tha.i.ka.no.po._thalaippu  3

ஙா.) குழுக்கள்:
குழுக்களில் தமிழறிஞர்களுக்கு இடமில்லை அல்லது மிகச் சிறுபான்மையராக உள்ளனர்.
பன்னிருவர் உறுப்பினராக உள்ள பொதுக்குழுவிலும் ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள இயக்குநர் குழுமக்குழுவிலும் பதவி வழி உறுப்பினர்கள்தாம் உள்ளனர். தமிழறிஞர்கள் இல்லை.
பதினொருவர் உறுப்பினராக உள்ள கல்விப் பேரவைக் குழுவில் இருவர் மட்டுமே தமிழறிஞர்கள்.
ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள கைப்பேசி வல்லுநர் குழுவில் ஒருவர்கூடத் தமிழறிஞர் இல்லை. பத்தொன்பதின்மர் உறுப்பினராக உள்ள அறிவுரை(ஆலோசனை) நிலைக் குழுவிலும் தொடக்கத்தில் தமிழறிஞர் இல்லை. தமிழ்க்காப்புக்கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்கவே பின்னர்ப் பதவி வழி தமிழ்த்துறையைச் சேர்ந்த மூவர் உறுப்பினராக ஆக்கப்பட்டனர்.
சிலரால் பிறமொழித்திணிப்பிற்கு வாயிலாகக் கொள்ளப்படும் ஒருங்குகுறி தொடர்பான ஒருங்குகுறி உயர்மட்டக் குழுவில் எண்மர் உறுப்பினராக இருப்பினும் இருவர் மட்டுமே தமிழறிஞர்கள். அறுவர் உறுப்பினராக உள்ள தகவலாற்றுப்படைக் குழுவில் ஒருவர் கூடத்தமிழறிஞர் இல்லை.
இதற்கெல்லாம் காரணம் என்ன? அமைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமையும் ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகம்’ / இப்போதைய பெயரான ‘தமிழ் இணையக்கல்விக்கழகம்’ என்பதை இணையவழியிலான தமிழ் பரப்பல் அமைப்பு என எடுத்துக்கொள்ளாமல், இணையக்கல்விக்கான தளம் என்னும் போக்கில் பரப்பியமையாலும் தமிழறிஞரல்லாதார் பொறுப்புகளில் வந்தமையால் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளவும் தங்கள் வழியினரைத் தொடர்ந்து இவ்வமைப்பில் இருக்கச் செய்து தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் இவ்வமைப் பயன்படுத்தியதுதான்.
தமிழ்க்காப்புக்கழகத்தின் தொடர் வேண்டுகோளுக்குப்பின்னர்தான் தமிழ்வளர்ச்சித்துறையின் செயலர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் பதவி வழி உறுப்பினராக அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் இவர்களுக்கான வாய்ப்பு இல்லாத பொழுது குழுக்களில் தமிழ்சார்பானவர் யாருமில்லை என்றநிலைதான் இருந்தது.
தமிழ்சார்ந்த பதவி வழி உறுப்பினர்கள், கூட்டங்களில் நம் வேண்டுகோளை எதிரொலிக்கும் வகையில் குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், தமிழ் தொடர்பான வேண்டுகோளைத் தெரிவிக்கும் பொழுது தமிழ்வளர்ச்சி இயக்ககத்தில் இருந்து அம்மடலைத் ‘தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பானது’ என அத்துறைக்கு மாற்றிவிடுகின்றனர். அல்லது ‘கொள்கை முடிவு’ எனத் தட்டிக் கழிக்கின்றனர். கொள்கை முடிவு உருவாக ஆற்றுப்படுத்த வேண்டிய தமிழ்வளர்ச்சி இயக்ககம் தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது வருத்தத்திற்குரியது. தமிழ் தொடர்பான வேண்டுகோள்களுக்குத் தகவல் தொழில்நுட்பத்துறையினர் செவிமடுத்து ஆவன செய்கின்றனர். தகவல்தொழில்நுட்பத்துறையினர் பணி பாராட்டும்படி இருக்கும்பொழுது தமிழ்வளர்ச்சித் துறையினர் ஒப்பிடுவதற்கே வழியின்றி வாளாவிருக்கின்றனர். இந்நிலையை அத்துறையினர் மாற்றிக் கொள்ள வேண்டும். பிறர் அதிகார வரம்பில் குறுக்கிடுவதுபோல் எண்ணிக் கொள்ளாமல் தமிழ்தொடர்பானவற்றில் தமிழறிஞர்களைக் கலந்துபேசி தக்கவாறு வழிகாட்டும் பணியை ஆற்ற வேண்டும்.
(இனியும் போகும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar thiruvalluvan