புறநானூற்று அறிவியல் வளம்
அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட
அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன. சங்கக் காலத்தில்
பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள்
அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த
(ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில்
ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை
உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச்
செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர்
என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய வைக்கின்றது. சங்க இலக்கியங்களில்
எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறு தெரிவிக்கும் அறிவியல் உண்மைகள்
சிலவற்றைப் பார்ப்போம்.
ஒரு பொருளை விளக்குவதற்கு உதவுவதே உவமை.
எனவே, உவமை என்பது தெரிந்த ஒன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதனுடன்
ஒப்புமையாகக் கூறப்படும் பொருள் அல்லது பொருள்கள் நமக்குப் புரியும்.
பேராசான் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் உவமைஅணியில்
சிறந்திருந்தமையால்தான் அச்சிறப்புமிகு அறிஞர் பெருமகனார், உவமஇயல் என
அதற்கெனத் தனி இயலை வகுத்துள்ளார். எனவே, அறிவியல் உண்மைகளை உவமையாகப்
புலவர்கள் கையாண்டுள்ளனர் என்றால் இவ்வறிவியல் உண்மைகள் மக்கள் எளிதில்
புரியக்கூடிய உண்மைகளாக விளங்கும் சிறப்பைப் பெற்றிருந்தன எனலாம். எளிய
பொது மக்களிடையேயே அறிவியல் உண்மைகள் மண்டிக்கிடந்தன எனில் தமிழர்
அறிவியலின் ஆழம் அளக்கவியலாததாக இருந்திருக்கின்றது என்பதே உண்மை.
மாற்றுச்சக்கரம்
ஊர்திகளுக்கான மாற்றுச்சக்கரத்தை
இஃச்டெப்னி(stepney) என்கிறோம். ஆனால், இச்சொல் தெருவின் பெயராகும்.
இங்கிலாந்திலுள்ள இஃச்டெப்னி (stepney) தெருவில் 20 ஆம் நூற்றாண்டுத்
தொடக்கத்தில் மாற்றுச்சக்கரம் ஒன்றை வால்டர் தேவீசு (Walter Davies)
என்பவரும் தாம் (Tom) என்பவரும் ஏற்பாடு செய்து தந்தனர். இத் தெருவில்
கண்டறியப்பட்ட இம்முறைக்கு இஃச்டெப்னி(stepney ) என்னும் பெயர் நிலைத்து
விட்டது. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர்கள்
மாற்றுச் சக்கரங்களின் தேவை உணர்ந்து அதை உருவாக்கி உள்ளனர் என்னும் பொழுது
அவர்களின் அறிவியல் அறிவு வியப்பளிப்பதாக உள்ளது. ஔவைப் பிராட்டியார், கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன (புறநானூறு 102) என
உவமையைக் கையாள்கிறார். ஊர்திச் சக்கரங்களில் ஏதும் பழுது ஏற்பட்டால்
பயணம் நிற்காமல் தொடருவது பற்றிச் சிந்தித்துள்ளனர் நம் தமிழ் முன்னோர்கள்.
அப்பொழுது உருவாக்கப்பட்டதுதான் சேம அச்சு. சக்கரம் பழுதடையும் பொழுது
பயன்படுத்துவதற்காகக் கூடுதலாக வண்டியில் சேமத்திற்காக – பாதுகாப்பிற்காக-
இணைக்கப்படுவதே சேம அச்சு. இத்தகைய சேம அச்சு போன்று மக்களுக்கு இடர்
வரும் பொழுது அதனைக் களையும் சேம அச்சாக மன்னன் விளங்குகின்றான் என
இப்பாடல் அடி மூலம் ஔவைப்பிராட்டியார் விளக்குகிறார்.
மன்னரைப் பாராட்டப் பயன்படுத்திய இவ்வடி மூலம் நமக்குப் பழந்தமிழரின் அறிவியல் உண்மை ஒன்று கிடைத்துள்ளது.
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment