12 ஆம் வகுப்பிற்கான தேர்வு
முடிவுகள் வந்துள்ளன. அடுத்து, 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வர
உள்ளன. (இடையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வர உள்ளன.) இவற்றில்
வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அடுத்து வெல்லலாம்
என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்!
வெற்றி கண்டு மயங்காதீர்!
பத்தாம் வகுப்பில் முதலிடம் பெறுபவர்கள் அனைவரும் அவ்வாறே பன்னிரண்டாம்
வகுப்பில் முதலிடம் பெறுகிறார்களா என்றால் இல்லை என்பதே நடைமுறை.
இரண்டாண்டில் அவர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என்ன? அதே போல், 12 ஆம்
வகுப்பு வெற்றிக்குப் பின்னர் அப்படி ‘ஆவேன், இப்படி ஆவேன்’ என்றெல்லாம்
கருத்துரைக்கும் அனைவருமே அவ்வாறு சிறந்து மக்கள் தொண்டாற்றி வருகிறார்களா
என்றால், அதற்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றி வாகை
சூடுபவர்களே! படிப்புத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பலர் வாழ்க்கைத்
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுகிறார்கள் என்பதை நினைவில்
கொள்ளுங்கள்! நீங்கள் பெற்றுள்ள வெற்றி என்பது இறுதி நிலை அல்ல! இதுதான் பெற வேண்டிய வெற்றிக்கு முதல்படி!
எனவே, வெற்றி கண்டு மயங்காதீர்! வெற்றி மயக்கத்தில் ஆரவாரத்தில் கருத்து
செலுத்தினால், வெற்றி தொடராது என்பதை உணருங்கள்! நீங்கள் கடக்க வேண்டிய
படிகள் பல உள்ளன என்பதை நினைவில் நிறுத்துங்கள்! வெற்றிப்பாதையில்
செல்லும் பொழுது இடறி விழ நேரிடலாம். அதனால் அதிர்ச்சிக்குள்ளாகி வெற்றி
முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள்! கற்றதன் பயன் மற்றவர்க்கு உதவுதல் என்பதையும் மறவாதீர்கள்! வெற்றி மாலை என்றும் உங்களை அணி செய்யவும் மேலும் மேலும் உயர்வுகளைக் காணவும் வாழ்த்துகள்!
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (குறள் 539)
தோல்வி கண்டு துவளாதீர்!
படிப்பில் கருத்து செலுத்தியும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம்! கருத்து செலுத்தாமையாலும் வெற்றி வாய்ப்பை
இழந்திருக்கலாம்! எவ்வாறிருப்பினும் இதுவே இறுதி என எண்ணாதீர்கள்!
நீங்கள் கடந்து செல்ல வேண்டிய பாதை இன்னும் உள்ளது! பாடத் தேர்வில் வெற்றி
என்னும் அளவுகோல் கொண்டு வாழ்க்கைத் தேர்வின் வெற்றியை அளவிட இயலாது.
ஆகவே, தற்கொலை, படிப்பைக் கைவிடுதல் போன்ற கோழைத்தனமாக
முடிவுகளுக்குச்செல்லாதீர்கள்! சிலர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை
என்றுகூடத் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். சிக்கல்களுக்கான தீர்வைத்தான்
காணவேண்டுமே தவிர, நம் உயிரை நாமே தீர்த்துக் கொள்ளும் நிலைக்குச் செல்லக்
கூடாது. பிள்ளைகளின் தோல்வியால் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும்
உள்ளது. இதுவும் தவறாகும். தோல்வியால் தலைகுனிந்து பிறரை எதிர்கொள்ள அஞ்சி
வீட்டை விட்டு ஓடுவோரும்
உளர். இதுவும் தவறாகும். தோல்வியை வெற்றிக்கான படியாகக் கொண்டு முயன்றால்
வெற்றியை எளிதில் எட்டலாம்! விடா முயற்சியும் ஊக்கமும் இருப்பின், எல்லாம்
எளியனவே!
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. (குறள் 594)
தாய்மொழி வாயிலான சிந்தனைக்கு
ஊற்றாகக் கல்வி முறை அமையாததாலும் மனப்பாடத்தேர்வுமுறையில் அறிவை
எடைபோடுவதே வெற்றி என்ற மனப்பான்மையை வளர்க்கும் பாடத்திட்டம் உள்ளமையாலும்
தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் கல்வித் திட்டமே உள்ளது. தமிழ்வழியில் சிந்தனைப் பெருக்கத்தை ஏற்படுத்தும் கல்விமுறையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் இரு பக்கங்கள் என்பதை மாணாக்கர்கள் உணர்வர்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment