Thursday, May 25, 2017

தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!





தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார்,
செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப்
பாராட்டுகள்!

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
என்றார் ஔவையார்(மூதுரை 10).
வல்லார் ஒருவர் உளரேல் அவர் செயலால்
எல்லார்க்கும் விளையும் நன்மை
என நாம் சொல்லலாம்.
  பணியாற்றும் இடங்களில் எல்லாம் பாங்குடன் செயல்படும் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறைச் செயலர் பொறுப்பேற்ற பின்னர், பள்ளிக்கல்வித்துறை, நூலகத்துறை முதலானவற்றில் அனைத்துத் தரப்பாரும் போற்றும் வண்ணம் நற்செயல்கள் புரிந்து வருகின்றார்.
  பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கல்விநலனில் கருத்து செலுத்தும்  வண்ணம் செயல்படுவதால்,  இருவரும் இணைந்து பள்ளிக்கல்வித்துறையில் புதிய மாற்றங்களைக் கொணர்ந்து வருகின்றனர்.
  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காட்சிக்கு எளியராக உள்ளதால், அவருடனும் கலந்து பேசி கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்துவது எளிதாகிறது.
  இம்மூவர் கூட்டணியால் பள்ளிக்கல்வித்துறை அடைந்துவரும் மாற்றங்களை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவதிலிருந்தே அவையாவும் வரவேற்கத்தக்கனவே என்பதைப் புரிந்து  கொள்ளலாம்.
  மேனிலைப்பள்ளி இறுதித்தேர்விலும் (+2) உயர்நிலைப்ள்ளி இறுதித்தேர்விலும் (10) மதிப்பெண்தரவரிசையை அறிவிப்பதற்கு முற்றுப்புள்ளி இட்டுள்ளது தமிழக அரசு.  ஆனால், தரநிலையை அறிமுகப்படுத்தியதுபோல் ஊடகங்களில் வந்துள்ளன.  அரசாணையில் அவ்வாறில்லை. சில உரைகளில் மத்தியக் கல்வி நிலையுடன் ஒப்பிட்டுக் கூறியதால் அவ்வாறான எண்ணம் பரப்பப்பட்டுள்ளது.
 மாநில முதல் மதிப்பெண் என்பதுபோன்ற உயர்நிலை வரிசையை அறிவிக்கும் முறையை நிறுத்தியதால், மாணாக்கர்களை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக உருவாக்கிக் கல்வி வணிகம் புரிவோர்  கொடுஞ்செயலுக்கும் முற்றுப்புள்ளி இடப்பட்டுவிட்டது.
  12 ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களை 11 ஆம் வகுப்பிலேயே திணித்து, மாணாக்கர்களுக்கு ஓராண்டிற்குரிய பாடத்திட்டங்களை இருட்டடிப்பு செய்யும் நிலையையே தனியார் பள்ளிகளும் ஆங்கில வழிப்பள்ளிகளும் நடைமுறைப்படுத்தி வந்தன. இதனால் மாணாக்கர்களுக்குச் சிந்திக்கும் திறன் இல்லாமல் போனது. மருத்துவம், பொறியியல் முதலான மேற்கல்விக்குச் செல்லும் பொழுது பெரிதும் இடர்ப்பட்டனர். மிகுதியான மதிப்பெண்கள் பெற்றுக் கல்லூரியில் சேர்ந்தவர்கள், தோல்வியைத் தழுவும் நிலையே ஏற்பட்டது. 11 ஆம் வகுப்பிலும் பொதுத்தேர்வு என்பதால் கல்வி வணிகர்களின் தவறான சந்தைப்படுத்தலுக்கும் முடிவுகட்டியாகிவிட்டது.
  கல்வி உளவியலாளர்கள் நீண்டகாலமாகச் சொல்லி வந்தவை நிறைவேற்றப் படுகின்றன.
   மாணாக்கர்கள், 10, 11, 12 எனத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதுவதால்,அவர்களின் உளநிலை பாதிக்கப்படும் என்றும் பேசப்படுகிறது. கல்லூரிகளில் பருவமுறைத்தேர்வு என ஆண்டிற்கு இரு முறைகள் பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. இவற்றையும் பருவமுறைத் தேர்வுகள் எனக் கருதலாம்
 அரசின் அறிவிப்புகள் தமிழ்வழிப்பள்ளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
 எனினும் அரசு,
  ஆங்கிலவழிப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தினால்தான் மாணாக்கர்கள் வளர்ச்சி  பெறுவர்.
  பள்ளியாக இருந்தாலும் கல்லூரியாக இருந்தாலும் தத்தம் சொந்தப்பணத்திலிருந்து கல்விக்கூடத்தை நடத்தக்கூடிய செல்வநிலை உள்ளவர்களுக்கு மட்டுமே அரசு இணைப்பாணை வழங்க வேண்டும். இப்பொழுது உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் இது குறித்து விவரம் கேட்டு இயலாதவர்களின் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
   சொந்தச் செல்வத்தில் பள்ளிகளை நடத்தமுன்வருவோர், எவ்வகைக் கூடுதல் கட்டணமும் பெறக்கூடாது எனவும் இலவசக் கல்வியாக அளிக்க வேண்டும் எனவும்  நடை முறைப்படுத்திஅனைவருக்கும் இலவசக் கல்வியே அளிக்க வேண்டும்.
  10, 10+2 என்னும் முறைக்கு மாறாக, 11, பட்டமுன்வகுப்பு என நடைமுறைப்படுத்தலாமா எனவும் அரசு சிந்தித்துப் பார்த்துத் தக்க முடிவெடுக்க வேண்டும்.
  சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு வரையறை வேண்டும். குறிப்பிட்ட சிறுபான்மைக் குமுகாயம்(சமுதாயம்) மொத்த மக்கள் தொகையில் இருக்கக்கூடிய விழுக்காட்டு அளவிற்கு அவர்கள் நடத்தும் பள்ளியின் எண்ணிக்கை, மொத்தப்பள்ளிகளின் விழுக்காட்டிற்கு மிகாமல் அமைய வேண்டும். அஃதாவது சிறுபான்மைக் குமுகாயம் ஒன்று மொத்த மக்கள் தொகையில் 5% இருக்குமெனில், அக் குமுகாயம் நடத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை 5% இற்கு மிகக்கூடாது. வரம்பின்றிச் சிறுபான்மைக் கல்விக்கூடங்கள் பெருகுவதும் ஆங்கிலவழிக்கல்விப் பெருக்கத்திற்குக் காரணமாகும். (பணிஅமர்த்தங்களில் இட ஒதுக்கீட்டிற்கு சிறுபான்மைக் கல்வியகங்களில் இடமில்லை. எனவே, இட ஒதுக்கீட்டிற்குரியோர் பாதிக்கப்படும் அவல நிலையும் உள்ளது.)
  அரசு பள்ளியிலும் தனியார் பள்ளியிலும் ஊதிய விகிதம் இணையாக இருக்க வேண்டும்.
     எல்லார்க்கும் எல்லாமும் தமிழில் என்பதுநோக்கிப் பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டும்.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
வல்லவர்கள் உள்ள அரசால்  இஃது இயலும்!
உதயச்சந்திரன்  எண்ணினால் முடியாதது ஒன்றுமில்லை.
செங்கோட்டையார் இதற்கேற்பச் செயல்பட்டால் தமிழ்நாடு கல்வியில் தலைநிமிர்ந்து நிற்கும்!
எடப்பாடியார் வழிகாட்டினால், வளமான தமிழ்நாட்டை நாம் விரைவில் காணலாம்!
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 666)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை :அகரமுதல 187, வைகாசி 07,2048 / மே 21, 2017

Tuesday, May 23, 2017

ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்




ஈழம் : துயரம் விலகவில்லை !

என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை!

   ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம் மீண்டும் உரிமையாட்சி செய்வதே தமிழர்களின் இன்னல்களைப் போக்கும்; நன்மைகளைப் பெருக்கும் என்ற  முடிவிற்கு வந்தனர். எனவே, தமிழர்கள் நெருக்கமாக வாழும் தமிழ்ப்பகுதிகளை இணைத்துத் தமிழீழம் கேட்டனர். அமைதிவழி அறப்போராட்டங்களும் அரச அடக்குமுறைகளின் துப்பாக்கிக்குண்டுகளால் எதிர்கொள்ளப்பட்டன. எனவே, அமைதிவழியினும் மற வழியே சிறந்தது எனத் தாங்களும் ஆயுதங்களைக் கைகளில் எடுத்தனர்.  இந்திய அரசு ஒதுங்கி யிருந்தால் என்றோ தமிழீழம் மலர்ந்திருக்கும்! உயிர்ப்பலிகள் தடுக்கப்பட்டிருக்கும்! பன்னாட்டு மன்றங்களில் தமிழீழக் கொடிகள் பறந்திருக்கும்! உலகெங்கும் தமிழீழத் தூதர்கள் தமிழ்ப்பணிகளும் மக்கள்நலப்பணிகளும் ஆற்றிக்  கொண்டிருந்திருப்பர்.
  ஆனால், அண்டை நாட்டின் வஞ்சகத்தாலும் பிற உலகநாடுகளின்  ஏமாற்று வேலைகளாலும் ஈழத்தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டனர். 2009 மேத்திங்கள் பெரும் அவலம் நேர்ந்தது.  கொத்துக்குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் இருநூறாயிரவர்கள் அழிந்தனர். ஈழ நிலப்பகுதி அழிக்கப்பட்டது. புறநானூற்றின் இலக்கணமாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால்  கொடுமைகளால் ஆயுதங்களை அமைதியாக்கினர். மேதகு பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நல்லரசு சிதைக்கப்பட்டது.
   ஈழத்தமிழர்களின் வாக்குச்சீட்டு என்னும் ஆயுதம் இலங்கை அரசை மாற்றியது. எனினும் துயரம் தீரவில்லை. இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை. நேற்றுவரை உடன் குற்றவாளியாக இருந்தவர்கள் எப்படித் திருந்துவர்? எனினும் சிங்கள வெறியர்களின் நெருக்குதல் இல்லையெனில், புதிய அரசு,. சில நன்மைகளைத் தமிழர்களுக்கு ஆற்றியிருக்கும். சிங்களவன் கைகளில் ஆட்சிக்கோல் இருக்கும்வரை தமிழர்களின் நிலையில் மாற்றமிராது என்பதே உண்மை என்பதையே தமிழர்கள் உணர்ந்து கூறி வருகின்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் உயிர்ப்பலிகள், உடைமை இழப்புகள் போன்ற துயரங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் சூழல் அவர்களை அமைதியாக இருக்கச் செய்துள்ளது. அமைதி காத்தாலும் அவர்களின் உள்ளங்களில்  உரிமைத் தீ கனன்று கொண்டுதான் உள்ளது.
  ஈழத்தமிழர்களுக்கான நீதி கேட்டு, தனியுரிமையுடன் ஆட்சியமைக்க உரிமைகேட்டுப் புலம் பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் கருத்தாடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
   பதவி ஆசையும் பிற ஆசைகளும் உடைய சிலரும்   தமி்ழ்ஈழத்தை ஆதரிப்பதுபோல் நடித்து ஈழப்போராளிகளுக்கு எதிரான கருத்தை விதைக்கும் கயமைத்தனம் உடைய சிலரும் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். அதே நேரம் கையறு நிலையில் உள்ள ஈழத்தமிழர்கள் விடிவை எதிர்நோக்கி அமைதி காத்து வருகின்றனர். இதனால், அவர்கள் சோர்ந்துவிட்டார்கள் என்றோ, கயமைக்குப்பலியாகிவிட்டனர் என்றோ பொருளல்ல!
  • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவரம் இன்னும் தெரியவில்லை.
  • தமிழர் பகுதிகிளில் சிங்களக் குடியிருப்புகளும் சிங்களப் படைக்குடியிருப்புகளும் பெருகி வருகின்றன.
  • தமிழர்களைத் தமிழ்ப்பகுதிகளிலேயே சிறுபான்மை ஆக்கும் முயற்சிகளில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது.
  • வீடிழந்தவர்கள் 100 பேர் இருக்கும் இடத்தில் ஒருவருக்கு வீடுகொடுத்து அனைவருக்கும் வீடு கொடுத்ததுபோல் விளம்பரம்செய்து உலகமக்களிடம் தமிழர்கள் நல்வாழ்வில் கருத்துசெலுத்துவதுபோல் ஏமாற்றுவதும் தொடர்கின்றது.
  • வெண்ணூர்தி(வெள்ளைவேன்) கடத்தல் தொடர்கி்ன்றது.
  • சித்திரவதை முகாம்களில் உள்ளவர்கள் விடுவிக்கப்படவி்ல்லை.
  • இனப்படுகொலையால் உயிர்ப்பலியான குடும்பத்தாரின் நினைவைக்கூடப் போற்றத் தடை
  இவ்வாறான பலவற்றை ஈழத்தமிழர்கள் துயரத்துடன் தாங்கிக் கொண்டுள்ளனர். இவற்றிற்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளனர்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்(திருவள்ளுவர், திருக்குறள் 487).
  பகைவர் தீங்கு இழைத்தவுடன் சினந்தெழாமல், அறிவுடையோர் உள்ளத்தில் சினத்தை வளர்த்துத்  தக்க காலம் பார்த்துக் காத்திருப்பர் என்னும் வள்ளுவர் நெறியின்படி ஈழத்தமிழர்கள்  உரிய காலம் வரும்வரை வெளிப்படையாகக் களத்தில் குதிக்கமாட்டார்கள். எனவே, ஈழத்தமிழர்கள் அமைதியைத் தவறாக எடைபோடக்கூடாது.
  முள்ளிவாய்க்கால் அவலத்துடன் தமிழ் ஈழத்திற்கு முற்றுப்புள்ளி இடவில்லை. அரைப்புள்ளிதான் இடப்பட்டுள்ளது. எனவே, “ஈழம் மலரும்! மலர்ந்தே தீரும்!” என்பதே தமிழர்களின் நம்பிக்கை!
  ஈழத்தமிழர்களின் துயரம் விலகவில்லை! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! என்பதே உண்மை.
  நம்பிக்கை பொய்க்காது,  ஈழம் மலரட்டும்! துயரம் விலகட்டும்! அமைதி நிலவட்டும்! மகிழ்ச்சி நிலைக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல 186,  சித்திரை 31, 2048 /  மே 14, 2017

Sunday, May 14, 2017

அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்




அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி  இந்தி ஒழியாது!

   இந்தித்திணிப்பு என்பது புதிய செயல்போல் தலைவர்கள் அவ்வப்பொழுது அறிக்கை விடுவதும் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்தியை  எதிர்த்து அறிக்கை விடுவதால் எப்பயனும் இல்லை.
  “இந்தியைத்திணித்தால் எரிமலையாவோம்”, “இந்தியைத்திணித்தால் புரட்சி வெடிக்கும்! தூங்கும்புலியை இடறாதீர்!”, “நாங்கள் இருக்கும் வரை இந்தியைத்திணிக்க விடமாட்டோம்” என்பனபோன்ற வெற்றுக்கூச்சல்களை அரசியல் தலைவர்கள் நிறுத்த வேண்டும்.
   நம்மைப்போல், “என்றும் இந்தி! இன்றும் இந்தி!” என்று சொல்லிக்கொண்டிராமல் எங்கும் எதிலும் இந்தியை மத்திய அரசு திணித்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், எப்பொழுதாவது ஏதும் செய்தி வெளியானால் அப்பொழுதுதான் இந்திதிணிக்கப்படுவதுபோல் நாம் வெறும்கூச்சல்போட்டு மறந்துவிடுகிறோம். இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு தன் கடமையைச் செவ்வனே செய்து வருகிறது.
  எங்குதான் இந்தி இல்லை! பதவிப்பெயர்கள் எல்லாம் இந்தி! திட்டங்களின் பெயர்கள்  எல்லாம் இந்தி! உணவுப் பெயர்கள் எல்லாம் இந்தி! இப்பொழுது (ஞ்)சன் ஆஃகார் (jan aahaar) என்பதுபோல் கடைப்பெயர்கள் எல்லாம்  இந்தி!   தொடரி, வானூர்திப் பயணச்சீட்டுகளில் இந்தி! பாதுகாப்பு அறிவிப்புகள் தாய்மொழியில் – நமக்குத் தமிழில் இருக்க வேண்டும். ஆனால், அவரசக் கதவு என்ற அறிவிப்பும், அதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்ற அறிவிப்பும், அபாயச்சங்கிலி அறிவிப்பும் இந்தியில்தான்! தொடரி(தொடர்வண்டி)களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து அறிவிப்பும் இந்தியில்தான்! மத்திய அரசின் பள்ளிகளில் இந்தி!  பிற பெரும்பாலான மாநிலப்பள்ளிகளிலும் இந்தி! இப்பொழுது மத்திய அரசு விண்ணப்பங்களிலும் இந்தி!  கையொப்பங்களில் இந்தி! பணித்தகுதிகளில் இந்தி! விளம்பரங்களில் இந்தி! வானொலிகளில் இந்தி! தொலைக்காட்சிகளில் இந்தி!
     இந்தி நம் வரவேற்பு அறையில்  அமர்ந்து கொண்டுள்ளது; படுக்கையறையில் வீற்றிருக்கிறது; சமையல் அறையில்கூட ஆட்சிசெய்கிறது; நாளும் செவிகளில் இந்திச்சொற்கள் விழுந்து கொண்டிருக்கும் வண்ணம் ஊடகங்கள் கொடுஞ்செயல் ஆற்றிக் கொண்டுள்ளன. கல்வியில் இந்தி தொடக்கம் முதல் நுழைக்கப்பட்டு அங்கிருந்து தமிழ் அகற்றப்பட்டுவிட்டது.
   உச்சநீதிமன்ற நீதிபதி முதலான  மத்திய அரசுப் பதவிகளில் பொறுப்பு ஏற்கும் யாராயினும்  இந்தியில் கையொப்பம் இட்டால்தான் வேலையில் சேரமுடியும். இந்தி தெரிந்தவர்களுக்குத்தான் மத்திய அரசிலும் அரசுநிறுவனங்களிலும் பணி வாய்ப்பு. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 15,  சமயம், இனம்குலம், பால், குடிவழி, பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறதே தவிர, மொழிப்பாகுபாடு குறித்துக் கூறவில்லை. எனவே, இந்தி அறிந்தவர்களுக்கு வாய்ப்பு என்னும் சமன்மைக்கு எதிரான நிலைமையே இந்திய அரசின் செயலாக்கமாக உள்ளது.
  பணத்தாளில் இந்தி எண் (தேவநாகரி) திணிக்கப்பட்டதும் அரசமைப்புச்சட்டத்தின்படிதான். இந்திய அரசமைப்புச்சட்டப்பிரிவு 351 இன்படிஇந்தியைப் பரப்புவது மத்திய அரசின் கடமை. அந்தக் கடமையை அது செய்கிறது.
  ஏதோ இதுவரை இந்தியே திணிக்கப்படாததுபோலும் இப்போதுதான் முதன் முறையாக   இந்தி திணிக்கப்படுவதுபோலும் கூக்குரலிடுவது குறித்து மத்திய அரசு கவலைப்படுவதில்லை.
  “இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை” என்று முன்னர்க் (02 ஏப்பிரல் 2017) குறிப்பிட்டிருந்தோம். அதுதான் உண்மை. அரசியலமைப்பின்படி இந்தியை மத்திய அரசின் மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடும் பொழுது எதிராக அறிக்கை விடுவது விழலுக்கு இறைக்கும் நீரே!
  அப்படியானால் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றால் அதுதான்  இல்லை.
இந்தி நம்மை இரண்டாந்தர மக்களாக ஆக்குவதுடன் நம் மொழியையும் இனத்தையும் அழிக்கிறது. எனவே எதிர்த்துத்தான் ஆக வேண்டும். அதற்குப் பின்வரும் உறுதிகளை நாம் ஏற்க வேண்டும்
  1. இந்தியை எதிர்க்கவில்லை. இந்தித்திணிப்பை எதிர்க்கிறோம் எனப் பிதற்றுவதை நிறுத்த வேண்டும். கல்விச்சந்ததை மூலம் பள்ளிகளில் இந்தியைத் திணிப்பவர்கள் இத்தகைய கருத்துகளை அள்ளவீசுகிறார்கள். அப்பாவித்தனமாகச் சிலர், “நம் நாட்டு மொழி்யை நாம் எதிர்க்கலாமா” என எண்ணுகின்றனர்.
  நம் மொழிக்கு நாம் செலவிடவேண்டிய தொகையைக் கொண்டு விருப்பப்பாடம் அல்லது வேறு ஏதேனும் பெயரில் இங்கே இந்தி கற்பிக்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்தியால்  என்ன தீமை வரும என்கிறார்களே, அவர்கள், இந்தி, இந்தியத்துணைக்கண்டத்திற்கு வந்த அயலவர் ஆட்சியால்  இறக்குமதியாகி உருவான அயல்மொழி என்பதையும் இன்றைக்குத் தேசிய மொழி, பொதுமொழி, அலுவலக மொழி என்றெல்லாம் சொல்லப்பட்டு இம் மண்ணிற்குரிய பிற மொழிகளை அது விழுங்கிவருவதையும் உணராதவர்களே! எனவே, தமிழ்நாட்டில் எல்லாக் கல்வி நிலைவயங்களில் இருந்தும் இந்தி அகற்றப்பட வேண்டும். இந்தியைத் தாய்மொழியாக உள்ளவர்கள் அதற்கான சான்றிதழ் அளித்துத் தமிழையும் படிப்பதாக இருந்தால் அவர்கள் இந்தி பயில்வதற்கு ஏற்பாடு செய்யலாம். எனவே, இந்தி வேண்டா! வேண்டவே வேண்டா! என்பதே நம்  முழக்கமாகவும் செயற்பாடாகவும் இருத்தல் வேண்டும்2.
2.இந்திய அரசியல் யாப்பில் உள்ள பதினேழாம் இயல் அடியோடு நீக்கப்பட்டுப் புதிய விதிகளுடன் அவ்வியல் சேர்க்கப்படவேண்டும்.
  எட்டாம் இணைப்புப்பட்டியல்களில் உள்ள மொழிகளை இயலின் பகுதியாகக் குறிப்பிட்டு அனைத்தையும் தேசிய மொழிகள் என்றே குறிக்க வேண்டும். வட்டார மொழிகள் எனக் குறிக்கக் கூடாது எனக் குறிப்பும் இருக்க வேண்டும்.
   இந்தி பெரும்பான்மையர் மொழி அல்ல என்றும்  தவறான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அம்மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசியல் யாப்பிலேயே குறிக்க வேண்டும்.
  அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநிலத் தேசிய  மொழியே எல்லா நிலைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மத்தியஅரசும் இதைச் செயற்படுத்தஉதவ வேண்டும் என்பதையும் குறிக்க வேண்டும்.
  சமற்கிருதம் என்பது தமிழ், பாலி, பிரகாருதம் முதலான மொழிகளில் இருந்து செய்யப்பட்ட மொழி என்பதையும் தமிழே இந்த மண்ணின் மொழி, மூத்த செம்மொழி  என்பதையும் அரசியல் யாப்பிலேயே குறிக்க வேண்டும். எனவே, தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்பதையும் அரசியல் யாப்பில் சேர்க்க வேண்டும்.
  3.தமிழை இந்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க  வேண்டும். இப்பொழுது நடைமுறையில் உள்ள இந்தி, ஆங்கிலம் இரண்டும் தொடர்ந்து அலுவல் மொழியாக நீடிக்கும் எனவும் அறிவிக்க வேண்டும்.
   அப்படியானால், எல்லா மொழிகளும் அலுவல் மொழிகளாக  அறிவிக்கப்பட வேண்டாவா? என்கிறீர்களா? அவ்வாறு கேட்பது நம் வேலையல்ல! யாரேனும் எங்கள் மொழிக்கும் அலுவலக மொழித்தகுதி வேண்டும் என்று போராடி நம்முடன் இணைய முன்வந்தால் இணைந்து போராடலாம். நாம்,  தமிழை இந்தியஅரசின் அலுவல்மொழியாக அறிவிக்கச்செய்தால், போட்டி போட்டுக்கொண்டு பிற மொழியினரும் தத்தம் மொழியையும் அலுவல் மொழியாகஅறிவிக்கப் போராடுவார்கள். அம்முயற்சி வெற்றி பெறும் பொழுது இந்தி தானாகவே அகலும்.
  4.இந்திய அரசியல் யாப்பில் இந்தி என முதன்மையாகக் குறிக்கப்படும் எல்லா நேர்வுகளிலும் தமிழ் என்பதும்  இடம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
  5. மத்திய அரசின் அதிகாரங்களாக, ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான சிக்கல், நாட்டுப்பாதுகாப்பு, நாணயம் முதலான சில தொடர்பானவை மட்டுமே இருந்தால், மாநிலங்கள் மத்தியஅரசுடன் தொடர்பு கொள்ளும் நேர்வு குறைவாகவே இருக்கும். இதனால், பொதுமொழி என்ற சிக்கல் எழாது.
6. மாநிலங்களவையின் உறுப்பினர் தெரிவு அமைப்பு மாற்றப்பட வேண்டும். மாநிலம்  பெரியதாக இருந்தாலும், சிறியதாக  இருந்தாலும் மாநிலங்களவையில் சம எண்ணிக்கையில்தான்  உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒரு மாநிலம் தொடர்பான சிக்கலில் அந்த மாநில உறுப்பினர்கள் வாக்கே முதன்மையாகக் கருதப்பட்டு அவர்களுக்கு மறுப்புறுரிமை (வீட்டோ) அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பானவற்றில் மட்டுமே மாநிலங்களவை தீர்மானிக்க வேண்டும். இதுபோல் மாநிலத்தன்னாட்சி நடைபெற்றால் மொழிச்சிக்கல் எழாது. தொடர்புமொழியான ஆங்கிலமே போதுமானது.
  இவ்வாறு அரசியல் யாப்பில்  திணிக்கப்பட்டுள்ள எல்லாம் இந்தி என்ற நிலைப்பாட்டை  எதிர்த்துப் போராடி வெற்றி காணாமல், தவணை முறையில் இந்தி எதிர்ப்புக் கூச்சல் போடுவதில் பயனில்லை என்பதை அரசியல் தலைவர்கள் உணர்ந்து மக்களுக்கும் உணர்த்த வேண்டும்.
அரசியல் யாப்பைத் திருத்துவோம்!
இந்தியை மத்திய அரசிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் அகற்றுவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 185,  சித்திரை 24, 2048 /  மே 07, 2017

Followers

Blog Archive