Monday, January 31, 2011

Road boards: andre sonnaargal 15: அன்றே சொன்னார்கள்15: வழித்துணைப் பெயர்ப்பலகைகள்

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
வழித்துணைப் பெயர்ப்பலகைகள்

                                                                                                                

natpu சாலைகளில் பயணம் செய்வோருக்கு உதவுவதற்காக அமைக்கப்படுவனவே சாலைப் பெயர்ப்பலகைகள். 1870களில் இத்தகைய பெயர்ப்பலகைகள் முதலில் அமைக்கப்பட்டன; பின்னர் இவை காலமாற்றத்திற்கேற்ப செல்ல வேண்டிய வேகம், திரும்ப வேண்டிய இடம் முதலானவற்றைக் குறிப்பிடும் வகையில்  வெவ்வேறு வழிகாட்டிக் குறிப்புகளையும் குறிக்கும் வகையில் அமைந்தன.
பண்டைய உரோமன் ஆட்சியில் உரோமிற்கு வரும் வழியைக் குறிக்கும் பெயர்ப்பலகைகள் இருந்திருக்கின்றன; ஆனால், அவை பெரும்பாலும் மன்னராட்சியைக் குறிப்பிடும் கல் தூண்களாக இருந்தன. 
நகர அமைப்பிலும் சாலை அமைப்பிலும் சிறந்திருந்த பழந்தமிழ்நாட்டில் பயணிகளுக்கு உதவுவதற்கென்றே ஊர்ப்பெயர்களையும் தொலைவுகளையும் காட்டும் பெயர்ப்பலகைகள் இருந்தன.
இரணிய முட்டத்துப் பெருங்கன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன்சேய் நன்னனைப் பாடிய இலக்கியத்தின் பெயர் மலைபடுகடாம். இம்மன்னன் ஆட்சியில் இருந்த நகரத்தின் பெயர் செங்கண்மா. இந்நகரம் பண்டைக்கால முறையில் அகழி, கோட்டை, பெரிய வீதி, கடைத்தெரு, குறுக்குத்தெரு முதலியவை நிறைந்தது. மன்னனைக் காண இந்நகருக்குச் செல்லுமாறு கூத்துக் கலைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறார் புலவர்.
அவ்வாறு செல்லும் வழியில், சாலை அமையாத பகுதிகளில் முதலில் செல்வோர் பின்வருவோர்க்கு வழிகாட்டுவதற்கு அடையாளமாக ஊகம்புல்லை முடித்து வைத்து வழிகாட்டும் பழக்கம் இருந்துள்ளதை மலைபடுகடாம் கூறுகிறது.
பண்டுநற்கு அறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புல்முடிந்து இடுமின்                                           (மலைபடுகடாம் : 392-393)
(பண்டு)பண்டைக் காலத்தில் (நற்கு)நல்ல பாதையை (அறியா) அறியாமல் (புலம்பெயர் புதுவிர்) இடம் மாறி வரும் புதியவர்கள் தீய பாதையில் சென்று இடர்ப்பட்டுத் திரும்பி வந்தால் பிறர் அவ்வாறு துன்பம் அடையக் கூடாது என்பதற்காகத் (சந்து)தெருக்கள் சந்திக்கும் இடங்களில் போகக்கூடாத பாதையில் (நீவி) கையால் துடைத்து, (புல் முடிந்து) ஊகம்புல்லை முடித்து வைக்கும் பழக்கத்தை உடையவர்களாக இருந்துள்ளனர். தாம் அடைந்த துன்பத்தைப் பிறர் அடையக் கூடாது என்று கருதும் பெரும் பண்பினராக இருந்துள்ளனர் நம் முன்னோர்.
நன்கு அமைந்த சாலைப் பகுதிகளில் பெயர்ப்பலகைகள் இருந்துள்ளமையையும் பின்வருமாறு புலவர் தெரிவிக்கிறார்.
செல்லும் தேஎத்துப்  பெயர்மருங்கு அறிமார்
கல்லெறிந்து எழுதிய நல்வரை மராஅத்த                            (மலைபடுகடாம் 394-395)
என்னும் வரிகளில் கல்லை அகழ்ந்து எழுதிய ஊர்ப் பெயர்ப்பலகைகள் இருந்தமையைக் குறிப்பிடுகிறார்.
தேஎம் என்பது இடத்தையும் குறிக்கும்; திசையையும் குறிக்கும்.  செல்ல வேண்டிய இடத்தையும் திசையையும் குறிக்கும் சாலைப் பெயர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தமையை அறியலாம். இப்பொழுது சில ஊர்ப்பலகைகளில் இன்னார் பிறந்த ஊர் என்ற குறிப்பினை எழுதி வருவதைப் பார்க்கிறோம். அதுபோல் அப்பொழுது ஊர்ப்பலகைகளின் அருகேயே அவ்வூரில் வீரமரணம் உற்றவர்களின் (நடுகல்) குறிப்புகள் இருந்துள்ளன.
மலைபடுகடாம் என்னும் நூல் தொல்காப்பியத்திற்கும் முற்பட்டது என முனைவர் சி.இலக்குவனார் ஆராய்ந்து தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயணிகளுக்கு வழித்துணையாகச் சாலைகளில் பெயர்ப்பலகை வைக்கும் அளவிற்கு முன்னேறிய நிலையில்  தமிழ் மக்கள் இருந்துள்ளனர் என்பதை உணரலாம். இன்றைக்கோ தமிழகச் சாலைப் பெயர்களில் பிற மொழிப் பெயர்கள் திணிக்கப்படுகின்றன. தமிழ் ஈழ நாட்டின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் அழிக்கப்பட்டுச் சிங்களப் பெயர்கள்  எழுதப்பட்டு வருகின்றன. அறிவும் உணர்வும் வளராமல் மங்குவது ஏனோ?
- இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive