Sunday, April 23, 2017

இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது! – இலக்குவனார் திருவள்ளுவன்




இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது!

  மத்திய அரசின் துணையுடன் இந்தி, ஆழமாக வேரூன்றித் தன் நச்சுக்கிளைகளைப்  பரப்பி வருகிறது. நம்மை எதிர்ப்பவரை நாம் எதிர்க்கவோ, நம் இனத்தை அழிக்க முயல்பவனை நாமும்  வேரறுப்பதிலோ தவறில்லை. உலகெங்கும் நடைபெறும் உரிமைப்போரின் அடிப்படையே இதுதான். ஆனால், அவ்வாறு இந்தியை எதிர்க்க நம்மவர்களுக்கு அச்சம். அதனால், இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்கின்றனர். இது தவறான கூற்று.
  இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் மாநிலத்தில் இந்தியை வளர்க்க எல்லா உரிமையும் உண்டு. அதனைப் பரப்ப எண்ணினாலும் தங்கள் பணத்தைக் கொண்டு அதற்கான நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால், அடுத்தவர்கள் பணத்தில் அடுத்தவர்கள் இல்லங்களில் இந்தியை நுழைக்க உரிமை கிடையாது.
  இந்தி இனிமையான மொழி என்றெல்லாம் கதை அளந்து அதைப் படிப்பதால் என்ன தவறு என்றும் சிலர் எழுதுகின்றனர். அம் மொழி இனிமையானதா இல்லையா என்பதல்ல பேச்சு. அதனை விருப்பப்பாடம் என்ற  போர்வையில் நம்மிடம் திணித்து நம் மொழியையும் நம்மையும் அழித்து வருவதை நாம் எதிர்த்துத்தான் ஆக வேண்டும். அதற்கு நாம் இந்தியை எதிர்த்துத்தான் ஆக வேண்டும். நாம் இந்தியை எதிர்த்தால்தான் இந்தி மொழியருக்கு அச்சம் ஏற்பட்டு  இந்தித்திணிப்பைக் கை விடுவர்.
  சிலர் “இந்தியைக் கற்பது என் உரிமை. அதற்கான வாய்ப்பை நல்க வேண்டியது அரசின் கடமை” என்றெல்லாம் உளறுகின்றர். ஒவ்வொரு குடிமகனும் விரும்பும் மொழியை எல்லாம் கற்றுத் தருவது அரசின் வேலை அல்ல. தாய்மொழியையும் தாய்மொழியிலான கல்வியையும் தருவதுதான் அரசின் கடமை. அவரவர் விரும்பினால் அவ்வாறு தனிப்பட்டுப் பயில்வதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைப் பின்பற்றிக்கொள்ள வேண்டும்., அதற்காகப் பிறர் பணம் செலவழிக்க விரும்பக்கூடாது. ஏனெனில், அவ்வாறு . இந்தியைக் கற்பது பிறர் பணத்தில்தான். (இங்கே இந்திக்குக் கூறுவது சமக்கிருதத்திற்கும் பொருந்தும்.)
  முதலில் நாம் தமிழ்நாட்டில் இருந்து ‘தட்சிண இந்தி பிரச்சாரச் சபை என்ற பெயரில் இயங்கும் பரப்புரை  அவையத்தை மூட வேண்டும். தமிழ்நாட்டில் எந்தப் பள்ளிக்கூடமாயினும் விருப்பப்பாடம் அல்லது பகுதி 1, 2, 3, 4  என்று  ஏதாவது போர்வையில் இந்தி மொழிக்கல்வி கற்றுத் தருவதை நிறுத்த வேண்டும். அப்படி என்றால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியை எப்படி படிப்பது என்ற கேள்வி எழலாம். சிறிது காலத்திற்கு அவர்கள் தங்கள் மாநிலத்திற்குச் செல்ல வேண்டியதுதான். இந்திமொழியைப் பிற மாநிலங்களில் அடியோடு நிறுத்திய பின்னர், இந்தியைத் தாய்மொழியாகக்கொண்டவர் எனச்சான்று பெற்று இந்தி பயில இசைவு தரலாம்.
  இப்படி எல்லாம் சொல்ல வேண்டியதன் காரணம் என்ன? என்று எண்ணலாம்.
  மத்திய அரசின் புதிய முடிவின்படி  நாட்டின் குடியரசுத்தலைவர் முதலான உயர் பொறுப்பில் உள்ளவர்கள், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் என யாராயினும் பொது நிகழ்ச்சியில் இந்தியில்தான் உரையாட வேண்டும். இந்தியை எல்லா மாநிலங்களிலும் அன்றாடப் பயன்பாட்டு மொழியாக மாற்ற வேண்டும் என்பது நடைமுறைக்கு வருகிறது.
  எனவே, மத்தியப்பொறுப்பாளர்கள், ஆளுநர்,  மக்களவை, மாநிலங்களவை  ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் அதிகாரிகள், மத்திய நிறுவன அதிகாரிகள்  என மத்திய அரசுடன் தொடர்புடையவர்கள் யாவரும் தமிழ்நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றால் இந்தியில்தான் பேச வேண்டு்ம். அது பொதுக்கூட்டமாக இருந்தாலும் தொலைக்காட்சி உரையாடலாக இருந்தாலும் நலஉதவித்திட்ட நிகழ்ச்சியாக  இருந்தாலும் எதுவாயினும் இந்தி இந்தி இந்திதான் அங்கே இருக்க வேண்டும்.! இந்தி அமரும்பொழுது எவ்வகை சிறு முயற்சியுமின்றித் தானாகவே இங்குள்ள தமிழும் பிற மொழிகளும் இடம் பெயர்ந்து அழியும். இந்திதான் நம் பயன்பாட்டு மொழி எனில்,  நாம் விரைவிலேயே தமிழர் என்ற நிலை மாறி ஃகிந்தியர் என்று மாறிவிடும். பிறகு  எதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்? அதுவும் மாறத்தானே செய்யும்!
   இந்தி  இப்போது  தமிழ்நாட்டில் திணிக்கப்படுவது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதற்குக்காரணம் இந்தி பெரும்பான்மையர் மொழி என்ற தவறான கூற்றும் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பொய்யான பரப்புரையுமாகும். இந்திப்பகுதிகளில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் இந்திமொழிபேசுவோர் நாளும் வேலை தேடி,  இங்கே வருவதும் நன்கறிந்த தமிழ் மக்கள் இனியும் அதை நம்பமாட்டார்கள் எனலாம். எனவே,  மொழியறிவு என்று தவறாக  எண்ணி வேண்டத்தகாத இந்தியைப்படித்து நம் உயிரினும்மேலான தமிழ்மொழி அழிவிற்கும்அதன் மூலமான இன அழிவிற்கும் தமிழகமக்களே  ஆளாக வேண்டா!
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. (திருவள்ளுவர், திருக்குறள் 821)
  உள்ளத்தில் பொருந்தி வராமல்,  வெளியே பொருந்தி வருவதுபோல் வரும் நட்பு எத்தகையது? கேடு செய்வதற்கு வாய்ப்பு அமையும்பொழுது, பொருளைத் தாங்கி உதவுவதுபோல் காட்சியளித்து,  அப்பொருளை வெட்டி எறிவதற்கு உதவும் பட்டடை போன்றது. இந்நட்பைத் தூக்கி எறிய வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
 பொதுமொழி, தேசிய மொழி, அலுவலக மொழி, நாட்டுமொழி என்றெல்லாம் பொய்யான உடையணிந்து நட்பு பாராட்டும் இந்தியும் கேடு செய்யக்கூடியதே! நம்மைத் தாங்குவதுபோல் தோன்றி நம்மை அழிப்பதே! கேடு செய்து வருவதே! எனவே, நாம்அதனைத் தூக்கி எறிய வேண்டும்!
எனவே,
இந்தி எப்போதும்வேண்டா! வேண்டவே  வேண்டா!
என ஆணித்தரமாகக்கூறி
இந்தியை எதிர்ப்போம்!
நம்மைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 183,  சித்திரை 10, 2048 / ஏப்பிரல் 23, 2017


இவற்றையும் காண்க!:
வேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்
வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்!
இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்!
முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை!
இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்?
இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை!
தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே!

Thursday, April 20, 2017

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்




ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்!

  அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம்  ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை.
  இவ்வாறு நம்மிடையே குறை  வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம் சொல்வதுபோல் சொல்லலாமா என்ற ஐயம் எழலாம்.
  இலங்கையிலும்  ஈழத்திலும் சிங்கள அரசு தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைப் புகுத்தியும், புத்தர் சிலைகளைத் திணித்தும் தமிழ்நிலங்கள் முந்தைய சிங்கள நிலங்கள் எனத் தவறாகப் பரப்பி வருகிறது. தமிழ்மக்களே தமிழ்ப்பெயர்களைத் தவறாக ஒலித்தும் பெயர்க்காரணங்களை அறியாமல் தவறாக உணர்ந்தும் வருவது சிங்கள வெறியர்களுக்கு மேலும் வாய்ப்பாக அமையும்.
  நான் சனவரித்திங்கள் ஈழம் சென்றிருந்த பொழுது உடன் வந்த நண்பர்,  யாழ்ப்பாணம் எப்பொழுது செல்வோம் என்றார். நான் “நேற்றுதானே போய்வந்தோம்” என்றதற்கு நேற்று நாம்  ‘Jaffna’   அல்லவா சென்று வந்தோம் என்றார். ஒருவர்கூட அதை யாழ்ப்பாணம் என்று சொல்லாத பொழுது  அதுதான் யாழ்ப்பாணம் என்று எப்படி நாம் உணரமுடியும்?
  ஒருவர்  என்னிடம் நாளை ‘டிரிங்கோசு’  பார்க்கப் போகிறேன்; வருகிறேன் என்றார். ஒருமறை டிரிங்கோ என்றால்  (மிக்கிமவுசு போன்ற) கேலிப்படம் என்றும் மறுமுறை, ஏதோ கடைவளாகத்தின் பெயர் என்றும் ஒவ்வொரு முறையும் ஈழத்தமிழ் நண்பர் சொல்லும்பொழுது நான் எண்ணிக்  கொண்டேன். திருகோணமலை செல்லுமன்று காலையில் அவரிடம் நான்,  “நாங்கள் திருக்கோணமலை செல்வதாக இருக்கிறோம்” என்றேன். உடனே அவர், “நான் நேற்றுதான் சென்று வந்தேன்” என்றார்.  நேற்று ‘டிரிங்கோசு’ அல்லவா செல்வதாகத் தெரிவித்தீர்கள் என்றதற்கு, “நாங்கள் திருக்கோணமலையை டிரிங்கோசு என்றுதான்  கூறுவோம்” என்றார். ஊரின் பெயர் திரி(three)கோணமாம், எனவே, டிரிங்கோ என்று சொல்லி அது பன்மை என்பதால் டிரிங்கோசு என்கிறார்களாம்.
 பல ஊர்ப்பெயர்களைத் தமிழ்ப்பெயர்கள் எனத் தமிழர்களே அறியாத வண்ணம் சிதைத்துக் கூறுகின்றனர்; எழுத்திலும் பயன்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். தமிழ்நெட். என்னும் வலைத்தள இதழில் ஊர்ப்பெயர்கள் குறித்த விளக்கம் அவ்வப்பொழுது வருகின்றது. இது போன்ற கட்டுரைகளை மாணாக்கர்களுக்குப் பாடமாக வைக்க வேண்டும். ஒவ்வோர் ஊரிலும் ஊர்ப்பெயர் வரலாறு குறித்துப் பெயர்ப்பலகை வைக்க வேண்டும். ஆனால் அவ்வரலாறு உண்மையானதாக இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டிற்கு ஒன்று கூறுகிறேன்.
  இலங்கையில் மட்டக்களப்பு என்னும் நகரம் இருப்பதை அறிவீர்கள். (இதுகூட பட்டிகோலா அல்லது பட்டிகலோ(Batticaloa)தான்.) இதன் பெயர்க்காரணம் குறித்து, விக்கிபீடியா பின்வருமாறு தெரிவிக்கிறது:
மட்டக்களப்பு எனும் சொல் எப்படி தோற்றம் பெற்றது என்பதில் வெவ்வேறான கருத்துகள் காணப்படுகின்றன. பல தடவைகள் மட்டக்களப்பு பிரதேசம் சிங்கள அரசின் ஆட்சிக்குட்பட்டு இருந்ததால் சிங்களச் சொற்களின் தாக்கம் மட்டக்களப்பில் கலந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சிங்களத்தில் சேறு என்பதைக் குறிக்கும் “மட்ட” என்ற பதமும், வாவியால் அப்பிரதேசம் சூழப்பட்டதால் நீர் தேங்கியிருக்கும் இடத்தினைக் குறிக்கும் “களப்பு” என்ற பதமும் சேர்ந்து மட்டக்களப்பு எனும் சொல் உருவாகியது என்ற கருத்தும் உள்ளது.[பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ். மட்டக்களப்பு: ஆரணியகம். 2005. பக். 75.] 
  உண்மையில் இது நல்ல தமிழ்ப்பெயராகும். களப்பு என்பது ஆழமற்ற நீர்மட்டம் கொண்ட கடல் பகுதியைக் குறிக்கும். நிலத்திற்கு மட்டமாக – இணையாகக் கடல்நீர்ப்பகுதி அமைவதால் அதற்கு மட்டக்களப்பு என்ற பெயர் வந்தது. இந்த அறிவியல் காரணத்தை அறியாமல் சிங்களச்சொல் என்று சொல்வதால் வரலாறு அழிகிறது, தமிழர்க்குரிய நிலம்என்னும் உரிமையாவணமும் காணாமல் போகிறதல்லவா?
  ஈச்சிலம்பற்று ஊரில் ( தை 16, 2048   / 29.01.2017 அன்று) நடைபெற்ற இலக்கியச்சந்திப்பில ஊர்ப்பெயர் சிதைப்புகள் தீமையை விளக்கி இனிமேல் தமிழிலேயே எல்லா மொழிகளிகலும் உச்சரிக்குமாறு வேண்டினேன். வடமாகாண அமைச்சர் திரு  இயோகீசுவரன் தொடக்கத்தில் இருந்து நிறைவு வரை இவ்விழாவில் கலந்துகொண்டார். அவரிடமும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்குமாறு (அறியாமையில்) வேண்டினேன்.
  அமைச்சர் இயோகீசுவரன் மேலும் சில ஊர்ப்பெயர்களையும் அவற்றை எப்படியெல்லாம் சிங்களமயமாக்கி அரசு எழுதி வருவதையும் ஒவ்வொருமுறை எதிர்ப்பு தெரிவித்தாலும் பயனில்லை என்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திணிக்கும் அரசு, படைவீரர்களைக் குடியேற்றும் அரசு அவற்றை யெல்லாம் சிங்களப்பகுதி என்று பொய்யாகக் காட்டுவதற்காகவே செய்வதாகவும் எடுத்துக்காட்டுகளுடன் நன்கு விளக்கினார். எனவே, மக்கள் ஊர்ப்பெயர்களைத் திருத்தமாகக் குறிப்பிட்டால்தான் நம் ஊர்ப்பெயர்களை மாற்றுகிறார்கள் என்ற உணர்வு வந்து எதிர்ப்பார்கள் என்றும்  ஆட்சியில் யாரிருந்தாலும் தமிழர்க்கு எதிரான போக்குதான் இருக்கும் என்றும் ஆனால், இப்போது முறையிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
  எனவேதான் ஈழத்தமிழர்களிடம் வேண்டுகிறோம்! – சிங்கள அரசின் நிலப்பரப்பு வேலைகளுக்கு நம்  செயல்களும் அமைந்துவிடக்கூடாது அல்லவா?
எனவே,
தமிழில் பேசுக!
ஊர்ப்பெயர்களைத் தமிழிலேயே  குறிப்பிடுக!
தமிழிலேயே எழுதிடுக!
தமிழ்ஈழத்தைக் காத்திடுக!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 182,  சித்திரை 03, 2048 / ஏப்பிரல் 16, 2017

Monday, April 17, 2017

தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் – இலக்குவனார் திருவள்ளுவன், நக்கீரன்



தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்


  மக்கள் நலத்திட்டங்களிலும் மொழி வளர்ச்சியிலும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் பல திட்டங்களைச் செயற்படுத்திவருவது தமிழக அரசுதான். இந்த வகையில் தி.மு.க., அதிமுக ஆகிய இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பாளர்களும் இவற்றிற்குக் காரணமான அலுவலர்களும் பணியாளர்களும் பாராட்டிற்குரியவர்களே!
  திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்   அரசின் தமிழ்ப்பணிகள், தமிழ்வளர்ச்சி இயக்ககம் முதலான அரசின் துறைகள், உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் முதலான அரசுசார் நிறுவனங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், ஆசியவியல் நிறுவனம் முதலான நல்கைநிதியுதிவி பெறும் நிறுவனங்கள் மூலம் சிறப்பாக  நடைபெறுகின்றன.
  நம் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு எனச் சூட்டப்பட்டது(1968), தலைநகர் எல்லா மொழிகளிலும் சென்னை என அழைக்கப்பெற்றது(1996), ஆகியன திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு நிலையாகப் பெருமை சேர்ப்பனவாகும். அன்றைய மூவேந்தர்கள், வள்ளல்கள்போல் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள்  மொழிவளர்ச்சியிலும் கலைஞர்கள் நலனிலும் கருத்துசெலுத்துகின்றன. தமிழில் சிறந்த நூல்களுக்குப் பரிசுகள் வழங்கியும் சிறந்த நூல்களை வெளியிட நிதியுதவி வழங்கியும்   உள்நாட்டிலும், அயல் நாடுகளிலும்  பல்வேறு கருத்தரங்கங்கள் நடத்தியும் எழுச்சியையும் படைப்புத்திறன் வளர்ச்சியையும் புதிய படைப்பாளிகளையும் உருவாக்குகின்றனர்.
 அரசு அலுவலகங்களுக்கு  அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் வழங்குதல், மின் காட்சியுரை மூலம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு  செய்துவருவதன் மூலம் பிழையற்ற நல்ல நடையில் அரசின் கோப்புகள் உருவாக வழி வகுக்கப்பட்டுள்ளது
    ’திருக்குறள் முற்றோதல்’ பாராட்டுப் பரிசு, பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதி வழங்குதல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கான பரிசுகள், இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, சொல்வங்கித் திட்டம், தமிழ் கலைக்கழகம் (அகாதமி) அமைத்தல். வேர்ச்சொல் சுவடி வெளியிடுதல். ஆகியவற்றின் மூலம் கலப்பற்ற தூய தமிழ்நடையை மாணாக்கரிடமும் இளைஞர்களிடமும் மற்ற பொதுமக்களிடமும் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகிறது.
   இந்த ஆண்டு மொரிசியசில் தமிழ் கற்பிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டுகளில்,  தமிழறியாமலே தமிழர்கள் மிகுதியாக வாழும்  இலரீயூனியன்(Re Union), பருமா,முதலான நாடுகளுக்கும் தமிழ்க்கல்வி பரவும்.
   உலகத்  தமிழ்ச்சங்கம் சார்பில் ஆண்டு தோறும் அயலகத் தமிழறிஞர்கள் மூவருக்கு  உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்குதல்,  அவர்களின் படைப்புகள் வெளியிடல், ஆய்வரங்கம் நடத்தல்  முதலானவற்றிற்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் உலக அறிஞர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கிடையேயும் பிணைப்பு  ஏற்படும்.   பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கவும் பிற மாநிலத் தமிழ்ச்சங்கங்களுக்கும் அரசு நிதி வழங்குகிறது
  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி இயக்ககம்,  12000 பக்கங்கள் கொண்ட  அகராதித் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது(1974-2011). வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை
  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம், தொல்காப்பியர் ஆய்விருக்கை, திருக்குறள் ஓவியக்காட்சிக் கூடம், உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு-தகவல் மையம், மொழியியல் ஆய்வுக்கூடம், சுவடிகள் பாதுகாப்பு மையம்  ஆகியவற்றைத் தமிழக அரசு அமைத்து வருகிறது. இவற்றின் மூலம் பழந்தமிழ் இலக்கியங்களும் வாழ்வியல் முறைகளும் வரும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து பரப்பப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.
  அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கியும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை. அளித்தும் அவர்கள் நலன் பேணுவதில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
  கொரிய மொழி, சீனம் – அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், ஆத்திச்சூடி மொழிபெயர்ப்பு எனத் .தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பதுடன் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
 ஆண்டுதோறும் 32 பேருக்குத் தமிழ்ச்செம்மல் விருது, ‘தமிழ்த்தாய் விருது’(2012), மகளிருக்கு‘அம்மா இலக்கிய  விருது’(2016), திருவள்ளுவர் விருது  முதலான 14 அறிஞர்கள் ஆன்றோர்களின் பெயரில் விருதுகள்,  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2014) என விருதுகள் வழங்கி, அரசு தமிழ்அறிஞர்களையும் ஆன்றோர்களையும் தமிழ்அமைப்புகளையும் சிறப்பிக்கிறது.
  நாம் சாதனைகளாகக் கூறுவனவே, வேதனைகளாக உள்ள கொடுமைகளும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தான் உள்ளன.
  தமிழ் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்னும் ஆணையும் அப்படிப்பட்ட வேதனைதான். அரசாணையின்படி பத்து வேலையிடங்கள் இருந்தால் தமிழ் படித்தவர்களை முதலில் எடுக்க மாட்டார்கள். 200 வேலையிடங்களை நிரப்ப வேண்டும் என்றால்,   இட ஒதுக்கீட்டின்படி, 18, 19, 23, 26, 150, 166, 188 ஆவது இடங்கள்தாம் தமிழில் படித்தவருக்கு அளிக்கப்படும். சமூக நீதி வழங்குவதுபோல் காட்டப்பட்டுத் தமிழுக்கான சமநீதி மறுக்கப்பட்டுள்ளதே!
           ஊர்திகளில் தமிழ் எண்களைப் பயன்படுத்த அரசாணை பிறப்பித்தார்கள்.  இந்த ஆணையும் முழுமையாக இல்லை. இப்படியாகப் பொதுவாக அரை குறை ஆணைகளைப் போட்டுவிட்டுப் பெருமை பேசுவதால் தமிழ் வளர்ந்து விடுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
 அரசாணை நிலை எண்: 117 நாள்: 29.01.1982 இன்படிப் பெயர்ப்பலகைகள் தமிழ், ஆங்கிலம், பிற மொழிகளில்  5; 3: 2 பங்கு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
  அரசாணை நிலை எண்: 24 நாள்: 06.01.1982 என்பதன்படித் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தாத பணியாளர்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  .
 அரசாணை நிலை கல்வித்(த.வ.)துறை எண் 1134 நாள் 21.06.1978 இன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில்தான் கையொப்பமிடவேண்டும்.
  இவை யாவும் ஏட்டளவு ஆணைதான்.
  அரசாணை நிலை  த.வ.ப.அ.துறை எண்: 431 நாள்: 16.09.1998 இன்படி நம் பெயருக்கு முன் அமையும் முதல் எழுத்துகளை எல்லா இடங்களிலும் தமிழில்தான் குறிக்க வேண்டும். ஆனால், இப்பொழுது தமிழ்ஆட்சி மொழித்துறையைப் பார்க்கும் அமைச்சரின் முதல் எழுத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளது.
  அரசாணை நிலை  பொது(த.வ.)துறை எண்: 1609 நாள்: 02.08.1968 இன்படித் தலைமைச் செயலகத்தில் நிதி, சட்டம்,  சட்ட மன்றம் ஆகிய துறைகள் நீங்கலாக அனைத்துத்துறைகளிலும் தமிழே பயன்படுத்தப்பட வேண்டும். இப்பொழுதும்  பல  துறைகளிலிருந்து ஆங்கிலத்தில்தான் மடல்கள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு ஆங்கிலக்காவலர்போல் செயல்பட்டு ஆங்கிலத்தையே அலுவல் மொழியாகப் பயன்படுத்தி வருகிறது.
  இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய தமிழ்வளர்ச்சிச் செயலகத்திடம் முறையிட்டால் தொடர்பான ஆணைகளை இணைத்து இவற்றின்படிச் செயல்படுங்கள் எனப் பொதுவாக மட்டும் கூறி அமைதி காக்கிறது.
 திராவிடக்கட்சிகள் ஐம்பது ஆண்டுக்காலத்தில் தமிழுக்குத் செய்தனவாக பெரும்  பட்டியல் இடும் அளவு அருவினை புரிந்துள்ளார்கள் – சாதனை செய்துள்ளார்கள்.
     முந்தைய   பேராயக்கட்சியான காங்கிரசு தொடர்ந்திருந்தாலோ, இந்தியக் கட்சி எதுவும் ஆட்சிக்கு வந்திருந்தாலோ தமிழ்நாடு,  இந்தி நாடாக மாறியிருக்கும். இருப்பினும் திராவிடக்கட்சிகள் வசைக்கு ஆளாவதன் காரணம் என்ன?
 பேரறிஞர்  அண்ணா முதல்வராக இருக்கும்பொழுது ஐந்தாண்டிற்குள் முழுமையும் தமிழை ஆட்சிமொழியாகச் செயல்படுத்துவதாக அறிவித்தார். ஆனால், பத்து x  5 ஆண்டுகள் ஆன பின்னும் அத்திட்டம் முழுமையாகவில்லையே!
  பேராயக்கட்சி/காங்கிரசு ஆட்சியில் பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி இருந்தது. தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மேற்கொண்ட போராட்ட முயற்சிகளால் ஆங்கில வழிக்கல்வி இருந்த கல்லூரிகள் தமிழுக்கு மாறத் தொடங்கிற்று.  ஆனால் தமிழாகக் காட்சியளித்த திராவிடக் கட்சிகள் ஆட்சியில், பள்ளிகளிலும்   – அதுவும் மழலைக்கல்வியிலும் – ஆங்கிலம் குடிபுகுந்தது.
  இந்தித் தீயிலிருந்து தமிழ்ப்பயிரைக் காப்பதற்காக ஆங்கிலத் தண்ணீரை ஊற்றி ஓரளவு காப்பாற்றியவர்கள்ஆங்கில நீரில் தமிழ்ப்பயிர் அழுகிப் போகச் செய்துவிட்டார்களே!
 தமிழே அறியாமல் இரண்டு தலைமுறைகள் வளர்ந்துவிட்ட அவலம் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தானே வந்துள்ளது?
  தமிழ் தொடர்பான துறை என்றால்,  தமிழ்ப்புலமையல்லாதவர் அல்லது தமிழரல்லாதவர்களையே பொறுப்பில் அமர்த்துவதே திராவிடக்கட்சிகளின் வழக்கம். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே தமிழில் புலமை பெற்றிருக்கத் தேவையில்லை என்னும் பொழுது பிற இடங்களில் மட்டும் தமிழ் படித்தவர்களுக்கு வேலையா கிட்டும்?
 ஒருமுறை மாநிலத்தீர்ப்பாய நீதிபதி ஒருவர், “தமிழ் படித்தவர்களுக்குத்  தமிழ்வளர்ச்சித் துறையில் என்ன வேலை? வேறு எங்காவது போக வேண்டியதுதானே” என்று கேட்டார். தமிழ் படித்தவர்கள் பிச்சை எடுக்கப்போக வேண்டும் என்று கருதினார் போலும்! என்றாலும் இப்போது அந்த நிலை மாறி வருகிறது.
  பொதுவாக நாம்   அரசை மட்டும் கூறிப்பயனில்லைதான். செயல்படுத்தும் நிலையில் இருக்கும் நம்மைப் பொருத்துத்தான் சாதனையும் வேதனையும்.  நாமும் அவரவர் நிலையில் தமிழைப் பயன்பாட்டுமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர்களுடன் தமிழில் பேசவும் தமிழர்களிடையே தமிழில் எழுதவும் தமிழ்ப்பெயர்களிட்டும் தமிழில் வழிபட்டும் தமிழோடு இணைந்து இருக்க வேண்டும்.
அரசு .இனியேனும் விழிக்கட்டும்! தமிழை என்றும் உள்ள மொழியாக்கட்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
– நக்கீரன் தொகுதி 29:  வெளியீடு 122 நாள் ஏப்.17-19, 2017
பக்கங்கள் 26-28

Followers

Blog Archive