அன்றே சொன்னார்கள்
அன்றே சொன்னார்கள் 9
சூரியனில் இருந்து பிரிந்தது புவி
உலகிற்கே பொதுவான திருக்குறள் நூலை நமக்குத் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், உலகிற்கே பொதுவாக விளங்கும் கதிரவனைக் குறிப்பிட்டே தம் நூலைத் தொடங்குகிறார். அப்பொழுது தம் காலத்தில் மக்கள் நன்கறிந்த ஓர் அறிவியல் உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்னும் பொழுது எழுத்துகள் அகரத்தை முதலாகக் கொண்டு உருவானதுபோல் சூரியனை முதலாகக் கொண்டு அதிலிருந்து உலகம் உருவாகியுள்ளது என வெளிப்படுத்துகிறார்.
ஆதிபகவன் என்பது கடவுளைக் குறிப்பதாகக் கருதினால் அது பொருந்தாது. சங்கக்காலத்திலும் அதன் தொடர்ச்சியிலும் கடவுள் வாழ்த்தில் தொடங்கும் மரபு இல்லை. (திருக்குறள் அதிகாரங்களுக்குப் பெயரிட்டவர்தான் முதல் அதிகாரத்தைக் கடவுள் வாழ்த்து எனக் குறிப்பிட்டுள்ளார்.) தெய்வப்புலவருக்குப் பின் தோன்றிய இனமானப் புலவர் இளங்கோ அடிகள் ‘ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்’ எனக் கதிரவனைத் தொடக்கத்தில் போற்றியுள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆதி, பகவன் எனப் பிரித்து இவர்களைச் சாதி அடிப்படையில் குறிப்பிட்டுத் திருவள்ளுவரின் பெற்றோராகக் குறிப்பிடும் ஆரிய இழிகதையும் பொருந்தாது. உலகிற்கே பொதுவான நூலைத் தரும் தெய்வப்புலவர் தம் பெற்றோரைப் பற்றி ஏன் குறிப்பிட வேண்டும்.
காலத்தைப் பகுப்பதால் சூரியனுக்குப் பகவன் என்றும் பெயர் உண்டு. (பிங்கல நிகண்டு நூற்பா 210) இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள், பகலவன் என்னும் பெயரில் உள்ள ‘ல’ என்னும் எழுத்து குறைந்து பகவன் என்றானது என விளக்குவார். பகவன் என்றாலே சூரியன் என்னும் நேர்ப் பொருள் இருப்பதால் அவ்வாறு பொருள் கொள்ளத் தேவையில்லை.
ஆதியில் தோன்றிய பகவனாகிய சூரியனில் இருந்து உலகம் தோன்றியது என்று மக்கள் நன்கறிந்திருந்த அறிவியல் உண்மையை உரைத்து இயற்கை வழிபாட்டு முறையில் தம் நூலைப் படைத்துள்ளார் தெய்வப்புலவர்.
புவி பிறந்த அறிவியல் வரலாற்று உண்மையை முதலில் அறிந்த நாம், இன்றைக்கு நாம் பிறந்த வரலாற்றுச் சிறப்பை உணராமல் தாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment