சொற்குற்றம் வராமல் காத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
சொற்குற்றம் வராமல் காத்திடுக!
அரசியலில் இந்நாள் அமைச்சர்கள்,
முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், பெண்கள்,
தொண்டர்கள் என்ற வேறுபாடின்றித் தரங்குறைந்து பேசுவதும் அதற்கெனவே கேட்கும்
கூட்டம் ஒன்று இருப்பதும் தரக்குறைவாகப் பேசுவதற்கென்றே சிறப்புப்
பேச்சாளர்களை வைத்திருப்பதும் இயல்பான ஒன்றாகப் போய்விட்டது.
ம.தி.மு.க.தலைவர் வைகோ கடந்தவாரம்
(24.03.2047 / 06.04.2016) செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சந்திரகுமார்
என்பவர் தே.தி.மு.க.விற்கு இழைக்கும் வஞ்சகம் குறித்தும் துணைநிற்போர்
குறித்தும் கூறும் பொழுது ‘இதற்கு அதைச்செய்யலாம் என்பதுபோல்’ தவறாகப்
பேசிவிட்டார். இதற்கு அவர் வருந்தி மன்னிப்பு கேட்டபின்னர், அது குறித்துப் பேசுவது முறையல்ல. எனினும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதால், இது குறித்து எழுத வேண்டியுள்ளது.
வைகோவின் இப்பேச்சு தொடர்பான செய்திகளைப்
படித்ததும் அவர், கூட்டணி வளர்ச்சியால் தலைகால் புரியாமல் தன்னிலையிழந்து
பேசுகிறாரோ என்ற எண்ணம் வந்தது. அவரது பேச்சின் காணொளியைப் பார்த்தேன்.
இரண்டகம் செய்த ஒருவரைப்பற்றிப் பேசும் பொழுது, முந்தைய தேர்தல்
ஒன்றின்பொழுது தான் சிறையில் இருந்தபொழுது பொதுச்செயலாளரான தன்
ஒப்பமின்றிக் கட்சியாளர் இருவரிடம் கலைஞர் கையொப்பம் பெற்றுத் தனக்கு
இரண்டகம் விளைவித்த செய்தியை விளக்கியுள்ளார். இதனால் மிகவும்
காயப்பட்டுள்ளார் என்பது அவர் பேசும் முறையிலேயே தெரிகிறது. தனக்கு
இழைக்கப்பட்ட வஞ்சகத்தால் உணர்ச்சிவயப்படடவர், தே.தி.மு.க.விற்கு இரண்டகம்
செய்தவரை “இத்தொழிலைச் செய்வதற்கு …” என்பதுபோல் பேசி விட்டார்.
அப்படிப்பேசியவர் தனக்கு இழைக்கப்பட்ட வஞ்சக நினைவால் கலைஞர்
கருணாநிதியையும் கூறுவதாகக் கூறிவிட்டார். இளங்கோவன் என்பவர்போல்
திட்டமிட்டு இவர் பேச வில்லை. என்றாலும் அவர் பேசியது தவறுதான். நாவினால் சுட்ட வடு ஆறாது என்பதால் மன்னிப்பு மருந்தாகாது
என்பதும் உண்மைதான். எனினும் வாழ்வில் செய்த பெருங்குற்றம்போல் கூறியதால்
இது குறித்து மீண்டும் பேசுவது சரியல்ல. அதே நேரம், வைகோ
சந்திரகுமாரிடமும் இத்தகைய பேச்சிற்கு வருத்தம தெரிவித்திருக்கலாம்.
கலைஞர் கருணாநிதியின் தந்தை
பெருவங்கிய(நாதசுர)க்கலைஞர். பெருவங்கிய(நாதசுர)இசைதான் தெலுங்கிசை
மூவருக்குத் தமிழிசையை உணர்த்தியது. தியாராசர் பெருவங்கிய இசையை
உள்வாங்கித்தான் தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடினார். அத்தகைய சிறப்பு
மிக்க இசையை வைகோவும் மதிப்பதாகத்தான் கூறினார். கலைஞர் கருணாநிதியைப்
பொருத்தவரை, “துண்டினை இடுப்பில்தான் கட்டவேண்டும், மேலே அணியக்கூடாது”
என்ற தன்மானமற்ற செயலைச் செய்ய விரும்பாமல்தான் அவ்விசைக்கலையைத்
துறந்தார். எனவே, அவருக்கு அந்த இசை தெரியுமா எனத் தெரியவில்லை.
தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அது முதன்மையானதல்ல. ஆனால், வைகோ ஆதி்த்
தொழிலாக எதைக் கருதினார் என்பது அவருக்கும் தெரியும். கேட்டவர்களுக்கும்
தெரியும். தீய சொற்களைத் தவறியும் சொல்லா ஒழுக்கமுடைமைதான் உயர்வு தரும். சொன்னவருக்கு எதிராகப் போராடும் பொழுது என்ன சொன்னார் என்பதுபோன்றதுதான் முன்னணியில் வரும். எனவே,
வைகோ மன்னிப்பு கேட்டது கலைஞர் கருணாநிதியிடம் மட்டுமல்ல, அவர் கூறியதால்
வருத்தமுற்ற அவரது அன்பர்களிடமும்தான் எனக் கருதி இதற்கு முற்றுப்புள்ளி இட
வேண்டும்.
யாருக்குமில்லாப் பெருந்தன்மை அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஒருவர் தன்னை என்னதான் மோசமாகப்பேசினாலும் / தனக்கு என்னதான் தீங்கிழைத்தாலும் அத்தகையவருடன் இணைந்த பின்னர், அதனை நினைக்காமல் “மறப்போம், மன்னிப்போம்” என நடந்துகொள்வதுதான் அரசியல்வாதிகளின் சிறப்பு. முதல்வர்
செயலலிதாவை அவர் பெண் என்ற அடிப்படையில் கீழ்த்தரமாகப் பேசியவர்களையும்
அவர் தன் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார், பதவிகள் தந்துள்ளார். கலைஞர்
கருணாநிதியும் இதேபோல்தான் இதற்கு முன்னர் எப்படித்தாக்கிப் பேசினார் என
எண்ணாமல், சூழல் கருதி மீண்டும் இணைத்துக்கொண்டால் அல்லது தோழமையாக
இருக்க வேண்டிய சூழல் வந்தால், புதிய நட்புபோல்தான் நடந்து கொள்கிறார்.
எல்லா நிலை அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும். ஆனால், தொடக்கத்தில்
கூறியவாறு வைகோ, தான் பேசியது குறித்து மனம் வருந்திப்
பெருங்குற்றமாகக்கருதி மன்னிப்பு கேட்டபின்னரும் தி.மு.க.வினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது கலைஞர் கருணாநிதிக்குத்தான் அவப் பெயர் தேடித்தரும்.
இன்றைய தலைமுறையினர் அறியாத அன்றைய கலைஞர் கருணாநிதியின் பேச்சுகளை மறு
தரப்பில் தெரிவித்து வருகின்றனர். பலரும் கலைஞர் கருணாநிதியின் குலம்
குறித்துப் பேசியுள்ளனர். மிகவும் கடுமையாகக் கலைஞர் கருணாநிதியை எதிர்த்து வந்த இளங்கோவன் என்பவர்
முந்தைய தேர்தலில் “நன்றாக ஊதுவார்” எனச் சொல்லிச் செய்கையிலும்
உணர்த்தினார். அப்பொழுதெல்லாம் இந்த அளவிற்கு எதிர்க்காத தி.மு.க.வினர்
இப்பொது கடுமையாக எதிர்க்கின்றனர் என்றால் தேர்தல் அச்சம்தான் காரணம். தளர்ந்துபோகும் எனக் கருதிய மக்கள்நலக்கூட்டணி வளர்ந்து வருவது கண்டு ஏதேனும் வகையில் இடையூறு தர எண்ணுகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் அது வைகோவிற்குத்தான் நன்மையாய் முடியும். எனவே, தி.மு.க.வினர் இதற்கு முற்றுப்புள்ளியிடக் கலைஞர் கருணாநிதி ஆணையிட வேண்டும்.
பொதுவாழ்வில் ஈடுபடும் யாராக இருந்தாலும்,
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. (திருக்குறள் 642)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நமக்கு அருளிய தமிழ் நெறியைப் பின்பற்ற வேண்டும்.
நன்மை தருவதும் சொல்தான்! தீமை தருவதும் சொல்தான் என்னும் பொழுது நாம் நன்மை தரும் சொற்களைத்தானே பயன்படுத்த வேண்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
[படம் நன்றி : தினமலர் வலைக்காட்சி]
No comments:
Post a Comment