Friday, December 18, 2015

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 02 – இலக்குவனார் திருவள்ளுவன்


தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

 02

யார்க்கும் அஞ்சாதே! எதற்கும் அஞ்சாதே!
  இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த பாரதியார், மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அச்சமே என்பதை உணர்ந்தார். எனவே, அச்சப்பேயை விரட்டுமாறு பல இடங்களில் வலியுறுத்துகிறார்.
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
(பாரதியார் கவிதைகள் பக்கம் 98/ விநாயகர் நான்மணிமாலை)
என்கிறார்.
எதற்கும் அஞ்ச வேண்டா என்பதற்காக,
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!
(பக்கம் 180/ பண்டாரப்பாட்டு)
என்கிறார். கூற்றுவனைக் கண்டும் அச்சமில்லை என்பதற்காக அவர்,
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்
(பக்கம் 183/காலனுக்கு உரைத்தல்)
என அறைகூவல் விடுக்கிறார். மேலும்,
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்
 மாரவெம் பேயினை அஞ்சேன்
   (பக்கம் 133/ மகாசக்தி பஞ்சகம்)
என்று கூறுகிறார். இவ்வாறு அஞ்சாமையை வலியுறுத்தும் பாரதியார் ஆத்திசூடியிலும் அதற்கான கட்டளைகளைப் பின்வருமாறு விடுக்கத் தவறவில்லை.
அச்சம் தவிர் (ஆ.சூ.1)
கீழேர்க்கஞ்சேல் (ஆ.சூ.16)
சாவதற்கு அஞ்சேல் ((ஆ.சூ. 26)
கொடுமையை எதிர்த்து நில் (ஆ.சூ. 22)
தீயோர்க்கு அஞ்சேல் (ஆ.சூ. 45)
பேய்களுக்கஞ்சேல் (ஆ.சூ. 72)
தொன்மைக்கஞ்சேல் (ஆ.சூ. 51)
ரௌத்திரம் பழகு (ஆ.சூ. 96)
வெடிப்புறப்பேசு (ஆ.சூ.107)
அச்சம் ஒழி எனக் கூறாமல், அச்சம் தவிர் எனப்பாரதியார்   கூறியது ஏன் என எண்ணலாம்.
   அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
   அஞ்சல் அறிவார் தொழில் என்பது தெய்வப்புலவரி்ன் திருக்குறள் அல்லவா?
அதனால்தான்!
   கீழோர்க்கு அஞ்சுவதாலும் தீயோர்க்கு அஞ்சுவதாலும், பிறருக்கு அஞ்சித் தாழ்ந்து நடந்து பிறரின் தவறுகளுக்கு நாம் உடந்தையாகி விடுகிறோம். எனவேதான் சீறவேண்டிய இடத்தில் சீறவேண்டும் என்பதற்காகச் சீறுவோர்க்குச் சீறு (ஆ.சூ.28) என்கிறார். தீயரைக் கண்டால், எதிர்க்கும் துணிவு வேண்டுமே அன்றி அஞ்சிப் பணிதல் கூடாது என்பதற்காகவே குழந்தைப் பருவத்திலேயே இவ்வுணர்வைப் பின்வருமாறு விதைத்தவர் அல்லவா பாரதியார்.
பாதகம் செய்பவரைக் கண்டால் நாம்
பயங் கொள்ளல் ஆகாது பாப்பா –
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா (பக்கம் 203 / பாப்பா பாட்டு)
மேலும் மக்களின் அச்சம் கண்டு
அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
(பக்கம் 36 / பாரதச் சங்கத்தின் தற்கால நிலை)
என உள்ளம் நைந்தவர் அல்லவா பாரதியார். எனவே, ஆத்திசூடியில் மேற் குறித்தவாறு பல வகை அச்சங்களை ஒழிக்கக் கூறியதில் வியப்பில்லை.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 3)


Friday, December 11, 2015

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6

 இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

06

  “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.“எனச் செம்மொழி முனைவர் க. இராமசாமி (சென்னை வானொலி நிலையம் நடத்திய இலக்குவனார் நூற்றாண்டு விழா – கருத்தரங்க உரை) தொல்காப்பியத்தின் சிறப்பை விளக்குகிறார். தமிழர்க்காக – தமிழ் மரபுகள் அடிப்படையில் – தமிழ்மரபுகள் காக்கப்பட – தமிழ் முந்துநூல்கள் கண்டு தமிழில் – தமிழரால் எழுதப்பெற்ற தொல்காப்பியத்தை ஆரிய வழி வந்ததாகக் கூறுவோரும் உளர்! அத்தகையோரை உச்சத்தில் ஏற்றிக் கொண்டாடும் நாம் தமிழர் எனப்பெருமைப்பட என்ன இருக்கிறது?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தமிழர் பண்பாடு.
சாதி இரண்டொழிய வேறில்லை என்பது தமிழர் நடைமுறை.
  சாதி என்பதே தமிழ்ச்சொல்லல்ல என்பதிலிருந்தே சாதிப்பகுப்புமுறை தமிழர்க்குரியதல் என்பது நன்கு தெளிவாகிறது. ஆனால், நால் வருண வேறுபாட்டைப் புகுத்திய ஆரியர்கள், அதற்கேற்ப தொல்காப்பியத்தில் இடைச்செருகலைப் புகுத்தி, சாதிப்பகுப்புமுறை தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகத் தவறாகவும், இதன் அடிப்படையில் தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தொடர்ந்து இனப்பழிப்பைச் செய்து வருகின்றனர்.
  “மரம், செடி, கொடி முதலிய நிற்பன பற்றிய சொற்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன முதலிய இயங்குவன பற்றிய சொற்கள் யாவும் புலவர் தெரிந்திருத்தல் வேண்டும். மக்களைப்பற்றியும் அவர்களைச் சார்ந்தவற்றைப்பற்றியும் பிற இயல்களில் விளக்கப்பட்டுள்ளன. அங்ஙனமிருந்தும், விலங்குகளைப்பற்றியும் மரங்களைப்பற்றியும் கூறுமிடத்தில் எவ்விதத் தொடர்புமின்றி வருண வேறுபாடுகளைக் குறிக்கும் செய்திகள் கூறப்படுகின்றன. இங்ஙனம் கூறும் பதினைந்து நூற்பாக்களும் (மரபியல் 71 முதல் 85 முடிய) பின்னுள்ளோரால் இடையில் நுழைக்கப்பட்டனவே என்பதில் ஐயமே இன்று. “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்ற நூற்பாவும், “வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல் என மொழிப பிறவகை நிகழ்ச்சி” என்ற நூற்பாவும் குன்றின் விளக்கெனத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கின்றன.” என்கிறார் தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 249).
  “நூல்களைப் பற்றியும் அவற்றின் வகை பற்றியும் செய்யுளியலில் ஆசிரியர் கூறுகின்றார். கூற வேண்டுவனவற்றை ஆங்கே கூறாமல் மரபியலில் கூறத் தலைப்பட்டதன் பொருத்தம் விளங்கவில்லை. உலகியல் மரபினையும் செய்யுளியல் மரபினையும் இங்கு விளக்குகின்றார் என உரையாசிரியர்கள் உள்ளதற்கு அமைதி கூறும் வகையில் உரைத்துள்ளனரேனும் நுணுகி ஆராய்வார்க்கு உண்மை வெளிப்படுதலில் தவறாது. சூத்திரம் என்ற சொல்லும் உத்தி என்ற சொல்லும் தாம் இடையில் புகுத்தப்பட்ட தன்மையை எளிதே புலப்படுத்துகின்றன. ஆதலின் நூறு முதல் நூற்றுப் பன்னிரண்டு முடிய உள்ள நூற்பாக்கள் ஆசிரியருடையனவல்ல என்பது அங்கை நெல்லிக் கனிபோல் விளங்குகின்றது.
  நூற்பாவின் இறுதியில் நூலின் புறனடையாக உரைக்கப்பட்டிருப்பது ஏனைய புறனடைகளோடு ஒப்பிடுமிடத்துத்தான் பின் வந்த பேதைப் புலவன் படைப்பெனப் பேசா நிற்கின்றது.” என்றும் இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியரான பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 250).
இவற்றை எல்லாம் அறிந்தும் தமிழினத்தை இழிவுபடுத்தும் வகையில் நால்வருணப்பாகுபாடும் வேறுபாடும் தமிழர்கள் ஏற்றுக் கொண்ட முறை எனக் கூறுவோர் ஏற்றமுடன் வாழ்கையில் நாம் தமிழர் எனப்பெருமைப்பட என்ன இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+10


Thursday, December 10, 2015

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்


தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

1

  பாட்டுக்கு ஒரு புலவராம் மாபெரும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் சமய நல்லிணக்கம், இறையொருமை, சாதி மறுப்பு, விடுதலை வேட்கை, நாட்டுப்பற்று, வீர உணர்வு, கல்விப்பற்று, தொழில் நாட்டம், பெண்ணுயர்மை, அறிவியல் உணர்வு, பொதுமை வேட்கை, வினைத்திறம் முதலிய பண்புகள் இணைந்த ஓர் ்அறிவுப் பெட்டகமே ‘புதிய ஆத்திசூடி’.
  சப்பானிய மொழியின் குறுவரிப்பாடல்களைப் புதுமையாகக் கருதும் நாம், தமிழில் நாலடி வெண்பா, முவ்வரிச் சிந்து, ஈரடிக்குறள், ஒற்றையடி வரிப்பா(ஆத்திசூசடி, பொன்றை வேந்தன், வெற்றி வேற்கை முதலியன) ஆகியவற்றின் மரபார்ந்த சிறப்புகளை உணர்ந்து கொள்ள வில்லை. ஆனால் பாரதியார் எளிமையும் செறிவும் மிக்க ஆத்திசூடியையும் ஆயுதமாகக் கொண்டு ஞாலத்திற்கு வேண்டிய காலத்திற்கேற்ற புதிய கருத்துகளையுப் படைத்தளித்துள்ளார். ஔவையாரின் ஆத்திசூடிக்குப் பிறகு எத்தனைபேர் இவ்வரிப்பா மரபினைப் பின்பற்றினர் என நமக்குத் தெரியவில்லை.
  ஆனால், பாரதியின் புதிய ஆத்திசூடிக்குப் பின்பு பாவேந்தர் பாரதிதாசன் முதலான பல்வேறு புலவர்கள் புதுமை உணர்வின் வெளிப்பாட்டு ஆயுதமாக ஆத்தி சூடியைப் படைத்தளித்துள்ளனர். எனவே, புதிய ஆத்திசூடி மூலம் புது மரபு விளைவித்த புதுநெறிப் பாவலராகப் பாரதியார் உயர்ந்துள்ளார் எனலாம்.
  ‘அச்சம் தவிர்’ முதல் ‘வௌவுதல் நீக்கு’ ஈறாக 110 வரிப்பாக்களை நமக்கு மாபெரும் புலவர் பாரதியார் அளித்துள்ளார். தம் பாடல்களில் உயர்நெறி காட்டி வாழ்வியல் கடமைகளை உணர்த்தியவர் பாரதியார். அவற்றின் கருத்துப் பொழிவுகளாக 110 கட்டளைகளைப் புதிய ஆத்திசூடி வாயிலாக நமக்கு வழங்கியுள்ளார். இவை பிற பாடல்களின் மூலம் உணர்த்தும் கட்டளைகளின் சுருக்கம் என்பதைப் பின்வருமாறு காணலாம்.
பரம்பொருள் ஒன்றே!
  சக்தி, முருகன், விநாயகர், சிவன் எனப் பல வழிபாட்டுப் பாடல்களை நமக்கு அளித்துள்ளார் பாரதியார். எனினும் இறைப் பொறுமையையும் இயற்கை வழிபாட்டையும் உணர்த்தும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் முதலான முன்னைப் புலவர்கள் மரபில்தான் சென்றுள்ளார். எனவே, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்னும் திருமூலர் வழியில் சமய நல்லிணக்கத்தையும் இறை ஒருமையையும் வலியுறுத்துவதையும் உயிர் மூச்சாகக் கொண்டு பாடல்களைப் படைத்துள்ளார்.
தம்வரலாற்றில் (சுயசரிதையில்/
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே
(பாரதியார் கவிதைகள், பூம்புகார் வெளியீடு, பதிப்பு 1961, பக்கம் 272)
என அனைத்துச் சமயங்களின் உட்கருத்தும் ஒன்றே என வலியுறுத்தியுள்ளார்.
  விநாயகர் நான்மணி மாலையில் “யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே” (பாரதியார் கவிதைகள், பக்கம் 97) என்கிறார். மேலும், நமக்குரிய கடமைகளில் ஒன்றாக, உலகெல்லாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்   (பா.க., பக்கம் 94) என்கிறார். மேலும்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டா
(பா.க., பக்,205/முரசு) எனத் தெய்வங்களின் பெயரால் சண்டையிட வேண்டா என்று கூறுகிறார்.
  இறைவனை வேண்டுதல்(பா.க./பக்.104) போற்றி அகவல் (பா.க./ப.109), அன்னையை வேண்டுதல்(பா.க./ப.114) சூரிய தரிசனம்(பா.க./ப.168), ஞாயிறு வணக்கம் (பா.க./பக்கங்கள் 168-169), ஞானபாநு (பா.க./பக்கங்கள் 169), வெண்ணிலாவே (பா.க./பக்கங்கள் 170 -172), தீ வளர்த்திடுவோம் (பா.க./பக்கங்கள் 172-173) முதலிய பாடல்களில் பொதுவான இறைவனை அல்லது இயற்கையை வணங்குவதாகவே தம் கருத்தினை உணர்த்தியுள்ளார். இயேசு கிறித்து, அல்லா, புத்தரைப் பற்றிய பாடல்கள் இவரின் சமய நல்லிணக்க வெளிப்பாடாகும். அறிவே தெய்வம் எனப் பாடுவது இறை மறுப்போரும் ஏற்கக்கூடிய கருத்தாகும். பாரதா மாதா தலைப்பில், “ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்” ((பா.க./ப.25) என உலக மக்கள் அனைவருமே ஒரு பரம்பொருளின் கீழ் வருவதாகக் குறிப்பிடுகிறார். பல சமயத்தினர் உருவகத்தாலே உணர்ந்துணராத பல வகையாகப் பவிடும் பரம்பொருள் ஒன்றே எனத் தம் கருத்தைப் பாரதியார் வெளிப்படுத்துகிறார். அதற்கேற்பப் பாரதியார் புதியஆத்திசூடியின் காப்புப் பாடலைப் பினவருமாறு சமய நல்லியக்கப் பாடலாகவே அமைத்துள்ளார்.
ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்
கருநிறங் கொண்டு பாற்கடல்மிசைக் கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவாம்
( பா.க./ப.200/புதியஆத்திசூடி)
“பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்” (அப்பர்)
“ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே” (சுந்தரமூர்த்திகள்)
“ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” (மாணிக்க வாசகர், திருவாசகம்)
என ஓரிறைக்குப் பல பெயர்கள் உள்ளதை முன்னோர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் பல பெயர்களால் தெய்வங்களை வணங்கிப் பாடுகிறார்.
ஆனால், இவற்றின் பிழிவாக ஆத்திசூடியில்
ஞாயிறு போற்று” என்று இயற்கை வணக்கத்தையும்
தெய்வம் நீ என் றுணர்“.
எனத் தெய்வங்களை வணங்கியும் பாகுபடுத்தியும் நேரத்தை வீணாக்க வேண்டா என்றும் கூறத் தவறவில்லை.
எனவே, பல்வேறு பாடல்கள் மூலம் பரம்பொருள் ஒன்றே என்பதே நமக்குப் பாரதியார்   அறிவுரையாய் வழங்கும் கட்டளையாகும்
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்


Followers

Blog Archive