tha.i.ka.no.po._thalaippu
தமிழ் இணையக்கல்விக்கழகத்தின்  இப்போதைய ‘நோக்கும் போக்கும்’ எவ்வாறுள்ளது என்பது குறித்தும் எவ்வாறு அவை அமைய வேண்டும் என்பது குறித்தும் ஒரு சிற்றாய்வு.
ங.) சிதைக்கப்படும் நோக்கம்:
“உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் தமிழ். இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்” என்பதே  இவ்வமைப்பு தொடங்கப்பட்ட பொழுது நோக்கமாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழ்ப்புலமையாளர்களே தலைவர், இயக்குநர் முதலான பொறுப்புகளில் அமர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் முறையிட்டதும், நோக்கத்தைத் தங்கள் வாய்ப்பிற்கேற்ப  ஒவ்வொரு முறையும் பின்வருமாறு திருத்தினர்.
முறையற்ற திருத்தம் 1:
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கணினித் தமிழ், தமிழில் பயன்பாட்டுமென்பொருள்கள், தமிழில் அறிவியல், தொழில்நுட்பம் பற்றிய கல்வித்திட்டங்களையும், அதற்கேற்ப பாடத் திட்டங்களையும் தமிழில் உருவாக்கி, இணையம் வழியாக உலகளாவிய தமிழ்ச் சமுதாயத் திற்கும் தமிழில் ஈடுபாடுள்ள மற்றவர்களுக்கும் அளித்தல்.
. . . . . . ..   . . . . . . ..    . . . . . . ..
கணிணித்தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிஆராய்ந்து  தமிழ் மென்பொருள்களை உருவாக்குதல்
.
கணினித்தமிழ் மென்பொருள்களைச் சோதித்துச் சான்றிதழ் வழங்குதல்.
முறையற்ற திருத்தம் 2:
உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
தனியார்போல் அரசு நிறுவனம் பொறுப்பில் உள்ளவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆவணங்களைத்திருத்துவது  முறையல்ல அல்லவா? இத்தகைய திருத்தங்கள் பொய்ஆவணம் புனைதல் (forgery)   எனக்குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியதும் பின்வருமாறு மாற்றம் செய்தனர்.
முறையற்ற திருத்தம் 3:
உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ளபிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித்தமிழ் மற்றும் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்களையும் கற்கவும், தமிழர்வரலாறு, இலக்கியம்,கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும்வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு கல்வி,ஊடகம் வணிகம் போன்ற பல் துறைகளுக்கும் வேண்டிய கணினித்தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்துப், பயிற்சியளித்துப் பயன்பாட்டைப் பெருக்குதலும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நோக்கமாகும்.
இதிலும் கணிணிக்கு முதன்மை கொடுக்கும் வகையில்தான் நோக்கத்தை அமைத்துள்ளனர். இவ்வாறு அடிக்கடி நோக்கத்தில் கை வைப்பதும் பொய்ஆவணம் புனைதல், சட்டப்படியான தண்டனைக்குரியது எனத் தெரிவித்த பின்னரே முதலில் வெளியிடப்பட்ட நோக்கத்தை நோக்கமாகக் காட்டியுள்ளனர்.
இந்த அமைப்பின் நோக்கம் தமிழ் மொழி, இலக்கியம் முதலானவற்றைப் பரப்புவதன் மூலம் தமிழ் விழுமியங்களைப் பாதுகாப்பதே. அப்படியானால், இதன் தலைவர்,  மேலாண் இயக்குநர்குழு, இயக்குநர், பிற குழுக்களில் தமிழாய்ந்த தமிழருக்கே முதன்மை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறில்லை. இதன் இயக்குநர் பதவிக்கு வருபவர்க்குப் போதுமான தமிழறிவு இருந்தால் போதும் என்பதுதான் அப்பணிக்கான விதி. இவ்வாறிருக்க போதுமான தமிழறிவு கொண்ட ஒருவரால் எங்ஙனம் இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கங்களை நிறைவேற்ற இயலும்? பொறியியல் அறிவு உள்ளவர்களுக்கு என்னதான் தமிழார்வம் இருப்பினும் தமிழ்ப்புலமைக்கு அஃது ஈடாகுமா? சிறந்த கண் மருத்துவர் என்பதற்காக நெஞ்சுவலிக்கு  அவரிடம் மருத்துவம் பார்க்க இயலுமா? எனவேதான் இவ்வமைப்பு எதிர்பார்த்த அளவு – தொடக்க நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படவில்லை.
தமிழ்ப்புலமையாளர்களே தலைமைப்பொறுப்பிலும் உயர் பொறுப்புகளிலும் இருந்திருப்பின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டிருப்பார்கள்; இணையப் பல்கலைக்கழகம் உண்மையான பல்கலைக்கழகமாக மாற்றமுற்றிருக்கும். அவ்வாறில்லாமையால்  சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வமைப்பு ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
(இனியும் போகும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+5