உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்!
(2)
உணவகங்கள், உறைவகங்களில் உள்ள தகவல்
விவரங்களும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. முன்பு ஒரு முறை உறைவகம் ஒன்றில்
நடைபெற்ற தமிழறிஞர் ஒருவர் இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே
முகப்பில் ஆங்கிலத்தில் விவரங்கள் குறிக்கப்பெற்ற தட்டி இருந்தது. அவர்
மகனிடம் தமிழில் எழுதுவோர் கிடைக்கவில்லையா எனக் கேட்டேன்.
“வரவேற்புத்தட்டி உறைவகத்தினர் அன்பளிப்பாம். ஆங்கிலத்தில்தான்
வைப்பார்களாம். மேடையில் வேண்டுமென்றால் தமிழில் வைத்துக்கொள்ளலாமாம்.
நான் எவ்வளவு கேட்டும் வரவேற்புத்தட்டியைத் தமிழில் வைக்க இடந்தரவில்லை”
என்றார். நான் உணவக மேலாளரைச்சந்தித்தேன். “எங்கள் பணத்தில்
வரவேற்புத்தட்டி வைத்துக்கொண்டு உங்களது அன்பளிப்பு என்று ஏமாற்ற வேண்டா.
ஆங்கிலத்தில்தான் வைப்பீர்கள் என்றால் இங்கிலாந்தில் உணவகம் நடத்துங்கள்.
எழுத்துப்பொருத்தப்பலகையிலும் தமிழ் வைக்க வேண்டும். பொருத்தி எழுத்துகள்
(fixographs) தமிழிலும் கிடைக்கின்றன. வாங்கிப்பயன்படுத்துங்கள். முதலில்
உங்களது ஆங்கிலப் பலகையை அப்புறப்படுத்துங்கள். இல்லையேல் விழாவிற்கு
வந்திருக்கும் தமிழன்பர்கள் இங்கே மறியல் செய்வர்” என்று காரசாரமாகச் சொன்ன
பி்ன்னர் அதனை அகற்றினர்.
இந்தப்பட்டறிவின் காரணமாக மற்றோர் உறைவக
அரங்கத்தில் இலக்குவனார் நூற்றாண்டுவிழா நடைபெற்றபொழுது காலையிலேயே
மேலாளரைச் சந்தித்து, “ஆங்கில விவரம் எதுவும் வைக்கத் தேவையில்லை.
தமிழ்ப்பதாகை நாங்கள் வைப்போம். அதனைத்தடுத்தால் இங்கு வருபவர்களைத்
தடுப்போம்” என்றதும் எங்கள் விதியைச் சொன்னோம் . உங்கள் விருப்பம்
என்பதுபோல் தெரிவித்தனர்.
ஒருமுறை ஐம்மீன்(five star) உறைவகம்
ஒன்றில் பன்னாட்டுப் பனைமரத் தொழில்முயல்வோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
உரிய துறையின் செயலர் திருவாட்டி நிருமலா இ.ஆ.ப. வேண்டியதற்கிணங்கத்
தமிழ்க்கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அப்பொழுது
கலைக்குழுத் தலைவர் ஓடி வந்து, மயில், காளை, பொய்க்கால் குதிரை
முதலானவற்றை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும் என்றும் இல்லையேல் அவற்றைத்
தூக்கி எறிவோம் என்றும் மேலாளரும் பாதுகாவலரும் தெரிவிக்கின்றனர் என்றார்.
“உங்களுக்குத்தான் அறை ஒதுக்கீடு செய்யப்பெற்றுள்ளதே! அங்கே இல்லாமல் ஏன்,
கருத்தரங்கக்கூடம் முன்பு கடை விரித்திருக்கிறீர்கள்” என்றேன்.
“அங்கிருந்து பொய்க்கால் குதிரைகளுடனும் ஆடு, மாடு, மயில்
முதலானவற்றுடனும் வருவது எங்களுக்கு ஒத்துவராது. அதனால் இங்கேயே அவற்றை
மாட்டிக் கொண்டுள்ளோம்” என்றார். நீங்கள் கருத்தரங்கக்கூடத்திலேயே
ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். என்றாலும் மேலாளரை வரச் சொல்லுங்கள் என்றேன்.
நாம் அவர்களிடத்தில் சென்றால், அவர்கள் அதிகாரம் ஓங்கியதுபோல்
பேசுவார்கள். நம்மிடம் வந்தால் கொஞ்சமாவது தணிந்து போவார்கள். எனவேதான்
அவரை வரச் சொன்னேன். அவரிடம், “இன்னும் பத்து நிமையத்தில் இவர்கள் வேலை
முடிந்து விடும். அதுவரை இங்கேயே இருக்கட்டும்” என்றேன். “உணவுவிடுதியின்
மதிப்பைக் கெடுத்துவிட்டார்கள், அழகைக் கெடுத்துவிட்டார்கள், சீரொழுங்கைக்
கெடுத்துவிட்டார்கள், அசிங்கப்படுத்திவிட்டார்கள். உலக நாடுகளிலிருந்தும்
வந்துள்ள விருந்தினர்கள் முன்னிலையில் நிறுவனத்தின் மதிப்பைக்
குறைத்துவிட்டார்கள். இவர்களாக வெளியேறாவிட்டால், அவர்களது
கலைப்பொருள்களையும் அவர்களையும் தூக்கி வெளியே வீசுவோம்” என்றார். தொடந்து
நான் அமைதியாகப் பேசப்பேச அவர் குரல்ஒலி உயர்ந்தது.
பாதுகாப்புக்காவலர்களிடம் கலைப்பொருள்களைத் தூக்கி எறியுமாறு
கட்டளையிட்டார்.
அமைதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தேன்.
“நீங்கள் அசிங்கம் என்று சொல்வதை வெளிநாட்டார் நின்று வேடிக்கை பார்த்து
மகிழ்வதைப் பாருங்கள். வெளிநாட்டு விருந்தினர்கள் பலர் அரசின் விழாவிற்கு
வந்துள்ளனர். அவர்களுக்குத் தமிழ்க்கலைகளை அறிமுப்படுத்தும் நோக்கிலும்
மகிழ்ச்சிப் பொழுதுபோக்கிற்காகவும் அரசு தமிழ்க்கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு
செய்துள்ளது. இந்தக் கலைஞர்களும் அரசின் விருந்தினர்கள்தாம். இந்த இடத்தில்
இருப்பது சரியல்ல என எண்ணினால் மாற்று இடம் தந்திருக்க வேண்டும். ஆனால்,
தமிழக அரசின் விருந்தினர்களையும் அவமானப்படுத்தி உள்ளீர்கள். தமிழ்நாட்டில்
இருந்துகொண்டு தமிழகக் கலைகளை இழிவாகப் பேசுகிறீர்கள். நீங்கள் இவர்கள் மீது கை வைத்தால் உங்களை வெளியே நாங்கள் தூக்கி எறிவோம்.
அரசின் பணிகளுக்குக் குறுக்கீடு செய்ததாகச் சிறையில் தள்ளுவோம். உங்களால்
உங்கள் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு அவர்களும் உங்களுக்கு உதவ
வரமாட்டார்கள். வேலையும் போகும். எனவே, நீங்கள் முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.
அவர்கள் இங்கே இருக்கலாமா? அல்லது நீங்கள் உள்ளே போகலாமா என்று!”
என்றேன். “அது வந்து .. நான் சொல்லவருவது .. ” என்று இழுத்தார்.
“வந்தாவது போயாவது, அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். தமிழ்நாட்டில்
இருந்து கொண்டு தமிழக்கலைகளை இழிவாகப்பேசாமல் நீங்களும் தமிழ்க்கலை
நிகழ்ச்சிகளை நடத்தினால் உங்களுக்குத்தான் பெருமை” என்றேன். நாம்
கெஞ்சுவோம் என எதிர்பார்த்து வந்தவருக்கு அவரையே உள்ளே தள்ளுவோம் என்றதும்
“கடுமையாகச்சொன்னால்தான் சீக்கிரம் உங்கள் வேலையை முடிப்பீர்கள் என்று
சொன்னேன். இனிச் சொல்லவில்லை” என்றார். இப்பொழுது விண்மீன் உறைவகங்களில்
நிறுவனத்தினரே தமிழ்க்கலை நிகழ்ச்சி நடத்துவது என்பது வழக்கமான ஒன்றாக
ஆகிவிட்டது.
பொதுவாக உணவகங்களில் தமிழில் பிழையாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டித்திருத்துமாறு கூறினால், திருத்தி விடுகிறார்கள். கை அலம்புமிடம், வரவேற்பு முதலானவற்றைத் தமிழில் எழுதி வைக்கச் சொன்னால் தமிழில் எழுதி வைக்கின்றார்கள். பிறரைத்
திட்டினால் தமிழ்ப்பற்று என எண்ணுவோர் உணவுப்பட்டியல்களைத் தமிழில்
அளித்துத் தமிழில் குறிக்கச் சொல்வதுபோன்ற பணிகளில் ஈடுபட்டால்
உணவகங்களிலும் உறைவகங்களிலும் தமிழை எதிர்பார்க்கலாம். என்றாலும் உணவகங்களிலும் உறைவகங்களிலும் தமிழ் முழுமையாக இருக்க வேண்டும். எனவே,
தமிழ்நாட்டில் உணவகங்களும் உறைவகங்களும் நடத்துவோரே!
உணவுவிவர-விலைப்பலகைகளில் உணவுகளைத் தமிழிலேயே குறிப்பிடுங்கள்! உணவு நிரல்களில் தமிழிலேயே தெரிவியுங்கள்!
நிறுவனங்களுக்கும் நிறுவனங்களில் இடம் பெறும் பகுதிகளுக்கும் தமிழிலேயே பெயர் சூட்டுங்கள்!
இன்றைய வாழ்விற்கான சுவையான உணவு தர விரும்பும் நீங்கள், நிலைத்த வாழ்விற்கான சுவையான தமிழைத் தர மறுக்காதீர்!
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (திருவள்ளுவர், திருக்குறள் 652)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment