அரிமா அடலேறு
சேர வேந்தனின் அமைச்சன் அழும்பில்வேள்.
அவனது மகன் அடலேறு, மாங்கனியைப் பார்த்தது முதல் பித்தனாகிவிட்டான். அவன்
விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு வெளியிருக்கும் நினைவின்றி,
வாய்வடித்து மொழிபிறக்கும் தொடர்பின்றிக்காதல் ஒன்றே மூண்டிருக்கும்
உருவானான் எனக்காதலர் நிலையை விளக்குபவர், காதற்சுமையை இறக்கி வைக்க
வழியில்லையே என எண்ணுகிறார். சுமைதாங்கி, சுமைக்கல், சுமைதாங்கிக் கல் என்ற
பெயர்களில் தலைச்சுமையை இறக்கி வைக்க வழி உள்ளது அல்லவா? அதுபோல்
காதலால் ஏற்படும் நெஞ்சத்தின் பாரத்தை இறக்கி வைக்க வழியில்லையே
என்கின்றார்.
தலையிருக்கும் பாரத்தை இறக்கி வைக்க
வழியிருக்கும் சாலைதனில் ஆனாற் காதல்
குலையிருக்கும் நெஞ்சத்தின் பார மென்றும்
குறையாது
(மாங்கனி : 4. போதை நெஞ்சம் 2:1-4)
அந்த நேரத்தில் அமைச்சர் அருகே வந்து மகன்
அடலேறுவை அழைக்கிறார். இவனோ, பிறந்த குழந்தை யார், எவர் என்ற உணர்வு
ஏதுமின்றி விழிப்பதுபோல் விழித்தான் எனப் புது உவமையை,
அப்பொழுதே பிறந்தவன்போல் விழித்தான்
(மாங்கனி : 4. போதை நெஞ்சம் 5:2)எனக் கூறுகிறார்.
மாங்கனியைப் பிரிந்து வந்த வலிமைமிக்க
அடலேறு படுக்கையில் துவண்டுபோய் விழுவதற்கு அடுக்கடுக்காய் உவமைகளைக்
குறிப்பிடுகிறார். சூறைக்காற்றில் பஞ்சு படும்பாடு அவன் நெஞ்சு படுகிறதாம்.
பாறை பள்ளத்தில் விழுந்தது என்றால் விழும் இட நிலம் அதிர்ச்சிக்குள்ளாகிப்
பள்ளமாகும். அதுபோல் இவன்படுக்கயைில் விழுந்தது இருந்ததாம். கவிஞர்
கண்ணதாசன் மதுவிரும்பியாயிற்றே! அதற்கேற்பப் புதிய உவமை
ஒன்றைப்படைக்கிறார். குடம்நிறைய இருக்கும் மதுவைச் சிறு கிண்ணத்தில் ஊற்றி –
ஊற்றி அல்ல – கொட்டிக்குடிப்பதுபோல், சிதறி வீழ்வதுபோல் வீழ்ந்தானாம்.
இவற்றை,
குடமதுவைக் கிண்ணத்தில்
கொட்டிக் குடிப்பதுபோல்
பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற் போலப்
படுக்கையிலே அடலேறு வந்து வீழ்ந்தான்!
சூறைக்குட் பஞ்சாகித் துவண்டு பட்டுத்
துடிதுடிக்கும் தன்நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான்!
(மாங்கனி : 6. பிஞ்சுமனம் 2:1-4)என அழகாகக் கூறுகிறார் கவிஞர்.
மோகூரை மீட்கும்போர்ப்படைக்குத் தலைமை
தாங்கிஅடலேறு செல்கின்றான். போர்முரசு கேட்டு வழியனுப்பும் உற்சாகத்தில்
மக்கள் வாயில்களுக்கு வந்து நிற்கின்றனர். அடலேறுவையே எண்ணிக்
கொண்டிருந்தமாங்கனியும் வெளியே வருகிறாள். தன்னைத் தவறாக மாங்கனி
எண்ணிவிட்டாள் என வருந்தி அவளைக்காணத்துடித்த அடலேறும்
அவளைக்கண்டுவிட்டான். பாவையர் பலருள் அவளைத் தேடித்தேடி கண்டுவிட்டதை,
ஏதேனும் மலரில் அமர்வோம் என்றில்லாமல் மனத்திற்குப் பிடித்த மலரைத்
தேடித்தேடி அமரும் வண்டுபோல் அவளைத் தேடித்தேடிக் கண்டானாம்.
வண்டுவந்து மெல்லமெல்லத் தேடித் தேடி
மனம்பிடித்த மலர்தன்னில் அமர்தல் போலக்
(மாங்கனி : 9.கண்டறியாதன கண்டாள்! 2:1-2)என விளக்குகிறார் கவிஞர் கண்ணதாசன்.
அப்படிப்பார்க்கும் பொழுது இவனைக்கண்டு
அவள் புன்னகைக்கிறாள்.அவள்தன்னை வெறுக்கவில்லை என உணர்த்த அது போதுமே
அவனுக்கு! ஆனால், அவளைப் பார்த்தபின்னர், உயிரை விட்டுவிட்டு
நடைப்பிணமானான். எனவே, அணிவகுப்பில் வெறும் உடல்கூடுதான் போகிறதாம். இதனை
அழகாக,
ஒண்டொடியின் புன்னகைக்கு உயிரை விட்டு
உடற்கூடு கால்தூக்கிப் போட்டுப் போகும்!
(மாங்கனி : 9.கண்டறியாதன கண்டாள்! 2:7-8)என்று கூறுகிறார் கவிஞர் கண்ணதாசன்.
கவிஞர் கண்ணதாசன் உவமைகளைப் பின்னணிச்
சூழலுக்கேற்ப சிறப்பாகக் கையாளுகிறார். படைமுகாமில் இருக்கும் அடலேறு,
அங்கு வேறொரு பகுதியில் நாட்டியக்குழுவுடன் உள்ள மாங்கனியைக் காண, இது
பிறருக்குத் தெரியக்கூடாது என்ற அச்சத்துடனும் தயக்கத்துடனும்
ஆர்வத்துடனும் செல்கிறான்.அங்கே உள்ள மாங்கனியின் கூடாரத்துக்குள்
உட்புகுகின்றான். மாங்கனியைக் காணும் ஆவலிலும், வெளியார் யாரும் பார்க்கக்
கூடாது என்ற எண்ணத்திலும் விரைவாக நுழைகின்றான்.மனம்போல் விரைவானது எதுவும்
இல்லையல்லவா? எனவே,
இளஞ்சேய் தன் மனம்போல் உட்புகுந்தான்
மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 5 :2என்கின்றார் கவிஞர்.
படைக்களச்சூழலில்,
நில்லாமல் வெகுதூரம் ஓடி வந்து
நெஞ்சடிக்க நிற்கின்ற குதிரை யன்ன
பொல்லாத இதயத்தில்
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 5 3-5 )என அழகாக வெகுதூரம் ஓடிவந்து நிற்கும் குதிரையின் இதயத்துடிப்புடன் அடலேறுவின் நெஞ்சு படபடப்பை விளக்குகிறார்.
தனியிடத்திற்கு மாங்கனியுடன் அடலேறு செல்கிறான். பாவும் இசையும் இணைந்து இருக்கவேண்டும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு,
பாமணம் இசையைச் சேர்த்துப்
பறந்தது போலே காட்டில்
ஆவொடுங் காளை போனான்
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 8: 3-4)என்கிறார். இளைஞர்களைக் ‘காளை’ என்பது உலக வழக்கு. எனவே, இவர் கன்னியை ‘ஆ’வென்று இங்கே கூறுகின்றார். ஆவும் காளையும் என்று சொல்வதுதானே பொருத்தமாக உள்ளது.
(தொடரும்)
No comments:
Post a Comment