Wednesday, April 13, 2016

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்





தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

செயலலிதா-கருணாநிதி :jeyalalitha_karunanidhi

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ!

  பொதுவாக நாம் ஒருவரை எப்பொழுது நேரில் சென்று ஆறுதல் சொல்வோம்? அவர் தோல்வியைச் சந்தித்தால், அவர் வருத்தத்தில் இருந்தால், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் நேர்ச்சியில்(விபத்தில்) சிக்கியிருந்தால், தொழிலில் எதிர்பாராச் சரிவைக் கண்டிருந்தால், இத்தகைய துன்பத்துயரத்தில் மூழ்கியிருந்தால், அவருக்கு ஆறுதல் தரவும் நம்பிக்கை தரவும், உங்கள் பக்கம் இருக்கிறோம், கவலற்க எனச் சொல்வதற்காக  நேரில் சென்று தேறுதல் சொல்வதுதானே வழக்கம்.
  ஒருவருக்கு ஒருவர் மற்றொருவருக்குப் பணஉதவி போன்ற ஏதேனும் உதவி செய்தால், உதவி பெறுபவர்தானே உதவி வழங்குநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும்?
  [ஒருவரைப் பாராட்டுவதற்கு நேரில் செல்வதில்லையா எனக் கேட்கலாம். தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் அவ்வாறு சென்றால்  அஃது இயற்கை. இப்பொழுது செல்வது ஆறுதலுக்கன்றி வேறெதற்கு? (ஆறுதலுக்குச் சென்றால் ஆதாயம் கிடைக்கிறது என்பது தனிக்கதை.)]
  இப்பொழுது அ.இ.அ.தி.மு.க. தலைவியையும் தி.மு.க. தலைவரையும் நாளும் பல அமைப்பினர் சென்று சந்தித்து “நாங்கள் உங்கள் பக்கம்” என்கின்றனரே! அப்படியானால் இரு கட்சிகளும்  தோல்வியை நோக்கிய துன்பச்சூழலில் இருப்பதாகத்தானே பொருள். இல்லையேல், இவர்கள்தானே ஆதரவு தருவதாக அறிவிப்பவர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க வேண்டும். இல்லையே!
 இவர்களைப் பிற அமைப்பினர்  சந்திப்பதன்காரணம், “கவலைப்பட வேண்டா, நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்” என்று சொல்லத்தானே! எனவே, “நாங்கள் உங்கள் பக்கம்” என்று நேரில் சென்று தலைவர்களைச் சந்தித்துப் பிற அமைப்பினர் கூறுவதன் மூலம், இவ்விரு கட்சிகளும் தோல்விக்கான அச்சத்தில் உள்ளன என்பது உண்மையாகிறது.
  தி.மு.க. ஓயாமல் என்ன கூறுகிறது? “அஇஅதிமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி தேவை அதை வரவிடாமல் உளவுத்துறை மூலம்  அஇஅதிமுக சதி செய்கிறது. மக்கள் நலக்கூட்டணி என்பது அஇஅதிமுகவின் எதிர் வாக்குகளைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட அஇஅதிமுகவின் ‘ஆ’ அணி” என்றுதானே  ஓயாமல் சொல்கிறது. அக்கூட்டணிக்கட்சிகளில் உள்ளவர்களைக் கலகக்காரர்களாக ஆக்கி கட்சியை உடைக்க முயலும்பொழுது அவர்கள் மூலம் சொல்லச் செய்வதும் இவ்வாறுதானே! எனவே, தனித்து நின்று அஇஅதிமுகவை எதிர்கொள்ளும் வலு தனக்கு இல்லை என்பதைத் திமுக ஒத்துக் கொ்ளகிறது. எனவே, வேறு அணி வலுவாக உருவானால் திமுகவின் தோல்வி மேலும் மோசமாகும் என்பதால் கவலைப்படுகிறது. அக்கவலையைப்போக்குவதற்காகத், தானே பிற அமைப்பினரைத்தேடி வந்து ஆறுதல் சொல்லச் செய்கிறது. எனவே திமுகவின் தோல்வி அச்சம் ஆதரவு அமைப்புப் பட்டியலை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதில் இருந்து நன்கு தெளிவாகிறது.
  அஇஅதிமுகவோ அசைக்கமுடியாத வலிமையுடன் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், தானே வெற்றி பெறும் எனப்  பரப்புரையைச் செய்திபோல் பரவச் செய்தாலும் உள்ளுக்குள் நடுக்கத்துடன்தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், ஒவ்வொரு நாளும் புதிய புதிய அமைப்புகள் ‘அம்மா’வைச்சந்தித்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வரும் அரங்கேற்றங்கள். சென்னை, கடலூர் முதலான நகரங்களில் ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பால் அஇஅதிமுக சரிவைச் சந்தித்துள்ளது. இருப்பினும் அப்படி எதுவும் இல்லை எனக்காட்டத்தான் வெள்ளத்துயர் துடைப்புப்பணிகளைச் சிறப்பாகச் செய்ததாகப் பரப்புரை மேற்கொள்வது. தன் அணியில் இருந்து வெளியேறிய நடிகர் சரத்துகுமார் கடுமையாகத் தாக்கி அறிக்கை அளித்தபின்னரும் அவரின் மக்கள் சமத்துவக் கட்சியைத் தன் அணியில் இணைப்பதற்காக அவரை அழைத்து அறிவிக்கச் செய்ததும் அச்சத்தின் வெளிப்பாடே! வலிமையுடன் உள்ள  கட்சி என்றால் எதற்குச் சுண்டைக்காய்க்கட்சியைக்கூட அழைத்து வந்து சேர்க்க வேண்டும்.
   ஆனால், 234  தொகுதிகளிலும் போட்டியிடுகிறதே!  அது தன்னம்பிக்கை இல்லையா என வினவலாம். ஒரு கட்சி தனக்குரிய சின்னத்தை விட்டு விட்டு வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் அதன் ஏற்பு  – அங்கீகாரம் – விலக்கப்படும். ஆனாலும் இவ்வாறு செய்வதன் காரணம் அவர்களின் வெற்றியையும் அஇஅதிமுகவின் வெற்றியாகக் கணக்கு காட்டத்தான்!
  இல்லையில்லை! அவர் துணிவு மிக்கவர். வீர மங்கை! என்று  யாரேனும் சொன்னால், “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” என்கிறாரே திருவள்ளுவர்,  எனவே, அஞ்சுவது தவறல்ல என்பதுதான் உண்மை. ஆனால், இந்த அச்சம் கட்சியின் இறங்குமுகத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைப்படுததப்படும் என்ற அறிவிப்பு.
  இறுதியாக நடைபெற்ற சட்டமன்றத் தொடரில்கூடத் தொடர்புடைய அமைச்சர் மூலம், மதுவிலக்கிற்கான வாய்ப்பே இல்லை என அறிவிக்கச் செய்வதவர், இப்பொழுது மாறிச் செல்கிறார் என்றால், மதுவிலக்குப் போராளிகளால் தோல்வியைச் சந்திக்க நேரும் என்ற அச்சம்தானே காரணம்!
  அறநெறித் தொண்டர் மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் போராடிய பொழுது மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கருதிப்பார்க்கிறோம் என்று சொல்லியிருந்தால், அவர் மடிந்திருக்க மாட்டாரே! அப்பொழுது கல்மனம் எதுவும் சொல்ல இடம் தரவில்லையே! சட்டக்கல்லூரி மாணாக்கி நந்தினி என்ன கேட்கிறார்? மதுக்குடியால் மக்கள் மடிவதால் அதை நிறுத்தச் செய்யுங்கள் என்றுதானே! அவர்மீது எத்தனை  எத்தனை வழக்குகள்! எத்தனை தளையிடல்கள்! அப்பொழுதெல்லாம்  மது இருப்பே கொள்கை என இருந்துவிட்டு இப்பொழுது  படிப்படியான மது ஒழிப்பே  கொள்கை எனத் தேர்தல் கூட்டத்தில் பேசினால் என்ன பொருள்?
  மதுக்குடி மக்களால் சிதைந்துபோன நாட்டுமக்கள் குடும்பத்தினர் வாக்குச்சீட்டு என்னும் ஆயுதத்தால் தன்னை வீழ்த்திவிடுவார்கள் என்ற அச்சம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? படிப்படியான மதுவிலக்குதான் உண்மையான  கொள்கை என்றால், அதை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பை அடுத்து மக்கள் தருகிறார்களோ இல்லையோ இப்பொழுது உள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி மதுவிலக்குப் போராளிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறலாமே! பாடகர்  கோவன்மீதான வழக்கிற்கு என்ன தேவை? மதுவை ஒழிக்கப் பாடியவர்கள்மீது எதற்குத் தேசப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் வழக்குகள்.? அதுவும் தொடக்கப்பள்ளியில் காலடிஎடுத்து வைத்துள்ள சின்னஞ்சிறு சிறுமியர், மதுவை ஒழிக்கப்பாடியதற்காக எதற்கு அவர்கள்மீதும் தேசஇரண்டக வழக்குகள்?
  மதுவிலக்குதான் நோக்கம்; ஆனால் முற்றிலும் நடைமுறைப்படுத்த இயலவில்லை எனக்கருதினால், இப்பொழுது அறிவித்துள்ளதுபோல், நேரக்கட்டுப்பாடு, இடக்கட்டுப்பாடு போன்றவற்றை  அறிவித்து மது விலக்குப் போராளிகளை அரசு மூலமே மதுவிலக்குப் பரப்புரைக்குப் பயன்படுத்தியிருக்கலாமே! மது மீட்பு நல மையங்களை நிறுவி யிருக்கலாமே!
  முற்றிலும் மதுவிலக்கை மறுத்துவிட்டு இப்பொழுது படிப்படியான மதுவிலக்கு என்று அறிவிப்பதன் காரணம், தோல்வி அச்சம்தானே!
  வேறுவழியில்லை என எண்ணி இனப்படுகொலையாளிக் காங்.உடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.விற்கும் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்ற அ.இ.அ.தி.மு.க.விற்கும் தோல்வி அச்சம் வந்துள்ளது! எனவேதான், தங்களை ஆறுதல் படுத்தவும் வெற்றி மாயையை மக்களிடம் தோற்றுவிக்கவும் ஒவ்வொரு பொழுதும்  ஏதேனும் அமைப்பினர்   இவற்றின் தலைவர்களைச் சந்தித்து :நாங்கள் உங்கள் பக்கம்” எனக் கூறுவது.  ஆனால், நாங்கள் உங்கள்பக்கம்” என வாக்காளப் பெருமக்கள்தாம் சொல்ல வேண்டும்! அவர்கள் இவ்விரு கட்சிக்கும் அவ்வாறு சொல்கின்ற வாய்ப்பு குறைந்துகொண்டேபோகின்றது!
  எனவே, இத்தேர்தல் நமக்கு நல்ல  விடிவினைத் தரப்போகிறது!
வாக்கினை விற்காமல் வாக்காளப் பெருமக்களே!
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (திருக்குறள் 511)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளதைப் பின்பற்றி
 நடுநிலையுடன் சிந்தித்து நல்ல மாற்றத்தை உருவாக்குவீர்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 128,  பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2016
Akaramuthala-Logo

No comments:

Post a Comment

Followers

Blog Archive