Thursday, April 21, 2016

பாடம் புகட்டிய மக்கள்! – பாடம் கற்றதா நடிகர் சங்கம்? – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-பாடம் கற்றதா நடிகர் சங்கம்-திரு : thalaippu_paddamkatrathaa_nadigarsangam.

பாடம் புகட்டிய மக்கள்! – பாடம் கற்றதா நடிகர் சங்கம்?

  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மட்டைப் பந்தாட்டம் இன்று(சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016) நடந்து முடிந்துள்ளது. விளையாட்டைப் பரப்புவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டத்தக்கன. 1 வாரம் முன்னதாகவே கலைநிகழ்ச்சிகள் மூலம் விளம்பரப்படுத்தியதும் விழா நாளன்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியதும், பிற மாநிலக் கலைஞர்களைத் திருமணத்திற்கு அழைப்பதுபோல் சந்தித்துத் துணிமணிகள், வெற்றிலை, பாக்கு மதிப்புடன் அழைத்ததும் என நன்றாகவே திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் அடிப்படையே ஆட்டம் கண்டதால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. வந்திருந்த சிறிய அளவு கூட்டத்திலும் கலைஞர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் அன்பளிப்புச் சீட்டுகளில் வந்தவர்களையும் கழித்துப் பார்த்தால் பொது மக்கள் அல்லது திரைப்பட அன்பர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே! நேயர்கள் பட்டாளம் உடைய கமல், இரசினி முதலான நடிகர்கள் வந்திருந்தும் அவர்களின் நேயர்கள் வரவில்லை.  தொலைக்காட்சி வழியாகப் பாரத்துவிட்டார்கள், அதனால் வரவில்லை என எண்ணுவதும் தவறுதான். எல்லா மட்டையாட்டமும் ஊடகங்கள் வழியாகக் காணும் வாய்ப்பு இருப்பினும் கால்கடுக்கக் காத்திருந்து கட்டணச்சீட்டு வாங்கிப் பார்ப்பவர்கள் மிகுதியாக இருப்பதுதான் வழக்கம்.  அப்படியானால் ஏன் வரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே!  “நுணலும் தன் வாயால் கெடும்” என்பதுபோல் நடிகர்சங்கத்தேர்த்லில் வெற்றி பெற்றதும்  உதிர்த்த முத்துகளின் விளைவு ஆட்டத்தை ஆட்டம் காணச் செய்து விட்டது.
  புயல், போர் போன்ற பொதுக்காரணங்களுக்காக நடிகர்கள் நடத்திய மட்டை ஆட்டத்தைப் பார்க்க வந்த மக்கள் எங்களுக்காக நடத்தும் ஆட்டத்தையும் பார்க்க வந்திருக்கலாமே என நடிகர் சங்கத்தினர் எண்ணலாம். மக்கள்நலனுக்காகக் குரல் கொடுக்கமாட்டோம் என்பது போன்று வெற்றிக்களிப்பில் சொற்களைக் கொட்டாமல் இருந்திருந்தால் மக்கள் திரளாக வந்திருப்பர். தங்களுக்காக மட்டும்தான் குரல் கொடுப்போம், தமிழ் நாட்டிற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் குரல் கொடுப்பது எங்கள் வேலை இல்லை எனத் தென்னிந்திய நடிகர் சங்கம் நினைக்கும் பொழுது மக்களும் உங்களுக்கான விளையாட்டை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் எனப் புறக்கணிப்பதுதானே முறையாகும். அதைத்தான் செய்திருக்கிறார்கள்!
   நாங்கள் அவ்வாறெல்லாம் சொல்ல வில்லை என மழுப்புவதைவிட, “சங்க உறுப்பினர்களுக்காகப் பாடுபடுவோம் என்பதை அழுத்திக் கூற எண்ணியதன் விளைவு தவறாகக் கூறிவிட்டோம்” என மன்னிப்பு கேட்டு, இனிமேல் பொதுநலன் கருதியும்  மக்களுடன் இணைந்து குரல் கொடுப்போம் எனச் சொல்வதுதான்.
  நீங்கள் மக்களால் புகழேணியின் உச்சிக்குக் கொண்டு செல்லப்படுவதுபோல், அவர்களால் கீழேயும் இறக்கப்படுவீர்கள் என்பதை மனத்தில் நிறுத்துங்கள். உங்கள் சங்கம் உங்கள் சங்கஉறுப்பினர்கள் நலனுக்காக நன்கு பாடுபடட்டும். இடையிடைய தனித்தோ, இணைந்தோ சங்கம் சார்பிலோ பொதுமக்கள் நலனுக்காகவும் குரல் கொடுங்கள். நீங்களும் பொதுமக்களின் ஒரு பகுதிதான். அவர்கள் நலன் என்பதில் உங்கள் நலனும் அடங்கிவிடுகின்றது.   அதே நேரம், பின்வரும் வகையில் உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
1.       திரைப்படங்களின் பெயர்களை நல்ல தமிழிலேயே சூட்டுங்கள்.
2.       திரைப்படப்பாத்திரங்களின் பெயர்களை நல்ல தமிழில் சூட்டுங்கள்.
3. மோசமான அரசியல்வாதி,  கொலை, கொள்ளைரிபவன் பாத்திரப்பெயர்களை மட்டும்  நல்ல தமிழில் குறிப்பிட்டுத் தீங்கிழைக்காதீர்கள்.
4.       திரைப்படக் கலைஞர்கள் முதலான பெயர்களைத் தமிழ் முதல் எழுத்துகளுடன் நல்ல தமிழிலேயே குறிப்பிடுங்கள்.
5.       அப்பெயர் விவரங்களில் ஒளிப்பதிவு,  இயக்கம் என்பன போன்று அனைத்துப் பணிகளையும் தமிழிலேயே குறிப்பிடுங்கள்.
6.       உரையாடல்களில் தமிழ்க்கொலை புரியாதீர்கள்.
7.       பாடல்களில் தமிழ்க்கொலை புரியாதீர்கள்.
8.       தமிழ் ஒலிப்புக் குறைபாடு உடையவர்களுக்குப் பாட வாய்ப்பு தராதீர்கள்.
9.       அறிமுகப்படுத்தும் கலைஞர்களின் பெயர்களை நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டி அறிமுகப்படுத்துங்கள்.
10.    தமிழப்படங்களில் அறிமுகமாகும் அயல் மொழியினர் தமிழ் கற்க வேண்டும் என்பதையும்  விதியாகச் சேர்த்து அவர்கள் தமிழ் கற்க வகை செய்யுங்கள்.
  திறமைகள் மண்டிக்கிடக்கும் உங்களால் முடியாத செயல்கள் அல்ல இவை. எனவே, தமிழ்நாட்டில் உருவாகும் திரைப்படங்கள், தொலைக்காட்சிப்படங்கள், நாடகங்கள், தொடர்கள் யாவும் தமிழை எதிரொலிக்கட்டும்! உங்கள் கலையன்பர்களையும் உங்கள் வழியில் நடக்க இவை தூண்டுகோல்களாக அமையட்டும்! மக்களைத் தமிழ்வழியில் ஆற்றுப்படுத்திய அரும்புகழ் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive