தலைப்பு-திராவிடத்தைப்பழிப்போர்-திரு : thalaippu_thiraavidathaipazhippoar_thiru

திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்!

 “தமிழர்களின் தேசியமொழி தமிழ்தான். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளித்தல் வேண்டும்.”  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரால் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்திற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. அதே நேரம்,  தமிழ்த்தேசியம் பேசுவதாக எண்ணும் சிலர், தமிழை உயர்த்துவதாக எண்ணிக்கொண்டு திராவிடத்தைப்பற்றி இழிவாகச்சொல்வது நம்மை நாமே தாழ்த்துவதாகும்.
  திராவிடம் என்பது தமிழின் பெயரன்று. ஆனால் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுவதற்கு அடையாளமாக வந்த பெயர்.  ஆரியம் வந்த பொழுது அதற்கு  எதிராகத் தனிமையில் தமிழ் மட்டுமல்லாமல்,  அதன் மொழிக்குடும்பமே இணைந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் திராவிடம் என்பது முன்னிலைப்படுத்தப்பட்டது. பல நேர்வுகளில் திராவிடம் என்பதன் சிறப்பு தமிழின் சிறப்பே.
 பரதக்கண்டம் என்று சொல்லப்படுகின்ற நாவலந்தீவு முழுவதும் தமிழாக இருந்த காலக்கட்டத்திற்கு அடுத்ததாகத் தென்பகுதி முழுவதும் தமிழாக இருந்தது. மொழிக்கலப்பாலும் மொழிச்சிதைவாலும் அறியாமையாலும் தமிழிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலான பல மொழிகள் தோன்றின. அதனால் இப்பகுதி மக்கள் உருவான புதுப்புதுமொழிபேசுநர்களாக அறிவிக்கப்பட்டனர். அஃதாவது கன்னடர், தெலுங்கர் என்பனபோல். இவ்வாறு தமிழின் கிளை மொழிகளைப் பேசியதாலேயே அப்பகுதிகளில் இருந்த தமிழக நாகரிகம், பண்பாடு, கலை,   முதலானவற்றின் சிறப்புகள் அந்தந்த மொழிக்குரியனவாக ஆகிவிடாது. எனவே, புது மொழியின் பெயரால் அழைப்பதும் தவறு; மூலமொழியாம் தாய்த்தமிழின் பெயரால் அழைப்பதும் புதியவர்களுக்கு ஏற்கத்தக்கனவாக இல்லை. எனவேதான், திராவிடம் என்ற பெயரால் தமிழ்க்குடும்ப மொழிகள் வழங்கும் பகுதிகள் அழைக்கப்பெற்றன.
 விவேகானந்தர், தாகூர் முதலான பலரும் இந்திய நாகரிகம் என்பது பெரிதும் திராவிடநாகரிகமே; இந்தியப் பண்பாடு என்பது திராவிடப் பண்பாடே; இந்தியக்கலை என்பது திராவிடக்கலையே!  பெரிதும் திராவிடமும் சிறிது ஆரியமும் கலந்த கலவை  இவை என்ற பொருளில் பேசியும் எழுதியும் வந்தனர்.  திராவிடம் என்ற பெயரால், தமிழர்களின் இலக்கியச் சிறப்பு, தமிழர்களின் மொழிச்சிறப்பு,  தமிழர்களின்பண்பாட்டுச் சிறப்பு, தமிழர்களின் நாகரிகச் சிறப்பு, தமிழர்களின் கட்டடக்கலைகளின் சிறப்பு, தமிழர்களின் நாட்டியக் கலைகளின் சிறப்பு எனத் தமிழர்களின் சிறப்பே கூறப்படுகின்றன.  
  ஆரிய-திராவிடப் போரில், தமிழ் எனக்குறிக்கப்பெறும் திராவிடம் என்பதை அழிப்பதற்குத் திராவிடத்திற்கு எதிரான கருத்துகள் பயன்படும். ஆரியர்கள் திட்டமிடுவதுபோல் இப்போது பேச்சுகளும் வருகின்றன.  திராவிடத்தால் வீழ்ந்ததாகக் கூறுவதும் திராவிடத்தை ஒழிப்போம் என்பதும் இந்தவகையில் ஆரியத்திற்கு வெற்றிதான்.
  நாம் தமிழ்க்குடும்ப மொழிகள் அல்லது திராவிட மொழிகள் என்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை மட்டும் கருதுகிறோம். சிலர், துளு, படகு இரண்டையும் அறிவர். ஆனால், உண்மையில் தமிழ்க்குடும்ப  மொழிகள்
தென்திராவிட மொழிகள்
நடுத் திராவிட மொழிகள்
வட திராவிட மொழிகள்
வகைப்படுத்தப்படாதவை
எனவும் மேலும் பலவாகவும் உள்ளன.
  பாக்கித்தான், ஆபுகானித்தான் முதலான பிற நாடுகளையும் சேர்த்தால் 85 இற்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன. இவையாவும் தமிழ்க்குடும்ப மொழிகள் என அழைக்கப்படும்வகையில் தொண்டாற்ற வேண்டிய நாம்,  தமிழ்த்தாய்மையின் சிறப்பை உணர்த்தும் வகையில் மொழியியல் வரலாற்றைப் பரப்ப வேண்டிய நாம்,  கட்சி அரசியல்  அடிப்படையில் திராவிடத்தைத் தாக்கிப் பேசுவது திராவிடம் என்ற பெயரில்  உணர்த்தப்படும் தமிழின் சிறப்பை அழிப்பதாகும்.
  திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிற பொறுப்பாளர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் திராவிடம் என்னும் கருத்தியலைத் தாக்குவது சரியல்ல. பொதுவாக ஊழல் என்பதும் குடும்ப அரசியல் என்பதும்  எல்லாக்கட்சிகளையும்  ஆட்டிப்படைக்கின்றன. இவற்றின் தோற்றுவாயே பேராயக்கட்சியாம் காங்கிரசே! ஊழலற்ற நேர்மையான அரசியலை வேண்டுவோர் குறிப்பிட்டுக் கூற வேண்டுமே தவிர, அவர்கள் சார்ந்த கருத்தியலைக் குறை கூறக்கூடாது.  ஒருவர் செய்யும் குற்றங்கள் அல்லது தவறுகளுக்கு அவர் சார்ந்த இயக்கத்தின் முன்னவர்கள்  ஆற்றிய நல்ல பணிகளையும் ஏற்காது குறை கூறுவது தவறல்லவா?
  நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள், திராவிடக்கட்சிகளின் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் முதலானோர் பணிகளால்தான் தமிழ்த்தேசிய உணர்வே தமிழ் நாட்டில் தலை தூக்கியது;  பிற மொழிக் கலப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற உணர்வு மூண்டெழுந்தது;  மொழித்தூய்மையின் தேவை உணர்த்தப்பட்டது. இன்றைக்குத் தமிழ்த்தேசியம் பேசுநர் கையாளும் மேற்கோள்களுக்குரிய பாடல்களை எழுதியவர்கள், செய்திகளை எழுதியவர்கள், எழுதியும் பேசியும் வருநர்கள் பெரும்பான்மையர் திராவிட இயக்கத்தவரே! அவ்வாறிருக்க நாம் பொதுவில் திராவிட இயக்கத்தைக் குறை கூறுவது எந்தவகையில் ஏற்றதாகும்? தமிழ்த்தேசியம்பற்றிய உணர்ச்சிமிகு எழுச்சிப்பாடல்களைப் பாடிய பலர் இவர்கள் குறிப்பிடும் திராவிட வந்தேறிகள் என்பதை அடையாளங்காட்டி அந்த ஆன்றோர்களை நான் இழிவுபடுத்த விரும்பவில்லை.  தமிழை  நேசிக்கும் தமிழைப் பரப்பும் அனைவரும் தமிழர்களே! தமிழுக்குத்   தொண்டாற்றிய/தொண்டாற்றும் அயல்நாட்டவரை நாம் பாராட்டுவதுபோல்  இவர்களும் பாராட்டிற்குரியவர்களே!
  அதே நேரம், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களுக்குரிய வாய்ப்பு வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்களைத் தெலுங்கர்களாகவோ பிற மொழியினராகவோ கருதுவோர், முதலில் தமிழராக மாற வேண்டும். அல்லது தமிழ்நாட்டுச் சலுகைகளைப் பெறக்கூடாது. இட ஒதுக்கீட்டுச் சலுகைகளில் ஆவணப்படித் தாய்மொழியாகத் தமிழைக் குறிப்பிடுவோருக்கு மட்டுமே அவற்றை அளிக்க வேண்டும். திராவிடத்தமிழர் என்பதுபோன்ற பெயர்களில் அமைப்புகள் நடத்துவோர் அவற்றை வேறு மாநிலங்களில் நடத்திக் கொள்ளட்டும்!
  இப்பொழுது ஆரியம் கற்பனை எனப் பொய்யாகக்கூறி வருபவர்கள், திராவிடத்தைத் தாக்குவதன்  மூலம் தமிழின் சிறப்பபைத்தான் அழிக்கப்பார்க்கின்றனர். இதற்கு நாம் இடம்  கொடுக்கக்கூடாது. வணிகம் வேறு,  மொழி வேறு என்று  சொல்லாமல் மொழிதான் வாழ்வு என்பதை உணர்ந்து தமிழ்த்தேசியம் பேசுவோர்  வணிகத்திலும் கலை, இலக்கியப்பரப்பலகளிலும்  தமிழை முன்னிலைப்படுத்த வேண்டும். தமிழ்த்தேசியம் பேசுவோர்தங்களைச் சார்ந்தவர்கள் தமிழில் படிக்கவும், தமிழை எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தவும் முன்முறையாக இருக்கச் செய்ய வேண்டும். பெயர்கள், பெயர்ப்பலகைகள், வருகைப்பதிவேடுகள்,  பொருள் பட்டியல்கள், உணவு நிரல்கள், கட்டடப் பெயர்கள், நிறுவனப்பெயர்கள், கல்வியகப் பெயர்கள், வணிகப் பெயர்கள்,  என ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழ் இல்லை. திராவிட வேந்தேறி என  வைவோர் முதலில் இந்த இடங்களில் தமிழை அமரச்செய்ய அருந்தொண்டாற்றட்டும்! நாம், தமிழை உரிய இடங்களில் இ.டம்பெறச்செய்தாலே தமிழர்களும் முன்னிலைக்கு வருவர்.
  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் குடும்பங்கள் எனத்தனித்தனியாக வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு தாய் வயிற்று வழிமுறையினர்தாமே! தனித்தனியாக இருப்பதால் பகைவர்களாக ஆகிவிடுவார்களா? ஒரு தாய் வயிற்று வழிமுறையினர் என உணராதவர்களை உணரச் செய்வதுதான் தாய்க்குடும்பத்தினரின் கடமையாகும். மாறாக, அவர்களைப் பகைவர்களாகக் கூறி விலக்குவது குடும்பப்பரம்பரைச் சிதைவிற்குத்தான் இட்டுச் செல்லும். இதை,  நன்குணர்ந்து  தமிழ்த்தேசியவாதிகள், தமிழர்களிடம் தமிழ்த்தேசிய உணர்வை  ஊன்றட்டும்!  குடும்பப்பிரிவினைக்கு வழிகோலுவதுபோல்,  தமிழ்மொழிக்குடும்பத்தினரை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டா!
  எனவே, வரலாறு அறியாமல்,  திராவிட இயக்கப்பணிகளைக் கொச்சைப் படுத்தாமலும், திராவிடம் என்னும் பெயரில் தமிழின் சிறப்பே உணர்த்தப்படுவதைப் பழித்து உரைக்காமலும்,  தமிழ் எல்லா இடங்களிலும் ஆட்சி செய்ய அரும்பணி ஆற்றட்டும்! தமிழின்தலைமையே தமிழர்க்கு முதன்மை தரும் என்பதை உணரட்டும்!
வாழிய செந்தமிழ்!
வாழ்கநற்றமிழர்!
வாழிய பார்புகழ் பைந்தமிழ்நாடு!
வாழிய தமிழ்கூறு நல்லுலகம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+10