செய்தியும் சிந்தனையும்
[செய்தி: நண்பர் இ.பு.ஞானப்பிரகாசன், மின்னம்பலம் (https://minnambalam.com/k/1459296056 ) தளத்தில் இருந்து பின் வரும் செய்தியை அனுப்பியிருந்தார்: திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் பதினான்கு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வழக்குப் பதிவு செய்து தங்களைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மார்ச்சு
28, 29 ஆகிய இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
இவர்கள், மூன்றாவது நாளாகப் போராட்டத்தை மார்ச்சு 30 அன்றும்
தொடர்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சிறை அலுவலர்கள்
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அலுவலர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். ]
என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்?
உற்றார், உறவினைர்,
உடைமைகளைவிட்டுவிட்டுத் தாயகத்தைவிட்டு நீங்கித் தமிழ்நாட்டிற்கு
ஈழத்தமிழர்கள் வந்ததன் காரணம் என்ன? இங்கே ஆறுதலும் அரவணைப்பும் கிட்டும்
என்பதுதானே!
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
என்ற பெயர் மறையும் வகையில் நொந்தாரைக் கொடுந்துயரில் தள்ளும் நாடாக
மாறியிருக்கும என்று தெரிந்திருந்தால் யாரும் இங்கே வந்திருக்க
மாட்டார்களே!
ஈழத்தமிழர்கள் துயரம எப்பொழுது முடியும் என்றால், அவர்கள் வாழ்க்கை முடியும்பொழுதுதான் முடியும் என்று நாம் நடந்துகொண்டால் அவர்கள் எங்குதான் செல்வார்கள்? என்னதான் செய்வார்கள்?
பேச்சிலே தேனாகவும் செயலிலே தேளாகவும் தமிழக அரசியலாளர்கள் இருந்தால் அவர்கள் யாரைத்தான் நம்புவது?
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.(திருக்குறள்
1158) எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுவது தலைவன்-தலைவி பிரிவிற்கு
மட்டுமல்ல! இனிய சுற்றத்தைப்பிரிந்து வேறிடத்தில் வாழும் அனைவருக்கும்
பொருந்தத்தக்கதே! தாய்நாடு நீங்கி அயல்நாடு புகுந்தோர் சுற்றத்தாரைப்
பிரிந்து வாழ்வதும் கொடுமைதான். ஆனால், இவர்கள் இரக்கம் காட்டவேண்டிய நம்
நாடு அடக்குமுறையைக்காட்டுகின்றதே!
புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கெல்லாம்
பெரும்பாலான நாடுகள் அடைக்கலம் அளித்துச் சம உரிமைகள் அளிக்கின்றன! தங்கள்
நாட்டுக் குடிமக்களாக நடத்துகின்றன. புலம் பெயர்ந்தோரை மதிக்கும் நன்னாடாக நாம் கனடாவைக் கூறலாம். அங்கு வாழும் செல்வி திவ்வியா பிரபாகரன், “கனடாவில்
எந்த வேற்றுமையும் இல்லாமல் மதிக்கப்பட்டு கனடிய இளையோராக வாழ்கிறோம்.
எமக்கு அயல் தேசத்தில் இருக்கும் உணர்வு இல்லை. வேதனைகள், அச்சம், சோதனைகள்
இல்லை. அகதிகளாக வந்த எம் பெற்றோரும் கனடியர்களாக நிம்மதியாக
வாழ்கிறார்கள். கனடா எல்லோரையும் சமமாக மதிக்கிறது. அரசியலிலும் அனைத்துத்
துறைகளிலும் கூட ஈழத் தமிழ் மக்கள் உரிமையை நிலை நாட்டி மகிழ்ச்சியாக
வாழ்கிறார்கள்.” எனக்கூறுகிறார்(பாலனின் சிறப்பு முகாம் நூல்பற்றிய பார்வை)
நம் நாட்டில் சமமாக மதித்துப் போற்றவேண்டிய நாம், குறைந்தது கனிவும் பரிவும் கொண்டு மனித நேயத்துடன் நடத்தலாம் அல்லவா?
தமி்ழ்ஈழத்திற்காகக் குரல் கொடுக்கும் அரசு, போர்க்குற்றவாளிகளைத்
தண்டிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கும் அரசு, அமையும் தமிழீழத்திற்கு
இங்குள்ள தமிழீழ மக்களை நலமாகவும் வளமாகவும் அனுப்ப வேண்டாமா? குற்றுயிரும்
குலையுயிருமாகத்தான் அனுப்புவதா? ஈழத்தமிழர்கள் இங்கே வந்து ஒரு தலைமுறை
ஆன பின்பும் அமைதியான வாழ்வைத் தர மறுப்பதேன்? இதனைத் தட்டிக்கேட்கும் அறவாணர் இங்கே வாழவில்லையா? மக்களை மக்களாக நடத்தாத மாக்களா நாம்?
இந்திய ஒன்றியஅரசுதான் தமிழினப்பகையுணர்வுடன் நடந்து கொள்கிறது என்றால் தமிழ்நாட்டரசும் அவ்வாறு நடந்து கொள்ளலாமா?
தமிழ்நாட்டரசுதான் அவ்வாறு நடந்துகொள்கின்றது என்றால் ஆளுங்கட்சியினர்
அரசிற்கு அறிவுறுத்தாமல் அமைதி காக்கலாமா? ஆட்சியில் அமர அரசியல் நடத்தும்
கட்சிகள் அரசிற்கு இடித்துரைக்க வேண்டாவா? ஊடகங்கள் உண்மையை உலகிற்கு
உணர்த்தவேண்டாவா? முன்னரே கூறியவாறு வருங்காலப்பழியிலிருந்து நம்மைக்
காத்துக் கொள்ளவாவது
நாம் மனிதநேயர்களாக நடந்துகொள்வோம்!
ஈழத்தமிழர்களை நமக்கு இணையாக வாழவைப்போம்!
தேர்தலில் இதையும் ஒரு பொருண்மையாகக் கொண்டு
மனித நேயருக்கே நம் வாக்கு என்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment