மக்கள் தொகை அடிப்படையில்
மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக்
கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான்.
அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் உண்டு என்பது அவரே அறிந்ததுதான். ஒரு முகம் மக்களை ஈர்க்கும் முகம்! மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம்! வெறுக்கப்படும் முகத்தை ஈர்க்கும் முகமாக மாற்றாமல் ஒரு முகம் கொண்டு அரசாள எண்ணுவது அவருக்கும் அவர் கட்சிக்கும் அழிவே!
‘மோடி அலை’ என்று சொல்லப்பட்டாலும், தமிழ்நாடு, ஒரிசா, கேரளா, திரிபுரா,
தெலுங்கானா, நாகாலாந்து, பஞ்சாப்பு, மணிப்பூர், மிசோராம், மேகாலயா, மேற்கு
வங்கம் ஆகிய பகுதிகளில் அலைப் பெருக்கத்திற்கான தூறல்கூட இல்லை என்பதை உணர
வேண்டும்.
தமிழ்நாட்டில் அம்மா அலைமுன் சும்மா அலையாகி விட்டது ‘மோடி அலை’.
வாக்கு எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது பெரியார் மண்ணான தமிழ்நாட்டில்,
பா.ச.க. கூட்டணி எப்படி இருந்தாலும் புறக்கணிக்கப்படும் நிலையில்தான்
உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மொத்த வாக்குகளில் முக்கால்
பங்கிற்கு மேல் திராவிடக்கட்சிகள் எனப்படும் தமிழ்நாடு சார் அரசியல்
கட்சிகள்தாம் பெற்றுள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, தன் பதவியேற்பை
வெற்றி விழா போல் கொண்டாடாமல் அடக்கத்துடன் கொண்டாடச் செய்ய வேண்டும்.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து (திருக்குறள் 978)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
அவ்வாறு அடக்கத்துடன் பெருமை பேணாமல், ஆர்ப்பாட்டத்துடன் சிறுமை நோக்கிச் சென்றுவிட்டாரே!
தென்ஆசிய ஒன்றியத்தை உருவாக்கித் தலைவராகும் எண்ணத்தில் தென் ஆசிய
நாட்டுத் தலைவர்களை அழைத்தது ஒரு வகையில் சரியாக இருந்தாலும், பொதுவான
போக்கு பார்க்கக்கூடாது என்பதை மறந்து விட்டார்.
தன்னைத்தானே வியந்ததன் காரணமாகத் தமிழினத்திற்குப் பகையான கொடுங்கோலன் பக்சேவை விழாவிற்கு அழைத்துள்ளார்.
இப்பொழுது அவருக்குத் தேவை உலகநாடுகளின் பாராட்டு அல்ல! தன் நாட்டு மக்களின் நம்பிக்கை! அதனை மறந்து விட்டார்! அவரது நெறியாளர்கள் தவறான போக்கில் அவரைச் செலுத்துகிறார்கள் என்பது புரிகிறது. நாட்டையே ஆளப்போகும் அவருக்கு, இன்னார் யார்?, இனியார் யார்? என அடையாளம் காணும் திறன் வேண்டும் அல்லவா?
உண்மையில் அவர் தெற்காசிய நாட்டுத் தலைவர்களை அழைத்துவிட்டு தமிழினம் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் அவர் போற்றும் இந்து சமயத்தினர் பன்னூறாயிரவரைப் படுகொலை செய்தவன் என்ற அளவிலாவது ‘‘பக்சேவை அழைக்க வில்லை’’ எனத் தெரிவித்து இருந்தால், உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் அவரது புகழுரு பேரளவாக மாறியிருக்கும் அல்லவா? ‘முதல் கோணல் முற்றும் கோணல்’
என்பதுபோல், பக்சேவை அழைத்தது சரிதானா? உலகத் தமிழ் மக்களின்
எதிர்ப்பினைப் புரிந்து கொண்டு அழைப்பைத் திரும்பப் பெற்றார் எனில்
மகிழ்ச்சிதான். ஆனால், இத் தடுமாற்றம் அவரின் அரசியல் திறத்திற்குக் கரும்புள்ளியாக நிலைக்கும் அல்லவா?
தன் நாட்டு மக்களின் உள்ளத்தைக்கூடப் புரிந்து கொள்ளாமல் முடிவெடுப்பவர்
எங்ஙனம் உலகமக்களின் தலைவராக உயர முடியும். ஒருவேளை தான் அழைத்தது
அழைத்ததுதான்! அரசியல் தந்திரம் அல்லது அண்டைநாட்டு ஒத்துழைப்பு
போன்றவற்றால் அழைத்தது சரிதான் என்றால், அவரால் எங்ஙனம் நிலையாக ஆட்சி
செலுத்த முடியும்? ஈழ ஆதரவு நிலைப்பாடு எடுத்த அஇஅதிமுக கட்சியைத்தான்
மக்கள் பேரளவில், 39இற்கு 37 என்ற அளவில் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
இக்கட்சியின் ஒத்துழைப்பும் தமிழக அரசின் ஒத்துழைப்பும் அவருக்குத்
தேவைப்படும் சூழலில் அவர் எங்ஙனம் அதைப் பெற இயலும்? ஒழிக்கப்பட வேண்டிய
காங்கிரசு முற்றாக அழிக்கப்படவில்லை. தான் நேரடியாக அடுத்து வர இயலாது
என்பதை உணர்ந்து, விலைபேசும் வல்லமை மிக்க அக்கட்சி, பாசகவின்
எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு மற்றோர்அணியை முன்னுக்குத்
தள்ளி வெற்றி காணலாமே! இத்தகைய சூழலில் அவர் கட்சியிலேயே அவருக்கு
எதிர்ப்பு இருக்கும் பொழுது இத்தகைய முயற்சி நடைபெற வாய்ப்பில்லை என்று
எவ்வாறு சொல்ல முடியும்? இச்சூழலில் ‘தலைவி சொன்னால் சொன்ன படிக் கேட்கும்’
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அவருக்கு இருந்தால்தானே தாக்கு
பிடிக்க முடியும்?
இனப்படுகொலை நடந்த பொழுதே பதவிக்காகத் தவமிருந்த தலைவர் உள்ளநாடுதானே தமிழ்நாடு என்று
எண்ணி விட்டாரா? அப்பொழுதே பதவி எலும்புத் துண்டுகளில் கருத்து
செலுத்தியவர்கள், ஐந்தாண்டுகள் கடந்தபின் பதவிக்காகக் காலில் விழுந்து
கிடப்பார்கள்! தாம் என்ன செய்தாலும் மயிலிறகால் வீசி மகிழ்விப்பார்கள் என
எண்ணி வி்ட்டாரா? வீட்டு நலனுக்காக நாட்டை மறந்த தலைவர்போல் எல்லாரையும் எண்ணி விட்டாரா?
அவர்தான் தலைமையாளராகப் பதவி ஏற்பார் என அறிவித்த தமிழ்ப்புயல் வைகோ புல்
பிடுங்கிக் கொண்டு இருப்பார் என எண்ணிவிட்டாரா? ஈழ ஆதரவில் உறுதியாக
இருந்து கொலைக்கூட்டாளியான காங்கிரசை வேரறுத்த தமிழக முதல்வர் அமைதி
காப்பார் என எண்ணிவிட்டாரா?
ஆட்சியில் இருந்தால் ஒன்றும் இல்லாவிட்டால் மற்றொன்றும் என முடிவெடுப்பதே
அரசியல்வாதிகளின் இலக்கணம் என்பதைப் பின்பற்றும் கலைஞர் பெயரளவிற்குத்தான்
எதிர்ப்பார் என எண்ணிவிட்டாரா? நீறுபூத்த நெருப்பாகத் தமிழ் மக்கள் இருப்பதை மறந்து விட்டாரா? உலகெங்கும் படுகொலையாளி பக்சேவை வரவிடாமல் செய்யும் புலம் பெயர் தமிழர்கள், நாளை, தான் எந்த நாட்டிற்குள்ளும் நுழையவிடாமல் செய்வார்கள் என்பதை உணரவில்லையா?
எனவே, முரண்டு பிடிக்காமல், இழுக்காக
எண்ணாமல் படுகொலையாளி பக்சேவின் அழைப்பைத் திரும்பப் பெறவேண்டும். இதனால்
அவனுக்கு நேரும் அவமானத்தால் தமிழர்கள் அகம்மகிழ்வார்கள்; இத்தகைய சூழலை
உருவாக்கினார் என நரேந்திரரைப் பாராட்டத்தான் செய்வார்கள். அழைக்காமல்
இருப்பதை விட அழைத்து அவமானப்படுத்துவது படுகொலையாளி பக்சேவைக் கூனிக்
குறுகச் செய்யுமல்லவா? இதனை அங்குள்ள தமிழ்மக்களிடம் வெளிப்படுத்தினான்
என்றால் அவனுக்கு எதிரான நடவடிக்கை விரைவாக வாய்ப்பு வருமல்லவா?
தமிழினத்திற்கு உறவினர்களே எம் உறவினர்கள்!
தமிழினத்திற்குப் பகைவர்கள் எம் பகைவர்கள்!
No comments:
Post a Comment