காந்திகிராம ஊரகப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும்

சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும்

இணைந்து நடத்திய

[பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை]

பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்sevviyalilakkiyangalil-melaanmai-thalaippu

  தமிழில் கலைச்சொற்கள் பெருகி வருகின்றன. எனினும் துறைதோறும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. புதிய கலைச்சொற்களை உருவாக்க நாம் எங்கும் செல்ல வேண்டிய தேவை இல்லை. புதிய கலைச்சொற்கள் என்பன பழந்தமிழ்ச் சொல்லின் மீட்டுருவாக்கமாகவோ பழஞ்சொற்களின் அடிப்படையில் பிறந்த சொற்களாகவோதான் அமைகின்றன. செவ்வியல் காலச் சொற்களின் தொடர்ச்சியாகப் பின்னர் உருவான கலைச்சொற்களின் அடிப்படையிலான சொற்களாகவும் ஒரு பகுதி அமைகின்றன. எப்படிப் பார்த்தாலும் வற்றாச் சொற்கடலாகத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் உள்ளன. இவற்றில் இருந்து மேலாண்மைக் கலைச்சொற்களைக் கண்டறிவோம்.
  மேலாண்மைக் கலைச் சொற்களைக் காணும் முன்னர் நாம் கலைச்சொல்லிற்கான வரையறையைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்குச் சொல்லாக்கங்களில் ஈடுபடுவோர் மிக மிகக் குறைவாகவே உள்ளனர். ஆனால் சொல்லாக்க ஆர்வலர்கள் பலராக உள்ளனர். இத்தகையோர் ஆர்வத்தின் அடிப்படையில் ஏதேனும் ஒரு சொல்லிற்குத் தாங்கள் அறிந்த பொருளடிப்படையிலான சொல்லைக் கூறி அதுவே சிறந்த சொல்லென வாதிடுகின்றனர். வேறுசிலர் சமற்கிருதம் சார்ந்த சொற்களைக் கையாள்வதைப் பெருமையாக எண்ணுகின்றனர். இன்னும் சிலர் தாய்ச்சொல், அயற்சொல் என்ற வேறுபாடின்றி இப்போதைய பயன்பாட்டில் உள்ள சொற்களையே ஏற்ற சொற்களாகக் கருதுகின்றனர்.
  தமிழ்க்கலைச்சொல் என்பது தமிழாகத்தான் இருக்க வேண்டும். பிற மொழிச் சொல்லாகவோ பிற மொழி எழுத்தைப் பயன்படுத்திய சொல்லாகவோ இருத்தல் கூடாது. இன்னும் சிலர் அகராதியில் உள்ள பொருள் விளக்கத்தைக் கலைச்சொல்போல் கூறுகின்றனர். கலைச்சொல் என்பது தனியாகவும் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வரும். இத்தகயை சூழலில் பொருள் விளக்கத்தைச் சொல்போல் பயன்படுத்த முடியாது. எனவே, கலைச்சொல் என்பது சுருங்கிய வடிவில் இருக்க வேண்டும். ஒரு சொல்லுக்குப் பல பொருளும் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்களும் இருக்கும் முறையும் இயற்கையே. எனினும் கலைச்சொல்லாக வரும் பொழுது பொருள்மயக்கம் தராவகையில் பொருள் வரையறை அமைய வேண்டும். சில நேர்வுகளில் கலைச்சொல்லுக்கு வெவ்வேறு பொருளமைந்தாலும் பயன்பாடடுக் குழப்பம் இல்லாத வகையில் பயன்படுத்த வேண்டும்.
  ஒரு சொல் நேரடியாக உணர்த்தும் பொருளைவிட அச்சொல் பயன்படும் இடத்தில் என்ன பொருளில் அமைகின்றது என்று பார்த்துத்தான் கலைச்சொல்லைத் தெரிவு செய்ய வேண்டும். சான்றுக்குச் சில பார்ப்போம்.
  நாம் விளம்பரங்களில் சூப்பர் டசுட் டீ / super dust tea எனக் குறிக்கப்படுவதைக் காண்கின்றோம். தூசியுள்ள தேயிலையை யாரும் பயன்படுத்துவார்களா? அதுவும் உயர்ந்த தூசியாம்! தூசி உயர்வாக இருந்தால் பயன்படுத்தலாமா? தூய்மையான தேயிலை என்று சொன்னால்தானே மக்கள் வாங்குவார்கள்? இவர்களே உயர்ந்த தூசியுடைய தூள் என்கிறார்களே! என்று எண்ணுகின்றீர்களா? இங்கே டசுட்/dust என்பதற்குத் ‘தூள்’ என்று பொருள். உண்மையில் உரிய பொருளும் அதுதான். பின்னர் இச்சொல் புழுதிச் சொல்லையும் குறிக்கலாயிற்று. எனவே, உயர்ந்த தேயிலைத்தூள் என்பதைத்தான் சூப்பர் டசுட் டீ / super dust tea என்கின்றனர்.
  இதைப்போல் நாம் யாரேனும் அலட்சியமாக நின்றால் அசால்ட்டாக நிற்கிறான் என்று சொல்வது வழக்கம். ஆனால், உண்மையில் அசால்ட்டு/ assault என்றால் தாக்குதல் என்றுதான் பொருள்.   கடுமையாகத் தாக்குதலுக்கு ஆயத்தமாகத் தன்னம்பிக்கையுடன் உள்ள ஒருவன் எதிரியை அலட்சியமாகத்தானே நோக்குவான்.
  இதுபோல் நாம் சலூன்/saloon என்றால் என்ன சொல்வோம்? முடிதிருத்தகம் என்றுதானே! முடிதிருத்து நிலையம், முடி அழகு நிலையம், முடி அழகு செய் நிலையம், என்று பலவகையாகச் சொன்னாலும் பொருள் ஒன்றுதானே! தொடர் வண்டிகளில் சலூன் என்று ஒரு பெட்டி உள்ளதே! அதனை முடிதிருத்தும் பெட்டி என்று சொல்லலாமா? என்ன பொருந்தவில்லையே எனப் பார்க்கிறீர்களா? அணி செய்யப்பெற்ற அழகு கூட்டப் பெற்ற அகன்ற அறைக்கும் சலூன் என்றுதான் பெயர். இங்கே இச்சொல் வசதிகள் நிறைந்த தனிப் பெட்டி என்ற பொருளில் குறிக்கப் பெறுகிறது. அருந்தகத்திற்கும் குறிப்பாகத் தேறல் வகைகளை அருந்தும் கூடத்திற்கும் சலூன் என்றுதான் பொருள்.
  எனவே, இடத்திற்கு ஏற்றாற்போல், அருந்தகப் பொதுக்கூடம், தேறல் பொதுமனை, பொது வரவேற்பு மண்டபம், கலைக் கண்காட்சி மண்டபம், பொதுக் கேளிக்கைக் கூடம், நடனக்கூடம், மேசைக்கோற்பந்தாட்ட மண்டபம், முடிதிருத்தகம், ஊர்திப் பொதுஉணவுக்கூடம், தனி வசதிப் பெட்டி, வரவேற்பறை எனப் பல பொருள்கள் உள்ள சொல்லை நாம் நமக்குத் தெரிந்த பொருளைக் கொண்டு முடிவெடுக்கக்கூடாது அல்லவா? அதுபோல் எச்சொல்லையும் நாம் இடத்திற்கேற்ற பொருள் வரும் வகையில்தான் குறிக்க வேண்டும். எனவே, நாம் எச்சொல்லையும் நமக்குத் தெரிந்த பொருளைக் கொண்டு முடிவு எடுக்காமல் உரிய இடத்தில் கையாளப்பெறும் உரிய பொருளை அறிந்தே முடிவெடுக்க வேண்டும்.
  எனவே, சொல்லாக்க்தில் இறங்க விழைவோர் சொல்லாக்க நெறிமுறைகள் குறித்து நன்கு அறிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே உள்ள கலைச்சொற்களுக்குப் புதிதுபுதிதாகச் சொற்களை அறிமுகப்படுத்தக் கூடாது. அதேநேரம், நடைமுறையில் சொல்லின் பயன்பாடு பொருந்தி வரவில்லையெனில் புதிய சொல்லை அறிமுகப்படுத்தலாம். நாம் கலைச்சொல் உருவாக்கம் என்று சொன்னாலும் உண்மையில் சொல் மீட்டுருவாக்கமாகத்தான் உள்ளது. எனவே, புதிய சொல் தேவையெனில், பயன்பாட்டில் மறைந்து போன பழைய சொற்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அல்லது பழைய சொற்களை அடிப்படையாகக் கொண்டு புதிய சொற்களைப் படைக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் நாம் செவ்விலக்கியங்களில் உள்ள மேலாண்மைக் கலைச்சொற்களைப் பார்க்கலாம்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்