Thursday, April 7, 2016

திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்




 தலைப்பு-திராவிடத்தைப்பழிப்போர்-திரு : thalaippu_thiraavidathaipazhippoar_thiru

திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்!

 “தமிழர்களின் தேசியமொழி தமிழ்தான். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளித்தல் வேண்டும்.”  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரால் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்திற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. அதே நேரம்,  தமிழ்த்தேசியம் பேசுவதாக எண்ணும் சிலர், தமிழை உயர்த்துவதாக எண்ணிக்கொண்டு திராவிடத்தைப்பற்றி இழிவாகச்சொல்வது நம்மை நாமே தாழ்த்துவதாகும்.
  திராவிடம் என்பது தமிழின் பெயரன்று. ஆனால் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுவதற்கு அடையாளமாக வந்த பெயர்.  ஆரியம் வந்த பொழுது அதற்கு  எதிராகத் தனிமையில் தமிழ் மட்டுமல்லாமல்,  அதன் மொழிக்குடும்பமே இணைந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் திராவிடம் என்பது முன்னிலைப்படுத்தப்பட்டது. பல நேர்வுகளில் திராவிடம் என்பதன் சிறப்பு தமிழின் சிறப்பே.
 பரதக்கண்டம் என்று சொல்லப்படுகின்ற நாவலந்தீவு முழுவதும் தமிழாக இருந்த காலக்கட்டத்திற்கு அடுத்ததாகத் தென்பகுதி முழுவதும் தமிழாக இருந்தது. மொழிக்கலப்பாலும் மொழிச்சிதைவாலும் அறியாமையாலும் தமிழிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலான பல மொழிகள் தோன்றின. அதனால் இப்பகுதி மக்கள் உருவான புதுப்புதுமொழிபேசுநர்களாக அறிவிக்கப்பட்டனர். அஃதாவது கன்னடர், தெலுங்கர் என்பனபோல். இவ்வாறு தமிழின் கிளை மொழிகளைப் பேசியதாலேயே அப்பகுதிகளில் இருந்த தமிழக நாகரிகம், பண்பாடு, கலை,   முதலானவற்றின் சிறப்புகள் அந்தந்த மொழிக்குரியனவாக ஆகிவிடாது. எனவே, புது மொழியின் பெயரால் அழைப்பதும் தவறு; மூலமொழியாம் தாய்த்தமிழின் பெயரால் அழைப்பதும் புதியவர்களுக்கு ஏற்கத்தக்கனவாக இல்லை. எனவேதான், திராவிடம் என்ற பெயரால் தமிழ்க்குடும்ப மொழிகள் வழங்கும் பகுதிகள் அழைக்கப்பெற்றன.
 விவேகானந்தர், தாகூர் முதலான பலரும் இந்திய நாகரிகம் என்பது பெரிதும் திராவிடநாகரிகமே; இந்தியப் பண்பாடு என்பது திராவிடப் பண்பாடே; இந்தியக்கலை என்பது திராவிடக்கலையே!  பெரிதும் திராவிடமும் சிறிது ஆரியமும் கலந்த கலவை  இவை என்ற பொருளில் பேசியும் எழுதியும் வந்தனர்.  திராவிடம் என்ற பெயரால், தமிழர்களின் இலக்கியச் சிறப்பு, தமிழர்களின் மொழிச்சிறப்பு,  தமிழர்களின்பண்பாட்டுச் சிறப்பு, தமிழர்களின் நாகரிகச் சிறப்பு, தமிழர்களின் கட்டடக்கலைகளின் சிறப்பு, தமிழர்களின் நாட்டியக் கலைகளின் சிறப்பு எனத் தமிழர்களின் சிறப்பே கூறப்படுகின்றன.  
  ஆரிய-திராவிடப் போரில், தமிழ் எனக்குறிக்கப்பெறும் திராவிடம் என்பதை அழிப்பதற்குத் திராவிடத்திற்கு எதிரான கருத்துகள் பயன்படும். ஆரியர்கள் திட்டமிடுவதுபோல் இப்போது பேச்சுகளும் வருகின்றன.  திராவிடத்தால் வீழ்ந்ததாகக் கூறுவதும் திராவிடத்தை ஒழிப்போம் என்பதும் இந்தவகையில் ஆரியத்திற்கு வெற்றிதான்.
  நாம் தமிழ்க்குடும்ப மொழிகள் அல்லது திராவிட மொழிகள் என்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை மட்டும் கருதுகிறோம். சிலர், துளு, படகு இரண்டையும் அறிவர். ஆனால், உண்மையில் தமிழ்க்குடும்ப  மொழிகள்
தென்திராவிட மொழிகள்
நடுத் திராவிட மொழிகள்
வட திராவிட மொழிகள்
வகைப்படுத்தப்படாதவை
எனவும் மேலும் பலவாகவும் உள்ளன.
  பாக்கித்தான், ஆபுகானித்தான் முதலான பிற நாடுகளையும் சேர்த்தால் 85 இற்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன. இவையாவும் தமிழ்க்குடும்ப மொழிகள் என அழைக்கப்படும்வகையில் தொண்டாற்ற வேண்டிய நாம்,  தமிழ்த்தாய்மையின் சிறப்பை உணர்த்தும் வகையில் மொழியியல் வரலாற்றைப் பரப்ப வேண்டிய நாம்,  கட்சி அரசியல்  அடிப்படையில் திராவிடத்தைத் தாக்கிப் பேசுவது திராவிடம் என்ற பெயரில்  உணர்த்தப்படும் தமிழின் சிறப்பை அழிப்பதாகும்.
  திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிற பொறுப்பாளர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் திராவிடம் என்னும் கருத்தியலைத் தாக்குவது சரியல்ல. பொதுவாக ஊழல் என்பதும் குடும்ப அரசியல் என்பதும்  எல்லாக்கட்சிகளையும்  ஆட்டிப்படைக்கின்றன. இவற்றின் தோற்றுவாயே பேராயக்கட்சியாம் காங்கிரசே! ஊழலற்ற நேர்மையான அரசியலை வேண்டுவோர் குறிப்பிட்டுக் கூற வேண்டுமே தவிர, அவர்கள் சார்ந்த கருத்தியலைக் குறை கூறக்கூடாது.  ஒருவர் செய்யும் குற்றங்கள் அல்லது தவறுகளுக்கு அவர் சார்ந்த இயக்கத்தின் முன்னவர்கள்  ஆற்றிய நல்ல பணிகளையும் ஏற்காது குறை கூறுவது தவறல்லவா?
  நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள், திராவிடக்கட்சிகளின் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் முதலானோர் பணிகளால்தான் தமிழ்த்தேசிய உணர்வே தமிழ் நாட்டில் தலை தூக்கியது;  பிற மொழிக் கலப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற உணர்வு மூண்டெழுந்தது;  மொழித்தூய்மையின் தேவை உணர்த்தப்பட்டது. இன்றைக்குத் தமிழ்த்தேசியம் பேசுநர் கையாளும் மேற்கோள்களுக்குரிய பாடல்களை எழுதியவர்கள், செய்திகளை எழுதியவர்கள், எழுதியும் பேசியும் வருநர்கள் பெரும்பான்மையர் திராவிட இயக்கத்தவரே! அவ்வாறிருக்க நாம் பொதுவில் திராவிட இயக்கத்தைக் குறை கூறுவது எந்தவகையில் ஏற்றதாகும்? தமிழ்த்தேசியம்பற்றிய உணர்ச்சிமிகு எழுச்சிப்பாடல்களைப் பாடிய பலர் இவர்கள் குறிப்பிடும் திராவிட வந்தேறிகள் என்பதை அடையாளங்காட்டி அந்த ஆன்றோர்களை நான் இழிவுபடுத்த விரும்பவில்லை.  தமிழை  நேசிக்கும் தமிழைப் பரப்பும் அனைவரும் தமிழர்களே! தமிழுக்குத்   தொண்டாற்றிய/தொண்டாற்றும் அயல்நாட்டவரை நாம் பாராட்டுவதுபோல்  இவர்களும் பாராட்டிற்குரியவர்களே!
  அதே நேரம், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களுக்குரிய வாய்ப்பு வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்களைத் தெலுங்கர்களாகவோ பிற மொழியினராகவோ கருதுவோர், முதலில் தமிழராக மாற வேண்டும். அல்லது தமிழ்நாட்டுச் சலுகைகளைப் பெறக்கூடாது. இட ஒதுக்கீட்டுச் சலுகைகளில் ஆவணப்படித் தாய்மொழியாகத் தமிழைக் குறிப்பிடுவோருக்கு மட்டுமே அவற்றை அளிக்க வேண்டும். திராவிடத்தமிழர் என்பதுபோன்ற பெயர்களில் அமைப்புகள் நடத்துவோர் அவற்றை வேறு மாநிலங்களில் நடத்திக் கொள்ளட்டும்!
  இப்பொழுது ஆரியம் கற்பனை எனப் பொய்யாகக்கூறி வருபவர்கள், திராவிடத்தைத் தாக்குவதன்  மூலம் தமிழின் சிறப்பபைத்தான் அழிக்கப்பார்க்கின்றனர். இதற்கு நாம் இடம்  கொடுக்கக்கூடாது. வணிகம் வேறு,  மொழி வேறு என்று  சொல்லாமல் மொழிதான் வாழ்வு என்பதை உணர்ந்து தமிழ்த்தேசியம் பேசுவோர்  வணிகத்திலும் கலை, இலக்கியப்பரப்பலகளிலும்  தமிழை முன்னிலைப்படுத்த வேண்டும். தமிழ்த்தேசியம் பேசுவோர்தங்களைச் சார்ந்தவர்கள் தமிழில் படிக்கவும், தமிழை எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தவும் முன்முறையாக இருக்கச் செய்ய வேண்டும். பெயர்கள், பெயர்ப்பலகைகள், வருகைப்பதிவேடுகள்,  பொருள் பட்டியல்கள், உணவு நிரல்கள், கட்டடப் பெயர்கள், நிறுவனப்பெயர்கள், கல்வியகப் பெயர்கள், வணிகப் பெயர்கள்,  என ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழ் இல்லை. திராவிட வேந்தேறி என  வைவோர் முதலில் இந்த இடங்களில் தமிழை அமரச்செய்ய அருந்தொண்டாற்றட்டும்! நாம், தமிழை உரிய இடங்களில் இ.டம்பெறச்செய்தாலே தமிழர்களும் முன்னிலைக்கு வருவர்.
  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் குடும்பங்கள் எனத்தனித்தனியாக வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு தாய் வயிற்று வழிமுறையினர்தாமே! தனித்தனியாக இருப்பதால் பகைவர்களாக ஆகிவிடுவார்களா? ஒரு தாய் வயிற்று வழிமுறையினர் என உணராதவர்களை உணரச் செய்வதுதான் தாய்க்குடும்பத்தினரின் கடமையாகும். மாறாக, அவர்களைப் பகைவர்களாகக் கூறி விலக்குவது குடும்பப்பரம்பரைச் சிதைவிற்குத்தான் இட்டுச் செல்லும். இதை,  நன்குணர்ந்து  தமிழ்த்தேசியவாதிகள், தமிழர்களிடம் தமிழ்த்தேசிய உணர்வை  ஊன்றட்டும்!  குடும்பப்பிரிவினைக்கு வழிகோலுவதுபோல்,  தமிழ்மொழிக்குடும்பத்தினரை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டா!
  எனவே, வரலாறு அறியாமல்,  திராவிட இயக்கப்பணிகளைக் கொச்சைப் படுத்தாமலும், திராவிடம் என்னும் பெயரில் தமிழின் சிறப்பே உணர்த்தப்படுவதைப் பழித்து உரைக்காமலும்,  தமிழ் எல்லா இடங்களிலும் ஆட்சி செய்ய அரும்பணி ஆற்றட்டும்! தமிழின்தலைமையே தமிழர்க்கு முதன்மை தரும் என்பதை உணரட்டும்!
வாழிய செந்தமிழ்!
வாழ்கநற்றமிழர்!
வாழிய பார்புகழ் பைந்தமிழ்நாடு!
வாழிய தமிழ்கூறு நல்லுலகம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+10

Tuesday, April 5, 2016

என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்? – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-என்றுமுடியும்ஈழஏதிலியர் துயரம்? : thalaippu_endrumudiyum
ஈழஏதிலியர் துயரம் : eezhathamizhar_eathiligal

செய்தியும் சிந்தனையும்
[செய்தி:  நண்பர்  இ.பு.ஞானப்பிரகாசன், மின்னம்பலம் (https://minnambalam.com/k/1459296056 )   தளத்தில் இருந்து பின் வரும் செய்தியை அனுப்பியிருந்தார்: திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் பதினான்கு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வழக்குப் பதிவு செய்து தங்களைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மார்ச்சு 28, 29 ஆகிய இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், மூன்றாவது நாளாகப் போராட்டத்தை மார்ச்சு 30 அன்றும் தொடர்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சிறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அலுவலர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். ]
  என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்?
  உற்றார், உறவினைர், உடைமைகளைவிட்டுவிட்டுத் தாயகத்தைவிட்டு நீங்கித் தமிழ்நாட்டிற்கு ஈழத்தமிழர்கள் வந்ததன் காரணம் என்ன? இங்கே ஆறுதலும் அரவணைப்பும் கிட்டும் என்பதுதானே!
 வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் மறையும் வகையில் நொந்தாரைக் கொடுந்துயரில் தள்ளும் நாடாக மாறியிருக்கும என்று தெரிந்திருந்தால் யாரும் இங்கே  வந்திருக்க மாட்டார்களே!
  ஈழத்தமிழர்கள் துயரம எப்பொழுது முடியும் என்றால், அவர்கள் வாழ்க்கை முடியும்பொழுதுதான் முடியும் என்று நாம் நடந்துகொண்டால் அவர்கள் எங்குதான் செல்வார்கள்? என்னதான் செய்வார்கள்?
 பேச்சிலே  தேனாகவும் செயலிலே தேளாகவும் தமிழக அரசியலாளர்கள் இருந்தால் அவர்கள் யாரைத்தான் நம்புவது?
    இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
    இன்னாது இனியார்ப் பிரிவு.(திருக்குறள் 1158) எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுவது தலைவன்-தலைவி பிரிவிற்கு மட்டுமல்ல! இனிய சுற்றத்தைப்பிரிந்து வேறிடத்தில் வாழும் அனைவருக்கும் பொருந்தத்தக்கதே!  தாய்நாடு நீங்கி அயல்நாடு புகுந்தோர் சுற்றத்தாரைப் பிரிந்து வாழ்வதும் கொடுமைதான். ஆனால், இவர்கள் இரக்கம் காட்டவேண்டிய நம் நாடு அடக்குமுறையைக்காட்டுகின்றதே!
  புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கெல்லாம்  பெரும்பாலான நாடுகள் அடைக்கலம் அளித்துச் சம உரிமைகள் அளிக்கின்றன! தங்கள் நாட்டுக் குடிமக்களாக நடத்துகின்றன. புலம் பெயர்ந்தோரை மதிக்கும் நன்னாடாக நாம் கனடாவைக் கூறலாம். அங்கு வாழும் செல்வி திவ்வியா பிரபாகரன், “கனடாவில் எந்த வேற்றுமையும் இல்லாமல் மதிக்கப்பட்டு கனடிய இளையோராக வாழ்கிறோம். எமக்கு அயல் தேசத்தில் இருக்கும் உணர்வு இல்லை. வேதனைகள், அச்சம், சோதனைகள் இல்லை. அகதிகளாக வந்த எம் பெற்றோரும் கனடியர்களாக நிம்மதியாக வாழ்கிறார்கள். கனடா எல்லோரையும் சமமாக மதிக்கிறது. அரசியலிலும் அனைத்துத் துறைகளிலும் கூட ஈழத் தமிழ் மக்கள் உரிமையை நிலை நாட்டி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”  எனக்கூறுகிறார்(பாலனின் சிறப்பு முகாம் நூல்பற்றிய பார்வை)
  நம் நாட்டில் சமமாக மதித்துப் போற்றவேண்டிய நாம், குறைந்தது கனிவும் பரிவும் கொண்டு மனித நேயத்துடன் நடத்தலாம் அல்லவா? தமி்ழ்ஈழத்திற்காகக் குரல் கொடுக்கும் அரசு, போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கும் அரசு,  அமையும் தமிழீழத்திற்கு இங்குள்ள தமிழீழ மக்களை நலமாகவும் வளமாகவும் அனுப்ப வேண்டாமா? குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் அனுப்புவதா? ஈழத்தமிழர்கள் இங்கே வந்து ஒரு தலைமுறை ஆன பின்பும் அமைதியான வாழ்வைத் தர மறுப்பதேன்? இதனைத் தட்டிக்கேட்கும் அறவாணர் இங்கே வாழவில்லையா? மக்களை மக்களாக நடத்தாத மாக்களா நாம்?
  இந்திய ஒன்றியஅரசுதான் தமிழினப்பகையுணர்வுடன் நடந்து கொள்கிறது என்றால் தமிழ்நாட்டரசும் அவ்வாறு நடந்து கொள்ளலாமா? தமிழ்நாட்டரசுதான் அவ்வாறு நடந்துகொள்கின்றது என்றால் ஆளுங்கட்சியினர் அரசிற்கு அறிவுறுத்தாமல் அமைதி காக்கலாமா?  ஆட்சியில் அமர அரசியல் நடத்தும் கட்சிகள் அரசிற்கு இடித்துரைக்க வேண்டாவா? ஊடகங்கள் உண்மையை உலகிற்கு உணர்த்தவேண்டாவா? முன்னரே கூறியவாறு வருங்காலப்பழியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவாவது 
நாம் மனிதநேயர்களாக நடந்துகொள்வோம்!
 ஈழத்தமிழர்களை நமக்கு இணையாக வாழவைப்போம்! 
தேர்தலில் இதையும் ஒரு பொருண்மையாகக் கொண்டு 
மனித நேயருக்கே நம் வாக்கு என்போம்!
இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, April 4, 2016

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா?



அகரமுதல 127,  பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2016

தலைப்பு,மதுவிலக்கு, தேசப்பாதுகாப்புச்சட்டம்thalaippu_madhuvilakku_adakkumuraiyaa_thandanaiyaa_thiru. தலைப்பு,மதுவிலக்கு, தேசப்பாதுகாப்புச்சட்டம்girls-undercaseமது ஒழிப்புபரப்புரை-இரு சிறுமியர்02 : girls-undercase02

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா?

ஆளுங்கட்சிக்குத் தண்டனையா?

செய்தியும் சிந்தனையும்
[செய்தி :
கடந்த மாசி 02, 2047 / பிப்பிரவரி மாதம் 14 அன்று  திருச்சிராப்பள்ளியில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அங்கு மதுஒழிப்பை வலியுறுத்திப்பேசிய,  மாநாட்டினை நடத்திய மக்கள் அதிகாரம்  இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சி. இராசு, செயற்குழு குழு உறுப்பினர் காளியப்பன்,  தாவீது இராசு, சென்னை ஆனந்தியம்மாள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு  அரசின் சாராயக்கடை( தாசுமாக்கு) பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது, பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2016  அன்று  அரசு தேசஇரண்டக வழக்குப் பதிவு செய்துள்ளது; மது எதிர்ப்புப்பாடல் பாடிய சிறுமியர் இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளது.]
  அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர் காவல்துறையினர். தேயம் அல்லது தேசம் என்றால் ஆளும் கட்சியின் தலைமை எனப் புதிய இலக்கணத்தை உருவாக்கி அதற்கேற்பக் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். தனிப்பட்ட முறையில் பார்த்தால் காவலர் உள்ளங்களும் கனிவான உள்ளங்கள் என்பதுபோல் காட்சியளிக்கும் காவலர்களும் சட்டம்ஒழுங்கைக் காப்பாற்றுவதாக எண்ணும் பொழுதுமட்டும் முரட்டு உள்ளங்கள் உடையவர்களாக மாறிவிடுகின்றனரே!  ஆனால்,  மக்கள்கலை இலக்கியக் கழகத்தினரின் மக்கள் அதிகாரம்  இயக்க நிகழ்ச்சி நடந்து 6 வாரங்களுக்குப்பிறகு வழக்கு பதிந்துள்ளதால் மேலிடத்தில் கலந்துபேசி எடுத்த முடிவாகத்தான் இருக்கும்; அல்லது மேலிட அறிவுறுத்தலால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கும். அவ்வாறெனில் காவல்துறை வெறும் அம்புதான்!
  “மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு” என்று அரசுதான் விளம்பரங்கள் மூலம் சொல்கிறது. அதையே கலைஞர்களும் குழந்தைகளும் சொன்னால் கொடுங்குற்றமா? மதுவிலக்கு உரை/இசைப் பரப்புரையால் வாக்கு வங்கியானதுபறிபோகும் என்ற அச்சம் வந்தால்,  மதுவிலக்கில்தானே கருத்து செலுத்த வேண்டும்?
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை  (திருக்குறள் 555)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
  செல்வம் என்பது பொருட்செல்வம் மட்டுமல்ல. அதனைப் பெருக்குவதற்குக் காரணமான பதவிச்செல்வமும் ஆட்சிச் செல்வமும்தான்! அதனை அழிக்கும் கருவி எது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்? ஆட்சியால் துன்புறுவோர் சிந்தும் கண்ணீர்தான் வலிமையான கருவி என்கிறார்! ஆட்சியையே வீழ்த்தும் வலிமை படைத்த கருவி என்கிறார்!  உலக நாடுகளில் எல்லாம் ஆட்சிகளை வீழ்த்திய பெருமை இக்கண்ணீருக்கு உண்டு! நம் நாட்டு வரலாறும் இந்த உண்மையைச் சொல்கின்றது. இதனைத் தெரிந்திருந்தும் குடிமக்கள் கண்ணீர் சிந்தக்காரணமாக அரசு இருப்பதன் காரணம் என்ன? ஆட்சி சரியும் என்று அச்சம் வந்துவிட்டால்தான் அதனை நிலைக்க வைக்க இத்தகைய செயல்களில் ஈடுபட்டு மிகு விரைவாக அழிவைத் தேடிக்கொள்வர். நிலையான முதல்வர் என்ற நம்பிக்கை கொண்டிருந்த புரட்சித்தலைவி செயலலிதாவிற்கு ஆட்சி பறிபோகும் என்ற அச்சம் வந்துவிட்டதா? அல்லது அவரது அண்மையர்கள்(தங்கள் செல்வத்தைப் பெருக்கவும் காக்கவும் தவறான வழிக்கு இட்டுச் செல்லும் அருகிலுள்ளவர்கள்) தங்களைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறான வழிகாட்டுகின்றார்களா?
  இது தொடர்பான முன் நிகழ்வை அரசு கருத்தில் கொள்ளவில்லையா? திருச்சிராப்பள்ளியில் அக்டோபர் 30 அன்று மக்கள் கலை இலக்கியக் கழகப் பாடகர் கோவன்  என்கிற சிவதாசை  நள்ளிரவு  கைது  செய்தது காவல்துறை. அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-அ (தேச இரண்டகம்), 153-அ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்) கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உயர்நீதி மன்ற உசாவலில்  அரசு வழக்குரைஞர் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்படவில்லை என்றார்.  நீதபதி சுந்தரேசு, “அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் முயற்சிகளில் இறங்கக்கூடாது” எனக் கூறினார். இது போன்ற செயல்பாடுகள் தேசத்துரோகக் குற்றச்சாட்டிற்குள் வராது என நீதிபதி சந்துருவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இப்பொழுது இவர்கள், தேச இரண்டகக்குற்றச்சாட்டின் கீழ்க் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  மிகச்சிறுபான்மையராக உள்ள இயக்கத்தவர்மீது நடவடிக்கை எடுப்பதால் என்னஆகிவிடப்போகிறது எனத் தவறாகக் கணக்கிடக்கூடாது.  தேச இரண்டகம் அல்லது அரசுப்பகை அல்லது தேசப்பாதுகாப்புச்சட்டத்தின்படித் தளையிடப்பட்டவர்கள் சிறுபான்மை இயக்கத்தவராக இருக்கலாம். ஆனால்,  சிறைக்கொட்டடிக்குள் அடைப்பதற்கான காரணமும் முறையும் அறிய வரும்பொழுது  குடும்பத்தவர் குடிப்பழக்கத்தால் சிதைந்து நைந்துபோயுள்ள பெரும்பான்மையான மக்கள் கிளர்ந்தெழ மாட்டார்களா? கிளர்ச்சி என்றால் அரசிற்கு எதிரான போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் என்றுமட்டும் எண்ணக்கூடாது. மக்கள் வாக்குச்சீட்டு என்னும் வலிமையான ஆயுதத்தைப் பயன்படுத்தும் நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ள நேரமிது!
  ஆட்சியைப் புரட்டிப்போடும் நெம்புகோலை மக்கள் கைகளில் வைத்து இருக்கும்பொழுதாவது அடக்குமுறையைத் தவிர்த்து அறமுறைக்குச் செல்லலாம் அல்லவா?
  இந்தியைத் திணித்த மூதறிஞர் இராசகோபால்(ஆச்சாரியாரே) இந்தியை எதிர்த்ததுபோல், மதுவைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திய  முதுபெருந்தலைவர் கலைஞர் கருணாநிதியே மக்களின் நாடிபிடித்துப் பார்க்கும் வல்லமையால் அதனை எதிர்க்கிறார். தான் முனைப்பு காட்டினால் மக்கள் நம்பமாட்டார்கள் என்றுதான் தன் மகள் கவிஞர் கனிமொழி மூலம் மதுஎதிர்ப்பு உணர்வைக்  கையிலெடுக்கச் செய்து அவர்கள் உள்ளத்தில் இடம்பிடிக்கப் பார்க்கிறார்.
  கொள்கை பரப்பு பாடல்கள் பாடுபவர்கள் யாரையும் குறிப்பிட்டுத் தாக்காமல் பாடினால் நல்ல வரவேற்பு  கிடைக்கும். தாம்சார்ந்துள் ளகட்சி அல்லது அமைப்பின் சார்பாகப்பாடும்பொழுது பிறர் அதைனப் புறக்கணிப்பர். எதிர்பார்த்த வரவேற்பு பிற தரப்பாரிடம் இருக்காது. அப்படித்தான் கோவன் முதலானவர்கள் பாடல்கள் பொதுமக்கள் அறியா நிலையிலும் அறிந்தவர்கள், பொருட்படுத்தாத நிலையிலும் இருக்கின்றன. ஆனால், அரசின் நடவடிக்கையால் இணைய உலகில் உள்ள அனைவரும் இப்பொழுது அவற்றை அறிந்துவிட்டனர். இனிப் பாடுவதைத்தடுக்க அரசு எடுத்த முயற்சியே அப்பாடல்களைப் பரப்பிவிட்டது.
  பீகார் முதலான மாநிலங்கள்போல் மக்களின் உணர்விற்கு மதிப்பளிக்காமல்,  நாளும் மடியும் குடிமக்களின் உயிர்களைக் காப்பாற்றாமல், அவற்றால் சிதையும் குடும்பங்களைச் சிதைவுகளிலிருந்து மீட்காமல்மதுவிலக்குப் பரப்புரையாளர்கள் மீது, வழக்கு தொடுப்பது முறையாகுமா? மதுவிலக்கு  மாநாட்டில் பேசிய அல்லது பாடிய பங்கேற்பாளர்களைத் தேசியஅரசுப்பகைச் சட்டப்பிரிவின் கீழ்க் கைது செய்வது சரிதானா?
  எனவே,  இவ்வழக்கிற்கான  தண்டனை ஆளுங்கட்சிக்கு வாக்குப்பதிவன்று வழங்கப்படும் என்பதை நினைவில் கொண்டு, அரசு இவ்வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மதுவிலக்கு பரப்புரையாளர்களும் தனியாள் தாக்குதலின்றி விழிப்புணர்வை முன்னிலைப்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 127,  பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2016
Akaramuthala-Logo

Followers

Blog Archive