தலைப்பு-நட்சத்திரமட்டையாட்டம்01 : natchathiracricet01

நட்சத்திர மட்டையாட்டம் நடக்கட்டும்! ஆனால்…….

  பொதுமக்களின் சிக்கல்கள், துயரங்கள் களைய  நடிகர் சங்கம் குரல் கொடுக்காது என்று அறிவித்த நடிகர் சங்கம், இன்று தன் வளர்ச்சிக்காகப்  பொதுமக்களிடம் கையேந்தியுள்ளது.  வரும் சித்திரை 04, 2017 / ஏப்பிரல் 17, 2016 அன்று சென்னையில் சேப்பாக்க விளையாட்டரங்கத்தில் நடிகர் சங்க வளரச்சிக்காக நட்சத்திர மட்டைப்பந்தாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள்.
  பங்கேற்கும்  திரைக்கலைஞர்கள் யாரும் மிகப்பெரிய ஆட்டக்காரர்கள் என்று சொல்ல முடியாது. ஆட்டத்தைத் தெரிந்தவர்கள் என்ற நிலையில் ஒரு பகுதியினரும் பெயரளவிற்கு ஆடுவோர் என ஒரு பகுதியினரும் இருக்கின்றனர். எனவே, அவர்களுக்கே தெரியும் வரும் கூட்டம், ஆட்டத்தைப்பார்க்க அல்ல, ஆடும் தங்களையும் அரங்கிற்கு வரும் பிற கலைஞர்களையும் பார்க்கத்தான் என்று. எனவே, தங்கள் மீதுள்ள ஈர்ப்பை முதலீடாகக் கொண்டு விளையாட்டை  நடத்துகின்றனர்.
  இதுவே  எதிர்பாராப் பேரிடரில் துன்புறுவோருக்கு உதவுதல்  போன்ற பொது நலனுக்கானது எனில், நடிகர் சங்கத்தைப் பாராட்டலாம்;  நாமும் அந்த ஆட்டத்தைப் பார்ப்பதற்கு மக்களை ஊக்கப்படுத்தலாம். அவர்களே கூறியபடி, அந்தந்தச் சங்கம் என்பது அந்தந்தச் சங்கத்தின் உறுப்பினர் நலனுக்கானது என்பதுதான் உண்மை. இச்சங்கம் உரூ 500, 1000, 2000, 3000, 6000, 10000 எனக் கட்டணச்சீட்டுகள் விற்றுத் திரட்டும் நிதியில் கட்டப்படும் கலையரங்கம் முதலானவையும் நடிகர்சங்க உறுப்பினர்களுக்கானவையே! எனவே,  நட்சத்திர மட்டையாட்டமும் நடிகர் சங்க உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தினருக்காக நடக்கட்டும்! சின்னப்பிள்ளைகள் செப்பு வைத்து ஆடுவது போன்ற ஆட்டத்தை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்வுடன் பார்ப்பர்.
  நடிகர்கள் தங்கள் நேயர்களும் பொது மக்களும் பார்க்க வேண்டும் என விரும்பினால் தாங்கள் நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாகத் தர விரும்பும்   தொகை மதிப்பில் கட்டணச் சீட்டுகளை வாங்கித் தத்தம் நேயர் மன்றத்தினருக்கும் சுற்றத்தார் நட்பு வட்டத்திற்கும் அளிக்கட்டும்!
  இதனால், மக்கள் திரைப்பட மாயையில் இருந்து விடுபட்டு வருகின்றனர் என்பதைக் கலைஞர்கள் உணருவர்.  அதே நேரம் வசதி வாய்ந்த கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நடிகர் சங்க நிதிக்கு அளித்ததுபோலும் தங்கள் நேயர்களை ஊக்கப்படுத்தியதுபோலும் ஆகும்.
 அசித்து, சிம்பு முதலான நடிகர்கள், மக்களிடம் நடிகர்சங்கத்திற்காக  நிதி வாங்குவது முறையல்ல என்றும் தாங்கள் இதில் பங்கேற்காமல் நன்கொடை தருவதாகவும் அறிவித்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.   இச்செய்தி உண்மையெனில் இதில் தெரிவித்துள்ளவாறு அவர்களும் தனிப்பட்ட நன்கொடை அளிக்காமல், கட்டணச்சீட்டுகளை வாங்கி நேயர்கள், குடும்பத்தினருக்கு அளிக்கட்டும்!
இதனால்,
  1. நடிகர் சங்கத்தின் நட்சத்திர மட்டையாட்டமும் நடைபெறும்.
  2. பொதுமக்களைத் துன்புறுத்தக்கூடாது என எண்ணும் கலைஞர்களின் எண்ணமும் ஈடேறும்.
  3. மக்கள் நலனுக்காகக் குரல் கொடுக்க மாட்டோம் என அறிவித்த நடிகர் சங்கப் பொறுப்பாளர்கள் தம்மைத் திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
  4. பிறர் சொல்லாடலுக்கு வாயசைத்துப் புகழ்பெறும் கலைஞர்களைச் சார்ந்துள்ள தமிழக அரசியல் நல்ல பாதைக்குத் திசை திரும்பும்.
 எனவே, நட்சத்திர மட்டையாட்டத்திற்கான சீட்டுகளை  நடிக நடிகையர்களே வாங்கிப் பிறருக்கு அளிக்கட்டும்! நாம், நடிகர் சங்கத்தினர் தங்களுக்குள் நடத்தும் குடும்ப விழா சிறப்பாக நடைபெறட்டும் என வாழ்த்தி ஒதுங்கிக் கொள்வோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்