அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2016
மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா?
ஆளுங்கட்சிக்குத் தண்டனையா?
செய்தியும் சிந்தனையும்
[செய்தி :
கடந்த மாசி 02, 2047 / பிப்பிரவரி மாதம் 14 அன்று திருச்சிராப்பள்ளியில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அங்கு மதுஒழிப்பை வலியுறுத்திப்பேசிய, மாநாட்டினை நடத்திய மக்கள் அதிகாரம் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சி. இராசு, செயற்குழு குழு உறுப்பினர் காளியப்பன், தாவீது இராசு, சென்னை ஆனந்தியம்மாள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு அரசின் சாராயக்கடை( தாசுமாக்கு) பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது, பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2016 அன்று அரசு தேசஇரண்டக வழக்குப் பதிவு செய்துள்ளது; மது எதிர்ப்புப்பாடல் பாடிய சிறுமியர் இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளது.]
அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக
அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர் காவல்துறையினர். தேயம் அல்லது
தேசம் என்றால் ஆளும் கட்சியின் தலைமை எனப் புதிய இலக்கணத்தை உருவாக்கி
அதற்கேற்பக் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். தனிப்பட்ட முறையில்
பார்த்தால் காவலர் உள்ளங்களும் கனிவான உள்ளங்கள் என்பதுபோல்
காட்சியளிக்கும் காவலர்களும் சட்டம்ஒழுங்கைக் காப்பாற்றுவதாக எண்ணும்
பொழுதுமட்டும் முரட்டு உள்ளங்கள் உடையவர்களாக மாறிவிடுகின்றனரே! ஆனால்,
மக்கள்கலை இலக்கியக் கழகத்தினரின் மக்கள் அதிகாரம் இயக்க
நிகழ்ச்சி நடந்து 6 வாரங்களுக்குப்பிறகு வழக்கு பதிந்துள்ளதால் மேலிடத்தில்
கலந்துபேசி எடுத்த முடிவாகத்தான் இருக்கும்; அல்லது மேலிட அறிவுறுத்தலால்
எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கும். அவ்வாறெனில் காவல்துறை வெறும்
அம்புதான்!
“மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு”
என்று அரசுதான் விளம்பரங்கள் மூலம் சொல்கிறது. அதையே கலைஞர்களும்
குழந்தைகளும் சொன்னால் கொடுங்குற்றமா? மதுவிலக்கு உரை/இசைப் பரப்புரையால் வாக்கு வங்கியானதுபறிபோகும் என்ற அச்சம் வந்தால், மதுவிலக்கில்தானே கருத்து செலுத்த வேண்டும்?
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை (திருக்குறள் 555)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
செல்வம் என்பது பொருட்செல்வம் மட்டுமல்ல.
அதனைப் பெருக்குவதற்குக் காரணமான பதவிச்செல்வமும் ஆட்சிச் செல்வமும்தான்!
அதனை அழிக்கும் கருவி எது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்? ஆட்சியால் துன்புறுவோர் சிந்தும் கண்ணீர்தான் வலிமையான கருவி என்கிறார்! ஆட்சியையே வீழ்த்தும் வலிமை படைத்த கருவி
என்கிறார்! உலக நாடுகளில் எல்லாம் ஆட்சிகளை வீழ்த்திய பெருமை
இக்கண்ணீருக்கு உண்டு! நம் நாட்டு வரலாறும் இந்த உண்மையைச் சொல்கின்றது.
இதனைத் தெரிந்திருந்தும் குடிமக்கள் கண்ணீர் சிந்தக்காரணமாக அரசு இருப்பதன்
காரணம் என்ன? ஆட்சி சரியும் என்று அச்சம் வந்துவிட்டால்தான் அதனை நிலைக்க வைக்க இத்தகைய செயல்களில் ஈடுபட்டு மிகு விரைவாக அழிவைத் தேடிக்கொள்வர்.
நிலையான முதல்வர் என்ற நம்பிக்கை கொண்டிருந்த புரட்சித்தலைவி
செயலலிதாவிற்கு ஆட்சி பறிபோகும் என்ற அச்சம் வந்துவிட்டதா? அல்லது அவரது
அண்மையர்கள்(தங்கள் செல்வத்தைப் பெருக்கவும் காக்கவும் தவறான வழிக்கு
இட்டுச் செல்லும் அருகிலுள்ளவர்கள்) தங்களைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறான
வழிகாட்டுகின்றார்களா?
இது தொடர்பான முன் நிகழ்வை அரசு
கருத்தில் கொள்ளவில்லையா? திருச்சிராப்பள்ளியில் அக்டோபர் 30 அன்று மக்கள்
கலை இலக்கியக் கழகப் பாடகர் கோவன் என்கிற சிவதாசை நள்ளிரவு கைது
செய்தது காவல்துறை. அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-அ (தேச
இரண்டகம்), 153-அ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்) கைது
செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உயர்நீதி மன்ற உசாவலில் அரசு
வழக்குரைஞர் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்படவில்லை என்றார்.
நீதபதி சுந்தரேசு, “அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும்
முயற்சிகளில் இறங்கக்கூடாது” எனக் கூறினார். இது போன்ற செயல்பாடுகள்
தேசத்துரோகக் குற்றச்சாட்டிற்குள் வராது என நீதிபதி சந்துருவும்
தெரிவித்துள்ளார். இருப்பினும் இப்பொழுது இவர்கள், தேச
இரண்டகக்குற்றச்சாட்டின் கீழ்க் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகச்சிறுபான்மையராக உள்ள
இயக்கத்தவர்மீது நடவடிக்கை எடுப்பதால் என்னஆகிவிடப்போகிறது எனத் தவறாகக்
கணக்கிடக்கூடாது. தேச இரண்டகம் அல்லது அரசுப்பகை அல்லது
தேசப்பாதுகாப்புச்சட்டத்தின்படித் தளையிடப்பட்டவர்கள் சிறுபான்மை
இயக்கத்தவராக இருக்கலாம். ஆனால், சிறைக்கொட்டடிக்குள் அடைப்பதற்கான
காரணமும் முறையும் அறிய வரும்பொழுது குடும்பத்தவர் குடிப்பழக்கத்தால்
சிதைந்து நைந்துபோயுள்ள பெரும்பான்மையான மக்கள் கிளர்ந்தெழ மாட்டார்களா?
கிளர்ச்சி என்றால் அரசிற்கு எதிரான போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம்
என்றுமட்டும் எண்ணக்கூடாது. மக்கள் வாக்குச்சீட்டு என்னும் வலிமையான ஆயுதத்தைப் பயன்படுத்தும் நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ள நேரமிது!
ஆட்சியைப் புரட்டிப்போடும் நெம்புகோலை மக்கள் கைகளில் வைத்து இருக்கும்பொழுதாவது அடக்குமுறையைத் தவிர்த்து அறமுறைக்குச் செல்லலாம் அல்லவா?
இந்தியைத் திணித்த மூதறிஞர்
இராசகோபால்(ஆச்சாரியாரே) இந்தியை எதிர்த்ததுபோல், மதுவைத் தமிழ்நாட்டு
மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதுபெருந்தலைவர் கலைஞர் கருணாநிதியே
மக்களின் நாடிபிடித்துப் பார்க்கும் வல்லமையால் அதனை எதிர்க்கிறார். தான்
முனைப்பு காட்டினால் மக்கள் நம்பமாட்டார்கள் என்றுதான் தன் மகள் கவிஞர்
கனிமொழி மூலம் மதுஎதிர்ப்பு உணர்வைக் கையிலெடுக்கச் செய்து அவர்கள்
உள்ளத்தில் இடம்பிடிக்கப் பார்க்கிறார்.
கொள்கை பரப்பு பாடல்கள் பாடுபவர்கள்
யாரையும் குறிப்பிட்டுத் தாக்காமல் பாடினால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
தாம்சார்ந்துள் ளகட்சி அல்லது அமைப்பின் சார்பாகப்பாடும்பொழுது பிறர்
அதைனப் புறக்கணிப்பர். எதிர்பார்த்த வரவேற்பு பிற தரப்பாரிடம் இருக்காது.
அப்படித்தான் கோவன் முதலானவர்கள் பாடல்கள் பொதுமக்கள் அறியா நிலையிலும்
அறிந்தவர்கள், பொருட்படுத்தாத நிலையிலும் இருக்கின்றன. ஆனால், அரசின்
நடவடிக்கையால் இணைய உலகில் உள்ள அனைவரும் இப்பொழுது அவற்றை
அறிந்துவிட்டனர். இனிப் பாடுவதைத்தடுக்க அரசு எடுத்த முயற்சியே
அப்பாடல்களைப் பரப்பிவிட்டது.
பீகார் முதலான மாநிலங்கள்போல் மக்களின் உணர்விற்கு மதிப்பளிக்காமல், நாளும் மடியும் குடிமக்களின் உயிர்களைக் காப்பாற்றாமல், அவற்றால் சிதையும் குடும்பங்களைச் சிதைவுகளிலிருந்து மீட்காமல், மதுவிலக்குப் பரப்புரையாளர்கள் மீது, வழக்கு தொடுப்பது முறையாகுமா? மதுவிலக்கு மாநாட்டில் பேசிய அல்லது பாடிய பங்கேற்பாளர்களைத் தேசியஅரசுப்பகைச் சட்டப்பிரிவின் கீழ்க் கைது செய்வது சரிதானா?
எனவே, இவ்வழக்கிற்கான தண்டனை
ஆளுங்கட்சிக்கு வாக்குப்பதிவன்று வழங்கப்படும் என்பதை நினைவில் கொண்டு,
அரசு இவ்வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மதுவிலக்கு
பரப்புரையாளர்களும் தனியாள் தாக்குதலின்றி விழிப்புணர்வை முன்னிலைப்படுத்த
வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2016
No comments:
Post a Comment