அண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்புத்
தேர்வில் முதல்நிலைகளில் மதிப்பெண் எடுத்திருந்தவர்கள் எடுத்துள்ள
மொழிப்பாடம் சமற்கிருதம். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவ்வாறுதான்
உள்ளது. ஆனால், இவர்கள் பெற்ற சமற்கிருதக் கல்வி இதே வகுப்பில் உள்ள
தமிழ்ப் பாடக் கல்விக்கு இணையானது அல்ல. தொடக்க நிலைபோன்ற பாடத்திட்டமும்
அதற்கேற்ற எளிய வினாக்களும் கொண்டதே சமசுகிருதப்பாடம். இரு வேறுபட்ட நிலையில் உள்ள மொழிப்பாடங்களின் மதிப்பெண்களை இணையாகப் பார்ப்பதே தவறாகும்.
சமற்கிருத மொழியைச் செத்த மொழி என்கிறோம். ஆனால், மத்திய அரசின்
முயற்சியால் உலகெங்கும் அம்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும்
மிகுதியாகக் கற்பிக்கப்பட்டு வருவதுபோல் தமிழ்நாட்டிலும் கற்பிக்கப்பட்டு
வருகிறது. தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் சமற்கிருதம் மட்டுமே சொல்லித்
தரப்படுவதால் அப்பகுதி மக்கள் அதனைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய
சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். நம்மைப் பொருத்தவரை ‘தமிழ் வாழ்க!’
என்று உதட்டிலிருந்து ஒலி எழுப்பினால் போதும்! தமிழ் வாழ்ந்து விடும் என
எண்ணிக் கொண்டு உலகின் மூத்த மொழியான செந்தமிழை எல்லா இடங்களிலும்
ஒழித்துக் கொண்டு வருகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழை வாழ
வைக்காமல், தமிழே இல்லாமல் சமற்கிருதத்தைப் படிக்க எல்லா வசதிகளும் செய்து
தருகிறோம். தமிழ்நாட்டில் சமற்கிருதம், இந்தி, உருது, அரபி, பிரஞ்சு,
செருமனி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளுள் ஒன்றையும்
ஆங்கிலத்தையும் படித்தால் போதும். தமிழ்நாடு என்பது அயலவருக்கான நாடுதானே!
அதனால் தமிழ் தேவையில்லை! ஒருவேளை, தமிழர் சிறுபான்மையர் ஆனபின்பு, சிறுபான்மையர் மொழி எனத் தமிழுக்கு முதன்மை அளித்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களோ?
தமிழ்நாட்டில் தமிழே தெரியாத ஒருவர்
தமிழைச் சிறிதும் அறிந்து கொள்ளாமல் படித்து உயர் பட்டங்கள் வரை பெற
முடியும்; எவ்வகைப் பணிகளிலும் சேர முடியும்; எவ்வகைத் தொழிலையும் நடத்தி
மிகு செல்வங்கள் ஈட்ட முடியும் என்பது உலகறிந்த உண்மைதான். ஆனால், இந்த நிலை நீடித்தால், தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் பேரழிவு என்பதை நாம் உணர வேண்டும்.
உணர்ந்து இந்த இழிநிலை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பொழுதேனும் நாம், தமிழுக்கு எதிரான அநீதியைத் தடுக்கத் தவறினால் இனி
என்றும் முடியாது என்பதையும் நாம் அறிய வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி மட்டும் இருக்கவும் தமிழ், நாட்டவர் அனைவரும் படிக்கும் மொழிப்பாடமாக இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நன்னிலை வரும்வரை, பின்வரும் மொழித்திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
1. முதல் பகுதி என்பது தமிழ் மட்டுமே!
2. ஆங்கில வழிப்
பயில்பவர்கள் தமிழைக் கட்டாயமாக ஒரு மொழிப்பாடமாகப் படிக்க வேண்டும்.
ஆங்கிலவழிக் கல்வி என்ற போர்வையில் தமிழைப் புதைக்கக்கூடாது என்பதற்காக
இதைத் தனியாக வலியுறுத்த வேண்டி உள்ளது.
3. ஆங்கில வழிப்
பயில்பவர்களுக்கு அவர்கள் படிக்கும்துறை சார்ந்த தமிழ்த்தாள் ஒன்று
புத்தகங்களைப் பார்த்து எழுதும் வகையில் இருக்க வேண்டும். இப்பொழுது
ஆங்கிலவழிக் கல்வி பயில்பவர்கள் தமிழ் கற்க வேண்டும் என்பதற்காகத்தான் 2, 3
ஆம் குறிப்புகள் தேவை. எல்லாரும் தமிழைப் படித்தாக வேண்டும் என்ற சூழல்
இருப்பின் இவற்றுக்குத் தேவை இரா.
4. திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாளிலும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.
5. மத்திய அரசின்
பள்ளிகளாக இருந்தாலும் உலக நிலைப் பள்ளிகளானாலும் இவற்றுக்கு ஒத்துக்
கொண்டால் மட்டுமே பள்ளி நடத்துவதற்கான இசைவு வழங்க வேண்டும்.
6. தமிழ்நாட்டில்
பணியாற்றுநர் – பிற அரசு நிறுவனமோ, மத்திய அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ
அயலக நிறுவனமோ – எதில் பணியாற்றினாலும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
எனவே, இப்பொழுது பணியாற்றுபவர்களுக்குத் தமிழ்மொழித் தேர்வு எழுதும்
திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்கள்
ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டி உள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்களுக்குத் தமிழ்மொழிக்கல்வி என்பது கட்டாயமாக வேண்டப்படுகின்றது.
அயல்நாடுகளுக்குப் பணிக்குச் செல்கையில் அந்நாட்டு மொழிகளில் தேர்ச்சி
பெற்றுச் செல்வதைக் கட்டாயமாக்கவில்லையா? எனவே, தமிழ்நாட்டில் வாழ்வோரும்
பணியாற்றுநரும் தமிழறிந்து இருக்க வேண்டும் என்பது இயற்கை அறமாகும்!
தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை என்னும்
நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழும் படித்தபின்பு, பிற மொழிகளைப்
படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்கு யாரும் தடையாக இல்லை.
இவற்றுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே சென்று விரும்பிய மொழியைக் கற்கலாம்! தமிழ்நாட்டிலாவது தமி்ழை வாழவிடலாம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
28.04.2045 / 11.05.2014
No comments:
Post a Comment