(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 161-165

161. Abridged editionசுருக்கப் பதிப்பு  
புத்தகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பாகும். இது முழுமையான நூலல்ல. எனினும் படிக்க நேரமில்லாவிட்டாலும் புத்தகத்தைப் படிக்க ஆர்வம்
 உள்ளவர்களுக்குச் சுருக்கப்பட்ட பதிப்பு உதவியாக இருக்கும். கதையோ புதினமோ கட்டுரையோ நாடகமோ நூலின் சுருக்கமாக இருப்பினும் நூலின் அடிப்படைக் கருத்துகள் வெட்டப்படாமலும் நூலோட்டம் சிதையாமலும் இருக்கும். ( அல்லது இருக்க வேண்டும்.)
162. Abridged formசுருங்கிய வடிவம்  
சில சொற்கள், சில தொடர்கள், சில பத்திகளைத் தவிர்த்துச் சுருக்கிச் செறிவாகத் தருவது சுருங்கிய வடிவம் ஆகும்.  
காண்க: Abridged edition
163. abridged reportசுருக்க அறிக்கை  
திட்ட அறிக்கை அல்லது ஆண்டறிக்கை அல்லது முன்னேற்ற அறிக்கை போன்ற அறிக்கைகளின் சுருக்கிய அறிக்கை.
164. Abridgment        சுருக்கம்
அருக்கம்  
Abbreviation என்பது சொல் அல்லது தொடரின் சுருக்கக் குறியீடே. ஆனால் Abridgment என்பது நூல் அல்லது ஆவணத்தின் சுருக்கப்பகுதி. எனவே Abbreviation என்பதைச் சுருக்கம் என்று சொல்லலாகாது ஆனால், சுருக்கக் குறியீடு எனலாம்.
அருகுதல் = குறைதல், சுருங்குதல் முதலான பொருள்கள் உள்ளன. “அருக்கமாய்ப் பெருக்க மாகி” என்கிறது தேவாரம்.(4.32;7)

மூலப்பொருண்மை மாறாமல் ஒன்றன் பகுதிகள் சிலவற்றை – சொற்கள் அல்லது பத்திகளை நீக்கிவிட்டு அதனைச் சுருக்குதல்.
நூலின் சில பகுதிகளை நீக்கிச் சுருக்கிப் பதித்தல் .   எடுத்துக்காட்டாக,  சுருக்கப்பட்ட அகராதி, சுருக்கப்பட்ட நூலின் பதிப்பு .  

முறை மன்றத்தில் உறுதிமொழி அல்லது சாற்றுரையைச் சுருக்குதல். ஆயத்தர் (Jury) மொழிவுரை(verdict)க்குப் பின்னும் தீர்ப்புரைக்கு முன்னும் வாதுரையைச் சுருக்கி அளிக்க இசைவளிக்கப்படுகிறது.   ஆயர்களின் கருத்துரையையும் இறுதியாக நீதிபதி அல்லது நடுவர் அளிக்கும் முடிபுரையையும் தீர்ப்பு என்றே சொல்வது வழக்கமாக உள்ளது. எனினும் இதனால் குழப்பம்தான் நேருகிறது.  எனவே, ஆயத்தார் தங்கள் கருத்தாக மொழிவதை மொழிவுரை எனலாம். நீதிபதி அல்லது நடுவர் அளிப்பது தீர்ப்புரை.   காண்க : Abridged edition
165. Abroadதொலைவில்,
வெளிநாட்டிற்கு,
வெளியே
பரந்த   ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பால் எனப் பொருள்.
எனவே, வெளிநாடு என்றாகிறது. அகன்ற பரப்பையும் குறிக்கும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்