அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை!
சென்னை முதலான மூன்று மாவட்டங்களில்
ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின்பொழுது “எல்லாம் நானே” எனச் சொல்லும்
முதல்வர் செயலலிதாவின் செயல்பாடின்மை குறித்த சினம் அப்பகுதி மக்களிடம்
இன்னும் உள்ளது; மதுவிலக்கு குறித்து நாடகம் ஆடினாலும் மது எதிர்ப்புப்
பாடல்களைப் பாடியதற்காகச் சிறுமியர் மீதும் தேசப்பாதுகாப்பு எதிர்ப்பு
என்னும் வகையில் கடுங்குற்ற வழக்குகள் தொடுத்தமையால், மதுவால் துன்புறும்
குடும்பத்தினரிடையே வளர்ந்து வரும் வெறுப்பு; தமிழ் ஈழத்தில் நடைபெற்ற
இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் இயற்றிக் கொண்டே, அடைக்கலமாக
வந்த ஈழத்மிழர்களை அடக்கியும் ஒடுக்கியும் துன்புறுத்தும் வதைமுகாம்களைத்
தொடருவதால் மனித நேயர்களிடையே தோன்றியுள்ள வெறுப்பு; தமிழ் நலத்திட்டங்களை
அறிவிக்துக்கொண்டே மறுபுறம் தமிழ்க்கல்விக்கும் தமிழ்வழிக்கல்விக்கும் மூடுவிழா நடத்துவதால் தமிழ் ஆர்வலர்களிடையே வெறுப்பு;
சில இடங்களில் மட்டும் அம்மா காய்கறிக்கடை, அம்மா உணவகம், அம்மா
மருந்தகம் போன்றவற்றைத் தொடங்கிவிட்டு நாடு முழுவதும் நாளும் உயரும்
விலைவாசியைக் கட்டுப்படுத்தாததால் துன்புறும் குடும்பத்தினரிடையே வளர்ந்து
வரும் வெறுப்பு; ‘வேட்பாளர்களை ஒண்டாமை’
என்னும் புதுவகைத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால் சீர்திருத்தவாதிகளிடம்
பெருகிவரும் வெறுப்பு; காதல்திருமணங்களால் ஏற்படும் ஆணவக்கொலைகளை நிறுத்த
தக்க நடவடிக்கை எடுக்காமையால், சாதி மறுப்போரிடையே பெருகும் எதிர்ப்பு;
இவற்றையெல்லாம் படம்பிடித்துக் காட்டும் வகையில் இணையத்தளங்களில் நாளும்
பெருகி வரும் எதிர்நிலைப் பதிவுகள்; இவ்வாறு பலதரப்பிலும் முதல்வர் செயலலிதாவிற்கு எதிரான வெறுப்பு கூடி வரும் பொழுது அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை என்று சொல்வது எப்படி என வினவலாம்.
பொதுவாக அதிமுகவிற்கு வாக்கு வங்கி
என்பது 20 % இலிருந்து 30% வரைதான். தேர்தலில் பெறும் வாக்குகள் எல்லாம்
கூட்டணி வலிமையாலும் கடைசிநேரத் தேர்தல் சூழலாலும் கிடைப்பனதான். கடந்த
2011 சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக பெற்ற மொத்த வாக்குகள் 38.40%.
அதிமுகவால் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை, கூட்டணி அமைந்திராவிட்டால் 50 தொகுதிகளிலாவது அதிமுக மண்ணைக் கெளவியிருக்கும் என்பது. ஆனால், இங்கே கூற விரும்புவது அதிமுக தனக்கே உரிய வாக்கு வங்கியில் சரிவுகாணவில்லை என்பதுதான். ஆனால், இது வெற்றியைத் தராது. தனித்துநிற்கும் தன்னம்பிக்கையால் தன்னை நம்பிய கட்சிகளை நட்டாற்றில் விட்டமை போன்ற கூட்டணி வலுவைத் தானாகவே சிதைத்ததுபோன்ற காரணிகள் முதன்மைப்படுத்தும்பொழுது தனிப்பட்ட வாக்கு வங்கியால் எப்பயனும் இல்லாமல் போகும்.
தேர்தல் பரப்புரையின்பொழுது உயிருக்குத்
துடிப்போர்அருகே உள்ள கூட்டத்தினர் அது குறித்துக் கவலைப்படாமல்,
இருவிரலைக் காட்டிக் கொண்டும் குதியாட்டம் போட்டுக்கொண்டும்
இருக்கிறார்கள் என்றால், கட்சிக் கொத்தடிமைகள் உணர்வற்ற பிண்டங்களாக இருக்கின்றார்கள் என்று வருந்த வேண்டி உள்ளது.
காலையிலேயே அழைத்துவந்து அடைத்து வைத்துக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று
தெரிந்தும் பரப்புரை கூட்டங்களுக்கு மக்கள் வருகிறார்கள் என்றால்,
வருபவர்களும் மேடைக்கு முதல்வர் செயலலிதா வந்ததும் முகத்தில் பூரிப்புடன்
அவரைக்கண்டு கைகளை ஆட்டி வரவேற்கிறார்கள் என்றால் யாரும் மாயையிலிருந்து விடுபடவில்லை என்றுதானே பொருள்.
இணையப்பதிவுகள் அதிமுக ஆதரவாளர்களில்
மாற்றம் பெற்றவர்களிடமிருந்து மேற்கொள்ளப்படவில்லை; அவரது எதிர்
முகாம்களிலிருந்துதான் வருகின்றன. இவர்களில் வாக்களிக்க ஈடுபாடின்றிப்
பொழுதுபோக்காகப் பதிபவர்களும் இருக்கின்றனர். அதிமுக ஆதரவு ஊடகங்கள் தவிர
குறிப்பிட்ட சில இதழ்கள்(பத்திரிகைகள்), அதிமுகவிற்கு எதிரான செய்திகளைப்
பரப்பி வருகின்றன. முன்னரே எதிர்த்தவர்கள் இப்பொழுதும் எதிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஆதரவாளர்களில் போதிய மாற்றமில்லை. கருப்பையாக்கள் அதிமுகவிலிருந்து
விலகுகின்றனர் என்றால் செல்வராசுகள் திமுகவிலிருந்து விலகுகின்றனர்.
வேட்பாளர்களை விரட்டியடிப்பது, அவர்களுக்கு எதிரான உட்பூசல் முதலியன
எல்லாத் தேர்தல்களிலும் ஏற்படும் சலசலப்புதான். இவற்றைத்தாண்டித்தான்
இதுவரை வேட்பாளர்கள் பலரும் வெற்றி கண்டுள்ளனர். இவற்றால் அதிமுக வீழ்ந்துவிட்டது என்று கருதினால் மக்கள் ஆதரவை மதிப்பிடத் தெரியவில்லை என்றுதான் பொருள்.
எனவேதான், குறைபாடுகள் பல இருப்பினும், அதிமுகவிற்கு உள்ள செல்வாக்கு சரியவில்லை எனலாம். ஆனால் எந்தக்கட்சியும் தன் கட்சிச் செல்வாக்கினால் மட்டும் வெற்றி வெறுவது என்பது இப்போது இயலாத ஒன்று. அதிமுகவின் வெற்றிக்கு உதவும் காரணிகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆகவேதான், பணம் கொடுத்து அழைத்து வந்தாலும் முதல்வர் செயலலிதாவின் கூட்டங்களில் காலி நாற்காலிகளைக்காண முடிகிறது. கூட்டத்தில் அவர் மேடையேறிப் பேசத் தொடங்கியதும் திடலைவிட்டு வெளியேறும் மனநிலைக்கு மக்கள் வந்து விடுகிறார்கள்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். (திருக்குறள் 509)
என்னும் தெய்வப்புலவர் உரைக்கும் தமிழ்நெறியைக் கடைப்பிடிக்காமையால் வேட்பாளர் தெரிவுக் குழப்பம். பிற கட்சிகளிலும் இக்குழப்பம் இருப்பினும் அதிமுகவில் மிகுதி. இவையெல்லாம் வெற்றிக்காரணிகளை அதிமுக இழந்து வருகின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
எனவே வெற்றி பெற விரும்பும் கட்சிகள்,
அதிமுகவிற்கே உள்ள வாக்கு வங்கி மாறாமையை உணர்ந்து, அதனை வெற்றி பெறச்
செய்யும் காரணிகளைத் தம் பக்கம் இழுக்கும் வகையில் தங்களின் பரப்புரை
உத்தியை மாற்றினால் வெற்றி காணலாம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment