2
தமிழ்ப்புலமையுள்ளவர்களே இயக்குநர்களாக
அமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில்
அரசிற்கு முறையீடு அளிக்கப்பட்டது. இதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது :
“இத்தகைய நோக்கங்களையும் குறிக்கோளையும்
நிறைவேற்ற தமிழ்ப்புலமை உள்ளவர் அதனை வழி நடத்தலே ஏற்றது என அனைவரும்
அறிவர். ஆனால் இயக்குநராக நியமிக்கப்பட விரும்பியவரின் தகுதி அடிப்படையில்
இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது அப்போதைய அரசால் இயற்பியல்
/ பொறியியல் / தகவலியலில் முனைவர் பட்டம் பெற்றிருத்தலே அடிப்படைத்
தகுதியாக வரையறுக்கப்பட்டு விட்டது. போதிய தமிழறிவு என்பதை மூன்றாவதாகச்
சேர்த்துள்ளனர். அவ்வாறில்லாமல் தமிழ்ப்புலமையை முதல் தகுதியாக வரையறுக்க
வேண்டும்; தமிழ் தெரிந்தவர்கள் தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் செயல்பட
இயலும். ஆனால் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் தமிழ்ப்புலமையின்றி அதனை
வளர்க்க இயலாது. எனவே, தமிழ்ப்புலமைக்கு முதன்மை அளித்துப் போதிய
கணியியலறிவு இருப்பின் நலம் என்பதாக பதவிக்கான தகுதி இருக்க வேண்டும்.
எனவே, உடனடியாக இயக்குநர் பணியிடத்தை நிரப்பும் நடவடிக்கையை நிறுத்தி அதன்
பணித்தகுதியை வரையறுத்து அதன்பின் அதற்கிணங்க இயக்குநர் பதவியை நிரப்ப
அன்புடன் வேண்டுகின்றேன்.”
இவ்வேண்டுகோள், 13.9.2011, 30.9.2011,
1.10.2011, 24.11.2011, 28.11.2011, 18.04.2012 ஆகிய நாளிட்ட
மடல்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதன்பின்னரும் வலியுறுத்தப்பட்டு
வருகின்றது.
அனைத்து மடல்களின் அடிப்படை வேண்டுகோள்கள் வருமாறு:-
“இந்நிறுவனத்தைத் தமிழ் வளர்ச்சி
அமைச்சகத்தின் கீழ்த் தமிழ் வளர்ச்சிச் செயலகக்கட்டுப்பாட்டில் கொணர்ந்து
முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றித் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் என அமைக்க
வேண்டுகின்றேன்.
ஆதலின்
௧) இயக்குநர் பணியிடம் தமிழ்ப்புலமை உள்ளவரால் நிரப்பும் வகையில் தகுதி வரையறை செய்தல்
௨) தமிழ்ப்புலமை உள்ளவர்களையே தலைவர், துணைத்தலைவர். உறுப்பினர்கள் ஆக அமர்த்துதல்.
௩.) தமிழ்வளர்ச்சி அமைச்சகத்துறையில் , தமிழ் வளர்ச்சிச் செயலகத்துறையின் கட்டுப்பாட்டில் கொணர்தல்
௪.) முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றித் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என முந்தைய பெயரைச் சூட்டுதல்
எனத் தமிழ்நலன் கருதித் தக்க நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகின்றேன்.”
மேலும், இவ்வமைப்பின் குறிக்கோள்களும்
இதன் நோக்கம் தமிழைப்பரப்புவதுதான் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன.
சான்றாகக் குறிக்கோள் 1 இல்,
“உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்தினர்க்கும்,
தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு
பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி இணையம் வழியாக அளித்தல் எனத் தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது. “
பிற குறிக்கோள்கள் வருமாறு:
- பார் தழுவி வாழும் தமிழர்கட்கு, அவர்கள் தேவைக்கேற்பப் பாடத் திட்டங்களை உருவாக்கி அளித்தல்: அவர்கள் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புகொண்டு வாழத் துணைபுரிதல்.
- உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து, அவற்றைப் பரவலாகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல்
- தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத் திட்டங்களை வகுத்தல்:
- கேள்வியறிவுக்காகவோ அல்லது சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல்: உரிய நியமங்களை நிறைவு செய்தோருக்கு, அவர்கள் கற்ற பாடங்களின் தகுதிக்கு ஏற்பத் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாகச் சான்றிதழ்/பட்டயம்/பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல்..
கணிணிக்கல்வி குறித்து இவற்றுள் எங்கும்
குறிப்பிடவில்லை. இவ்வாறு இருந்தால் பொறியாளர்கள் நிலை என்னாவது என எண்ணி,
இவற்றிலும் தொடர்பில்லாமல், தொடக்கத்தில்,
“கணினித் தமிழுக்கான தீர்வுகளை உருவாக்குதல்” (To develop Tamil Computing solutions.)
எனப் புகுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழுக்கு எதிராகப் புகுத்தப்பட்ட
புனைவாவணம் யாவற்றிலும் கணிணி தொடர்பானவற்றை நோக்கங்கள் அல்லது
குறிக்கோள்களுள் இறுதியானதாகக்கூடக் குறிக்காமல் முதன்மை நோக்கமாகக்
குறிப்பிட்டதிலிருந்தே, இத்தகையோர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினால், தமிழ்
புறக்கணிக்கப்பட்டுத் தமிழ் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்படும் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி.
தொடக்கத்திலேயே தமிழறிஞர்கள் பொறுப்பிலும் செயற்பாட்டிலும் இவ்வமைப்பை உருவாக்கியிருந்தார்களெனில் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது. பெயரில் குழப்பம் இருப்பதால், இதனைத் ‘தமிழ்க்கல்வி இணையக் கழகம்’ எனப்பெயர் மாற்றலாம்.
இப்போது இயக்குநர் பொறுப்பில் உள்ள திரு
த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., “தமிழறிஞர்கள் கருத்திற்கு இணங்கத்தான் இனி
இணையக்கல்விக்கழகம் செயல்படும்; அவர்கள் தெரிவிப்பதைத்தான் இனிச்
செயற்படுத்தும்; கணிணிக்கல்விக்கு முதன்மை கொடுத்துத் தமிழைப் பின்னுக்குத்
தள்ளமாட்டேன்” என்றார். தமிழார்வமும்
தமிழ்நலனில் கருத்து செலுத்தும் ஈடுபாடும் கொண்ட புதிய செயலரால்,
த.இ.க.கழகம் புதிய பாதையில் நடைபோடும் என்பதில் ஐயமில்லை.
எனினும் பதவி உயர்வு போன்றவற்றால் இவர்
இப்பொறுப்பிலிருந்து விடுபடலாம். எனவே, தான் பொறுப்பில் இருக்கும் பொழுதே
நோக்கம் மாற்றப்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கையையும் தமிழில் உயர்பட்டம்
பெற்றவர்களே இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் வகையில் இயக்குநர் பதவிக்கான
விதியைத் திருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் இப்பொழுது தகவல்
தொழில்நுட்பத்துறைச் செயலர் திரு தா.கி.இராமச்சந்திரன் இ.ஆ.ப. இதன் தலைவர்
பொறுப்பில் உள்ளார். தமிழ்நலனுக்கு எதிராகத் த.இ.க.கழகப்பணி அமையும் பொழுது
சுட்டிக்காட்டினால் உடன் நடவடிக்கை எடுக்கிறார். தகவல் தொழில்நுட்பம்
சார்ந்தது எனத் தமிழ்வளர்ச்சித்துறையினர் பாராமுகமாக இருப்பதுபோல்,
இது தமிழ் தொடர்பானதுதானே என்று கேளாச் செவியாக இல்லாமல், இவர் ஆற்றும்
பணிகளால்தான் ஒவ்வொரு நேர்விலும் தமிழுக்குத்தடை வரும் பொழுது அது
விலக்கப்படுகிறது. எனினும் இவரும் பதவி உயர்வு போன்ற காரணங்களால்
மாறநேரிடலாம். அடுத்து வருபவர் இவர்போல்தான் இருப்பர் என்று எதிர்பார்க்க
இயலாது. எனவே. இவர் தலைவர் பொறுப்பில் இருக்கும் பொழுதே தலைவர், பிற
பொறுப்புகளில் தமிழ்ப் புலமையாளர்களை அமர்த்தும் வண்ணம் விதிமுறைகளை இயற்ற
வேண்டும். இப்போதைய தலைவர் திரு தா.கி.
இராமச்சந்திரன் இ.ஆ.ப., இயக்குநர் திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. ஆகியோர்
கூட்டுப்பொறுப்பில் பல நன்மாற்றங்களைக் காண உள்ள த.இ.க.கழகம்
தமிழ்நலப்பாதையில் இக்கழகம் செயல்படும் வகையில் அடிப்படைப்பணிகளை ஆற்ற
வேண்டும்.
(இனியும் போகும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment