மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!
மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள் 926)
என்று மது அருந்துநருக்கும் நஞ்சு அருந்துநருக்கும் வேறுபாடில்லை என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
அரசே குடிமக்களைக் குடிகார மக்களாக்கி நாளும் நஞ்சுஊட்டுவது கொடுமையினும் கொடுமையன்றோ! இக்கொடுமையை ஒழிக்க மன்பதை ஆர்வலர்களும் மக்களும் சில கட்சிகளும் பல அமைப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், மது ஒழிப்புப் போராளிகளை மடியச் செய்யும் அரசு நாடகமாடுகிறது.
மதுவிலக்கு என்ற சிந்தனை இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலில் தமிழ்நாட்டிற்குத்தான் வந்தது. நீதிக்கட்சி
தொடர்ச்சியாக நடத்திய மது ஒழிப்பு மாநாடுகள், பரப்புரைகளால், மூதறிஞர்
இராசாசி தி.பி.1968 / கி.பி. 1937 இல் மதுவிலக்குச் சட்டத்தைக் கொண்டு
வந்தார். இருப்பினும் இது முழுமையாக இல்லை. 1939 இல் இதற்கும்
முடிவு வந்தது. முழுமையான மதுவிலக்கு என்பது 1952 இல் நடைமுறைக்கு வந்தது.
ஆனால் இப்பொழுது மது விலக்கு இல்லை என்றாலும், சாராயச் சாவுகள் மிகுதியாக
உள்ள மாநிலமாகத்தமிழ்நாடு உள்ளது. குடிப்பழக்கத்தால் இறப்போர், சிதையும்
குடும்பத்தினர் எண்ணிக்கையும் இங்கே மிகுதியாக இருப்பதில் வியப்பில்லை.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால்
மத்திய அரசு தரும் நல்கைத்தொகையை கலைஞர் கருணாநிதி முதல்வராக இரு்நதபொழுது
மத்திய அரசிடம் கேட்டார். இனிமேல் நடைமுறைப்படுத்துபவர்களுக்கு மட்டுமே
பொருந்தும்; நடைமுறைப்படுத்தி வருபவர்களுக்கு இது பொருந்தாது என மத்திய
அரசு கூறியதால் ஆவணி 14, 2002 – 1971 ஆக.30 அன்று மதுவிலக்கை நீக்கினார்.
எனவே, மதுவால் தமிழ்நாட்டைக் கெடுத்ததில் பேராயக்கட்சிக்கும்
(காங்கிரசிற்கும்) பங்கு உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது. குற்றச்செயலலில் பங்குடைய இருவரில் ஒருவரை மட்டும் தூற்றுவது சரியல்ல அல்லவா?
அதே நேரம் இச்சட்டம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்படாமல், அப்போதைய ஆளுநர் கே.கே.சாவின் மூலம் ஆணையாகப் பிறப்பிக்கப்பட்டது. மது என்றால் என்னவென்றே அறியாத் தலைமுறையினர் மதுவிற்கு அடிமையாயினர்.
புதுச்சேரிக்கும் அருகமை பிற மாநிலப் பகுதிகளுக்கும் விடுமுறையில் மது
அருந்துவதற்காகச் சென்றவர்கள், தமிழ்நாட்டிலேயே அளவுகடந்து குடிப்பதற்குப்
பழகிப்போயினர். இன்றைக்கோ நல்லநாள், கெட்டநாள், மகிழ்ச்சி, துயரம், என
எவ்வகையாய் இருப்பினும் குழுவாக மது அருந்துவது என்பது புதிய
ஒழுகலாறாக (கலாச்சாரமாக) மாறிவிட்டது. அது மட்டுமல்ல! மாணாக்கர்கள்,
பெண்கள் என்ற வேறுபாடின்றி எல்லா நிலையினரும் மதுவிற்கு அடிமையாகும் நிலை
வந்துவிட்டது.
மது அருந்துதல் என்பது குடிப்பழக்கம்
என்றில்லாமல், அளவுகடந்த போதையை உட்கொள்ளல் என்ற நிலை ஏற்பட்டமையால்,
குடிப்பழக்கத்தால் இறந்தவர்கள், நேர்ச்சியில்(விபத்தில்) பிறரை
சிக்கவைத்துச் சாகச் செய்தவர்கள், இதனால் மதுப்பழக்கம் இல்லாமலேயே
உயிரிழந்தவர்கள், ஊனமானவர்கள் எனப் பெருகினர். இதனால் ஆயிரக்கணக்கில்
கைம்பெண்களும் தந்தையை இழந்த பிள்ளைகளும் பெருகி வருகின்றனர். எனவே,
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதற்கு
முன்பும் இவ்வாறு கடுமையாக எதிர்ப்பு இருந்தது. ஆதலின், ஆடி 15, 2004 /
சூலை 30, 1973 அன்று கள்ளுக்கடைகளையும் ஆவணி 16, 2005/ செப் 01, 1974 அன்று
சாராயக்கடைகளையும் மூடி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மதுவிலக்கை மீளவும் அறிமுகப்படுத்தினார்.
எனினும் மதுவிற்கு அடிமையானவர்களும் மதுவிற்பனையால் வளம்பெற்றவர்கள்
பெருகி இருந்ததாலும் கள்ளச்சாராயங்கள் பெருகி, கள்ளச்சாராயச்சாவுகளும்
பெருகின.
திரைப்படத்தில் குடிக்கும் காட்சியில்
நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாகக் கொள்கைப் பிடிப்புடன் இருந்த
மக்கள்திலகம் எம்ஞ்சியார், தான் முதல்வராக இருந்தபொழுது 1981 இல்
மதுவிலக்கைத் தளர்த்தினார்.
‘தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம்’
(TASMAC) என்னும் அரசு நிறுவனம் 23.05.1983 வைகாசி 09, 2014 அன்று
அமைக்கப்பட்டு அதன் மூலம் அரசே மதுவிற்கத் தொடங்கியது.
மரு.இராமதாசு அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டவாறு 29.07.2010 அன்று மதுவிலக்கு குறித்து அரசு
ஆய்ந்து(பரிசீலித்து) வருவதாகக் கூறிய கலைஞர் கருணாநிதி, மதுவிலக்கு
நடைமுறைப்படுத்தப்படும் என்று 08.08.2010 அன்று உறுதியளித்தவர், 24.08.10
அன்று செய்தியாளர்களிடம்
“மதுவிலக்கு குறித்து பரிசீலித்து வருவதாகத்தானே சொன்னேன், இத்தனை நாள்களில் கொண்டு வருகிறேன் என்றா கூறினேன்?” என நழுவியுள்ளதை அவர் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை.
இடையிலே அவர் மதுவிலக்கை
நடைமுறைப்படுத்தயிருந்தாலும் மதுஆலைச் செல்வர்களாகத் தி.மு.க.வினர்
இருப்பதால் நம்பிக்கை வரவல்லை. இந்நாள் முதல்வரோ, சட்ட மன்றத்திலேயே
மதுவிலக்கிற்கான வாய்ப்பு இல்லை என்று மறுப்பினைத் தெரிவிக்கச் செய்தவர்,
இப்பொழுது தேர்தல் பரப்புரையின் முதல் கூட்டத்தில் ஆட்சிக்கு வந்தால்
படிப்படியாக மது விலக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறுகிறார்.
பீகாரில் முழுமையான மதுவிலக்கை அறிமுகப்படுத்தப்படும் பொழுது ஏன் இங்கே
முடியாது என்ற வினா மக்கள் உள்ளங்களில் எழுகிறது. எனவே, இந்த
அறிவிப்பின்மேல் மக்களுக்குச் சிறிதும் நம்பிக்கை யில்லை.
அதுமட்டுமல்ல! மதுவிலக்குப் போராளி
சசிபெருமாள் மறைவிற்கும் அசையாத செ.அரசு, மதுவிலக்குப் பாடகர்களைத்
தளையிடும் செ.அரசு மதுவிலக்குப்பாடல் பாடியதற்காக இரு சிறுமியர்மீது
தேசப்பாதுகாப்பிற்கு எதிரான குற்றமாகக்கருதி வழக்குதொடுத்துள்ள செ.அரசு, மதுவிற்பனை மீதான தன் பற்றினை வெளிப்படுத்துவதால், தேர்தல் பரப்புரை உறுதிமொழி என்பது தேர்தல் நாடக்திகின் ஒரு பகுதி என்றுதான் மக்கள் உணருகின்றனர்.
எந்தக் கொள்கையில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ, மது
ஆலைகளைத் திறம்பட நடத்துவதிலும் அவற்றிலிருந்து அரசு கொள்முதல்
செய்வதிலும் இந்நாள் முன்னாள் முதல்வர்களிடையே ஒற்றுமை உள்ளது. எனவே, மக்களிடம் நம்பிக்கை இல்லை.
ஒருவேளை இருவர் கூற்றும் நம்பகமானவை என்றே
எடுத்துக் கொள்வோம். ஆனால், பா.ம.க. தொடங்குவதற்கு முன்னரிருந்தே
மதுவிலக்குப் பரப்புரை மேற்கொண்டு வரும் மரு.இராமதாசு, மதுவிலக்கிற்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைப்பயணங்கள் மேற்கொண்டு வரும் வைகோ, மதுவிலக்கினை வலியுறுத்தி வந்த மக்கள் நலன் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு இப்பொழுது மக்கள் நலக்கூட்டணியாக மலர்ந்துள்ள கட்சியினர் கூறுவதை மக்கள் நம்புகின்றனர். எனவே, அ.தி.மு.க., தி.மு.க.விற்கு வாய்ப்பளித்தது போதும். இனியும் அவற்றிற்கு வாய்ப்பளிக்க வேண்டா, புதியவர்களுக்கு
வாய்ப்பளிப்போம். இவர்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவார்கள்.
அக்கொள்கையில் சரிவு வந்தால் ஆளும் வாய்ப்பினைத் தவறவிட்ட
முதன்மைக்கட்சிகள் சரிவினைச் சரிசெய்து விடுவர் என்று நம்புகின்றனர்.
மது ஆலைகளை இப்பொழுதே மூடுமாறு
கட்சியனருக்கு அறிவுறுத்தாக ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் ஆட்சியில்
அமர்ந்தால் மது தொழிற்சாலைகளை மூடச்சொல்லாது. பிற மாநிலங்களுக்கும் பிற
நாடுகளுக்குமான உற்பத்தி என இயங்கச்செய்து கள்ள மது ஆறாகப்
பெருக்கெடுத்துஓட வழி செய்யும். எனவே, மதுவிலக்கு நாடகங்களை நம்ப வேண்டா என்றே மக்கள் எண்ணுகின்றனர்.
மக்கள் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்தால், மது மயக்கத்திலிருந்து மக்களும் மீள்வர்! நலமான வாழ்வை அடைவர்!
அத்தகைய ஆட்சி அமைய தேர்தல் வழிவகுப்பதாக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 129, சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016
நன்றி: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்
No comments:
Post a Comment