Showing posts with label தமிழ் வளர்ச்சி. Show all posts
Showing posts with label தமிழ் வளர்ச்சி. Show all posts

Tuesday, November 6, 2018

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு

  தமிழ்வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிப்பன இதழ்கள். இன்று அச்சு இதழ்கள் குறைந்து விட்டன. ஆனால், மின்னிதழ்கள் பெருகி விட்டன. அச்சிதழ்கள் அதே வடிவத்திலும் கூடுதல் பக்கங்களுடனும் அச்சிதழ் இன்றி மின்னிதழாக மட்டும் என்றும் மூவகை மின்னிதழ்கள் உள்ளன. இவை உடனுக்குடன் படிப்பவர்களைச் சென்றடைகின்றன.
 செய்திகளையும் படைப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இதழ்களில் பெரும்பான்மையன தமிழைக் கொண்டு சேர்ப்பதில்லை. காட்சி ஊடகங்களால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் இக்காலக்காட்டத்தில் இதழ்களாவது தமிழைக் காக்க வேண்டும். இப் பணிகளால் காட்சி ஊடகங்களையும் தமிழின்பால் திருப்ப வேண்டும்.
  முன்பெல்லாம் இதழ்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்த அறிவுரை கூற முடிந்தது. ஆனால், இப்பொழுது பிழைகள் மலிந்து “இவை தவிர பிற யாவும் பிழைகளே!” என்று சொல்லும் வகையில்தான் பிழை மண்டிய நடைகள் உள்ளன.
  செய்தியை முந்தித் தரும் ஆர்வத்தில் தமிழ்ச்சொல் அறிய முற்படாமல் பிற சொல் பயன்படுத்துவோரும் உள்ளனர். வாழும் மொழி என்னும் அறியாமையில் பிற மொழிச்சொற்களும் பிற மொழி எழுத்துகளும் நிறைந்த போலித் தமிழில் எழுதுநரும் உள்ளனர்.
  சொற்சேர்க்கையின் பொழுது எழுத்துகள் மிகுதல், மிகாமை குறித்த இன்றியமையாமையை உணராமல், அத்தகைய இலக்கணம் தேவையில்லை என்று தவறாக எழுதுவதைப் பெருமையாகக் கருதுவோரும் உள்ளனர்.
  மரபுக்கவிதை எழுதத் தெரிந்தாலும் பிற சொல் கலந்தால்தான் புதுக்கவிதை எனத் தமிழைச் சிதைக்கும் கவிஞர்கள் படைப்புகளும் இதழ்களில் வருகின்றன.
  இயேசு(Jesus), பேதுரு(Peter), யோவான்(Jhon),  என்பன போன்று கிறித்துவர் இங்கே வந்த பொழுது பெயர்களைத் தமிழ் ஒலிப்பிற்கேற்பவே பயன்படுத்தினர். கடந்த நூற்றாண்டு வரை வந்த அயலவர்களும் எல்லீசன் என்பதுபோன்று தமிழ் மரபிற்கேற்பவே தங்கள் பெயர்களைப் பயன்படுத்தினர். இப்பொழுது நாம், நம் மொழிப்பெயர்களைச் சிதைத்துவிட்டுப் பிற மொழிப்பெயர்களை அவ்வாறே எழுத வேண்டும் என்று துடிக்கின்றோம். பெயர்ச்சொற்களைத் அயல் எழுத்துகளை நீக்கித் தமிழ் ஒலிப்பிற்கேற்பவே எழுத வேண்டும்.
தமிழ்ப்போராளி இலக்குவனார், படைப்புகள் தொல்காப்பியர் வழியில்
அயற்சொல் கிளவி அயலெழுத்து ஒரீஇ
(அயற்சொற்கள் அயல் எழுத்து நீக்கப்பட்டு)
இருக்க வேண்டும் என்கிறார்.
  இவ்வாறு இதழ்கள் தமிழ் ஒலிப்பிற்கேற்ப் பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நல்லுணர்வை மக்களிடையே பரப்ப இயலும்.
 எனவே, இதழ்கள் பிற மொழிச்சொற்களுக்கும் அயலெழுத்துகளுக்கும் இடம் தராமல் (நல்ல) தமிழை மட்டுமே பயன்படுத்தி மக்களுக்கு வழி காட்ட வேண்டும். நல்ல தமிழைக் கற்க விரும்பும் அயல் நாட்டவர்களுக்கு இது பெரும் பயன் நல்குவதாக அமையும்.
  இதழ்கள் செய்திகளைத் தருவது மட்டும் தம் பணி எனக் கருதாமல், செய்திகளின் ஊடாக அன்னைத் தமிழையும் அறியச் செய்வதைக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வளரும்! வெல்லும்! வாழும்!
அயல்நாட்டிலிருந்து அருந்தமிழ்ப்பணி ஆற்றும் மின்மினி இதழ் பொன்விழா, நூற்றாண்டு முதலான பிற விழாக்களையும் காண வாழ்த்துகிறேன்.
தமிழ் வாழ்தலில்தான் தன் வாழ்க்கையும் உள்ளது என உணர்ந்து பிற இதழ்களுக்கு எடுத்துக்காட்டாக நல்ல தமிழை மக்களிடம் சேர்த்து நானிலம் புகழ நிலைத்து இயங்க வாழ்த்துகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, April 17, 2017

தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் – இலக்குவனார் திருவள்ளுவன், நக்கீரன்



தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்


  மக்கள் நலத்திட்டங்களிலும் மொழி வளர்ச்சியிலும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் பல திட்டங்களைச் செயற்படுத்திவருவது தமிழக அரசுதான். இந்த வகையில் தி.மு.க., அதிமுக ஆகிய இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பாளர்களும் இவற்றிற்குக் காரணமான அலுவலர்களும் பணியாளர்களும் பாராட்டிற்குரியவர்களே!
  திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்   அரசின் தமிழ்ப்பணிகள், தமிழ்வளர்ச்சி இயக்ககம் முதலான அரசின் துறைகள், உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் முதலான அரசுசார் நிறுவனங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், ஆசியவியல் நிறுவனம் முதலான நல்கைநிதியுதிவி பெறும் நிறுவனங்கள் மூலம் சிறப்பாக  நடைபெறுகின்றன.
  நம் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு எனச் சூட்டப்பட்டது(1968), தலைநகர் எல்லா மொழிகளிலும் சென்னை என அழைக்கப்பெற்றது(1996), ஆகியன திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு நிலையாகப் பெருமை சேர்ப்பனவாகும். அன்றைய மூவேந்தர்கள், வள்ளல்கள்போல் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள்  மொழிவளர்ச்சியிலும் கலைஞர்கள் நலனிலும் கருத்துசெலுத்துகின்றன. தமிழில் சிறந்த நூல்களுக்குப் பரிசுகள் வழங்கியும் சிறந்த நூல்களை வெளியிட நிதியுதவி வழங்கியும்   உள்நாட்டிலும், அயல் நாடுகளிலும்  பல்வேறு கருத்தரங்கங்கள் நடத்தியும் எழுச்சியையும் படைப்புத்திறன் வளர்ச்சியையும் புதிய படைப்பாளிகளையும் உருவாக்குகின்றனர்.
 அரசு அலுவலகங்களுக்கு  அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் வழங்குதல், மின் காட்சியுரை மூலம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு  செய்துவருவதன் மூலம் பிழையற்ற நல்ல நடையில் அரசின் கோப்புகள் உருவாக வழி வகுக்கப்பட்டுள்ளது
    ’திருக்குறள் முற்றோதல்’ பாராட்டுப் பரிசு, பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதி வழங்குதல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கான பரிசுகள், இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, சொல்வங்கித் திட்டம், தமிழ் கலைக்கழகம் (அகாதமி) அமைத்தல். வேர்ச்சொல் சுவடி வெளியிடுதல். ஆகியவற்றின் மூலம் கலப்பற்ற தூய தமிழ்நடையை மாணாக்கரிடமும் இளைஞர்களிடமும் மற்ற பொதுமக்களிடமும் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகிறது.
   இந்த ஆண்டு மொரிசியசில் தமிழ் கற்பிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டுகளில்,  தமிழறியாமலே தமிழர்கள் மிகுதியாக வாழும்  இலரீயூனியன்(Re Union), பருமா,முதலான நாடுகளுக்கும் தமிழ்க்கல்வி பரவும்.
   உலகத்  தமிழ்ச்சங்கம் சார்பில் ஆண்டு தோறும் அயலகத் தமிழறிஞர்கள் மூவருக்கு  உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்குதல்,  அவர்களின் படைப்புகள் வெளியிடல், ஆய்வரங்கம் நடத்தல்  முதலானவற்றிற்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் உலக அறிஞர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கிடையேயும் பிணைப்பு  ஏற்படும்.   பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கவும் பிற மாநிலத் தமிழ்ச்சங்கங்களுக்கும் அரசு நிதி வழங்குகிறது
  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி இயக்ககம்,  12000 பக்கங்கள் கொண்ட  அகராதித் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது(1974-2011). வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை
  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம், தொல்காப்பியர் ஆய்விருக்கை, திருக்குறள் ஓவியக்காட்சிக் கூடம், உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு-தகவல் மையம், மொழியியல் ஆய்வுக்கூடம், சுவடிகள் பாதுகாப்பு மையம்  ஆகியவற்றைத் தமிழக அரசு அமைத்து வருகிறது. இவற்றின் மூலம் பழந்தமிழ் இலக்கியங்களும் வாழ்வியல் முறைகளும் வரும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து பரப்பப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.
  அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கியும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை. அளித்தும் அவர்கள் நலன் பேணுவதில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
  கொரிய மொழி, சீனம் – அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், ஆத்திச்சூடி மொழிபெயர்ப்பு எனத் .தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பதுடன் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
 ஆண்டுதோறும் 32 பேருக்குத் தமிழ்ச்செம்மல் விருது, ‘தமிழ்த்தாய் விருது’(2012), மகளிருக்கு‘அம்மா இலக்கிய  விருது’(2016), திருவள்ளுவர் விருது  முதலான 14 அறிஞர்கள் ஆன்றோர்களின் பெயரில் விருதுகள்,  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2014) என விருதுகள் வழங்கி, அரசு தமிழ்அறிஞர்களையும் ஆன்றோர்களையும் தமிழ்அமைப்புகளையும் சிறப்பிக்கிறது.
  நாம் சாதனைகளாகக் கூறுவனவே, வேதனைகளாக உள்ள கொடுமைகளும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தான் உள்ளன.
  தமிழ் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்னும் ஆணையும் அப்படிப்பட்ட வேதனைதான். அரசாணையின்படி பத்து வேலையிடங்கள் இருந்தால் தமிழ் படித்தவர்களை முதலில் எடுக்க மாட்டார்கள். 200 வேலையிடங்களை நிரப்ப வேண்டும் என்றால்,   இட ஒதுக்கீட்டின்படி, 18, 19, 23, 26, 150, 166, 188 ஆவது இடங்கள்தாம் தமிழில் படித்தவருக்கு அளிக்கப்படும். சமூக நீதி வழங்குவதுபோல் காட்டப்பட்டுத் தமிழுக்கான சமநீதி மறுக்கப்பட்டுள்ளதே!
           ஊர்திகளில் தமிழ் எண்களைப் பயன்படுத்த அரசாணை பிறப்பித்தார்கள்.  இந்த ஆணையும் முழுமையாக இல்லை. இப்படியாகப் பொதுவாக அரை குறை ஆணைகளைப் போட்டுவிட்டுப் பெருமை பேசுவதால் தமிழ் வளர்ந்து விடுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
 அரசாணை நிலை எண்: 117 நாள்: 29.01.1982 இன்படிப் பெயர்ப்பலகைகள் தமிழ், ஆங்கிலம், பிற மொழிகளில்  5; 3: 2 பங்கு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
  அரசாணை நிலை எண்: 24 நாள்: 06.01.1982 என்பதன்படித் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தாத பணியாளர்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  .
 அரசாணை நிலை கல்வித்(த.வ.)துறை எண் 1134 நாள் 21.06.1978 இன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில்தான் கையொப்பமிடவேண்டும்.
  இவை யாவும் ஏட்டளவு ஆணைதான்.
  அரசாணை நிலை  த.வ.ப.அ.துறை எண்: 431 நாள்: 16.09.1998 இன்படி நம் பெயருக்கு முன் அமையும் முதல் எழுத்துகளை எல்லா இடங்களிலும் தமிழில்தான் குறிக்க வேண்டும். ஆனால், இப்பொழுது தமிழ்ஆட்சி மொழித்துறையைப் பார்க்கும் அமைச்சரின் முதல் எழுத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளது.
  அரசாணை நிலை  பொது(த.வ.)துறை எண்: 1609 நாள்: 02.08.1968 இன்படித் தலைமைச் செயலகத்தில் நிதி, சட்டம்,  சட்ட மன்றம் ஆகிய துறைகள் நீங்கலாக அனைத்துத்துறைகளிலும் தமிழே பயன்படுத்தப்பட வேண்டும். இப்பொழுதும்  பல  துறைகளிலிருந்து ஆங்கிலத்தில்தான் மடல்கள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு ஆங்கிலக்காவலர்போல் செயல்பட்டு ஆங்கிலத்தையே அலுவல் மொழியாகப் பயன்படுத்தி வருகிறது.
  இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய தமிழ்வளர்ச்சிச் செயலகத்திடம் முறையிட்டால் தொடர்பான ஆணைகளை இணைத்து இவற்றின்படிச் செயல்படுங்கள் எனப் பொதுவாக மட்டும் கூறி அமைதி காக்கிறது.
 திராவிடக்கட்சிகள் ஐம்பது ஆண்டுக்காலத்தில் தமிழுக்குத் செய்தனவாக பெரும்  பட்டியல் இடும் அளவு அருவினை புரிந்துள்ளார்கள் – சாதனை செய்துள்ளார்கள்.
     முந்தைய   பேராயக்கட்சியான காங்கிரசு தொடர்ந்திருந்தாலோ, இந்தியக் கட்சி எதுவும் ஆட்சிக்கு வந்திருந்தாலோ தமிழ்நாடு,  இந்தி நாடாக மாறியிருக்கும். இருப்பினும் திராவிடக்கட்சிகள் வசைக்கு ஆளாவதன் காரணம் என்ன?
 பேரறிஞர்  அண்ணா முதல்வராக இருக்கும்பொழுது ஐந்தாண்டிற்குள் முழுமையும் தமிழை ஆட்சிமொழியாகச் செயல்படுத்துவதாக அறிவித்தார். ஆனால், பத்து x  5 ஆண்டுகள் ஆன பின்னும் அத்திட்டம் முழுமையாகவில்லையே!
  பேராயக்கட்சி/காங்கிரசு ஆட்சியில் பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி இருந்தது. தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மேற்கொண்ட போராட்ட முயற்சிகளால் ஆங்கில வழிக்கல்வி இருந்த கல்லூரிகள் தமிழுக்கு மாறத் தொடங்கிற்று.  ஆனால் தமிழாகக் காட்சியளித்த திராவிடக் கட்சிகள் ஆட்சியில், பள்ளிகளிலும்   – அதுவும் மழலைக்கல்வியிலும் – ஆங்கிலம் குடிபுகுந்தது.
  இந்தித் தீயிலிருந்து தமிழ்ப்பயிரைக் காப்பதற்காக ஆங்கிலத் தண்ணீரை ஊற்றி ஓரளவு காப்பாற்றியவர்கள்ஆங்கில நீரில் தமிழ்ப்பயிர் அழுகிப் போகச் செய்துவிட்டார்களே!
 தமிழே அறியாமல் இரண்டு தலைமுறைகள் வளர்ந்துவிட்ட அவலம் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தானே வந்துள்ளது?
  தமிழ் தொடர்பான துறை என்றால்,  தமிழ்ப்புலமையல்லாதவர் அல்லது தமிழரல்லாதவர்களையே பொறுப்பில் அமர்த்துவதே திராவிடக்கட்சிகளின் வழக்கம். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே தமிழில் புலமை பெற்றிருக்கத் தேவையில்லை என்னும் பொழுது பிற இடங்களில் மட்டும் தமிழ் படித்தவர்களுக்கு வேலையா கிட்டும்?
 ஒருமுறை மாநிலத்தீர்ப்பாய நீதிபதி ஒருவர், “தமிழ் படித்தவர்களுக்குத்  தமிழ்வளர்ச்சித் துறையில் என்ன வேலை? வேறு எங்காவது போக வேண்டியதுதானே” என்று கேட்டார். தமிழ் படித்தவர்கள் பிச்சை எடுக்கப்போக வேண்டும் என்று கருதினார் போலும்! என்றாலும் இப்போது அந்த நிலை மாறி வருகிறது.
  பொதுவாக நாம்   அரசை மட்டும் கூறிப்பயனில்லைதான். செயல்படுத்தும் நிலையில் இருக்கும் நம்மைப் பொருத்துத்தான் சாதனையும் வேதனையும்.  நாமும் அவரவர் நிலையில் தமிழைப் பயன்பாட்டுமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர்களுடன் தமிழில் பேசவும் தமிழர்களிடையே தமிழில் எழுதவும் தமிழ்ப்பெயர்களிட்டும் தமிழில் வழிபட்டும் தமிழோடு இணைந்து இருக்க வேண்டும்.
அரசு .இனியேனும் விழிக்கட்டும்! தமிழை என்றும் உள்ள மொழியாக்கட்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
– நக்கீரன் தொகுதி 29:  வெளியீடு 122 நாள் ஏப்.17-19, 2017
பக்கங்கள் 26-28

Thursday, August 28, 2014

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

padam-puthuceri-muthirai03 thamizh valarppeer01
  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20 4, 2039 (செப்டம்பர் 2008) காலத்தில் இரண்டாம் முறையும் முதல்வராக ஆட்சி செய்தவர், வைகாசி 2, 2042 (16 மே 2011) முதல் மூன்றாம் முறையுமாக முதல்வராக உள்ளார். முதல்வராக இருந்து இதுவரை செய்யத் தவறியவற்றை, இப்போதைய முதல்வர் பதவி மூலம்ஆற்றித் தமிழ்ப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் தமிழ்நலம் சார்ந்த பணிகளுக்காகவும் தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பது புதுச்சரேி மக்களின் நீண்ட கால வேண்டுதலாகும். குறிப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் 32 ஆண்டுகளுக்கும் மேலாகப், பிற தமிழ் அமைப்புகளையும் இணைத்து, இதற்காகப் போரிட்டு வருகிறார்.
1992இல் கல்வித்துறையில் இருந்து பிரித்துத் தனியாகக் கலைபண்பாட்டுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறை சார்பில் திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், புதுவை சிவம், சங்கரதாசு சாமிகள், முதலான தமிழ்ப்புலவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விழா எடுப்பதும் கலைவிழாக்கள் நடத்துவதும் கலைமாமணி விருதுகள் வழங்குவதும் அறிஞர்களுக்கு நிதியுதவி வழங்குவதும் பாராட்டிற்குரியது.
இத்துறை நூலகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றின் துறையாகவும் செயல்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையான அலுவலக மொழி மேம்பாட்டிற்கான துறையும் இதுதான். எனினும் தமிழ் ஆட்சி மொழிக்கெனவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கெனவும் 90% தமிழ்மக்கள் வாழும்மாநிலத்தில் தனித்துறை இல்லாதது பெருங்குறையே! இதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் இதற்குப் பொறுப்புதான். மத்திய அரசும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கலாம். எனினும் மூன்றாம்முறை முதல்வராக இருக்கும் மாண்புமிகு ந.அரங்கசாமி உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தமிழ்வளர்ச்சித்துறையை உருவாக்க வேண்டும்.
அவ்வாறு உருவாக்கும் பொழுது தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டா. தமிழ்நாட்டில் 1971 இல் ‘தமிழ்வளர்ச்சி இயக்ககம்’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கும் பொழுது தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களை அமர்த்த வேண்டும் எனக் கலைஞர் திட்டமிட்டார். ஆனால்நாவலர், அவர்களுக்கு அலுவலகப் பட்டறிவு கிடையாது எனப் பணியில் உள்ளவர்களை அமர்த்த வேண்டும் என்று நடைமுறைப்படுத்திவிட்டார்.இதனால், இளங்கலை முதலான ஏதேனும் ஒரு பட்டத்தில் ஒரு பிரிவில் தமிழில் தேர்ச்சி பெற்றவர்கள், இத்துறை அலுவலர்பதவிகளுக்குத் தகுதியானவர்கள் என விதி வரையறுக்கப்பட்டது. இதனால் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று எழுத்துப் பணி பார்த்தவர்கள், தாங்கள் பட்ட வகுப்பில் தேர்ச்சி பெறும் வரை உரிய அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தடையாக இருந்தனர். (முதலில் தனி அலுவலர் என்றும் பின்னர், உதவி இயக்குநர் என்றம் இப்பணியிடப் பெயர்கள் அழைக்கப்பெற்றன.) இது தமிழ் வளர்ச்சித்துறையில்பணித்தேக்கத்தை உண்டாக்கியது. 1990 இல் கலைஞர் முதலமைச்சராகவும் பேராசிரியர் கல்வி அமைச்சராகவும் இருந்த பொழுது தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர்களைச்சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலும் முனைவர் பட்டங்கள் பெற்றவர்களைத் தமிழாய்வு அலுவலர்களாக அமர்த்தினார். (இவர்கள் பின்னர்த் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநா்களாக மாற்றப்பட்டனர்.) இதனால் தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் இன்னும் எழுத்துப்பணியினர் பதவி உயர்வில் இப்பதவியில் அமருவதற்குப் பட்ட வகுப்பில் ஒரு பிரிவு தமிழில் தேர்ச்சி இருந்தால் போதும் என்றுதான் உள்ளது. அதே நேரம் மத்தியஅரசிலும், வங்கிகள், அரசு நிறுவனங்கள், பிற மாநிலங்களிலும் இந்தி அலுவலர் பதவிக்கான கல்வித் தகுதி என்பது இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்திவழியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என உள்ளது. எனவே, மத்திய அரசைப் பின்பற்றிக் கல்வித்தகுதிகளை வரையறுக்க வேண்டும்.தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முதன்மை அளிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு என்று பார்த்தாலும் கடைசியில் இருந்து முதலாவதாகத்தான் தமிழ்வளர்ச்சித்துறை இருக்கும். ஆனால், மத்திய அரசில் போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பெறுகிறது. எனவே, தமிழ்ப்புலமையாளர்களை மதிக்கும் வகையிலும் தேவையான அளவிற்கான முழு நிதியை வழங்கியும் திட்டங்கள் தீட்டி, விதிமுறைகள் வகுத்துப் புதிய தமிழ்வளர்ச்சித் துறையை அமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி ஆய்வு என்பது உரிய அலுவலகம் தரும் புள்ளிவிவரத்தை, ஒரு கடைநிலை ஊழியர் பெற்றுவந்து குறிப்புரையைத் தட்டச்சிட்டு அளிக்கும் அளவிற்குத்தான் உள்ளது. அவ்வாறில்லாமல் செம்மையான நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் பணித்திட்டம் இருக்க வேண்டும்.
நூல் வெளியீடுகளுக்கு நிதியுதவி என்பது ஆண்டுவருவாய் வரம்பு25,000 என இருந்து 2011-12 ஆம் ஆண்டு ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளதுஇந்தி நூல்கள் வெளியீட்டு உதவிக்குவருவாய் வரம்பு இல்லை. இங்கும் மத்திய அரசே பின்பற்றக்கூடியதாக உள்ளது. எனவே, மத்திய அரசின் இந்தி வளர்ச்சித் திட்டங்களைப் போன்றசிறப்பான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதே நேரம், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் நல்ல திட்டங்களை அங்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

 news-puthucheri-tha.va.thu.01

அரசு முத்திரையில் தமிழ் இடம் பெறச்செய்வீர்!

தமிழ் வளர்ச்சித்துறையை உருவாக்குவதுபோல் புதுச்சேரி மாநில முத்திரையில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றை அகற்றி, ‘வாய்மையே வெல்லும்’ என்றும் ‘புதுச்சேரி அரசு’ என்றும் தமிழில் குறிக்க வேண்டும். ஒன்றியப் பகுதி என்பதால் இந்தியில் இருக்க வேண்டும் என்பது தவறு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அரசு முத்திரையில் சத்தியமேவசெயதே என உள்ளதை வாய்மையே வெல்லும் எனத் தமிழில் மாற்ற வேண்டினார். மூதறிஞர் இராசாசி சத்தியம் வேறு, வாய்மை வேறு என அவ்வாறு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் வாய்மையே வெல்லும் என்பதையே பேரறிஞர் அண்ணா நடைமுறைக்குக் கொணர்ந்தார்.
மாநிலத்தகுதி கேட்கும் புதுச்சேரி மக்கள் முதலில் மாநில அரசு முத்திரையில் தமிழ் இடம்பெற அரசை வலியுறுத்தி வெற்றி பெற வேண்டும். மாநில மக்களின் நலனுக்காகத்தான் மத்திய அரசே தவிர, மத்திய அரசின் நலன்களுக்காக மாநில அரசு அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும். எனவே, புதுச்சேரி முதல்வர் அரசு முத்திரையை உடனடியாகத் தமிழ் முத்திரையாக்க ஆவன செய்ய வேண்டும்.
எனவே, தமிழ் வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைத்தும் அரசு முத்திரையில் தமிழ்மட்டும் இடம்பெறச்செய்தும் புதுச்சேரி முதல்வர் வரலாற்றில் இடம் பெற வேண்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
ஆவணி 8, 2045 / ஆக.24, 2014  http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png



அகரமுதல41

Followers

Blog Archive