தமிழக வெற்றிக் கழகத்திற்குப்

பாராட்டு

நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபட முடிவெடுத்துத் தனக்கான கட்சியைத் தொடங்கி  அறிவிப்பையும் வெளியிட்டார். அவர் தொடங்கியுள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்தையும் “தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள்” என ‘அகரமுதல’ இதழுரை வாயிலாகத் தெரிவித்து இருந்தோம். அதில், “தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் வெற்றி, கழகம் ஆகிய சொற்கள் இடையே ஒற்று மிகுந்து வர வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிவிடக்கூடாது. எனவே, தொடக்கத்திலேயே இதனைத் திருத்திப் பயன்படுத்த வேண்டுகிறோம்.  முகவரியைத் தமிழிலேயே குறித்துக் கட்சியினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தோம். தமிழ் ஆர்வலர்கள் பிறரும் இங்ஙனம் குறிப்பிட்டிருந்தனர். கட்சித் தலைவர் விசய் எந்தவகை யான்மையும் (யான் என்னும் அகங்காரம்/ஆணவம்/அகம்பாவம்) இன்றித் தன் கட்சிப் பெயரைக் குறிப்பிடுவதில் திருத்தம் மேற்கொண்டு உரியவாறு ‘க்’ சேர்த்துக் கட்சிப்பெயரைத் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனக் குறிப்பிடத் தொடங்கியுள்ளார்.

(நிரம்ப  அழகிய தேசிகர் என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சேது புராணம்’ என்னும் நூலில் ‘யான்மை’ இடம் பெற்றுள்ளது. மிகப் பொருத்தமாக நம் முன்னோர் ‘ஈகோ/ego’ என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.)

எண் ஆரூடம் அடிப்படையில் கட்சிப்பெயர் குறிக்கப்பட்டுள்ளதாகச் சிலர் கூறினர். எண் ஆரூட அடிப்படையில் தமிழைச் சிதைக்கக் கூடாது என முடிவெடுத்தமைக்குப் பாராட்டுகள். சிலர், “விசய் தன் பெயரைத் தமிழில் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். பெயர்ச்சொல்லடுத்து வல்லினம் மிகாது என்பதால் ஒற்றெழுத்து சேர்க்கப்படவில்லை “ என்றனர்.

அதற்கேற்ப, தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருள் ஒருவரான விக்குனேசுவரன், “பெயர்ச்சொல் அடிப்படையில் ‘க்’ இல்லாமல் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்துப் பல்வேறு குறையாய்வுகள்(விமரிசனங்கள்) எழுந்தன. இதையடுத்து நேர்மையான குறையாய்வுகளை(விமரிசனங்களை) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து தமிழறிஞர்களுடன் விசய் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்று திருத்தம் செய்யப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு எல்லாம் தெரியும். தெரிந்துதான் வைத்தோம்” அல்லது “ஏதோ அறிவித்து விட்டோம். இனி மாற்ற முடியாது” என்றெல்லாம் வீண் பிடிவாதம் பிடிக்காமல் தவற்றினை உணர்ந்து திருத்தும் நல்ல மனம் பாராட்டிற்குரியது. அதேபோல் முகவரியைத் தமிழில் எழுத வேண்டியிருந்தோம். ஆங்கில முகவரியை நீக்கியமையும் பாராட்டிற்குரியது. ஆனால், தமிழில் குறிப்பிடாமல், தமிழ் ஒலிபெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மனை எண் 275, கடற்கரை நகர், 6 ஆவது நிழற்சாலை என இனிமேல் குறிப்பிட வேண்டுகிறோம். மக்களுக்குப் புரியாது என்று சொல்லக்கூடாது. புரியாவிட்டாலும் புரிய வைக்க வேண்டிய கடமை இவர்களுக்கு உள்ளது. அயற் சொற்களையே மக்கள் உள்ளத்தில் பதித்துப் பயன்படுத்துகையில் தாய்மொழிச்சொற்களையா புரிந்து கொள்ளாமல் போவர்? 20 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இயலும் என்ற நம்பிக்கை கொண்ட கட்சித் தலைமை, தமிழையே எங்கும் எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் இயலாதா என்ன? எனவே,தமிழ் உணர்வை முழக்கத்திலும உறுதி மொழியிலும் காட்டும் எல்லா இடங்களிலும் தமிழையே பயன்படுத்த வேண்டும்.

“தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்” எனத் தமிழ் மண்ணை அடித்தளமாகக் கொண்டுதான் உறுதி மொழி எடுக்கச் சொல்கின்றனர். இரண்டாவது உறுதி மொழி “மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.” என உள்ளது. இப்பொழுது வீர வணக்க நாள் என்பது வெற்றுச்சடங்காக நிகழ்த்தப்படுகிறது. அவ்வாறில்லாமல் மொழிப்போர் ஈகியரின் இலக்கு நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவதற்கு உறுதி மொழி எடுப்பது போற்றுதற்குரியது. மொழிப்போரில் உயிர் நீத்தவர்களின் குடும்ப வழியினரைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு முதலியவற்றை ஏற்படுத்திக் கொடுக்கத் த.வெ.க. பாடுபட வேண்டும். அடுத்த உறுதி மொழி குமுக நீதி(சமூகநீதி)ப்பாதையில் பயணித்துக் கடமை யாற்றுவதைக் குறிப்பிடுகிறது. அதற்கடுத்தது, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவதைக் குறிக்கிறது. திராவிட இயக்கங்கள் சொல்லி வருவதையே சொன்னாலும் இவற்றை வாயளவிலோ எழுத்தளவிலோ சொல்வதாக இல்லாமல் செயலளவில் முடித்துக் காட்ட வேண்டும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

(திருவள்ளுவர், திருக்குறள்)

ஆதலின் சொல்லிய வண்ணம் செய்து காட்ட வேண்டும்.

மொழி அளவிலும் இன அளவிலும் திராவிடம் என்று கையாளக் கூடாது. தமிழ்க் குடும்ப மொழி என்றும் தமிழ் எனக் குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தன்மானம், தன்மதிப்பு ஆகியவற்றின் குறியீடாகத் திராவிடம் வழங்குகிறது. என்றபோதும் தமிழகம், தமிழ் மண், தமிழ் மொழி என் தமிழையே முதன்மைப்படுத்துவது வரவேற்கத்தக்கது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து இருந்தாலும் தேர்தல் அறிக்கையாக அல்லது செயற்படுத்தும் இலக்காகப் பின்வருவனவற்றை அறிவிக்க வேண்டும்.

1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி, அலுவலக மொழி, தொடர்பு மொழி, கல்விமொழி, இசைமொழி, பண்பாட்டு மொழி, வழிபாட்டு மொழி, அறிவியல் மொழி, வணிக மொழி, முறைமன்ற மொழி, சட்டமொழி என எல்லாத் துறைகளிலும் தமிழே திகழச் செய்வோம்.

2. தமிழர்களின் தேசிய மொழி தமிழே என்பதைப் பாடநூல்களில் இடம் பெறச் செய்வோம்.

3. தமிழ்க்காப்புப்போர், இந்தி எதிர்ப்புப் போர் முதலியவற்றையும் மொழிப்போராளிகள் குறித்தும் பாடநூல்களில் இடம் பெறச் செய்வோம்.

4. தமிழ்நாட்டில் விற்பனையாகும் அனைத்துப் பொருள்களிலும் பெயர், உட்பொருள்கள், எச்சரிக்கை, கெடுநாள் முதலியன தமிழிலேயே இருக்கச் செய்வோம்.

5. தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், இணைத்தளப் படங்கள் முதலிய அனைத்தின் பெயர்கள், அவற்றில் இடம் பெறும் பெயர்கள் பிற விவரங்கள், தமிழிதழ்களில் இடம் பெறும் ஊடகச் செய்திகள் என மக்கள் காட்சிக்கும் கருத்திற்கும் இடம் பெறுவன யாவும் தமிழிலேயே இருக்கச் செய்வோம். 

6. அரசாணைகள், அரசு அறிவிப்புகள், அரசு செய்தியறிக்கைகள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பட்டியல்கள், காசோலைகள், வரைவோலைகள் என யாவும் தமிழிலேயே இருக்கச் செய்வோம்.

7. இந்தியைத் திணிக்கவில்லை எனக் கூறிக்கொண்டே இந்தியையும் பிற மொழிகளையும் திணிக்கும் போக்கை நிறுத்தச் செய்வோம்.

8. தமிழ்நாட்டிலுள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல், பிற மாநில அரசு அலுவலகங்கள், ஒன்றிய அரசு அலுவலகங்கள், பிற நாட்டு அலுவலகங்கள் என அனைத்தின் அலுவலக மொழியும் தமிழாகவே இருக்கச் செய்வோம்.

9. தமிழ்நாட்டில் பெயர்ப்பலகைகள், விளம்பரப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கச் செய்வோம்.

10. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் யாவரும் தமிழையே முழுமையான பயன்பாட்டு மொழியாகப் பின்பற்றச் செய்வோம்.

11. தமிழ் ஈழ அறிந்தேற்பிற்கு இயன்றதைச் செய்வோம்.

12. உலகெங்கும் தமிழர்கள் வாழும் நிலப்பகுதிகளில் தமிழையும் தமிழரையும் சிறப்புற்றிருக்கச் செய்வோம்.

இவ்வாறு அறிவித்து இவற்றை நன்கு பின்பற்ற வேண்டும்.

“தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு” எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் கூறுவதை உறுதியாகப் பின்பற்றித் தமிழையும் தமிழரையும் வாழச் செய்ய வேண்டும்.

இவற்றைக் கட்சித் தலைமையும் கட்சியினரும் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை