Friday, January 28, 2011

Sky without Air: andre' sonnaargal 13 :அன்றே சொன்னார்கள் 13 : காற்று இல்லா வானப்பகுதி


>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
காற்று வழங்காத விண்ணையும் அறிந்திருந்தனர்!

                                                                                                                

natpu புவியைச் சுற்றி வெவ்வேறு நிலைகளில்  காற்றுப் பரப்பு அமைந்துள்ளது. மேலே செல்லச்செல்ல காற்றின் அளவு குறைந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு பரப்பிற்கும் பின்வருமாறு பெயர்கள் இட்டுள்ளனர்.
  1. அடிவளி மண்டிலம் (troposphere)
  2. மீவளி மண்டிலம் (Stratosphere)
  3. இடைவளி மண்டிலம் (mesosphere)
  4. வெப்பவளி மண்டிலம் (thermosphere)
  5. மேல்வளி மண்டிலம் (exosphere)
அனைத்திற்கும் மேற்பட்ட பகுதியில் காற்று இன்மை மண்டிலமாக உள்ளதையும் கடந்த நூற்றாண்டில் அறிவியலாளர்கள் ஆராய்ந்து அறிந்துள்ளனர்.
அண்மைக்கால அறிவியலின் வளர்ச்சியாக இக்கண்டுபிடிப்பு குறித்து உலகம் மகிழ்கிறது. ஆனால், உண்மையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியில் காற்று  இல்லாதபகுதி உள்ளதை நம் தமிழ்முன்னோர் நன்கு அறிந்துள்ளனர்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் வேந்தனிடம் வரி விதிப்பை நீக்குவதற்கு அறிவுரை கூறும் புலவர் வெள்ளைக்குடி நாகனார்

நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளியிடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்தைக் தண்தமிழ்க் கிழவர்
எனக் கூறுகிறார். (புறநானூறு : 35: 1-3)
(நளி இரு - நீர் செறிந்த; முந்நீர் - கடல்; ஏணி- எல்லை)
பழந்தமிழ்நாட்டு எல்லையையும் மூவேந்தர் சிறப்பையும் குறிப்பிடும் வகையில், கடல்களால்  சூழப்பெற்று, காற்று வழங்காத வானத்தின் கீழ் உள்ள நிலத்தை ஆளும் மூவேந்தர் என்கிறார்.
 மார்க்கண்டேயனார் என்னும் மற்றொரு புலவர்,
 மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய
வளியிடைவழங்கா வழக்கரு நீத்தம்
எனக் கூறுகிறார். (புறநானூறு : 365: 1-3)
 விசும்பை முகமாகவும் விசும்பில் இயங்கும் ஞாயிறு, திங்கள் ஆகிய சுடர்கள் இரண்டையும் கண்காளாகக் கொண்ட இடம் விட்டு இடம் பெயரும் காற்று அவ்வாறு இயங்காத இடமாகிய விசும்பைக் கடந்து முன்னோர் சென்றதாகக் குறிப்பிடுகிறார்.
 நில மண்டிலமும் நீர் மண்டிலமும் தீ மண்டிலமும் வளி மண்டிலமும் கடந்து நிற்கும் விசும்பு நீத்தம் எனப்பட்டது. .... இதன்கண் வளி வழங்குதலின்மையின் வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் எனப்படுவதாயிற்று என உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் விளக்குகிறார்.
 வளிமண்டிலம் சூழ இருப்பது ஞாலம் ஆதலின் அதனைக்கடந்து நிற்கும் விசும்பை நீத்தம் என்றார்   என நீத்தம் என்பதற்கான விளக்கத்தையும் அளிக்கிறார்.  எனவே, காற்று இல்லாத பகுதியை விசும்பு என அழைத்துள்ளனர் என்பதையும் காற்று நீங்கி இருததலால் நீத்தம் எனப் பெயர் பெற்றது என்பதையும் அறியலாம்.
 ஆகவே விண்வெளியை நன்கு அறிந்திருந்த விண்ணறிவியலில் சிறந்திருந்த தமிழ்மக்கள் மேலே செல்லச் செல்ல காற்றின் பயன்பாடு குறைந்து செல்வதை உணர்ந்துள்ளனர்.
எனவே, காற்றின் வகைகளை மட்டுமல்ல, அக்காற்று வழங்கா விண்வெளியையும் தமிழர்கள் அறிந்து காற்றறிவியலில் சிறந்து உள்ளனர் என்பதை உலகிற்கு உரத்துக் கூறுவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive