Sunday, January 21, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125

 





(சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்)

சட்டச்சொற்கள் விளக்கம் 121-125

126. Abnegationமறுதலிப்பு   பொதுநலன் கருதித் தன் நலனைக் கைவிடல்.
Abnormalஇயல்நெறி பிறழ்ந்த, இயல்பிழந்த, இயல்புமீறிய   அமைப்பு முறைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகைமையில்லாத அல்லது இயல்பற்ற நிலைமைகள்.
Abnormalityபிறழ்மை   பிறழ்வு   இயல்பு அல்லாத நிலைமையை  அல்லது இயல்பு கடந்த நிலைமையக் குறிப்பது.
Abnormality of mind     இயல்புகடந்த மனநிலை   இயல்பு திரிந்த மனநிலை இயல்பிலி மனம் மனத்திரிவு     இ.த.ச.பிரிவு 84 மனநலமற்ற ஒருவரின் செயல் குறித்துக் கூறுகிறது.   ஒரு செயலைச் செய்யும் பொழுது, மனநலமற்று இருந்தால் அல்லது செயலின் தன்மையை அறிய இயலாத நிலையில் இருந்தால் அவர்  தவறான செயல் அல்லது சட்டமுரணான செயல் செய்திருந்தால் அது குற்றமாகாது.     கருத்தரிப்பின் பின்னும் மகப்பேற்றிற்கு முன்னும் மகவு கண்டறியும் உத்தி(பாலியல் தேர்வுத் தடை)சட்டம், 1994, பிரிவு 2(ஓ)/2(ம)
Aboardஊர்தியில்    நீரில் / இருப்புப் பாதையில்/வானில் இயங்கும் ஊர்தியில்   வானூர்தியில் தொடரியில்(தொடர் ஊர்தியில்) கப்பலில்   à bord என்னும் பிரெஞ்சு தொடரிலிருந்து Aboard என்னும் சொல் பிறந்தது. ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் பொழுது வரவேற்பதற்கும் இத்தொடர்(“Welcome aboard” ) பயன்படுகிறது. தொடரியோ கப்பலோ புறப்படும் பொழுதும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.(“All aboard!”)

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, January 20, 2024

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்

சென்னை வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்

முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7

Alimony-துணைமைப்படி/துணைமைத் தொகை

ஊட்ட உணவு, ஊட்டச்சத்து, ஊட்டமளித்தல் என்னும் பொருள் கொண்ட alimōnia  என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து alimony சொல் வந்தது.

வாழ்க்கைப்படி, பேணற்படி, ஊட்டம், வாழ்க்கைப் படி, பிரிமனைப் படி, வாழ்க்கைப்படி, வாழ்க்கைப் பொருளுதவி, வாழ்க்கைப் படி. சீவனாம்சம் எனப் பலவாறாகச் சொல்லப்படுகிறது. சீவனாம்சம் தமிழல்ல. பொதுவாகக் கணவன் பிரியும் நிலைக்கு மனைவிக்குத் தரும் வாழ்க்கைப்படியாக உள்ளது.

மணவிலக்கிற்குப் பின்னர், மனைவியின் உண்டி, உறையுள்,  உடை  பிற தேவைகளை நிறைவேற்றுவதற்காக உதவும் தொகை. மனைவியுடன் குழந்தை அல்லது குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கும் சேர்த்து வழங்கப்டுவது.

எனினும் சில நேர்வுகளில் மனைவியும் கணவனுக்குப் பேணல்படி வழங்கும் நிலையும் உள்ளது.

துணையைப் பிரிந்து வாழ்தல் அல்லது மணவிலக்கு பெற்று வாழ்தல்  என்னும் ஒப்பந்த அடிப்படையில் துணைவருக்கு அல்லது முன்னாள் துணைவருக்குக் கொடுக்கப்பட வேண்டியது என நீதிமன்றத்தால் வரையறுக்குப்படும் தொகையாகும்.

குறைந்த வருவாய் அல்லது வருமானமின்மையால் துணைவர் அல்லலுறக்கூடாது என்பதற்காக இது வழங்கப்படுகிறது.

பொதுவாக வாழ்க்கைத் துணைவர் ஒருவர் இல்லற வாழ்க்கையிலிருந்து பிரியும் பொழுது  மற்றொரு துணைவருக்கு அளிப்பது என்பதால் துணைமைப்படி எனலாம். படி என்று சொல்வதன் காரணம் திங்கள் தோறும் அளிக்கப்படுவதால். ஒட்டு மொத்தத் தொகை ஒரே தவணையில் வழங்கினால் துணைமைத் தொகை எனலாம். 

divorce என்றால் மண முறிவு அல்லது மண விலக்கு என்னும் பொருள்களிலேயே பார்க்கிறோம். 1990களில் ஒரு பையன் தன் பெற்றோரிடம் இருந்து divorce கேட்டு வழக்கு தொடுத்தான். அப்பொழுதுதான் உறவு முறிவு அல்லது உறவு விலக்கு என்பதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. இத்தகைய நேர்வில் வழங்கப்படும் படி பேணற்படியாகும். எனினும் வாழ்க்கைக்குத் துணையாகச் செலவுத் தொகையாக அல்லது பேணல் தொகையாக வழங்கப்டுவதால் துணைமைப்படி என்பதை இதற்கும் பொருத்தமாகக் கருதலாம்.

alibi, plea of – அயலிருப்பு   முறைப்பாடு

alibī என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது.  இதன் பொருள்கள் வேறோர் இடத்தில் அல்லது மற்றோர் இடத்தில் என்பனவாகும்.

வேற்றிட வாதம் என்கின்றனர்.  அயலிடத்தில் இருப்பதாகத் தெரிவிப்பதால் alibi – அயலிட இருப்பு > அயலிருப்பு எனலாம். குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில் குற்றத்திற்குத் தொடர்பில்லாத அயலிடத்தில் இருந்ததாக முறையிடுவதால் அயலிருப்பு முறையீடு ஆகிறது.

வழக்குரை, வேண்டுகோள், வேண்டுதல், எதிருரை, வாதுரை, சுர, நியாயம், வழக்கு, முறையீடு, வழக்கு, இரைஞ்சல், முறையீடு, வழக்குரை, வாதம், இரைஞ்சல், பிராது, புகார் எனப் பலவும் plea  என்பதற்குத் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றுள் பிராது என்பது உருதுமொழியி்ல் இருந்து வந்த சொல்.

பிற  Plaint,  request, Rejoinder, complaint போன்ற பிற சொற்கள் வரும் இடங்களில் பயன்படுத்தப்படுவதால் முறைப்பாடு எனலாம்.

குற்றஞ் சாட்டப்படுநர், அல்லது குற்றவாளி என ஐயப்படுபவர், குற்றம் நடந்த இடத்தில், குற்றம் நிகழ்ந்த நேரத்தில் இல்லை என முறையிடுவதே அயலிட முறைப்பாடு >  அயலிருப்பு முறைப்பாடு

குற்றவழக்குச்சட்டத்தின்படிக் குற்றம் நடந்த இடத்தில்  தான் இல்லை என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ் சாட்டப்பட்டவருடையதே.

 amicus curiae, amica curiae – ஆற்றுநர்

amicus curiae  ஆண் உதவியாளரையும்   amica curiae பெண் உதவியாளரையும் குறிக்கிறது.

amīcus, cūria, cūriae என்னும் இலத்தீன் சொற்களின் பொருள்கள் முறையே நண்பன், நீதி மன்றம், நீதிமன்றத்தின் என்பனவாகும்.

amica என்பது பெண் உதவியரைக் குறிக்கும். பால் வேறுபாடின்றி இருபாலினரையும் நீதிமன்ற உதவுநர் எனலாம். நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர் என்பர்.

 சட்ட வழக்கில் தரப்பினராக இல்லாமல், முறைமன்றத்திற்குத் தகவல், வல்லமைக் குறிப்பு அல்லது நுண்ணறிவை  வழங்கி உதவும் தனியாள் அல்லது அமைப்பு.  எனினும் மன்ற உதவுநர் கருத்தைக் கருதிப்பார்க்க வேண்டுமா இல்லையா என்பது முறைமன்றத்தின் முடிவுரிமைக்கு உட்பட்டது.

ஆனால், உதவியாளர்/ உதவுநர் என்னும் பொழுது அலுவலகப் பணிக்கான உதவியாளா் அல்லது எழுத்துப்பணிக்கான உதவியாளர் எனப்பொருள் கொள்ளவே நேரிடும். ஏனெனில் அலுவலக உதவியாளர்,இளநிலை உதவியாளர், உதவியாளர் எனப் பதவிகள் உள்ளன. எனவே, அவர்களிலிருந்து வேறுபடுத்த வேறு சொல் கையாள வேண்டும்.

ஆற்றுதல் என்பது வழிகாட்டி உதவுவதைத் குறிக்கும். எனவேதான் அவ்வாறு வழிகாட்டும் நூலை ஆற்றுப்படை என்றனர்.

    “ஒருவீ ரொருவீர்க் காற்றுதிர்”  என்கிறார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறநானூறு 58, அடி 20,) இவ்வாறு உதவுதல் என்னும் பொருளில் வந்தாலும் வழிநடத்துதல் என்னும் பொருளே மிக்கிருக்கிறது.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன் என்கிறார் திருவள்ளுவர் (திருக்குறள் 46)

அறத்தாற்றின் – அறவழியில், இல்வாழ்க்கை ஆற்றின் – இல்லறத்தை நடத்திச் சென்றால் எனப் பொருள்கள்.

ஆற்றின் – ஆற்றுதல் – வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல், உவமையாதல்; செய்தல், தேடுதல், உதவுதல், நடத்துதல், கூட்டுதல், சுமத்தல், பசி முதலியன தணித்தல்; துன்பம் முதலியன தணித்தல்; சூடு தணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல் முறுக்காற்றுதல்; நீக்குதல் எனப்பொருள்கள்.

எனவே, வழி நடத்துநரை ஆற்றுநர் எனலாம்.

எனவே, முறை மன்றத்தில் வழக்கு தொடர்பான வழி நடத்துவதற்காக ஆற்றுப்படுத்துபவரை ஆற்றுநர் எனலாம். எனவே, முறைமன்ற ஆற்றுநர் > முறை யாற்றுநர் > ஆற்றுநர் எனலாம். ஆண் பெண் இருபாலராக இருப்பினும் ஆண் உதவியாளர் பெண் உதவியாளர் என்பதுபோல் குறிக்காமல் ஆற்றுநர் என்றே குறிப்பிடலாம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)

Wednesday, January 17, 2024

சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்

      18 January 2024      அகரமுதல



(சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 116-120

116. Ableவல்லமையுள்ள  

ஒரு செயலைச் செய்வதற்குரிய அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆற்றல் அல்லது திறன் அல்லது போதுமான வளங்களைக் கொண்டிருத்தல்.  

ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய போதுமான வளங்களையும் அதிகாரங்களையும் கொண்டிருத்தல்.
117. Able bodiedவல்லமையர்  

உடல் திறனாளர் என நேர் பொருளாக இருந்தாலும் உடலாலும் உள்ளத்தாலும் வலிமையானவரையே குறிக்கும்.  

உடல், உள்ள வலிமை என்பது, ஒரு வேலையைச் செய்து அல்லது தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுவது.  

வாழ்வுப்படி/பிரிந்துறை உதவி என அழைக்கப்பெறும் துணைமைத் தொகையைச் செலுத்தும் திறனையும்  குழந்தைக்கு ஆதரவாக இருக்க இயலுவதையும் குறிப்பது.  

ஒருவர் மக்களிடையே இயல்பாகச் செயல்படுகிறார், உடல் ஊனமோ மன ஊனமோ அவருக்கு இல்லை என்பதையே வல்லமையாளர் / உடல் திறன் உடையவர் என்பது குறிக்கிறது.
118. ABLPL  மு.பி.வி.  

முன்பிணை விண்ணப்பம்  

கைது செய்யப்படுவதை எதிர்நோக்கி அதைனத் தடுக்கும் முகமாக அளிக்கும் அனைத்துப் பிணை விண்ணப்பங்களும் இதில் அடங்கும். இதனால் எதிர்நோக்குப் பிணை விண்ணப்பம் என்றும் அழைப்பர்.  

