“தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம்
காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய
முற்படுகின்றனர் சிலர் . . . இந்திய கூட்டரசின் உறுப்பு நாடான தமிழகத்தைப்
பற்றி உலகுக்கு அறிவிப்பதற்கு இந்தியக் கூட்டரசு எள்ளத்தனையும் செய்திலது.
வெளிநாடுகளில் இந்தியா, இந்தி என்றுதான் விளம்பரப்படுகின்றது
என்றும்இந்திய அரசினர்க்குத் தமிழகம் என ஒன்றுகூடாது; தமிழ் இனம் எனக்
கூறல் சாலாது. தமிழர் பண்டைய வரலாற்றை, மறக்கச் செய்து மறைக்கத்தான்
வழிகோலுவார்கள் போல உள்ளது. . . நமக்கு உயர்வு தரும் நமது பழைய வரலாற்றை
மறைத்து விட்டு, மறந்து விட்டு நாம் எதற்காக வாழ வேண்டுமோ? வரலாறு மறந்த
வாழ்வு வரலாற்றில் இடம் பெறாது என்பது உலகம் அறிந்த உண்மை” என்றும்
பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே தெரிவித்த உண்மையும் கவலையும்
எச்சரிக்கையும் இன்றும் மாறாமல் இருக்கும் காரணம் நமக்கென இறையாண்மையுள்ள
அரசு அமையாததுதான். பணக்குறியீட்டில் தேவநாகரி எழுத்து புகுந்துள்ளது.
கணிணி வழி கிரந்தம் புகுந்து தமிழ் எழுத்துகளை அழிக்கப் பார்க்கின்றது.
இந்திய இறையாண்மையின் எழுத்தழிப்பு முயற்சிகள் குறித்துப் பேராசிரியர்
சி.இலக்குவனார் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து
என்பது முற்றிலும் பொருந்தாது. இத்திட்டமும் இந்திமொழி ஒன்றையே நிலைக்கச்
செய்யவும் ஏனைய மொழிகளை அழிக்கச் செய்யவும் உதவுவதற்கே கொண்டு
வரப்படுகின்றது. . . . ஒரு மொழிக்குரிய ஒலிகளை இன்னொரு மொழிக்குரிய
எழுத்தால் எழுத முயல்வது உயிர் கூடுவிட்டுக் கூடு பாய்வதை ஒக்கும். . . .
.இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத் தடுத்து நிறுத்தல்
வேண்டும். மொழியின் உடல்போன்றது எழுத்து. எழுத்தாம் உடல் அழிந்தபின்னர்,
மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்? . . . . கூட்டரசு என்று கூறிக்கொண்டு
அரசு மொழிகள் அனைத்துக்கும் சம உரிமையும் நிலையும் அளியாது ஒரு மொழிக்கு
மட்டும் உயர்வு அளித்து ஒருமொழித் தனிஅரசுபோல் செய்வது என்றும் பொருந்தா
வல்லாண்மை நெறியாகும்.”
தமிழக அரசிற்கு இறையாண்மை இல்லாத வரை
இவை மேலும் மோசமாக நம்மைஇட்டுச் செல்லுமே தவிர நமக்கு அறம் வழங்கப்பட
மாட்டாது. இவ்வாறு தனி இறையாண்மை கோருவது என்பது பிரிவினை ஆகாதா எனச் சிலர்
எண்ணலாம். தனித்தமிழ் நாடு என்னும் நிலைப்பாடு வேறு. தமிழர்களுக்கென்று
இறையாண்மை உள்ள அரசு வேண்டும் என்பது வேறு. கூட்டாட்சி (federation govt.)
முறையில் பரதக் கண்டம் தேசிய இன அரசுகளின் கூட்டிணைவாக இருத்தல் வேண்டும்.
அதன் அடிப்படையில் தேசிய அரசுகளுக்குத் தனித்தனி இறையாண்மை இருக்கும்.
கூட்டிணைவிற்குத் தனி இறையாண்மை இருக்கும், ஒவ்வொருவருக்கும் தேசிய அரசின்
குடியுரிமை, கூட்டிணைவின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை இருக்கும்.
இதன்படி நாம் முதலில் தமிழ்க் குடிமக்களாகவும் அடுத்து பரதக் கூட்டரசின்
குடிமக்களாகவும் இருப்போம். இந்திய அரசியல் யாப்பு அதற்கு இடம் தருமா என்று
ஐயம் வரலாம். நமக்கு எது தேவையோ அதற்கேற்பத்தான் இந்திய அரசியல் யாப்பு
இருக்க வேண்டுமே தவிர இந்திய இறையாண்மைக்குள் நம் உரிமைகளைத் திணிக்கக்
கூடாது. என்றாலும் தற்போதைய அரசியல் யாப்பின் அடிப்படையிலேயே நமக்கு
இவ்வுரிமை வழங்கப்பட முடியும்.
1957 இல் சம்மு-காசுமீருக்கெனத் தனி
அரசியல்யாப்பு இயற்றப்பட்டு இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி
அம்மாநில மக்கள் முதலில் சம்மு-காசுமீர்க் குடிமக்கள்; பின்னர்தான்
இந்தியக் குடிமக்கள், எனவேதான் அவர்களது அரசியல் யாப்பு (அரசமைப்புச்
சட்டம்) முகவுரை, சம்மு-காசுமீர் குடிமக்களாகிய நாங்கள் என்றே
குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்திய இறையாண்மை, வல்லாண்மை மிக்கதாக
உள்ளதால் தன்னாட்சி மிகுந்திருந்த சம்மு-காசுமீர் மாநிலத்தின் உரிமைகள்
படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, தமிழர்க்கு
இறையாண்மை நிறைந்த அரசியல் யாப்பு இயற்றப்படும் பொழுது அதற்கேற்ப பரதக்
கண்டக் கூட்டரசின் இறையாண்மையும் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஒட்டு மொத்தக் கூட்டரசுகளின் பாதுகாப்பு, நாணய வெளியீடு, கூட்டரசுகளின்
இடையேயான வான்வழிப் போக்குவரத்து முதலான சில மட்டும் ஒன்றியத்தின்
இறையாண்மைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
இவற்றால் நாட்டுத்தலைமையின் அதிகார
வரம்பைத்தான் இறையாண்மை குறிக்கின்றதே தவிர, வேறு சிறப்பு இல்லை என்பதும்
அந்த இறையாண்மை மாட்சிமை மிக்கதாக விளங்க வேண்டும் என்பதையும் செயற்கையாக
இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட இந்திய
நிலப் பரப்பு தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என்பதையும் உலகில்
தோன்றிய முதல் இனமான தமிழ் இனம் தனியுரிமையுடன் தன்னாட்சி செலுத்தும்
வகையில் இறையாண்மையும் இறைமாட்சியும் மிக்க அரசினைக் கொண்டிருத்தல்
வேண்டும் என்பதையும் தற்போது தமிழினத்திற்கு ஏற்பட்டு வரும்
அழிவுகளுக்கெல்லாம் அதுவே அருமருந்தாய்த் திகழும் என்பதையும் நன்கு
புரிந்து கொள்ளலாம்.எனவேதமிழ் நிலத்தில் தமிழ் முதன்மை பெறதமிழர் தலைமை
பெறதமிழர்க்கான இறையாண்மை அரசு அமையட்டும்!
,
– இலக்குவனார் திருவள்ளுவன்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்க்காப்பு அமைப்புகள்
http://naamtamilar.org
No comments:
Post a Comment