது
என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. உவமைப்புலவர் சுரதாவைப்போல்
அதற்கடுத்த நிலையில் சிறப்பாக உவமைகளைக் கையாண்டு, பாவேந்தர்
பாரதிதாசன்போல் எளிய நடைகளில் வெளிப்படுத்தி, நல்லதொரு கற்பனைக்
காப்பியத்தை நமக்கு அளித்துள்ளார். எளிமை. இனிமை, புலமை மிகுந்த
மனங்கவர்ந்த ‘மாங்கனி’ தந்த கண்ணதாசனும் மனங்கவர் கவிஞராவார்.
”போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்”
என்னும் அவரது வரிகளையே அடிப்படையாகக் கொண்டு தூற்றுதற்குரியனவற்றை விலக்கி வைப்போம்! போற்றுதற்குரியனவற்றைப் போற்றுவோம்!
( நிறைவு)
No comments:
Post a Comment