கைது செய்யப்படுவதற்கு முன்பே பிணைக்கு விண்ணப்பிப்பதால் முன் பிணை விண்ணப்பம் எனப்படுகிறது.
119. Ablushநாணமுறல்   எ.கா.புகழ்ச்சியுரைகள் அவரை நாணமுறச் செய்தன.
120. Ablyதிறம்பட  

செயலாற்றல் கொண்டு திறம்படச் செய்தல்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, January 14, 2024

சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 111-115

111. Abjectionஇழிநிலை  

இழிதகவு  

இழிதகையான நிலைமையக் குறிப்பது   இலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டில் புறக்கணிப்பு என்னும் கருத்தாக்கத்தையும் இது குறிக்கும்.
112. Abjure  கைவிடு  

விட்டொழி  

முற்றோக ஒழித்தல்

ஆணையிட்டொழி; (சத்தியஞ்செய்து விட்டொழி)

ஏற்கெனவே மேற்கொண்ட சூளுரை அல்லது உறுதிமொழியைக் கைவிடுதல்.

கொள்கைக் கடப்பாட்டினைக் கைவிடுவதையும் குறிக்கும்.   ஆணையிட்டொழி (சத்தியத்தை விட்டொழி) என்னும் பொருளடைய abiūrō என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து  Abjure உருவானது. இந்திய யாப்புரை, பிரிவு 51 (அ)

113. Abkariமதுத்தொழில்

போதையூட்டும் மதுபானங்கள் அல்லது போதைப்பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனையைக் குறிக்கிறது.
114. Ablationஅகற்றுதல்  

உடலின் ஒரு பகுதியை அல்லது மெய்ம்மியை(tissue) அல்லது இதன் செயல்பாட்டை அகற்றுவது அல்லது அழித்தலைக் குறிக்கும்.  

புவியியலில் சூரியன், காற்று, மழையின் செயல்பாடடால், பனி அல்லது பாறையின் ஒரு பகுதி இழப்பைக் குறிக்கும்.   ஆட்சித்துறையில் பணியகற்றைத்தையும் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்.
115. Ablazeஎரிதல்   ஒளிவீச்சு     கொழுந்து விட்டு எரிவதையும் ஒளிமையத்தையும் குறிக்கிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, January 10, 2024

சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

106. Abidingகீழ்ப்படிகின்ற
கடைப்பிடிக்கின்ற  

நெறிமுறைக்கு அல்லது விதிமுறைக்குக் கீழ்ப்படிகின்ற அல்லது அதனைக் கடைப்பிடிக்கின்ற செயல்.
107. Abiding interestநிலை நலன்  

நிலையான அக்கறை அல்லது நிலையான ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கிறது.  
ஒரிசா குத்தகைச் சட்டம், சொத்தில் நிலையான ஆர்வம் கொண்டவர், உறுதியாக .. . . .  எப்போதும் நிலத்தில் நிலையான ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதில்லை  என்கிறது. – இராதாமணி திப்பையா மற்றும் பிறர் எதிர் பிரசா மோகன் பிசுவால் மற்றும் பிறர் (Radhamani Dibya And Ors. Vs Braja Mohan Biswal And Ors. On 29 October, 1983)(AIR 1984 Ori 77, 1984 I OLR 72)
108. Abidinglyநிலையான அக்கறை

தொடர்ந்த ஆர்வம்   நீண்டகாலமாகத் தொடரும் வகையில் அமைவது
.
109. Ability  

 
திறமை

வல்லமை, ஆற்றல்   ‘சக்தி’ என்றும் சொல்லுவர். ‘க்’ மெய்யெழுத்து அடுத்த ‘க’ வரிசை எழுத்து தவிரப் பிற மெய்யெழுத்துகள் வருவதில்லை. எனவே, ‘சக்தி’ என்பது தமிழ்ச்சொல்லல்ல.

பொறுப்பை ஏற்றுச் சுமப்பவர்களை(நிருவகிப்பவர்களை) ஆட்டாளி என்பர். உங்கள் காரியங்களுக் கெல்லாம் நான் ஆட்டாளியா? என்பது மக்கள் வழக்கு.  


நொய்ப்பம்  என்பதும் வல்லமையைக் குறிக்கும் சொல். “மரக்கலம் அலையாதபடி கடைந்த நொய்ப்பம்” (நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருப்பாவை . 30,  254) என இலக்கியத்தில் வருகிறது.  

எப்பதவியாயினும் அதற்குரிய தகுதியுடையவரை அமர்த்த வேண்டும் என பதவிக்குரிய விதிகள் கூறும்.  

110.    Ability Test

திறனறி தேர்வு
 
ஆற்றலறி தேர்வு
 
திறனறி தேர்வு

வெவ்வேறு வேலை தொடர்பான இடுபணிகள்(tasks) அல்லது சூழ்நிலைகளில் ஒருவரின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான தரப்படுத்தப்பட்ட முறையாகும். ஒருவரின் ஏட்டுக்கல்வியைவிட உள்ளார்ந்த ஆற்றலை அளவிடுகின்றது. வேலைஅமைப்பில் ஒருவரின் செயல்திறனை அறிய பணியமர்த்துநரால் அவ்வப்பொழுது நடத்தப்படும் தேர்வாகும்.
 
இப்பொழுது மாணாக்கர்களிடையேயும் அவர்களின் தகுதிறனை அறிய திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, January 7, 2024

சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 101-105

101. abide by arbitrationபொதுவர்  தீர்ப்புக்கு இணங்கு  

Abide – அமைந்தொழுகு, மதித்து நடத்தல்; எனினும் இணங்கு என்னும் சுருக்கச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  

arbitration என்றால் நடுத்தீர்ப்பு என்கின்றனர். தீர்ப்பு என்றாலே நடுநிலையில்தான் இருக்க வேண்டும். நடுவர் தீர்ப்பு என்றும் சொல்கின்றனர். magistrate என்பவரை நடுவர் என்பதால் வேறுபாடு காட்ட வேண்டி உள்ளது. இரு தரப்பிற்கும் ஒத்திசைவு காண்பதற்குரிய பொதுவானவர் என்ற பெயரில் பொதுவர் எனலாம்.   இந்திய யாப்பு,பிரிவுரை 51 (அ)  
102. Abide byஇணங்கி ஒழுகு  

கடைப்பிடி

பின்பற்று

உண்மையாக நிறைவேற்று
103. Abide by rules  விதிகளைக் கடைப்பிடி

விதிகளைப் பின்பற்று
விதிகளுக்கிணங்க ஒழுகு
விதிகளுக்கு இணங்கி நட  

கடைப்பிடித்தல் என்பது நூலில் கூறும் விதிகளைக் கடைப்பிடித்தலையும் குறிக்கும்.

“நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து” (சிலப்பதிகாரம், அரங்கேற்றுக்காதை, 40) “நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்” (சிலப்பதிகாரம், அரங்கேற்றுக்காதை, 158-159) என நாட்டிய நன்னூலில் குறிப்பிட்டுள்ள நாட்டிய இலக்கணத்தை மாதவி பின்பற்றியதை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.  
104. Abide by the Constitution  அரசியல் யாப்பைக் கடைப்பிடி

அரசியல் யாப்பைப் பின்பற்று

அரசமைப்‌பின்‌ படி ஒழுகு/ நட,   காத்திரு,

ஏற்க அல்லது அளிக்க, பொறுத்துக் கொள்ள அல்லது தாங்க, கடைப்பிடிப்பது, செயல்படுத்துவது, கீழ்ப்படிவது, நிறைவேற்றுவது அல்லது அதற்கு இணங்கச் செல்படுவது, தங்கியிருத்தல், உறைதல், வதிதல், குடியிருத்தல், சில, அழியாத, நிலையான, உறுதியான, மாறாத, தடுமாறாத, அசைக்கமுடியாத, முதல் செயலிலிருந்து, தொடக்கத்திலிருந்து, ஒருவரின் உருவாக்கம் அல்லது தொடக்கத்திற்குத் திரும்ப  
105. Abide by the results of the appeal, it shallமேல்முறையீட்டின் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.  

மேல்முறையீடு அல்லது சீராய்வு விண்ணப்பம்  அளித்த பின், அதற்கான முடிவு வரும் வரையில் மேல்முறையீட்டிற்குரிய தீர்ப்பிற்குக் கட்டுப்பட வேண்டும்.   (குற்ற நடைமுைறத் தொகுப்பு, பிரிவு 344.4)

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, January 3, 2024

சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 96-100

96. Abeyance  செயலற்ற தன்மை
இடைநிறுத்தம்  
செயல்நிறுத்தம்
நிறுத்தி வைத்தல்  
உரியரிலாநிலை  

காலவரையறையற்ற அல்லது இடைக்கால செயலற்றநிலையைக் குறிப்பது.  

இடைநீக்கம் என்கின்றனர். அவ்வாறு சொன்னால் suspension எனத் தவறான பொருள் கொள்ள நேரலாம். ஆங்கிலத்தில் பொருள் சரிதான். ஆனால், தமிழ் வழக்கில் இடையில் விலக்கி வைப்பது வேறு. முடிவு காண வழியில்லாமல் செயல்பாடின்றி ஒத்தி வைப்பது வேறு. ஒரு கோப்பு நடவடிக்கையை அல்லது வழக்கு நடவடிக்கையை மேற்கொண்டு உடன்தொடராச் சூழல் இருக்கையில் அத்தகைய சூழல் வரும் வரை இடைக்காலமாக நிறுத்தி வைத்தல். பல நேரங்களில் இடை நிறுத்தப்படுவதே மேல் நடவடிக்கையின்றி முற்றாக்கப்படுவதும் உண்டு உண்மையான சொத்து அல்லது தகைமை அல்லது பதவியின் உரிமை யாருக்கும் வழங்கப்படாத நிலையில் அதன் இருப்புநிலை எனவும் பொருள் உண்டு.  


Abeër என்னும் பழம் பிரெஞ்சுச்சொல்லின் பொருள் இடைவெளி. இதிலிருந்து விருப்பம் என்னும் பொருளில் abeance என்னும் சொல் உருவானது. இதிலிருந்து ( ஆங்கில நார்மன் சொல்லான சட்ட எதிர்பார்ப்பு என்னும் பொருளிலான abeiance) abeyance வந்திருந்தாலும் இதன் பொருள் இடை வெளி விடுதல். அஃதாவது செயல்பாட்டில் இடைவெளி விடுதல். எனவே, தற்காலிகமாக நிறுத்தி வை (hold in abeyance) என்கின்றனர்.

தற்காலிகம் என்பது தவறான சொல்லாட்சியாக இடம் பெற்றுவிட்டது. தள்ளிப்போடு எனலாம். நிறுத்தி வை / இருத்தி வை (keep in abeyance), நிலுவையில் வை (put in abeyance) எனச் சொல்லப்படுகின்றன.

உரியரிலாநிலை என்றால் உரிமை கோருநர் இல்லாத சொத்தின் நிலை எனப் பொருள்.
97. Abeyance, keep inநிறுத்திவைத்தல்
செயலற்ற தன்மையில் வைத்தல்
உடந்தை  

கிடப்பில் போடுவது என்றும் சொல்வார்கள்   ஏதேனும் செயல்பாட்டை  இடைக்காலமாக நிறுத்தி வைப்பது. இதுவே முழுமையான நிறுத்தமாகவும் மாறலாம்.   கோப்பின் மீதான நடவடிக்கை, திட்டத்தைச் செயல்படுத்தல், தீர்மானத்தை நிறைவேற்றல் போன்ற எதுவாக இருந்தாலும் தொடக்க நடவடிக்கை அல்லது தொடர் நடவடிக்கை எடுக்காமல் ஆறப்போடுதல்(விட்டுவிடுதல்)  
98. abhorவெறு,
ஒதுக்கு
அருவரு  

இச்சொல்லின் மூலச்சொல்லான abhorrere என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் திகிலில் பின் வாங்குதல். இதனால் வெறுப்பு அல்லது அருவருப்பை வெளிப்படுத்தல்.
99. abhorrenceபெருவெறுப்பு
அருவருப்பு  

எதையாவது அல்லது யாரையாவது வெறுக்கும் அல்லது இகழும் செயல்.  
100. Abide  கடைப்பிடித்தல்  
பின்பற்றுதல்
மதித்து நடத்தல்‌
பணிந்தொழுகு,
இணங்கியொழுகு

  சட்டம் ஏற்காத எதையும் செய்யாதிருத்தல்.   இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் மக்கள் சரியான நீதியை நாடுகின்றனர்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive